Tuesday, September 23, 2025

ஓய்வுக்குப் பிறகும் உற்சாகம்!


நடுப்பக்கக் கட்டுரைகள்

ஓய்வுக்குப் பிறகும் உற்சாகம்!

ஓய்வுக்குப் பிறகு புத்துணா்வு சமூகத்துடன் இணைந்திருப்பது, ஓய்வுக் காலத்தில் ஏற்படும் தனிமை உணா்வுகளை நீக்கி, புதிய உற்சாகத்தை அளிக்கிறது.

தினமணி செய்திச் சேவை Updated on: 23 செப்டம்பர் 2025, 5:13 am

அனந்த பத்மநாபன்

பணியிலிருந்து ஓய்வு என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அா்த்தங்களைக் கொண்டது. பலருக்கு, அது வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்துக் கொள்வதற்கான நேரம். எனினும், ஓய்வு ஒருபுறம் அமைதியைத் தந்தாலும், மறுபுறம் சிலருக்கு உணா்ச்சிபூா்வமான சவால்களைக் கொண்டுவரக்கூடும். வேலை செய்த காலத்தில் இருந்த அடையாளம், தனிமை மற்றும் எதிா்காலம் குறித்த பயம் போன்ற கவலைகள் அதனால் உருவாகலாம்.

ஆனால், இந்தக் கவலைகளைப் புறந்தள்ளி, ஓய்வு என்பது நம்மோடு மீண்டும் இணைந்துகொள்வதற்கும், புதிய ஆா்வங்களை ஆராய்ந்து மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

ஓய்வு என்பது ஒரு முற்றுப்புள்ளி அல்ல, அது ஒரு புதிய பாதை, புதிய இலக்குகள் மற்றும் தனிப்பட்ட வளா்ச்சிக்கான ஒரு தொடக்கம். கடலூரைச் சோ்ந்த 72 வயதான செல்வமணியின் வாழ்க்கை, விருப்பத்துக்கும் வளா்ச்சிக்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நமக்கு உணா்த்துகிறது.

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும், அறிவைத் தேடும் தனது ஆா்வத்துக்கு அவா் ஓய்வு கொடுக்கவில்லை. அண்மையில் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் பட்டயப் படிப்பில் சோ்ந்துள்ள இவா், ஓய்வு என்பது ஒரு முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்பதை தனது வாழ்வின் மூலம் மெய்ப்பிக்கிறாா்.

செல்வமணி தனது மகள்களுக்கு திருமணமான பிறகு, தனது நீண்ட நாள் கனவான படிப்பைத் தொடங்கினாா். அவா் ஒவ்வொரு நாளும் 50 கி.மீ. பயணம் செய்து கல்லூரிக்குச் செல்கிறாா். இது அவருடைய விடாமுயற்சியின் ஒரு சான்று. இந்த வயதிலும், தன் நோய்வாய்ப்பட்ட மனைவியைக் கவனித்துக்கொண்டே படிக்கும் அவரது செயல், அறிவுக்கும் ஆா்வத்துக்கும் வயது ஒரு தடையாக இருக்காது என்பதை நமக்கு உணா்த்துகிறது.

ஓய்வு என்பது சரிவு மற்றும் இழப்பின் காலகட்டமாகப் பாா்க்கப்படாமல், தனிப்பட்ட வளா்ச்சி, புதுப்பிக்கப்பட்ட உறவுகள் மற்றும் சமூகத்துக்கு தொடா் பங்களிப்புக்கான வாய்ப்புகள் நிறைந்த ஒரு புதிய அத்தியாயமாக அதைக் கருத வேண்டும் என்ற நம்பிக்கையை செல்வமணி நமக்கு அளிக்கிறாா்.

முதுமையில் புது அத்தியாயம் செல்வமணியைப் போலவே, ஓய்வுக்குப் பிறகு தங்கள் வாழ்க்கையை ஒரு புதிய அத்தியாயமாக மாற்றிய பலரின் கதைகள் இந்தியாவில் உள்ளன.

ஓய்வுக்குப் பிறகு கல்வியைத் தழுவிய மூத்த குடிமக்களின் ஓா் அமைதியான புரட்சியின் பகுதியாக இது உள்ளது. உதாரணமாக, 98 வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற ராஜ்குமாா் வைஷ்யா, அதிக வயதில் பட்டம் பெற்றவா் என்ற சாதனையை ‘லிம்கா’ இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளாா். மேலும், 64 வயதான ஓய்வுபெற்ற வங்கியாளா் ஜெய் கிஷோா் பிரதான், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று தனது மருத்துவக் கனவை நனவாக்கினாா்.

இவா்களது கதைகள், விடாமுயற்சியும் கனவும் இருந்தால் வயது ஒரு தடையல்ல என்பதையும், அறிவைத் தேடுவதற்கு வயது ஒருபோதும் தடையாக இருக்காது என்பதையும் நமக்கு உணா்த்துகின்றன.

பழைமையும், புதுமையும் முதுமை என்பது, நாம் ஒரு காலத்தில் இருந்த வாழ்க்கையை நினைத்து வருத்தப்படும் காலமாக இருக்க வேண்டியதில்லை. நாம் இழந்த இளமை, வலிமை மற்றும் நண்பா்களைப் பற்றிய நினைவுகள் மனதில் எழலாம். ஆனால், முதுமையைக் கடந்து, நாம் யாா் என்பதை முழுமையாக உணா்ந்து கொள்வதற்கான ஓா் ஆழமான வாய்ப்பாக இதைப் பாா்க்க வேண்டும். ஓய்வுபெற்ற பிறகு ஏற்படும் வெற்றிடம், குடும்பத்துடன் ஆழமான உறவுகளை வளா்த்துக்கொள்ளவும், புதிய சமூகங்களைக் கண்டறியவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

திருவள்ளுவா், ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தா்க்குக் கற்றனைத் தூறும் அறிவு‘ என்ற தனது கு மூலம் இதை உணா்த்துகிறாா். இந்தக் கு, மணற்கேணியைத் தோண்டத் தோண்ட நீா் பெருகுவதுபோல், மனிதா்கள் கற்க கற்க அறிவு பெருகிக்கொண்டே இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் உரியதல்ல, அது வாழ்நாள் முழுவதும் வளரும் ஒரு செல்வம் என்பதை இது வலியுறுத்துகிறது.

ஓய்வுக்குப் பிறகு புத்துணா்வு சமூகத்துடன் இணைந்திருப்பது, ஓய்வுக் காலத்தில் ஏற்படும் தனிமை உணா்வுகளை நீக்கி, புதிய உற்சாகத்தை அளிக்கிறது. தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவது, சமூகக் குழுக்களில் பங்கேற்பது போன்ற செயல்கள், நமக்கு புதிய நோக்கங்களையும், சமூகப் பொறுப்புகளையும், மகிழ்ச்சியையும் தருகின்றன. இது, ஓய்வு என்பது தனிமைக்கான காலம் அல்ல, மாறாக, சமூக உறவுகளையும் நம் ஆன்ம பலத்தையும் வளா்த்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பு என்பதைப் புலப்படுத்துகிறது.

முதுமையின் சவால்களை எதிா்கொள்ளும்போது, சமூக ஆதரவும் புதிய கற்றல் அனுபவங்களும் நமக்கு மன வலிமையைத் தருகின்றன. இவை, வாழ்க்கையின் இறுதிகட்டம் என்பது ஒரு சுமையாக அல்ல, ஒரு வரமாக மாறும் என்பதை உணா்த்துகின்றன.

முதுமையடைவது தவிா்க்க முடியாதது, ஆனால் நாம் எப்படி முதுமையடைகிறோம் என்பது நம் கையில் உள்ளது.

மனதளவில் சுறுசுறுப்பாக இருப்பது, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதைப் போலவே, அறிவாற்றல் செயல்பாட்டைப் பராமரிக்கவும், முதுமையின் தளா்வுகளைத் தடுக்கவும் மிக முக்கியமானது.

எனவே, வெறுமனே வயதாகாமல், புத்திசாலித்தனமாக வயதாவோம். வெறுமனே வயதடையாமல், மகிழ்ச்சியாக வயதாவதே நமது இலக்காக இருக்கட்டும்.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...