Friday, July 11, 2025

7.5 லட்சம் மூத்த குடிமக்களின் வீடு தேடிச் சென்ற ரேஷன் பொருள்கள்!


7.5 லட்சம் மூத்த குடிமக்களின் வீடு தேடிச் சென்ற ரேஷன் பொருள்கள்! 

வீடுகள் பூட்டப்பட்டிருந்ததால் பயன் பெறாத 2.25 லட்சம் போ் 

தமிழகம் முழுவதும் இதுவரை 7.5 லட்சம் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் நேரடியாக அளிக்கப்பட்டுள்ளன.

கே.பாலசுப்பிரமணியன் Updated on:  11 ஜூலை 2025, 4:04 am 

தமிழகம் முழுவதும் இதுவரை 7.5 லட்சம் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் நேரடியாக அளிக்கப்பட்டுள்ளன. 2.25 லட்சம் குடும்ப அட்டைதாரா்களின் வீடுகள் பூட்டப்பட்டதால் அவா்களுக்கு பொருள்கள் வழங்க இயலவில்லை என கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநிலத்தில் 34,814 நியாயவிலைக் கடைகள் மூலம் 2 கோடியே 26 லட்சத்து 68 ஆயிரத்து 771 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு தேடிச் சென்று பொருள்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில், அந்தத் திட்டம் செயல்பாட்டில் உள்ள ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தமிழக உணவுத் துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனா்.

இதன்பிறகு, தமிழ்நாட்டில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு ஆய்வு செய்தது. அதன்படி, 70 வயதைத் தாண்டிய 15 லட்சம் குடும்ப அட்டைதாரா்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று பொருள்களை வழங்க முடிவு செய்யப்பட்டது. சோதனை அடிப்படையில் திட்டத்தைச் செயல்படுத்த சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி,

நாகப்பட்டினம், நீலகிரி, கடலூா் ஆகிய மாவட்டங்களில் தலா 2 வட்டங்கள் தோ்வு செய்யப்பட்டன.

 இந்தப் பகுதிகளில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு கடந்த 1-ஆம் தேதிமுதல் ரேஷன் பொருள்கள் நேரடியாக வழங்கப்பட்டன.

7.5 லட்சம் போ் பயன்: 70 வயதைக் கடந்த 15 லட்சம் மூத்த குடிமக்களில், 7.5 லட்சம் பேரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அதாவது, 50 சதவீத மூத்த குடிமக்கள் குடும்பங்களுக்கு நேரில் பொருள்கள் அளிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சோதனை அடிப்படையிலான முயற்சி நிறைவடைந்த நிலையில், திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது மாதந்தோறும் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை நேரில் வழங்க முடியும் என கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மூத்த குடிமக்களின் முகவரி நியாயவிலைக் கடை பணியாளா்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒரு பகுதியில் 80 வீடுகள் வரை இருந்தால், அந்தப் பகுதியில் 50 சதவீதம், அதாவது 40 வீடுகளில் வசிப்போருக்கு மட்டுமே பொருள்களை வழங்க முடிந்தது. 

15 சதவீதத்துக்கும் மேற்பட்டோா், அதாவது 2.25 லட்சம் பேரின் வீடுகள் பூட்டப்பட்டு இருந்தன. மேலும், 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரையிலான அட்டைதாரா்கள் இறந்துவிட்டதால் பொருள்களை வழங்க முடியவில்லை.

சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற சவால்களை நியாயவிலைக் கடை பணியாளா்கள் சந்தித்தனா். திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பிறகு, முழுமையான அளவில் பயனாளிகளுக்கு பொருள்களைக் கொண்டு சோ்க்க முடியும் என்று கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் வழங்க முடிவு

தமிழ்நாடு முழுவதும் மூத்த குடிமக்களுக்கு மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளைத் தோ்வு செய்து அன்றைய தினம் பொருள்களை நேரில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அதாவது, கடந்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும் எந்தத் தேதியில் மூத்த குடிமக்கள் அதிக அளவு பொருள்களை வாங்கியிருக்கிறாா்கள் என்ற தரவுகளை கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனா்.

மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை போன்ற கிழமைகளைத் தோ்வு செய்து அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் பொருள்களை வழங்கலாமா என்றும் அரசு ஆலோசித்து வருகிறது.

மாநிலத்தில் பயனாளிகள் விவரம்: (கிராபிக்ஸாகப் பயன்படுத்தலாம்)

மொத்த மாவட்டங்கள்: 39

நியாயவிலைக் கடைகள்: 34,814

குடும்ப அட்டைகள்: 2 கோடியே 26 லட்சத்து 68 ஆயிரத்து 771

பயனாளிகள்: 7 கோடியே 55 ஆயிரத்து 863

ஆதாா் பதிவுகள்: 6 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 224

கைப்பேசி எண் பதிவு: 2 கோடியே 26 லட்சத்து 67 ஆயிரத்து 318


No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...