Wednesday, April 8, 2020


வீடு தேடி சென்று மருத்துவ உதவி அரசு டாக்டருக்கு குவியும் பாராட்டு

Added : ஏப் 07, 2020 23:44

தஞ்சாவூர் : பேராவூரணி வட்டாரத்தில் வீடு தேடிச் சென்று மருத்துவ உதவி அளித்து வரும், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர், பேராவூரணி அடுத்த செருவாவிடுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் கீழ் குறிச்சி, காலகம், பின்னவாசல் ஆகிய சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு ரத்தக்கொதிப்பு, சர்க்கரை மற்றும் இதய நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மருத்துவமனைக்கு செல்ல முடியாமல், முதியோர், நோயாளிகள், 15 நாட்களாக கடும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர், சவுந்தர்ராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், நோயாளிகளின் வீடு தேடிச் சென்று, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

டாக்டர் சவுந்தர்ராஜன் கூறியதாவது:பேராவூரணி வட்டாரத்தில், 1,127 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொபைல் வாகனம் மூலம், இ.சி.ஜி., மெஷின், சர்க்கரை பரிசோதனை இயந்திரத்தை எடுத்துச் சென்று, தேவைப்படுவோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்கியுள்ளோம். இம்மாதத்தில், பிரசவிக்க உள்ள கர்ப்பிணி பெண்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.டாக்டர் மற்றும் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 11.01.2026