Friday, October 31, 2014

சுவையான மின்னஞ்சல்களைத் தனியாகத் தொகுத்தளிக்கும் வழியில் ஒரு இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.



உலகில் மின்னஞ்சல்கள் வந்த பின்பு தகவல் தொடர்பு எளிமையாகிவிட்டது. அதன் பயன்பாடுகளும் அதிகமாகிவிட்டன. உலகம் முழுவதும் இந்த மின்னஞ்சல்கள் வழியாகப் பல்வேறு பரிமாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த மின்னஞ்சல் பரிமாற்றங்களில் ஆங்கில மொழியிலான சுவையான மின்னஞ்சல்களைத் தனியாகத் தொகுத்தளிக்கும் வழியில் ஒரு இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த இணையதளத்தில் வேடிக்கையான மின்னஞ்சல்கள் (Funny Emails), படத்திலான மின்னஞ்சல்கள் (Picture Emails), குறுங்கதை மின்னஞ்சல்கள் (Short Story Emails), கல்விசார் மின்னஞ்சல்கள் (Educational Emails), சுவையான உண்மைகள் (Interesting Facts), நட்புக்கான மின்னஞ்சல்கள் (Friendship Emails), அலுவலக மற்றும் பணிகளுக்கான மின்னஞ்சல்கள் (Office & Work Emails) எனும் முதன்மைத் தலைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இத்தலைப்புகளில் தலைப்புடன் தொடர்புடைய மின்னஞ்சல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

இவை தவிர, மின்னஞ்சல் வகைகள் (Email Categories) எனும் தலைப்பில் பல்வேறு தலைப்புகளின் கீழ் மின்னஞ்சல்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தலைப்புகளில் ஒவ்வொரு வகையின் கீழும் எத்தனை மின்னஞ்சல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை அடைப்புக் குறிக்குள் இட்டுள்ளனர்.

இவற்றின் வழியாக நாம் விரும்பும் தலைப்பினுள் சென்று அங்குள்ள மின்னஞ்சல்களைப் படித்து மகிழலாம். அதை நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ அனுப்பலாம். இதுபோல் இத்தளத்தில் நாமும் மின்னஞ்சல்களை சமர்ப்பிப்பதற்கும் வசதி உள்ளது.

மின்னஞ்சல்களில் புதிய செய்திகளை அறியவும், சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும் இந்த இணையதளத்தினைப் பயன்படுத்த http://www.interestingemails.com/எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.

கத்தி' படத்தில் வரும் செல்போன் நம்பரால் ரசிகர்களின் போன் அழைப்புகளின் தொல்லை தாங்காமல், "அது நான் இல்லே" என கதறிக்கொண்டிருக்கிறார்.


கத்தி' படத்தில் வரும் செல்போன் நம்பரால் ரசிகர்களின் போன் அழைப்புகளின் தொல்லை தாங்காமல், "அது நான் இல்லே" என கதறிக்கொண்டிருக்கிறார்.

தீபாவளி ரிலீஸாக வெளியான நடிகர் விஜய் நடித்த, ‘கத்தி‘ படம் தமிழகம் முழுவதும் ஏராளமான திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில், கதாநாயகி சமந்தா தனது காதலன் விஜய்யிடம் தன்னை அழைப்பதற்காக ஒரு செல்போன் எண்ணை கொடுப்பார். நாயகன் விஜய், இந்த எண்ணை பலமுறை சொல்லிக்கொண்டே, அந்த எண்ணில் அழைக்கும் போது, சென்னை மாநகராட்சி ஊழியர் எடுத்து, இது மாநகராட்சிக்கான எண் எனவும், தாங்கள் நாய் பிடிக்கும் பிரிவு எனவும் கூறுவதாக படத்தில் வேடிக்கையான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

கத்தி திரைப்படத்தில் விஜய் பலமுறை திரும்ப திரும்பக் கூறிய அந்த செல்போன் எண்தான் தற்போது கன்னியாகுமரி மாவட்டம், அருமனை என்ற இடத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்ற ஆசிரியரை கதற வைத்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் படத்தில் விஜய் கூறும் அந்த எண், அந்த ஆசிரியருடையது.

தீபாவளிக்கு படம் வெளியான தினத்திலிருந்தே ஜெகதீஷுக்கு ஏகப்பட்ட போன் அழைப்புகள். "தலைவா படம் சூப்பர்; சமந்தாவிடம் பேச முடியுமா?; அடுத்த படம் எப்போ?.; அந்த காட்சி அப்படி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்; காதல் காட்சியில் நடிக்கும்போது எப்படி இருந்தது?...என்ற ரீதியில் ஒருதரப்பு ரசிகர்கள் கேட்டால், மறுபக்கம் படத்தை திட்டியும், விமர்சித்தும் பேசிக்கொண்டே போகிறார்கள் ரசிகர்கள்.

ரசிகர்கள்தான் இப்படி போன் செய்கிறார்கள் என்றால் மாணவிகள், இளம்பெண்களும் ஒருபக்கம் விஜயிடம் பேசுவதாக நினைத்துக்கொண்டு, " நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. உங்க படம்னா எனக்கு உயிர்..." என்றெல்லாம் பேச, கிர்ரடித்துப் போயுள்ளார் ஆசிரியர் ஜெகதீஷ். போதாதற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என வெளிநாடுகளிலிருந்தும் ஏகப்பட்ட அழைப்புகள் வருகிறதாம்.

போனை எடுத்து ஹலோ சொல்லி, "நான் விஜய் இல்லை!" எனக் கூறுவதற்கு முன்னதாகவே, எதிர்முனையில் இருப்பது விஜய்தான் என நினைத்துக்கொண்டு ரசிகர்கள் பேசிக்கொண்டே போக, செய்வதறியாமல் திகைத்துபோயுள்ளார் ஜெகதீஷ்.

தீபாவளி விடுமுறை முடிந்தும், போன் தொல்லை அதிகமாகவே, போனை தான் வேலை பார்க்கும் பள்ளிக்கு கொண்டு செல்லாமல், வீட்டிலேயே வைத்துவிட்டு செல்கிறார் ஜெகதீஷ். இதனால் அவரை ஆத்திர அவசரத்திற்கு அழைக்க முடியாமல் திண்டாடிப்போகின்றனர் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.

வீட்டிற்கு வந்து பார்த்தாலோ தினமும் 400 முதல் 500 வரை மிஸ்டு கால்களாக இருப்பதாக புலம்புகின்றார் ஜெகதீஷ். இதனால் போன் நம்பரையே மாற்றிவிடலாமா? என்ற அளவுக்கு சிந்திக்க தொடங்கிவிட்டார் ஜெகதீஷ்.

வேறு சிலரோ இந்த எண் இயக்குனர் முருகதாஸுடையது என்று நினைத்துக்கொண்டும் பேசுகிறார்களாம். அதுமாதிரி ஒரு பெண் தென்னாப்பிரிக்காவிலிருந்து" உங்களை போனில் அழைத்தேன். ஆனால் நீங்கள் எடுக்கவில்லை. உங்களை நேரில் பார்த்து பேச வேண்டும்" என எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளாராம்.

இந்நிலையில் தனது சொந்த உபயோகத்திற்கான போன் நம்பர் கத்தி படத்தில் எப்படி இடம்பெற்றது? எனத் தெரியாமல் குழம்பும் ஆசிரியர் ஜெகதீஷ், இது தொடர்பாக 'கத்தி' படத்தின் இயக்குனர் முருகதாஸை இது சம்பந்தமாக சந்திக்கப்போவதாக கூறியுள்ளார்.

முருகதாஸ் என்ன விளக்கம் சொல்லப்போகிறாரோ?

Thursday, October 30, 2014

7 வயது சிறுமியின் வாயில் முளைத்த 202 பற்கள் அகற்றம்

டெல்லி: மனிதர்களுக்கு சாதாரணமாக 32 பற்கள்தான் இருக்கும். ஒன்றிரண்டு பற்கள் கூடுதலாக இருந்தாலே சமாளிப்பது கடினம். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், 7 வயது சிறுமியின் வாயிலிருந்து சிறிதும் பெரிதுமாக முளைத்திருந்த 202 பற்களை அகற்றியுள்ளனர்.

குர்கானில் ஹோட்டல் நடத்தி வருபவரின் 7 வயது மகள் ஈறுகளில் வீக்கம், வாய் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் பல் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் வாயில் வழக்கத்திற்கு மாறாக சிறிதும் பெரிதுமாக 202 பற்கள் வளர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பற்களை மிகவும் கவனமாக அகற்றினர்.

சிறுமியின் வாயில் வளர்ந்திருந்த பற்களை அகற்ற பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட எலும்பு முறிக்கும் கருவியை பயன்படுத்தினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவர் அஜோய், ‘பொதுவாக இத்தகைய பற்களின் வளர்ச்சியை காண முடியும். ஆனால், 7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது' என்றார். இந்த அறுவை சிகிச்சை சுலபமானது என்றாலும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலை இருந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு சிகிச்சை நடைப்பெற்றதாக தெரிவித்தார் மருத்துவர். சிறுமியின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதால், இது தான் அவளுக்கு கிடைத்த சிறந்த பிறந்த நாள் பரிசு என சிறுமியின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை மேற்கொண்ட சிறுமிக்கு தற்போது திரவ உணவு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில மாதங்களில் அவளால் முன்பு போல உணவு சாப்பிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மும்பை மருத்துவமனைக்கு இதே பாதிப்புடன் வந்த 17 வயது வாலிபரின் வாயிலிருந்து 232 பற்களை அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்க்து.

15 பயணிகளை சென்னையில் தவிக்கவிட்டு பெங்களூர் பறந்த ஏர் இந்தியா விமானம்! பயணிகள் குமுறல்


15 பயணிகளை சென்னையில் தவிக்கவிட்டு பெங்களூர் பறந்த ஏர் இந்தியா விமானம்! பயணிகள் குமுறல்

சென்னை: ஐந்து நிமிடம் தாமதமாக விமான முனையத்திற்கு சென்றதால் 15 பயணிகளை விமானத்திற்குள் ஏற அனுமதிக்காமல், கெடுபிடி செய்த ஏர் இந்தியா விமான அதிகாரிகளால் சென்னை-பெங்களூர் பயணிகள் கடும் அவதிப்பட்ட சம்பவம் இன்று நடந்துள்ளது.

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் டெலிவரி மேனேஜராக பணியாற்றும், மதன் ராமகிருஷ்ணனுக்கும், டிசைன் இன்ஜினியராக வேலை பார்க்கும் லாரல் மார்ஷலுக்கும் இன்றைய தினத்தையும், ஏர் இந்தியாவையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவசரமாக பெங்களூர் வர இருந்தவர்களை ஆற அமர ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்து 'புண்ணியம் கட்டிக்கொண்ட' ஏர் இந்தியாவை ஈசியாக மறக்க முடியுமா என்ன? மதன்ராமகிருஷ்ணன், லாரல் மார்ஷல் மட்டுமல்ல, அவர்கள் உட்பட 15 பேருக்கு இன்று ஏர் இந்தியா தனது சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை 6 மணிக்கு கிளம்பும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பதற்காக, ஏர்போர்ட் வந்தார் மதன் ராமகிருஷ்ணன். பெங்களூருக்கு வழக்கமாக உள்நாட்டு முனையத்தில் இருந்துதான் ஏர் இந்தியா விமானங்கள் கிளம்பும் என்பதால் அந்த முனையத்துக்கே சென்றுள்ளார்.

ஆனால், திடீரென அங்கிருந்த அதிகாரிகள், பெங்களூர் விமானம், சர்வதேச முனையத்தில் இருந்து கிளம்புவதாக அறிவித்து குண்டை போட்டுள்ளனர். சரி நடந்து செல்லும் தூரம்தானே என்று நினைத்து சர்வதேச முனையத்துக்கு ஓட்டமும் நடையுமாக சென்றுள்ளார் மதன் ராமகிருஷ்ணன். அவருடன் லாரல் மார்ஷல் உட்பட மொத்தம் 15 பேர் இப்படியாக திடீர் அலைக்கழிப்புக்கு உள்ளாகி வேறு முனையத்திற்கு ஓடியுள்ளனர். ஆனால் அங்குதான் பெரும் அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது. கேட்டை இழுத்து மூடிய அதிகாரிகள், நேரமாகிவிட்டது, இனிமேல், விமானத்தில் உங்களை ஏற்ற மாட்டோம் என்று கறாராக உத்தரவு போட்டுள்ளனர். இது என்னய்யா கொடுமை.. ஏதோ ஒருவர் என்றாலும் பரவாயில்லை, மொத்தமாக 15 பேர் தாமதமாக வந்துள்ளோம் என்றால், அதன் பின்னால் ஒரு காரணம் இல்லாமலா இருக்கும் என்று பயணிகள் கேட்ட நியாயமான கேள்வி அதிகாரிகள் காதுகளில் ஏறவில்லை.

இத்தனைக்கும், அரை மணிநேரம் தாமதமாக அவர்கள் வரவில்லை. ஐந்து நிமிட தாமதமாகவே வந்துள்ளனர். அதுவும் ஏர் இந்தியா செய்த முனைய குழப்பத்தால். சிறு பிள்ளைகளுக்கு சொல்வதைப்போல அனைத்து பயணிகளும் இதை எடுத்துச் சொல்லியும், மூடிய கேட் மூடப்பட்டதுதான் என்று கட்-அண்ட் ரைட்டாக கூறியுள்ளனர் அதிகாரிகள். தேவைப்பட்டால் சிசிடிவி கேமராக்களை வேண்டுமானாலும் செக் செய்து பாருங்கள், நாங்கள் 45 நிமிடங்களுக்கு முன்பே ஏர்போர்ட்டிற்குள் வந்துவிட்டோம். முனைய குழப்பத்தால் தாமதமாகிவிட்டது என்றும் பயணிகள் கெஞ்சியுள்ளனர். பயணிகளே இல்லாவிட்டாலும் எங்கள் பிளைன் பறக்கும் என்று கூறி, கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக பயணிகளிடம் நடந்துகொண்டனராம் ஏர் இந்தியா அதிகாரிகள். இவர்கள் வேலைக்கு உதவமாட்டார்கள் என்று, ஏர்போர்ட் காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி விமானத்தில் ஏற்ற உதவுமாறு கேட்டுள்ளனர் பயணிகள். ஆனால் காவல்துறையினரோ, எங்களால் விமான இயக்க விவகாரத்தில் தலையிட முடியாது என்று தங்கள் இயலாமையை தெரிவித்துவிட்டனராம். மேலும், "இது முதல்முறை கிடையாது. இதுபோல பலமுறை நடந்துள்ளது. பயணிகள் எங்களிடம் ஓடி வருவார்கள். ஆனால் போலீசாரால் இந்த விவகாரங்களில் தலையிட முடியாது" என்றும் ஏர்போர்ட் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பயணிகளிடம் நிலைமையை எடுத்துக்கூறியுள்ளார்.

 ஆத்திரமடைந்த பயணிகள், கோபத்தில் சாபமிட்டபடியே, வாடகை கார்களிலும், ரயில்களிலும் பெங்களூரை நோக்கி புறப்பட்டனர். சிலர் வேறு விமானத்தில் கிளம்பியுள்ளனர். இதில் மற்றொரு வேதனை என்னவென்றால், எந்த ஒரு பயணிக்கும் விமான கட்டணத்தை திருப்பி தரமுடியாது என்று கூறிவிட்டதாம் ஏர் இந்தியா. ரயிலில் பெங்களூர் நோக்கி பயணித்தபடியே, மதன் ராமகிருஷ்ணன், லாரல் மார்ஷல் ஆகியோர் 'ஒன்இந்தியாவை' தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் மனக்குமுறலை தெரிவித்தனர். இனியாவது திருந்துமா ஏர் இந்தியா?

வாட்ஸ் அப்: புரட்சி...போராட்டம்!


கடந்த சில வாரங்களாக, வாட்ஸ் அப்பில் காட்டுத் தீயாக பரவும் வேண்டுகோள், 'அக்டோபர் 31ஆம் தேதி யாரும் மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த வேண்டாம். அன்றைய தினம் இண்டர்நெட் இணைப்பை துண்டித்து, நமது எதிர்ப்பை மொபைல் போன் சர்வீஸ் அளிக்கும் நிறுவனங்களுக்குத் தெரிவிப்போம். இனி, திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டணத்தை உயர்த்தும் முன்பு யோசிப்பார்கள்!' என்கிறது அந்த வேண்டுகோள்.

இன்றைக்கு மொபைல் போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருள் போல ஆகிவிட்டது. மேலும், மொபைல் போனில் இண்டர்நெட் பார்க்கும் வசதி வந்தவுடன், அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிகையும் ஸ்மார்ட் போன் விற்பனையும் எகிற ஆரம்பித்திருப்பது நாம் அறிந்ததே.

வாட்ஸ் அப்பில் பகிரப்படும் அந்தச் செய்தியில், மொபைல் இண்டர்நெட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு என்ன என்றால், 'ஆரம்பத்தில் 1ஜிபி பயன்படுத்த 68 ரூபாய் கட்டணம். 30 நாட்கள் வரை இந்த சேவையைப் பெறலாம். இப்போது அதே 1ஜிபி பயன்படுத்த 198 ரூபாய் கட்டணம். அதுவும் 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டதா' என்பதுதான் அதில் கேட்கப்படும் கேள்வி.

மொபைல் போன் மூலம் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் பார்ப்பதற்கு அடிமையாகி விட்டோம். இவற்றைப் பார்க்காமல் வாடிக்கையாளர்களால் சும்மா இருக்க முடியாது என நினைத்துதான் செல்போன் நிறுவனங்கள் இப்படி கட்டணத்தை கண்டபடி உயர்த்துகின்றன. அக்டோபர் 31ஆம் தேதி அன்று, இந்தியா முழுவதும் இந்த சேவையைப் பயன்படுத்தாமல், நாம் யார் என்பதைக் காண்பிப்போம் என சவால் விடுகிறது அந்த வேண்டுகோள்.

நாளை அக்டோபர் 31. வாட்ஸ் அப் போராட்டத்தின் பலமும், பலனும் நாளைக்கே தெரியும்!

விளம்பரங்கள் இல்லாத வீடியோ சேவை துவக்குகிறது யூ டியூப்


உலகின் நம்பர் ஒன் வீடியோ இணையதளம் யூ டியூப் என்பது அனைவரும் அறிந்ததே. எப்படி இணையதள தேடல்களுக்கு கூகுள் இணையதளத்தை நாடுகிறார்களோ அதேபோல் வீடியோக்களை பார்க்க யூ டியூப் தான் சரியான இணையதளம் என்கிறார்கள் இணையதளவாசிகள். இதில் வீடியோக்களை பார்ப்பவர்கள் கூறும் ஒரே குறை வீடியோ ஆரம்பிப்பதற்கு முன் அனுமதிக்கப்படும் விளம்பரங்கள் தான்.

இதனை சமாளிக்க யூ டியூப் விளம்பரம் இல்லாத வீடியோ சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதனை பிரீமியம் சேவையாக கட்டணத்தில் வழங்கவும் யூ டியூப் திட்டமிட்டுள்ளது. இதனால் ரசிகர்களை அதிக அளவில் திருப்தி படுத்த முடியும் என்று யூ டியூப் நிர்வாகம் கூறியுள்ளது.

கூகுளின் இணைப்பு சேவையாக உள்ள யூ டியூப் தற்போது உள்ள வாடிக்கையாளர்களை தாண்டி மாதத்திற்கு ஒரு பில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற அளவை எட்ட இதனை செய்ய போவதாக யூ டியூப் தெரிவித்துள்ளது. இந்த சேவை குறைந்த கட்டனத்தில் ஆரம்பிக்க போவதாக கூறியுள்ளது யூ-டியூப். இனி வீடியோக்கள் ஆரம்பிக்கும் போது விளம்பரங்கள் வராது என்றாலும் இதற்கு போய் பணம் கட்டுவதா என்கின்றனர் இணையதளவாசிகள் சிலர்.
 

RTI QUERY...REPLIED BY THE MEDICAL COUNCIL OF INDIA



NEWS TODAY 31.01.2026