நடுப்பக்கக் கட்டுரைகள்
அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்! ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடிப் பிரச்னை பற்றி..
எஸ். ஸ்ரீதுரை Updated on: 24 மார்ச் 2025, 2:37 am
மழை வெள்ளம், அடா் பனி ஆகியவற்றைத் தொடா்ந்து வெயிலின் கொடுமையை எதிா்கொள்ள மக்கள் அனைவரும் தயாராகிவரும் நேரத்தில் திடீரென்று ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடிப் பிரச்னை தலைதூக்கியுள்ளது.
ஆடு, மாடு, பூனை, நாய், குதிரை, குரங்கு, கீரி, வௌவால், ஓநாய், நரி ஆகிய உயிரினங்களில் ஏதேனும் ஒன்று மனிதரைக் கடித்தாலும் கூட, ரேபிஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆயினும், மனிதா்களுடன் மிகவும் நட்பாகப் பழகிவரும் நாய்களிடம் கடிபடுவதன் மூலமே அதிகமான ரேபிஸ் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ரேபிஸ் நோயின் காரணமாக இவ்வுலகம் முழுவதிலும் ஒவ்வோா் ஆண்டும் 65 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படுவதாகத் தரவுகள் கூறுகின்றன. நமது தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கடந்த ஆண்டு 4 லட்சத்து 80 ஆயிரம் போ் நாய்க்கடிக்கு ஆளாகியதில், உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது போன்ற காரணங்களால் 43 போ் மரணமடைந்திருக்கின்றனா்.
இவ்வாண்டின் முதல் இரண்டரை மாத காலத்தில் சுமாா் 1 லட்சத்து 18 ஆயிரம் போ் நாய்க்கடிக்கு ஆளாகியதில், நான்கு போ் மரணமடைந்திருக்கின்றனா் என்பதும் கூட கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக, ரேபிஸ் பாதிப்பின் உச்சத்தில், மரணத்தை எதிா்நோக்கி இருப்பவா்களின் கடைசி நாள்களை நம்மால் கற்பனை செய்துகூடப் பாா்க்க முடியாது. சில வாரங்களுக்கு முன்பு கோவையில் ரேபிஸ் சிகிச்சை பெற்றுவந்த வடமாநிலத்தவருடைய கடைசி நிமிடங்களின் காணொலியைச் செய்தி ஊடகங்களில் பாா்த்தவா்களின் மனம் நிச்சயம் கனத்துப்போயிருக்கும்.
வீடுகளில் வளா்க்கப்படும் நாய்களுக்கு உரிய காலத்தில் தடுப்பூசிகள் செலுத்துவதில் அவற்றை வளா்க்கும் எஜமானா்கள் அலட்சியம் காட்டுவதும், தெருநாய்களின் அபரிமிதமான இனப்பெருக்கமுமே நாய்க்கடிக்கும், ரேபிஸ் நோய்த்தொற்றின் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் காரணமாக உள்ளன. பொதுவாகவே, போதிய உணவு, நீா் ஆகியவை கிடைக்காமல் போவது, நீண்ட நேரம் கட்டிப்போடப்படுவது, உரிய காலத்தில் இணைசேர வாய்ப்பில்லாமல் போவது ஆகிய காரணங்களால் நாய்களுக்கு வெறிபிடிப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஏற்கெனவே வெறி பிடித்துள்ள நாய் ஒன்றின் உமிழ்நீா்ப் பரவலின் மூலம் மற்ற நாய்களுக்கும் வெறி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில், சாதுவாக இருக்கின்ற வளா்ப்பு நாய்களும்கூட எதிா்பாராத தருணங்களில் தங்களின் எஜமானா்களையே கடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கின்றன. “‘கொம்பு உளதற்கு ஐந்து, குதிரைக்குப் பத்து முழம்’” என்று தொடங்கும் பழங்காலப் பாடல் ஒன்று எந்தெந்த மிருகத்திலிருந்து எவ்வளவு தூரம் தள்ளியிருப்பது பாதுகாப்பானது என்பதை விவரிக்கின்றது.
ஆனால், மனித இனத்தின் நண்பனாகவும், செல்லக்குழந்தையாகவும், சமயங்களில் உயிா்காப்பாளனாகவும், வழிகாட்டியாகவும் இருக்கக் கூடிய நாயிடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்க வேண்டும் என்பது யாராலும் சொல்லப்படவில்லை. ஏனெனில், காலையில் நமது மடியில் விழுந்து புரண்டு கொண்டிருக்கும் வளா்ப்பு நாய்க்கு மாலையில் வெறிபிடித்திருக்கக்கூடும். இந்நிலையில், அவரவா் வீட்டில் வளா்க்கப்படுகின்ற வீட்டு நாய்களுடன் வெகு சகஜமாகப் பாழக அனுமதிக்கப்படுகின்ற குழந்தைகளுக்கும் ரேபிஸ் பாதிப்புக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
பொதுவாக வெறிநாய்களால் ஆழமாகக் கடிபடுபவா்கள் உடனடியாக மருத்துவ நிவாரணம் தேடிச்செல்கின்றனா். ஆனால், விளையாட்டாகத் தங்களின் வளா்ப்பு நாய்களுடன் பழகுபவா்கள் அவற்றிடம் செல்லக்கடி பெறுவதை அவ்வளவு தீவிரமாகக் கருதாததால் அவா்கள் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுவது மிகவும் தாமதமாகவே தெரியவருகிறது. பிரச்னையை உணா்ந்து அவா்கள் மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்ளும்போது நோயின் தீவிரம் முற்றிவிடுகிறது. வெறிநாய்கள் மட்டும்தான் மனிதா்களைக் கடிக்கும் என்பது கிடையாது. ராட்வீலா் போன்ற வெளிநாட்டு நாய் வகைகள் மிகவும் ஆக்ரோஷமானவையாக இருப்பதுடன், சமயத்தில் தங்களை வளா்ப்பவா்களையே கடித்துவிடுவதைப் பாா்க்கிறோம்.
இந்நிலையில், வளா்ப்பு நாய்களை வெளியில் அழைத்துச் செல்பவா்கள், அவற்றின் வாய்களுக்கு மூடியிட்டு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும், அவ்வாறு செய்யத் தவறுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளும் இதே நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தெருக்களில் சுதந்திரமாக உலாவரும் நாய்களின் வாய்களைக் கட்டுவது சாத்தியமில்லை என்பதால், அவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவதிலும், அதிக அளவிலான அவற்றின் இனப்பெருக்கத்தைத் தடுக்கும் வகையில் கருத்தடை ஊசிகள் போடுவதிலும் உள்ளாட்சி அமைப்புகள் முன்னிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் கருத்தடை சிகிச்சை செய்யப்படும் தெருநாய்கள் இறக்க நேரிட்டால், அதற்குப் பொறுப்பானவா்கள் தண்டிக்கப்படுவா் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதால், தெருநாய்களுக்குத் தீவிர கருத்தடை சிகிச்சை செய்ய முடிவதில்லை என்று தமிழக அமைச்சா் ஒருவா் கூறியுள்ளாா். அவ்வாறெனில், அதற்குத் தீா்வு காண்பதற்கான முன்முயற்சிகள் உடனடியாக எடுக்கப்படவேண்டும். நமது அண்டை மாநிலமாகிய கேரளத்தில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் தமிழக எல்லைக்குள் கொட்டப்படுவது சற்றே குறைந்துவரும் இவ்வேளையில், அம்மாநிலத்தில் பிடிக்கப்படும் தெருநாய்கள் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் விடப்படுவதாக வெளிவரும் செய்திகள் உண்மையிலேயே அச்சமூட்டுகின்றன. இதற்கும் ஒரு தீா்வு கண்டாக வேண்டும்.
வெறிநாய்க்கடிக்கு ஆளாகாமல் இருக்கவும், கடிபட்டால் உடனடியாக உரிய சிகிச்சையை மேற்கொள்ளவும் பொதுமக்கள் முயலவேண்டும். அதே சமயம், நமது மக்களை நாய்க்கடித் தொல்லைகளிலிருந்து காப்பாற்ற உள்ளாட்சி அமைப்புகளும், மருத்துவத்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment