Saturday, August 16, 2025

சுதந்திரம் சரி, ஜனநாயகம்?


சுதந்திரம் சரி, ஜனநாயகம்?

முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி சொன்னதைப்போல், 'மக்களாட்சியான ஜனநாயகத்தின் தாய் இந்தியா' என்பதை நம்முடைய அரசியல்வாதிகள் மறந்துவிடக் கூடாது.

கோப்பிலிருந்து

டி.எஸ்.ஆர். வேங்கடரமணா Published on: 16 ஆகஸ்ட் 2025, 4:56 am

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; ஆனால், எதிரிக்கு பதவி ஆசை என கூறிக் கொண்டே, தன் பதவிக்காகப் போராடும் தலைவர்கள், தொலைக்காட்சி வாயிலாக நம் வீட்டுக் கூடத்துக்குள் வந்து பொய்யுரை ஆற்றுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின்போது, ஆளுநர் பதவியை வைத்து தங்களை வேவு பார்ப்பதாக சொன்ன கட்சிகள், இன்று ஆட்சிக்கு வந்த பிறகு, ஆளுநரை வைத்து ஆளும் மத்திய அரசு சித்து வேலைகளைச் செய்கிறது.

இன்று கூட்டணிக் கட்சிகளை பாஜக விழுங்கி ஏப்பம் விட்டுவிடும் என்று சொல்லும் காங்கிரஸ்தான், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலான 1952-இல் முழுமையாக பலம் இல்லாமல் உழவர் உழைப்பாளர் கட்சி, காமன்வீல் கட்சி இரண்டையும் அகஸ்திய மாமுனிவர் வாதாபியை ஜீரணித்ததுபோல் ஜீரணித்து விட்டது. காங்கிரஸின் அசுரப் பசிக்கு பலியான மாநிலக் கட்சிகளும், சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிப் பிரிவுகளும் ஏராளம். இந்திய அரசியலில் ஆளும் கட்சி என்ற ஒன்று நிரந்தரமாக இல்லை. ஆளுங்கட்சி தோற்று எதிர்க்கட்சியாகி, எதிர்க்கட்சி ஆளும் கட்சியாகும் அரசியல் ராட்டினம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது இந்திய ஜனநாயகத்தின் வெற்றிதான். ஆனால், பதவிக்கு வருபவர்கள் நாட்டைக் குத்தகைக்கு எடுத்த குத்தகைதாரர்போல் செயல்படுவது துரதிருஷ்டம்.

தேர்தல் என்றால் வாக்குச் சீட்டுதானே பிரதானம். இந்திரா காந்தி வென்றால் ரஷிய மை என இந்திய வாக்காளர்களை எதிர்க்கட்சிகள் அவமதிப்பதும்; இந்திரா காந்தி தோற்றவுடன் ஜனநாயகத்தின் வெற்றி எனக் கொண்டாடுவதும் நகை முரண். அந்த எதிர்க்கட்சிகள் கையில் கிடைத்த ஆட்சியைத் தக்கவைக்க முடியாமல், மீண்டும் இந்திராவிடமே ஆட்சியை ஒப்படைத்தார்கள்.

1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி இந்திரா காந்தி அவசர நிலையைக் கொண்டு வந்தார் என 50 ஆண்டுகளாக லாலி பாடும் கட்சிகள், அவர்தான் 1977-இல் தேர்தலைக் கொண்டு வந்து, தோல்வியைச் சந்தித்தார் என்பதையும், ரஷிய மையின் உதவியில்லாமல் மீண்டும் 1980-இல் ஆட்சியைக் கைப்பற்றினார் என்பதையும் காங்கிரஸ் உள்பட அனைவரும் மறந்தது துர்பாக்கியம்தான்.

தேர்தல் ஆணையத்தின் விருப்பப்படி, வாக்கு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ். படித்தவர்கள் அதிகமுள்ள மாநிலமான கேரளத்தில் நடைபெற்ற பரவூர் இடைத்தேர்தலில், இந்த இயந்திரங்கள் சோதனை அடிப்படையில் உபயோகப்படுத்தப்பட்டன. இதை இந்திராவின் சதியென கம்யூனிஸ்ட் தோழர்கள் எதிர்த்தார்கள். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்து, கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி பெற்றார். சும்மா இருப்பார்களா காங்கிரஸ்காரர்கள்? தேர்தல் செல்லாது என உயர்நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினர். வாக்குப்பதிவு இயந்திரம் சரியானது என சாட்சி சொன்னது யாரென்று தெரியுமா? தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த நவீன எழுத்தாளர் சுஜாதா. வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப்போல், உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது காங்கிரஸ். அவர்களின் கெட்டிக்கார வழக்குரைஞர் வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்க்காமல், தேர்தல் நடைமுறைச் சட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி சொல்லப்படவில்லை; தேர்தல் என்பது வாக்குச்சீட்டுகளால் மட்டுமே நடத்தக்கூடியது என்ற விதியை சுட்டிக்காட்டி வாதத்தை முன்வைக்க, அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தேர்தல் சட்டத்தை திருத்தாமல் நடைமுறையை மாற்றக் கூடாது எனத் தேர்தலை ரத்து செய்தது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவைக் கண்டு பயந்த மம்தா வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கடுமையாகச் சாடினார். ஜனநாயகம் பல விந்தைகளை உள்ளடக்கியதுதானே; தேர்தலில் மம்தா அமோக வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை.

சட்டப்பேரவை, நாடாளுமன்ற நிகழ்வுகளில் கேள்வி நேரமும் மற்றும் உடனடிக் கேள்வி நேரமும் (ஜீரோ ஹவர்) மிக முக்கியமானது; இவைதான் உறுப்பினர்களின் உண்மையான நேரம். எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்ற பேதம் இல்லாமல் அனைவரும் அரசு நிர்வாகத்தை எதிர்த்து (ஆளும் கட்சியை அல்ல) கேள்வி கேட்கலாம். அவற்றுக்கு அமைச்சர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

கேள்வி நேரத்தில் பதிலுக்குப் பிறகு, குறுக்குக் கேள்வி என்று அமைச்சரையும், அவருக்கு உதவும் அதிகாரிகளையும் கேள்வி கேட்டுத் திணற வைக்கலாம். கிட்டத்தட்ட உடனடிக் கேள்வி நேரம் வழக்கொழிந்து போய்விட்டது. அவை கூடியவுடனேயே கேள்வி நேரத்தின் மாண்பும், மதிப்பும் தெரியாமல் அதை ஒத்திவைத்து விட்டு, தாங்கள் எழுப்பும் பிரச்னையை உடனே விசாரிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கூச்சலிடவும், ஆளும் கட்சி அதைவிடக் குழப்பங்கள் விளைவிக்க அவை ஒத்திவைக்கப்படுகிறது. கூச்சல், குழப்பம் காரணமாக ஒவ்வொரு முறையும் அவையில் ஜனநாயகப் படுகொலை நடைபெறுகிறது.

அவையில் பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு, ஆளும் கட்சியை எதுவும் செய்ய முடியாது என்ற நிலை இருக்கும்போது முறையான விவாதங்களை அனுமதிக்க மக்களவைத் தலைவர் மறுப்பது முறையல்ல. பஹல்காம் படுகொலையின்போது வெளிநாட்டிலிருந்து பிரதமர் உடனே இந்தியா திரும்பியது முறை என்றால், அவர் அவைக்கு வராமல் பிகார் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றது முறையல்ல.

கூச்சல், குழப்பம் இருந்து 14 மணி நேர விவாதத்தின்போது உண்மைகள் மறைக்கப்பட்டன. இந்திய வாக்காளர்களில் பெரும்பான்மையோர் படிப்பறிவு இல்லாதவர்கள்; ஆனால் அவர்கள் முட்டாளோ, ஊமைகளோ அல்லர்.

முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி சொன்னதைப்போல், 'மக்களாட்சியான ஜனநாயகத்தின் தாய் இந்தியா' என்பதை நம்முடைய அரசியல்வாதிகள் மறந்துவிடக் கூடாது.

கட்டுரையாளர்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...