Tuesday, June 30, 2020

மேலும் 1 மாதத்துக்கு மாநிலம் முழுதும் ஊரடங்கு!


மேலும் 1 மாதத்துக்கு மாநிலம் முழுதும் ஊரடங்கு!

Updated : ஜூன் 29, 2020 23:43 | Added : ஜூன் 29, 2020 22:59




சென்னை : தமிழகம் முழுவதும், மேலும், ஒரு மாதத்திற்கு, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல், 15 நாட்களுக்கு, பஸ் போக்குவரத்து கிடையாது. இம்மாதம் முழுவதும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, முழு முடக்கம் அமல்படுத்தப்படும். மற்ற நாட்களில், டீக்கடை, உணவகங்கள் செயல்படும். நோய் பரவல் அதிகம் உள்ள, ஐந்து மாவட்டங்களில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

* கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, ஏற்கனவே நடைமுறையில் உள்ள, பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், இன்று இரவு முடிவடைய உள்ள ஊரடங்கு, அடுத்த மாதம், 31ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை, தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்படுகிறது

* சென்னை முழுவதிலும் மட்டுமின்றி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில், தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு உத்தரவு, வரும், 5ம் தேதி வரை தொடரும்.

* சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், ஜூன், 19க்கு முன்பிருந்த நிலை; மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், ஜூன், 24க்கு முன்பிருந்த தளர்வுகள், ஜூலை, 6 முதல், 31ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை தொடரும்.

* ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட, காய்கறி, பழக்கடைகள், அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும்
.

எதற்கெல்லாம் தடை.

* நகப்புற வழிபாட்டு தலங்களிலும், பெரிய வழிபாட்டு தலங்களிலும், பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை தொடரும்.

* நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலாப் பயணியர் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

* தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை நீடிக்கும் எனினும், தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு உண்டு.

* பள்ளிகள், கல்லுாரிகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட அனுமதியில்லை. அதேநேரத்தில், இணைய வழி கல்வி கற்றலை தொடர்வதுடன், அதை ஊக்கப்படுத்தலாம்.

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை தொடரும்.

* சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மூடப்படும்.

* மாநிலங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து கிடையாது.

'இ- - பாஸ்' முறை

அந்தந்த மாவட்டத்திற்குள், ‛இ- - பாஸ்' இல்லாமல் செல்ல, அனுமதி அளிக்கப்படும். வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களில் இருந்து வரவும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டம் சென்று வரவும், இ- - பாஸ் அவசியம்.முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில், ஜூன், 30 வரை வழங்கப்பட்ட, ‛இ -- பாஸ்' ஜூலை, 5 வரை செல்லும். ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு, அரசு பணிகளுக்காக செல்லும் ஒப்பந்ததாரர்களும், இப்பணிகள் சம்பந்தமாக, அரசு அதிகாரிகளை சந்திக்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களால், ‛இ- - பாஸ்' வழங்கப்படும்.

சென்னையில் அனுமதி

சென்னை உட்பட சில மாவட்டங்களில், முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்த நிலை, ஜூலை, 6 முதல் அனுமதிக்கப்படும்.

அதன் விபரம்:

கிராமப்புறங்களில் உள்ள, சிறிய கோவில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்களில், பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், 100 சதவீத பணியாளர்களுடன், இயங்க அனுமதிக்கப்படுகிறது.

இயன்ற வரை, பணியாளர்கள், வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும். வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். ‛ஏசி' வசதி இயக்கப்பட கூடாது.தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் ஆகியவை, காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை; மற்ற கடைகள், காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணி வரை இயங்கலாம்.

உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில், அமர்ந்து உண்ண அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், 50 சதவீத இருக்கைகளில் மட்டும், வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும். அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.டாக்சிகள், டிரைவர் தவிர்த்து, மூன்று பயணியருடன், ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்க்ஷாக்கள், இரண்டு பயணியருடன் இயங்கலாம்.

ஐந்து நபர்களுக்கு மேல், பொது இடங்களில் கூடக் கூடாது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

சென்னையில் பின்பற்றப்படும், நோய் தடுப்பு நடவடிக்கைகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பஸ் போக்குவரத்து நிறுத்தம்

மாநிலத்தில், மாவட்டத்திற்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள, தனியார் மற்றும் அரசு பஸ் போக்குவரத்து, ஜூலை, 1 முதல், 15 வரை, தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அதேபோல், திருமண நிகழ்ச்சி, இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில், 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது.இவ்வாறு, முதல்வர் அறிவித்துள்ளார்.

ஞாயிறு முழு ஊரடங்கு

ஜூலை, 5, 12, 19, 26ம் தேதிகளில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும், எந்தவிதமான தளர்வுகளுமின்றி, தமிழகம் முழுவதும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

சிறப்பு கவனம் தேவை!

ஊரடங்கு காலத்தில், மருந்து பொருட்கள், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் தடையின்றி கிடைப்பது அவசியம். இவற்றை ஏற்றி வரும் வாகனங்கள், மாநில, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, நீண்ட நேரம் காக்க வைக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.இதனால், மருந்து, உணவு பொருட்களை அனுப்புவோர் தயக்கம் காட்டுவதால், மாநிலத்தில் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மருந்து, உணவு பொருட்கள் எந்த தடையும் இன்றி, மாநிலத்திற்குள் வரும் வகையில், அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவற்றை தேக்கி வைக்கும் கிடங்குகளை தேவையான நேரத்தில் திறக்கவும், வெளியிடங்களுக்கு எளிதாக அனுப்பவும் வழிவகை செய்ய வேண்டும்.இது சார்ந்த தொழிலில் ஈடுபடும் வணிகர்கள், விவசாயிகள், எந்த நெருக்கடியும் இன்றி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். ஊரடங்கு ஒரு மாதம் நீட்டிப்பதால், இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுக்கு, அரசு சரியான வழிகாட்டுதல் வழங்குவது அவசியம்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...