DINAMANI
மெளனம் பலவீனம் அல்ல!
சில நேரங்களில், நாம் பேசாமல் இருந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் நாம் சொல்லக்கூடிய மிகவும் தேவையற்ற பேச்சாக இருக்கலாம்.
தினமணி செய்திச் சேவை Published on: 20 நவம்பர் 2025, 3:21 am Updated on: 20 நவம்பர் 2025, 3:21 am 2 min read
அனந்தபத்மநாபன்
சில நேரங்களில், நாம் பேசாமல் இருந்திருக்க வேண்டிய ஒரு விஷயம் நாம் சொல்லக்கூடிய மிகவும் தேவையற்ற பேச்சாக இருக்கலாம்.
நம் வாழ்வில் வெற்றி, உறவு, மரியாதை என அனைத்தின் மதிப்பையும் தீர்மானிப்பது நாம் உச்சரிக்கும் வார்த்தைகள் மட்டுமல்ல; உள்ளிழுத்து நிறுத்திவைக்கும் வலிமையான வார்த்தைகளும்தான். ஏனெனில், உணர்ச்சிவசப்பட்டு வாய் தவறிச் சொல்லும் ஒரு நிமிஷ தகவல், பல ஆண்டுகளின் உழைப்பையும், நம்பிக்கையையும், ஏன், நம் எதிர்காலத்தின் பேரழிவு தரும் பெரும் செல்வத்தையும்கூட ஒரு விநாடியில் இழக்கச் செய்துவிடும் வல்லமை கொண்டது.
திருவள்ளுவர், பேச்சின் சக்தியையும், அதை அடக்க வேண்டிய அவசியத்தையும் மிக ஆழமாக வலியுறுத்தி,
"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்
அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து'
(குறள் 645)
என்று கூறுகிறார்.
அதாவது, நாம் பேசும் வார்த்தையைவிடச் சிறந்த, அதை வெல்லக்கூடிய வேறொரு வார்த்தை இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்த பின்னரே பேச வேண்டும். தேவையற்ற பேச்சுகளைத் தவிர்ப்போம்.
நாம் பேசும்போது, நம் திட்டங்கள், நிதி நிலைமை, பலவீனங்கள் போன்ற ரகசியமான விவரங்களை மற்றவர்களுக்கு இலவசமாகவே வழங்குகிறோம். இந்தத் தகவல்கள், நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவர்களின் காதுகளுக்குச் செல்லும்போது, நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதமாக மாறலாம். மேலும், கோபம் உச்சத்தில் இருக்கும்போது வெளிப்படும் உணர்ச்சிமிகு வார்த்தைகள், மரண ஓசை போல ஆழமான வடுக்களை ஏற்படுத்தும். ஐந்து நிமிஷ ஆத்திரத்தில் பேசிய கடுமையான சொற்கள், பல ஆண்டு உறவின் அடித்தளத்தையே பிளந்துவிடும். அந்த சமயத்தில் காக்கும் மெளனம், இந்த இழப்புகளைத் தவிர்க்க உதவுகிறது.
மெளனம்தான் நமக்குத் தியானம்; கட்டுப்பாடே வெற்றிக்கு ஆதாரம்; உண்மையில் வெற்றி பெற்றவர்கள், தங்களுடைய ஒவ்வொரு சிந்தனையையும் உடனடியாக வார்த்தைகளாக மாற்றுவதில்லை; எப்போது, எங்கு, யாரிடம் பேசுவது என்பதில் அவர்கள் கடுமையான கட்டுப்பாட்டோடும் நிதானத்தோடும் இருப்பார்கள்.
இந்த நிசப்தத்தின் அசைக்க முடியாத வலிமையை உணர்ந்து வென்ற சில மாமனிதர்களின் வாழ்க்கைப் பாடங்களைக் காண்போம். வாரன் பஃபெட், உலகின் மிகச் சிறந்த முதலீட்டாளராக இருந்தும், சந்தை நிலவரங்கள் குறித்து நாள்தோறும் கருத்து தெரிவிப்பதில்லை.
ஒரு நிறுவனத்தின் மதிப்பை ஆழமாகப் புரிந்துகொண்டால், விலைகள் ஏறுவதோ, இறங்குவதோ குறித்து அவர் கவலைப்படுவதில்லை. அவசரப் பேச்சையோ, பரபரப்பான வர்த்தகத்தையோ தவிர்த்து, நீண்ட கால நோக்குடன் அமைதியைக் கடைப்பிடிப்பதே அவரை உலகின் மாபெரும் செல்வந்தர்களில் ஒருவராக ஆக்கியது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கையும் நிசப்தத்தின் வலிமையை உணர்த்துகிறது. இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தை ஆரம்பித்தபோது, அது ரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஒரு சவாலான திட்டமாக இருந்தது. சர்வதேச அழுத்தம், உள்நாட்டுச் சந்தேகங்கள் நிறைந்தபோதும், அவர் பதிலளிக்காமல், தனது குழுவினருடன் பொதுவெளியில் பேசாமல், அமைதியாகப் பல ஆண்டுகள் உழைத்தார்.
இந்த நிசப்தமான, உறுதியான உழைப்புதான் அக்னி, பிரித்வி போன்ற ஏவுகணைகள் வெற்றிகரமாக ஏவப்பட முக்கியக் காரணமாக இருந்தது. "வெற்றி பேசும்போது, நாம் பேச வேண்டியதில்லை' என்பதற்கு இவரே சிறந்த உதாரணம். பேசுவதைவிடச் செயலாற்றுவதே சிறந்தது.
தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடிப்பதற்காக ஆயிரக்கணக்கான முறை தோல்வியைத் தழுவியபோதும், சோர்வடைந்து ஒருபோதும் வெளியே பேசவில்லை. தனது தோல்விகள் குறித்து தேவையற்ற பேச்சுகளைப் பேசாமல், அவர் ஆராய்ச்சி, பரிசோதனைக்கூடத்தின் அமைதியிலேயே கவனம் செலுத்தினார்.
இந்திய தொழில்துறையின் ஜாம்பவான் ரத்தன் டாடா, நெருக்கடியான காலங்களில் அமைதி காத்ததன் மூலம் பெரும் வெற்றிகளை ஈட்டியவர். மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின்போது, அவர் உணர்ச்சிவசப்பட்டு கருத்துகளைத் தெரிவிக்காமல், அமைதி காத்து, முழுக் கவனத்தையும் ஹோட்டலை புனரமைப்பதிலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மன உறுதி அளிப்பதிலுமே செலுத்தினார். ஊடகங்கள் அதிகக் கேள்விகளை எழுப்பியபோதும், அவர் காட்டிய இந்த உறுதியான நிதானமும், மெளனமும், டாடா குழுமத்தின் புகழையும் மதிப்பையும் விண்ணளவுக்கு உயர்த்தியது.
இந்த மாமனிதர்களின் வாழ்க்கை நிரூபிப்பதுபோல, நாம் பேசாமல் இருந்த ஒவ்வொரு முறையும், ஒரு பெரிய சண்டையை, ஒரு தேவையற்ற வாக்குறுதியை அல்லது ஒரு பெரிய இழப்பைத் தவிர்த்திருக்கிறோம் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.
எனவே, நம் வார்த்தைகளைச் செலவழிக்க வேண்டிய அரிய பொருளாகப் பார்க்க வேண்டும். தேவையற்ற பேச்சைத் தவிர்ப்போம். செலவழிக்கும்முன் அதன் மதிப்பை யோசிக்க வேண்டும்.
சில நேரங்களில் மெளனமே, நாம் சூட வேண்டிய விலைமதிப்பற்ற கிரீடமாக இருக்கும். நாம் நம் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்; நம் வாழ்க்கையின் முழுமையான கட்டுப்பாட்டையும் நாமே எடுத்துக் கொள்ள வேண்டும்!
மெளனமும் நிசப்தமும் ஆடம்பரம் அல்ல; அவை மனத் தெளிவுக்கான இன்றியமையாத கருவி. அவை முடிவெடுக்கும் முறையை, குழப்பமான, எதிர்வினை சார்ந்த செயல்பாட்டிலிருந்து, நிதானமான, திட்டமிட்ட, மற்றும் நுண்ணறிவுள்ள ஒன்றாக மாற்றுகின்றன.
நிசப்தம் என்பது பலவீனம் அல்ல; அதுவே அசைக்க முடியாத பலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
No comments:
Post a Comment