Wednesday, November 12, 2014

ஸ்னாப்டீலின் சேவிங்ஸ் டே! என்ன கவனிக்க வேண்டும்


இந்தியாவில் இனி யாரையுமே கடைக்கு போக விடமாட்டோம் என்று கூறும் அளவுக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளி வழங்குகின்றன. அமேசானின் மிஷன் மார்ஸ், ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேயை தொடர்ந்து தற்போது களமிறங்கியுள்ள ஸ்னாப்டீல் இன்று சேவிங்ஸ் டே என ஆஃபர் தினத்தை அறிவித்துள்ளது. இன்றைய ஆஃபர்கள் ஃப்ளிப்கார்ட் சந்தித்தது போல சொதப்பல்களை சந்திக்குமா? அதனை சரி செய்ய முயற்சிக்குமா? என்பதை பார்ப்போம்.
 
இன்று காலை 7 மணிக்கு ஆஃபர்கள் துவங்கின. ஸ்னாப்டீல் ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே போல் தனித்தனி பிரிவுகளில் விற்பனை செய்யாமல் ஒரே ஆஃபராக ''ஹவர்லி ஆஃபர்ஸ்'' என்ற பெயரில் குறிப்பிட்ட நேரத்திற்கு அனைத்து பிரிவுகளில் உள்ள பொருட்களுக்கும் 50-60 சதவிகித ஆஃபர்களில் விற்பனை செய்கிறது. இதில் குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ்,பேஷன், வீட்டு உபயோகப் பொருட்கள் தான் இடம் பெற்றுள்ளன. 
 
அதேசமயம் மற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களை போல சிறிது நேரத்தில் குறைந்த விலைக்கு அதிக ஆஃபரில் விற்கப்பட்ட பொருட்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டன. மணி நேரத்தை அடிப்படையாக கொண்டு ஸ்னாப்டீல் ஆஃபர்களை வெளியிட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் இது தான் குறைந்த விலையா? இல்லை இன்னமும் குறையுமா என்ற குழப்பத்தில் இருப்பதாக சமூக வலைதலங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
 
இந்த ஆஃபர்களில் பொருட்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை:
 
ஏற்றி இறக்கும் ஆஃபர்!
 
இ-காமர்ஸில் பொருள் வாங்குபவர்கள் முதலில் கவனிக்க வேண்டியது, விலையைத்தான். சமீபத்தில் பிரபல இ-காமர்ஸ் இணையதளம் ஒன்று ஃபாலோ செய்த டெக்னிக் திகைக்க வைத்தது. ஒரு குறிப்பிட்ட விலையைப் பொருளின் விலையாக நிர்ணயித்துவிட்டு, அதில் 60% ஆஃபரை வழங்கியது. ஆனால், அந்த இணையதளம் காட்சிக்கு வைத்த பொருளின் புகைப்படத்தில் அதிகப்பட்ச விற்பனை விலை (MRP) குறைவாகத்தான் அச்சிடப்பட்டிருந்தது. உண்மையில் ஒப்பிட்டுப்பார்த்தால், ஆஃபர் விலையானது அச்சிடப்பட்ட விலையைவிட அதிகம். இப்படி விலையை உயர்த்தி, பின்னர் அதில் தள்ளுபடி வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன ஆன்லைன் நிறுவனங்கள். ஆக, ஒரு பொருளின் விலை நேரடியாக விற்கப்படும் கடைகளில் எவ்வளவு என நன்கு விசாரித்து, ஆன்லைனில் நிஜமாகவே குறைவாக இருந்தால் மட்டுமே வாங்கலாம்.
 
நிதானம் முக்கியம்!
 
இன்னும் சில மணி நேரங்களுக்கே ஆஃபர் என ஆன்லைனில் செய்யப்படும் விளம்பரங்களைப் பார்த்துநீங்கள் அவசரப்பட வேண்டாம். காரணம், பொருள்களை வாங்கும்முன், அந்தப் பொருளின் விலை எப்படியெல்லாம் மாறி தற்போது இந்த விலையில் இருக்கிறது என்பதை வரைபடமாக வழங்கும் அளவிலான தொழில் நுட்பத்தைக் கூகுள் வழங்கியுள்ளது. உங்கள் கூகுள் க்ரோம் ப்ரெளஸரில் ‘கம்பேர் ஹாட்கே’ (Compare Hatke) எனும் இணைப்பை இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும், நீங்கள் எந்த இ-காமர்ஸ் இணையதளத்தில் எந்தப் பொருளைத் தேடினாலும், அதன் முந்தைய விலையை வரைபடமாக தந்துவிடும். இதற்கு அதிகபட்சம் இரண்டு நிமிடம்கூட ஆகாது. இந்த இரண்டு நிமிடத்துக்கு அவசரப்பட்டால் குறைந்த விலையில் வர்த்தகமான பொருளை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும்.
 
உத்தரவாதம் உண்டா?
 
நிஜமான தள்ளுபடி விலையில் பொருள்களை வாங்குகிற அதேநேரத்தில், அந்தப்  பொருளுக்கான கேரன்டி சர்ட்டிஃபிகேட்டைப் பார்த்து வாங்கு வதும் முக்கியம். எந்த ஒரு பொருளுக்கு கீழேயும் தரப்பட்டிருக்கும் விவரங்களை நம்மில் பலரும் படித்துப் பார்ப்பதே இல்லை. அதில், இதனை வழங்கும் சப்ளையர் உத்தரவாதமானவரா என்பதை அறிய ‘செக்யூர் ஷாப்பிங் சான்றிதழ் ஒன்று வழங்கப்பட்டிருக்கும். அப்படி வழங்கப்பட்ட பொருள்களுக்குத் தான் ஏதாவது தவறு நடந்தால், இழப்பீடோ அல்லது சர்வீஸோ திரும்பக் கேட்க முடியும். சான்றிதழ் பெறாதப் பொருள்கள் ரிஸ்க் நிறைந்தவையே!
 
ச.ஸ்ரீராம்

புற்றுநோய்க்கு மருந்தாகுது தேள் விஷம்!

Photo: புற்றுநோய்க்கு மருந்தாகுது தேள் விஷம்!

தேள் என்றாலே நமக்குப் பயம்தான் வரும். ஆராய்ச்சியாளர்களுக்கோ தேள் மீது அதீத ஆர்வம். தேளின் விஷத்தில் என்னவோ இருக்கிறது என்ற சந்தேகம்தான் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்துக்குக் காரணம்! 

http://goo.gl/BgIq5K

தேள் என்றாலே நமக்குப் பயம்தான் வரும். ஆராய்ச்சியாளர்களுக்கோ தேள் மீது அதீத ஆர்வம். தேளின் விஷத்தில் என்னவோ இருக்கிறது என்ற சந்தேகம்தான் ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்துக்குக் காரணம்!

‘ஒருமுறை தேள் கொட்டிவிட்டால், அவர்களுக்கு ஆயுள் முழுவதும் இதயம் தொடர்பான பாதிப்புகள் எதுவும் வராது’ என்று 2008ல், இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆய்வு ஆச்சரியம் கிளப்பி இருந்தது. அதைத் தொடர்ந்து தேளின் விஷத்தில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து தயாரித்ததாக ஒரு ரஷ்ய மருந்து நிறுவனம் அறிவித்தது. இப்போது அமெரிக்காவில் உள்ள சியாட்டில் புற்றுநோய் மைய ஆராய்ச்சியாளர்கள் தேள் விஷத்திலிருந்து மூளைப் புற்றுநோய்க்கு மருந்து கண்டு பிடித்திருக்கிறார்கள். புற்றுநோயிலிருந்து மனித உயிர்களைக் காப்பாற்ற இது பெரிதும் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு, மனிதர்களுக்கு இந்த மருந்தைப் பயன்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள்.

முதல்முறையாக இதை ஏற்றுக் கொண்டிருக்கிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனமான ‘எஃப்.டி.ஏ’. அத்துடன், இந்த மருந்தை மூளைப் புற்றுநோயாளிகளுக்குப் பரிசோதித்துப் பார்க்கவும் எஃப்.டி.ஏ. அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு முன் ரஷ்யாவை சேர்ந்த நிறுவனம் மருந்து தயாரித்திருப்பதாக அறிவித்திருந்ததை எஃப்.டி.ஏ. ஏற்றுக்கொள்ளவில்லை. ‘ட்யூமர் பெயின்ட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மருந்து, முதல் கட்டமாக மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் புற்றுநோய் செல்களை முழுமையாகவும் பாதுகாப்பாகவும் அகற்ற முடியும் என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ட்யூமர் பெயின்ட் மருந்தை, இஸ்ரேலில் காணப்படும் ‘டெத் ஸ்டாக்கர்’ என்ற கடும் விஷம் கொண்ட தேளின் விஷத்திலுள்ள புரதத்தில் இருந்து உருவாக்கியிருக்கிறார்கள். சியாட்டிலை சேர்ந்த பேராசிரியரும் புற்றுநோய் சிறப்பு மருத்துவருமான ஜிம் ஆல்ஸன் தயாரிப்பு இது. ஏற்கெனவே சுண்டெலிகளுக்கும் நாய்களுக்கும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு வெற்றியடைந்துள்ளது.

80 லட்சம் அமெரிக்க டாலர் செலவான இந்த ஆய்வு வெற்றி பெற்றிருப்பதால், இப்போது தேளின் விஷத்தை இயற்கை மூலக் கூறுகளில் இருந்து தயாரிக்க முடியுமா என்றும் செயற்கையாகத் தயாரிக்க முடியுமா என்றும் ஆலோசனையில் இருக்கிறார்கள். அப்புறம், ஒவ்வொரு முறையும் தேளைத் தேடிப் போய் கொட்டு வாங்க முடியாதில்லையா?

ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் அட்டைகள் தயாரிக்கும் பணி தீவிரம் பெரம்பலூர், அரியலூரில் முதல்கட்ட நடவடிக்கை



சென்னை


ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் அட்டைகளை தயாரிக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. பெரம்பலூர், அரியலூரில் அதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஸ்மார்ட் அட்டைகள்

தமிழகத்தில் ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டைகளை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஏற்கனவே அரசு வெளியிட்டுள்ளது. ‘‘பயோமெட்ரிக்’’ அடையாளம் என்று அழைக்கப்படும் விரல் ரேகை, கருவிழி பதிவு ஆகியவற்றுடன் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

மத்திய அரசின் ஆதார் அட்டைகள் வழங்கும் பணி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தேசிய மக்கள் தொகை பதிவின் (என்.பி.ஆர்.) அடிப்படையில் ஆதார் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

தாலுகா அளவில் முகாம்

தற்போது தமிழகத்தில் மக்கள் தொகையின் எண்ணிக்கை 7 கோடிக்கும் மேலாக உள்ளது. இங்கு 4.91 கோடி பேர் (73 சதவீதம்) பேர் என்.பி.ஆர். பதிவில் உள்ளனர். இவர்களில் 4.65 கோடி பேருக்கு ஆதார் எண்கள் அல்லது ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன.

ஆதார் அடிப்படையில் ஸ்மார்ட் அட்டைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் தமிழகத்தில் முழுமையாக என்.பி.ஆர். பதிவு நடைபெறவில்லை. எனவே விடுபட்டுப்போனவர்களையும், புதிதாக பிறந்தவர்களையும் சேர்ப்பதற்காக இம்மாதம் 15–ந் தேதியில் இருந்து தாலுகா அளவில் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இரண்டு மாவட்டங்கள்

இதன் மூலம் அனைத்து மக்களையும் என்.பி.ஆர். பதிவில் சேர்ப்பதற்கு முழு முயற்சி எடுக்கப்படுகிறது. அதன் பின்னர் என்.பி.ஆரின் அடிப்படையில் விடுபட்டுப்போனவர்களுக்கு ஆதார் எண்களை மக்களுக்கு மத்திய அரசு வழங்கும்.

தற்போது அதிக அளவில் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுவிட்டதால், ஸ்மார்ட் அட்டைகளை தயாரிக்கும் பணியை தொடங்க, அந்த இரண்டு மாவட்டங்களையும் தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

போலி அட்டைகள்

இந்த மாவட்டங்களில் விடுபட்டுப்போனவர்களுக்கு முகாம்கள் மூலம் ஆதார் எண்கள் வழங்கப்பட்ட பிறகு, ஸ்மார்ட் அட்டைகளை தயாரிக்கும் பணியை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

விரல் ரேகை, கருவிழி போன்ற பயோ மெட்ரிக் பதிவுகளோடு, ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டைகள் தயாரிக்கப்படுவதால், 100 சதவீத போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்க முடியும்.

எப்போது வழங்கப்படும்?

தற்போது தமிழகத்தில் ஒரு கோடியே 98 லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் போலி அட்டைகளும் இடம் பெற்றுள்ளன. எனவே ஆதார் பதிவுகளின் அடிப்படையில் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டால், போலி அட்டைகள் தானாக ஒழிந்துவிடும்.

ஸ்மார்ட் அட்டைகளை தயாரிக்க தொடங்கிவிட்டால் அவற்றை 3 மாதங்களுக்குள் வழங்கிவிடலாம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவற்றை மக்களுக்கு எப்போது வழங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்றும் குறிப்பிட்டனர்.

உள்தாள் ஒட்டப்படும்

தற்போது டிசம்பர் 31–ந் தேதியுடன் ரேஷன் அட்டைகளின் காலம் முடிவடைகிறது. எனவே அவற்றில் உள்தாள் ஒட்டப்பட்டு, குறிப்பிட்ட காலம் வரை அதன் ஆயுள் அளவு நீட்டிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்வீட், ஹாட் கோடு வேர்டுகள்



புதிதாக ஒருவர் இணையதளத்தைப் பயன்படுத்தினால், அதில் இன்றைய இளைய தலைமுறையினர் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பார்த்தவுடன் நிச்சயம் தலை சுற்றி மயங்கிவிடுவார். ஏனென்றால் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டம்.

வார்த்தைகளைச் சுருக்கிப் படிப்பதற்காகவே சுருக்கெழுத்து படிப்புகூட இருக்கிறது. அந்தப் படிப்பே தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு ஆங்கில வார்த்தைகளைச் சுருக்கி, ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் கொண்டு, அந்த மொழியில் பேசிக்கொள்கிறார்கள் இந்தக் காலத்து இளைஞர்கள்.

குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும், சாட்டிங்கிலும்தான் இந்தச் சுருக்கப்பட்ட வார்த்தைகள் அதிகம் புழங்குகின்றன. இப்படி வார்த்தையைச் சுருக்கிப் பயன்படுத்துவதால், நேரம் மிச்சமாவதோடு, விரைவில் உணர்வை வெளிப்படுத்த முடிகிறது என்று இதற்கு இளைஞர்கள் காரணம் கூறுகிறார்கள். சரி, இணையதளத்தில் இளைஞர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

ASL

சாட்டிங்கில் யாருடனாவது பேச வேண்டும் என்று நினைத்து ‘ஹாய்’ போட்டால், பதிலுக்கு ‘ஹாய்’ என்ற வார்த்தை பெரும்பாலும் வராது. அதற்குப் பதில் இந்த வார்த்தைத்தான் வரும் இதன் அர்த்தம் ‘வயது, பாலினம், ஊர்’ என்று அர்த்தம். இதற்கு நீங்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்து எதிர்முனையில் சாட் செய்பவர் உங்களிடம் பேசலாம், பேசாமலும் போகலாம்.

MYOB

புதிதாக யாருடனாவது சாட்டிங் செய்ய ஆசைப்பட்டு ‘ஹாய்’ என்று சொன்னால், எதிர்முனையில் இருந்து ஒருவேளை இந்தச் சொல் பளிச்சிடும். இதனைப் பார்த்தவுடன் பலருக்கும் ஒன்றும் புரியாமல் போகலாம். ஆனால், ‘மைன்ட் யுவர் ஓன் பிசினஸ்’ (உன் வேலையைப் பார்த்துட்டுப் போ) என்று சொல்லுவோமில்லையா? அதான் இதன் அர்த்தம்.

LOL

சாட்டிங் செய்யும்போது மிகவும் சிரிப்புமூட்டும் விஷயத்தைப் பரிமாறிக் கொள்ளும்போது, அதை வெளிப்படுத்த இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். ‘லாஃபிங் அவுட் லவுட்’ என்பதன் சுருக்கம்தான் இந்த வார்த்தை.

OMG

இந்த வார்த்தை சாட் செய்பவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா? ‘ஓ மை காட்'. ஆச்சரியமான, அதிர்ச்சிகரமான செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும்போது இந்த வார்த்தைகளால் வெளிப்படுத்துவார்கள்.

AYL

சாட்டிங்கில் பதில் கொடுக்கத் தாமதமானால், எதிர் முனையில் இருந்து இந்த வார்த்தை வரும். ‘ஆர் யு லிசனிங்’ ( நான் சொல்றதைக் கேட்குறியா?) என்று இதற்கு அர்த்தம்.

BFF

‘பெஸ்ட் ஃப்ரெண்ட் ஃபார்எவர்’ (எப்போதும் மிகச் சிறந்த நண்பர்) என்று இதற்கு அர்த்தம்.

BZY

இந்த வார்த்தைக்கு ‘பிஸி’ என்று அர்த்தம்.

இவை எல்லாம் சில உதாரணங்கள்தான். இணையதளத்தில் உலா வரும் இந்தக் காலத்து இளைஞர்களும், இளைஞிகளும் இப்படி ஆயிரக்கணக்கான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

வந்தாச்சு டிக்‌ஷனரி

இப்படிச் சுருக்கமான வார்த்தைகளைப் பார்த்துப் பயப்படவே தேவையில்லை. இதற்காகவே டிக்‌ஷனரிகூட வந்துவிட்டது. www.noslang.com/index.php என்ற இணையதளத்திற்குச் சென்றால், அகர வரிசைப்படி சுருக்கப்பட்ட வார்த்தைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவையெல்லாமே இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களுக்காகவே வெளியிடப்பட்டிருக்கின்றன.

அது மட்டுமல்ல, இந்த இணையதளத்தில் உள்ள ஸெர்ச் பாக்சில் நமக்குப் புரியாத சுருக்கப்பட்ட வார்த்தையை இட்டால், அதற்குரிய விளக்கம் உடனே வந்து விடுகிறது. குறிப்பாக, 10q - தேங்க் யூ, 10x - தேங்க்ஸ், 2b - டு பி(இருக்க), b4n - பை ஃபார் நளவ், cb - கம் பேக், coz - பிகாஸ் என்று அர்த்தம் பளிச்சிடுகிறது.

சமூக இணையதளங்களிலோ பயன்படுத்தும் முன்போ, சாட்டிங்கில் ஈடுபடும் முன்போ இந்த இணையதளத்தை ஒருமுறை பாருங்களேன்!

ஒவ்வோர் அழைப்பிலும் ஓர் உயிர்



பார்ப்பதற்கு ஏதோ கால் சென்டர் போலத் தோற்ற மளிக்கிறது, அழைப்புகளை ஏற்கும் அந்தக் கட்டுப்பாட்டு அறை. தமிழகத்தின் எந்த மூலையில் இருந்து அழைத்தாலும் இந்தக் கட்டுப்பாட்டு அறையில்தான் அழைப்புகள் ஏற்கப்படுகின்றன. இங்கிருக்கும் அனைவரும் காதுகளில் ஹியர் போனை மாட்டிக்கொண்டு அழைப்பாளரிடம் வேகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

‘வணக்கம் 108’

‘நீங்க எந்த இடத்தில் இருந்து பேசுகிறீங்க?’

‘எந்த மாவட்டம்?’

‘என்ன தாலுகா?’

‘அருகில் இருக்கிற முக்கிய இடத்தைச் சொல்ல முடியுமா?’

- இப்படித் தொடர்ச்சியான கேள்விகள் மூலம், தொடர்புகொண்டவரிடம் இருந்து அடிப்படைத் தகவல்கள் பெறப்படுகின்றன. பிறகு அழைத்தவரை லைனில் காத்திருக்கச் சொல்லிவிட்டுச் சம்பந்தப்பட்ட பகுதியில் இருக்கும் ஆம்புலன்ஸைத் தொடர்புகொள்கிறார்கள். ஆம்புலன்ஸ் டிரைவரை இவர்கள் பைலட் என்று குறிப்பிடுகிறார்கள். அவரையும் கான்ஃப்ரன்ஸ் கால் மூலம் இணைத்து அழைப்பாளரிடம் பேசச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டிக்கிறார்கள். ஆம்புலன்ஸ் டிரைவரும் தேவைப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொண்டு, மருத்துவ ஊழியருடன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைகிறார்.

அதிகரிக்கும் அக்கறை

சாலையில் செல்லும்போது ஏதாவது விபத்தையோ அசம்பாவிதச் சம்பவத்தையோ வேடிக்கை பார்த்துச் செல்வது முன்பெல்லாம் வழக்கமாக இருந்தது. இப்போது யார் விபத்தில் சிக்கினாலும், அதை முதலில் பார்ப்பவர் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் செயல்பட்டுவரும் 108-க்கு போன் செய்து அழைப்பது புது வழக்கமாக மாறிவிட்டது.

சாலை விபத்துகள் மட்டுமல்லாமல் மகப்பேறு, கலவரம், கட்டிட இடிபாடு போன்றவற்றுக்கும் எண் 108 தொடர்புகொள்ளப்படுகிறது. உடனே அவசர ஊர்தி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களோ, மருத்துவ உதவி தேவைப்படுகிறவர்களோ அதில் ஏறிச் செல்கிறார்கள். 108 சார்ந்து நமக்குத் தெரிந்த பிம்பம் இதுதான். ஆனால், நெருக்கடிகள் நிறைந்த இந்த அவசர சேவைப் பிரிவு எப்படி இயங்குகிறது? அதற்கு விடை தருகிறது சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்துக்குள் செயல்பட்டுவரும் 108 அவசர கால சேவை அலுவலகம்.

தொடரும் கண்காணிப்பு

மருத்துவம், காவல், தீயணைப்பு ஆகிய மூன்று துறையினருடனும் இவர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். எந்த அழைப்பாக இருந்தாலும் அருகில் இருக்கிற அரசு மருத்துவமனைக்கு முதலில் தகவல் தெரிவிக்கிறார்கள். கலவரம், விபத்து, இயற்கைப் பேரிடர் போன்ற சம்பவங்களின்போது காவல், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கிறார்கள். 108 அலுவலகத்துக் குள்ளேயே மருத்துவர் குழுவும் இருக்கிறது.

உதவி தேவைப்படும்போது மருத்துவர்கள், அழைப்பாளர்களுடன் தொடர்புகொண்டு தகவல் பெற்று வழிநடத்துகிறார்கள். ஆம்புலன்ஸில் இருக்கிற மருத்துவ உதவியாளருக்குத் தேவைப்படும் உதவிகளையும் இந்த மருத்துவர் குழு வழங்கும். இத்துடன் இவர்களுடைய வேலை முடிந்துவிடுவதில்லை. ஆம்புலன்ஸின் பயணம் முழுமையாகக் கண்காணிக்கப்படுகிறது. ஏதாவது தாமதமோ, தடங்கலோ ஏற்பட்டால் விளக்கம் கேட்கப்பட்டு, அவசியமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குறை போக்கும் முயற்சி

108 சேவையைத் தொடர்பு கொண்டவர் களை 48 மணி நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டு, பாதிக்கப் பட்டவரின் நிலைமையை விசாரிக் கிறார்கள். சேவையில் திருப்தி யில்லை என்று அழைப்பாளர்கள் சொன்னால், எந்த இடத்தில் தவறு எனக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்ய முயல்கிறார்கள்.

தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் 108 அவசர கால சேவை பிரிவு கடந்த 2008-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஒரு நாளுக்குக் குறைந்தது 7, 500 அழைப்புகள்வரை ஏற்கப்படுகின்றன. 24 மணி நேர சேவைப் பிரிவு என்றாலும், மாலை 4 மணிக்கு மேல்தான் நிறைய அழைப்புகள் வருகின்றன என்கிறார் இந்தச் சேவைப் பிரிவின் விழிப்புணர்வு மற்றும் மருத்துவமனைகள் தொடர்புத்துறை மேலாளர் பிரபுதாஸ்.

“பள்ளி, அலுவலகம் முடிந்து அனைவரும் வீடு திரும்பும்போது போக்குவரத்து அதிகமாக இருக்கும். பகல் வெளிச்சம் குறைந்து இரவு தொடங்கும்போது நிறைய சாலை விபத்துகள் ஏற்படக்கூடும். அதனால் மாலை 4 மணிக்கு மேல் அதிகபட்ச அழைப்புகள் வருகின்றன” என்று சொல்லும் பிரபுதாஸ், நகரங்களைவிடக் கிராமப் புறங்களில் இருந்தே அதிகபட்ச அழைப்புகள் வருகின்றன என்கிறார்.

நிறைந்த வசதி

நகரங்களில் மருத்துவமனைகளும் மருத்துவ வசதிகளும் அதிகம். கிராமப் பகுதிகளில் இவை குறைவு என்பதால் 108 அவசர கால சேவைப் பிரிவைப் பொதுமக்கள் அதிகமாகத் தொடர்புகொள்கிறார்கள். கிராமப் பகுதிகளைப் பொறுத்தவரை மகப்பேறு தொடர்பான அழைப்புகளே அதிகம். பல பிரசவங்கள் 108 ஆம்புலன்ஸிலேயே நடந்திருக்கின்றன.

இதுவரை கிட்டத்தட்ட 4 கோடி அழைப்புகளுக்கு மேல் வந்திருக்கின்றன. அவற்றில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் இரண்டு லட்சத்தைத் தொடுகிறது. மகப்பேறு, சாலை விபத்துகள் தவிர மாரடைப்பு, மூச்சிரைப்பு, வயிற்று உபாதைகள், விஷம் தொடர்பானவை, தாக்குதலில் அடிபடுதல், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள், காக்காய் வலிப்பு, பிறந்த குழந்தைகள் தொடர்பான பாதிப்புகள், பக்கவாதம், திடீர் மயக்கம், தீ விபத்து இப்படி நீள்கிறது பட்டியல்.

முதலுதவி

இவற்றில் உடனடியாகச் சிகிச்சை தேவைப்படுகிறவர்களுக்கு ஆம்புலன்ஸில் வைத்தே முதலுதவி அளிக்கப்படுகிறது. எல்லாவிதமான உபகரணங்களும் ஆம்புலன்ஸில், எப்போதும் தயார்நிலையில் இருக்கின்றன. மகப்பேறின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுக்குள் வைக்கும் உபகரணம் அவற்றுள் குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் 684 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருக்கின்றன. பச்சிளங் குழந்தைகளுக்கும், மலை யோரப் பகுதிகளுக்குமான வாகனங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. நகரங்களைவிடக் கிராமப் பகுதிகளில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கிறார்கள். தேவையைப் பொறுத்து ஒரு இடத்துக்கே பல ஆம்புலன்ஸ் வாகனங்களையும் அனுப்பி வைக்கிறார்கள்.

செம்மைப்படுத்தும் பயிற்சி

கிட்டத்தட்ட 3,500 பேரின் ஒத்துழைப்போடு நடைபெறுகிறது இந்தச் சேவை. வாகனம், மருத்துவம், காவல்துறை என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் இந்தப் பணியில் இருப்பவர்கள் எப்போதும் விழிப்புடனும் மனத் தெளிவோடும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும். காரணம், வெளியூருக்கு வந்து விபத்தில் சிக்கிக்கொள்பவர்களுக்குத் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதே தெரியாது.

படிப்பறிவில்லாத மக்களுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைத் தெளிவாக எடுத்துச் சொல்ல முடியாது. இதுபோன்ற நேரத்தில் அழைப்பாளரிடம் பொறுமையாகப் பேசி தொடர் கேள்விகள் கேட்டு, அவர்களுக்கு உதவ வேண்டும். 108 சேவை மையத்தில் பணியாளர்களாகத் தேர்வு செய்யப்படும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் மருத்துவ உதவியாளார்களுக்கும்  அழைப்பை ஏற்றுப் பதில் சொல்லும் பதிவு அலுவலர்களுக்கும் இங்கே 45 நாட்கள் பயிற்சி தரப்படுகிறது. தவிர அடிக்கடி புத்தாக்கப் பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன.

பாராட்டும் புகாரும்

"இது தவிர எங்கள் பணியாளர் களுடன் சேர்ந்து ‘விடியல்’ என்ற பெயரில் தன்னார்வ சேவையையும் நேரம் கிடைக்கும்போது செய்து வருகிறோம்" என்று சொல்லும் பிரபுதாஸ், தங்கள் ஊழியர்கள் மீது தெரிவிக்கப்படும் புகார்களையும் ஒப்புக்கொள்கிறார்.

"சில இடங்களில் எங்கள் சேவை குறித்த புகார்கள் வரத்தான் செய்கின்றன. பாராட்டை எப்படி எதிர்கொள்கிறோமோ, அதேபோலத்தான் புகார்களையும் கவனத்தில் கொள்கிறோம். வாகனம் வருவதில் தாமதம், ஊழியர்களின் அலட்சியம், தகாத நடத்தை போன்றவைதான் பெரும்பாலும் குற்றச்சாட்டுகளாகப் பதிவுசெய்யப்படுகின்றன. அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கிறோம்" என்கிறார்.

வெளியுலகின் எந்தப் பாதிப்பும் இல்லாமல் அழைப்புகளை ஏற்றுப் பதில் சொல்கிறார்கள் பதிவு அலுவலகர்கள். இடைவிடாத இதயத்துடிப்பு போல் உயிரைக் காக்கும் நோக்கத்துடன், அழைப்புகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

வேண்டாமே விளையாட்டு

வழக்கம்போலவே இங்கும் தேவையற்ற அழைப்புகள் அதிகம். சம்பந்தமில்லாமல் பலர் போன் செய்து இடையூறு ஏற்படுத்துவதும் நடக்கத்தான் செய்கிறது. ஒரு நாளுக்கு வரும் அழைப்புகளில் கிட்டத்தட்ட 40 சதவீத அழைப்புகள் இதுபோன்ற வீணான அழைப்புகளாகவே இருக்கின்றன. இப்படித் தேவையில்லாமல் தொடர்புகொண்டு தொல்லை தரும் இந்த நேரத்தில் உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்களின் அழைப்பு, காத்திருக்க வேண்டியதாகிப் போகிறது. ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பின்தொடர்ந்து மற்ற வாகனங்களை முந்திச் செல்வது எத்தனை கொடூரச் சிந்தனையோ, அதைவிடக் கொடூரம் நிறைந்தது இப்படித் தேவையில்லாமல் அழைத்து தொந்தரவு செய்வதும். இதைத் தவிர்ப்பதே மனிதத்தன்மை.

தொடரும் வெற்றி பார்முலா!



ஐந்து அழகான பெண்கள் யார்?

நம்மூரில் ஒரு கருத்துக் கணிப்பில், நூறு ஆண்கள், பெண்களிடம் கேட்ட கேள்விகளில் இது ஒன்று. பெரும்பான்மையோர் தந்த பதில்:

நயன்தாரா, சமந்தா, ஹன்சிகா, காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாஸன்.

சினிமா என்றாலே அழகு, கவர்ச்சி: அழகு, கவர்ச்சி என்றாலே சினிமா என்னும் மானசீகத் தொடர்பு மக்களுக்கு இருக்கிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பாலிவுட், ஹாலிவுட்டிலும் இருக்கிறது: இன்றல்ல, காலம் காலமாக இருக்கிறது. அழகான பெண்கள் என்று நினைக்கும்போது, மர்லின் மன்ரோ, எலிசபெத் டைலர், ஹேமமாலினி, ரேகா, மாதுரி திட்சித், டி.ஆர். ராஜகுமாரி, பத்மினி, கே.ஆர். விஜயா, தேவிகா மற்றும் இன்றைய பல நடிகைகள்தாம் நம் கண்களின் முன்னால் வருகிறார்கள். சினிமாவுக்கும் அழகுக்கும் இருக்கும் பந்தத்தை பிசினஸ் வெற்றிக்குப் பயன்படுத்தி வருபவர்கள் லக்ஸ் சோப்.

சலவைத்தூள்

1899. இங்கிலாந்தின் லீவர் கம்பெனி, ஸன்லைட் என்னும் துணி துவைக்கும் சோப்புத் தூள் தயாரித்தார்கள். கைக்கு மிருதுவான இந்தச் சலவைத் தூள் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த வருடம், தூளின் பெயரை லக்ஸ் என்று மாற்றினார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் - லக்ஸ் என்பது லத்தீன் மொழி வார்த்தை. இதற்கு, பிரகாசமான என்று அர்த்தம். Luxury என்னும் ஆங்கில வார்த்தைக்கு, ஆடம்பரமான, சுகானுபவம் தருகிற என்னும் அர்த்தங்கள் உண்டு.

லக்ஸ் என்னும் வார்த்தையை, லத்தீன் மொழிச் சொல்லாகவும், Luxury என்னும் ஆங்கிலச் சொல்லின் சுருக்கமாகவும் எடுத்துக்கொள்ளலாம். துணிகள் துவைக்கும்போது, லக்ஸ் கைகளுக்கு மிருதுவாக இருந்தது. நறுமணம் தந்தது. இதனால், ஏராளமான பெண்கள் சலவைக்கு மட்டுமல்லாது, கை, முகம், கூந்தல் கழுவவும் லக்ஸ் தூள் உபயோகித்தார்கள்.

குளியல் சோப்

1924 இல் லீவர் கம்பெனி, லக்ஸ் விற்பனையை அதிகரிப்பதற்காகப் போட்டி ஒன்று நடத்தினார்கள். அப்போது, சலவை சோப்பாகப் பயன்படுத்துவதைவிட அதிகமாக, அழகு தரும் சோப்பாக லக்ஸ் சோப்பைப் பெண்கள் உபயோகிப்பது லீவர் கம்பெனிக்குத் தெரிந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள, 1925 இல் லக்ஸ் குளியல் சோப் அறிமுகம் செய்தார்கள். லக்ஸ் என்றால், சலவைத் தூள் என்னும் பிம்பம்தான் மக்கள் மனங்களில் இருந்தது. இந்த அபிப்பிராயத்தை மாற்றி, லக்ஸ் அழகு தரும் குளியல் சோப் என்னும் பிம்பத்தை உருவாக்கவேண்டிய கட்டாயம்.

அழகு என்றால், முதலில் நினைவுக்கு வருபவர்கள் சினிமா நடிகைகள். லீவர் கம்பெனி, எலிசபெத் டைலர், மர்லின் மன்ரோ, எஸ்தர் வில்லியம்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களை விளம்பரக் களத்தில் இறக்கியது. சினிமா நட்சத்திரங்களின் அழகு தரும் சோப் லக்ஸ் என்று இவர்கள் பிரகடனம் செய்தார்கள். லக்ஸ் சலவைத் தூள் என்னும் பிம்பம் மக்கள் மனங்களிலிருந்து மறைந்தது. சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்னும் மனத் தொடர்பு பிறந்தது.

இந்தியாவில்…

1929 இல், லக்ஸ் சோப் இந்தியாவில் அறிமுகமானது. ஆரம்பத்தில், லக்ஸ், விளம்பரங்களில் ஹாலிவுட் நடிகை களைப் பயன்படுத்தியது. என்னதான் இவர்கள் கவர்ச்சியாக, பிரபலமாக இருந்தாலும், இந்திய மக்கள் இவர்களை அந்நியர்களாகத்தான் பார்த்தார்கள். எனவே, விளம்பரங்கள் அதிக வெற்றி தரவில்லை. எனவே, லீவர் கம்பெனி இந்திய நடிகைகளைப் பயன்படுத்த முடிவு செய்தார்கள்.

940 கால கட்டம். அன்று, இந்தி சினிமாவில் முன்னணிக் கதாநாயகி நடிகை லீலா சிட்னிஸ். 1941 இல் லக்ஸ் விளம்பரத்தில் தோன்றினார். லக்ஸ் விளம்பரத்தில் வந்த முதல் இந்திய நடிகை இவர்தான். விரைவில், பிரபலமான நடிகை என்றால், லக்ஸ் விளம்பரத்தில் வந்திருக்கவேண்டும் என்னும் எண்ணம் தோன்றி விட்டது. லக்ஸ் பத்திரிகை மற்றும் திரைப்பட விளம்பரத்தில் வராத முன்னணி நடிகையே கிடையாது. ஹேமமாலினி, ரேகா, ஜெயப்ரதா, ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, கத்ரினா கைஃப், தீபிகா படுகோன், பத்மினி, சாவித்திரி, காஞ்சனா, செல்வி ஜெயலலிதா, ஷ்ரேயா, அசின்.....இன்னும் பலர்.

1960, 1970 களில், சினிமாவில் புரட்சி வந்தது. பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாக்யராஜ் போன்ற இயக்குநர்கள், ஹீரோ, ஹீரோயின்களுக்கு அழகு அத்தியா வசியம் என்னும் இலக்கணத்தை உடைத்து எறிந்துவிட்டார்கள். ஹீரோயின் அழகாக இருக்கவேண்டியதில்லை, மேக்கப் தேவையில்லை என்னும் யதார்த்தம், ஹீரோயின்களைக் கனவுக் கன்னிகள் பீடத்திலிருந்து கீழே இறக்கத் தொடங்கியது. அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள்போல் லுக் கொண்டவர்கள் நடிகைகளாவது நடைமுறை நிஜமாகி வருகிறது.

இதற்கு ஏற்றபடி, லக்ஸ் சோப் தன் அணுகுமுறையை மாற்றி வருகிறார்கள். அழகு சோப் என்னும் அடிப்படைப் பொசிஷனிங் மாறவில்லை. ஆனால், விளம்பரங்களில் பல மாற்றங்கள். முதன் முதலாக, ஒரு நடிகர் விளம்பரத்தில் வந்தார். குளிக்கும் ஷாருக் கான், அவரைச் சுற்றி ஹேமமாலினி, கரீனா கபூர், ஸ்ரீதேவி, ஜூஹி சாவ்லா.

அண்மையில், இன்னும் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன. அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் இருவரும் சேர்ந்து வந்தார்கள். அடுத்து, சித்தார்த் சமந்தா, தனுஷ் சோனம் கபூர்..

இந்த விளம்பரங்களைக் கவனமாகப் பாருங்கள். சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்னும் பொசிஷனிங் மாறவில்லை. நடிகைகளோடு, நடிகர்களும் வருகிறார்கள். அவ்வளவுதான். ஆண்டாண்டு காலமாகத் தொடர் வெற்றி கண்டுவரும் பொசிஷனிங் பார்முலாவை ஏன் மாற்றவேண்டும்?

slvmoorthy@gmail.com

அன்று இன்று | நவம்பர் 11, 1918 - முடிவுக்கு வந்தது முதல் உலகப் போர்

90 லட்சம் போர் வீரர்கள், 1 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிரைக் குடித்த முதல் உலகப் போர், உலக நாடுகளின் வரலாற்றையும் வரைபடத்தையும் மாற்றியமைத்தது.

1914-ல் தொடங்கிய இந்தப் போர், சரியாக 4 ஆண்டுகள் 4 மாதங்கள் நடைபெற்றது. ஆஸ்திரியா - ஹங்கேரி, ஜெர்மனி, பவேரியா, ஓட்டாமான் பேரரசு உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் போரில் ஈடுபட்டன. ஏப்ரல் 1917-ல் பிரிட்டனுக்கு ஆதரவாகப் பலம் வாய்ந்த அமெரிக்கா களமிறங்கியது. எனினும், 1918 தொடக்கம் வரை நேச நாடுகளின் படைகளுக்கு ஜெர்மனி சிம்ம சொப்பனமாகத்தான் இருந்தது. மார்ச் 1918-ல் பிரான்ஸின் மேற்குப் பகுதியில் நடந்த உக்கிரமான சண்டையில் பிரிட்டன் படைகளைச் சிதறடித்தது ஜெர்மனி. எனினும் அதன் பலம் நீடிக்கவில்லை.

பிரிட்டன் - பிரான்ஸ் படைகள் திருப்பித் தாக்கத் தொடங்கின. அதன் பின்னர் ஜெர்மனிக்குப் பின்னடைவுதான். ‘வெற்றி நம் பக்கம் இல்லை’ என்று ஜெர்மனியின் கூட்டணி நாடுகள் முடிவுக்குவந்தன. “இனிமேல் அமைதி காப்போம்; போரில் ஈடுபட மாட்டோம்” என்று தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஜெர்மனி கையெழுத்திட்டது.

11.11.1918-ல் காலை 11 மணிக்கு முதல் உலகப் போர் முடிவடைந்தது. அன்று காலை போர்க்களத்தில் இருந்த தளபதிகள் தங்கள் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சரியாக 11 மணிக்கு ‘போர் முடிந்தது’ என்று அறிவித்தபோது வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். அதேசமயம், போர் நிற்கப்போகும் சமயத்திலும் சில தளபதிகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இதனால் கடைசி நேரத்தில் தேவையில்லாமல் பல வீரர்கள் உயிரிழந்தார்கள்.

1919 ஜூன் 28-ல் கையெழுத்தான வெர்சைல்ஸ் ஒப்பந்தம் ஜெர்மனிக்குப் பெரும் நெருக்கடியைத் தந்தது. முதல் உலகப் போரில் பவேரிய ராணுவத்தில் சிப்பாயாக இருந்த ஹிட்லர், ஜெர்மனியின் சர்வாதிகாரியாக உயர்ந்து, இரண்டாம் உலகப் போருக்கு முக்கியக் காரணமாக அமைந்தது தனி வரலாறு.

NEWS TODAY 01,02.2026