Saturday, May 9, 2015

இலவச அழைப்பு திட்டத்தை பயன்படுத்த ரூ.500 செலுத்தி எஸ்.டி.டி., வசதி பெறலாம்

எஸ்.டி.டி., வசதி இல்லாத இணைப்புகளுக்கு, 500 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால், அந்த வசதி அளிக்கப்படும்' என, பி.எஸ்.என்.எல்., தெரிவித்துள்ளது.

முடியவில்லை:

'இரவு, 9:00 மணியில் இருந்து, அடுத்த நாள் காலை, 7:00 மணி வரை, பி.எஸ்.என்.எல்., தரை வழி போனில் இருந்து, பி.எஸ்.என்.எல்., மற்றும் பிற நெட்வொர்க் தரை வழி போன், மொபைல் போன்களுக்கு, தொடர்பு கொள்வது இலவசம்' என, அந்நிறுவனம் அறிவித்தது. நாடு முழுவதும் இந்த திட்டம், மே, 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், எஸ்.டி.டி., வசதி இல்லாத போனில் இருந்து, பிற மாநிலங்களுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, ஏற்கனவே பி.எஸ்.என்.எல்., இணைப்பு வைத்துள்ளவர்கள், எஸ்.டி.டி., இணைப்பு கேட்டு, விண்ணப்பம் செய்தனர். 'இலவச திட்டம் அமலுக்கு வந்துள்ளதால், புதிய வசதிகள் வழங்குவதில்லை' என, அவர்களிடம் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்தது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், 'எஸ்.டி.டி., வசதி வேண்டுவோர், 500 ரூபாய் வைப்புத் தொகை செலுத்தி, எஸ்.டி.டி., வசதி பெற்றுக் கொள்ளலாம்' என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.

'பாஸ்வேர்டு':

இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், மாநிலத்துக்குள் தொடர்பு கொள்ள, தனியாக எஸ்.டி.டி., வசதி தேவையில்லை. அவர்கள் சார்ந்துள்ள, பி.எஸ்.என்.எல்., இணைப்பகத்தை தொடர்பு கொண்டு, 'டயனமிக் லாக்' அகற்றி, தனி, 'பாஸ்வேர்டு' பெற்றுக் கொண்டு பேசலாம். ஆனால், பூஜ்ஜியம் சேர்ந்து தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களுக்கு, எஸ்.டி.டி., வசதி பெற வேண்டும். இதற்கு, திருப்பி பெறத்தக்க வைப்புத் தொகையாக, 500 ரூபாய் செலுத்தினால், எஸ்.டி.டி., வசதி அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

நாடு முழுவதும் 17 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அரசு ஒப்புதல்

புதுடெல்லி,

நாடு முழுவதும் 17 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைத்தல் மற்றும் 70 மருத்துவ நிறுவனங்களின் தரம் மேம்பாட்டுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச சுகாதார திட்டம்

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது, சர்வதேச தரத்திலான சுகாதார திட்டம் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சர்வதேச தரத்திலான சுகாதார திட்டத்தை எட்டுவதற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த திட்டத்தை எட்டுவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை படிப்படியான முறையில் மத்திய அரசு வழங்கும்.

9 எய்ம்ஸ் மருத்துவமனைகள்

இந்த திட்டப்படி 9 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இதைப்போல மருத்துவ கல்லூரிகள், மருத்துவ நிறுவனங்கள் என 70 நிறுவனங்கள் தர மேம்பாட்டுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

சர்வதேச தரத்திலான சுகாதார திட்டத்தை நோக்கிய எங்கள் பயணத்தில், கடந்த ஓராண்டில் மட்டும் 22 மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளாக மேம்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் 17 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

உதவிகள் வழங்கப்படும்

மாநிலங்கள் சர்வதேச சுகாதார திட்டத்தை உறுதி செய்வதற்கு வலுவான கட்டமைப்பு தேவைப்படுகிறது. இதை எட்டுவதற்காக மாநிலங்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுமோ? அவற்றை மத்திய அரசு வழங்கும்.

இலவச அல்லது மலிவு விலையிலான சுகாதார திட்டங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்துவதற்கும் தேவையான உதவிகளை, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைவேற்றும்.

ஆர்.எஸ்.பி.ஒய் திட்டம்

மேலும் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உதவியை இலவசமாக பெறும் ‘ராஷ்டிரீய ஸ்வஸ்திய பீமா யோஜனா (ஆர்.எஸ்.பி.ஒய்)’ திட்டமும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.

இவ்வாறு மத்திய மந்திரி ஜே.பி.நட்டா கூறினார்

பணத்தை கொடுப்பது தானே நியாயம்

இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுவரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வி அதுவும் இலவசக்கல்வி என்பது கட்டாயம் என்ற உன்னதநோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டம்தான், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆகும் செலவுகள், ஆசிரியர் சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளை அரசே மானியமாக தந்துவிடுகிறது. ஆனால், தனியார் பள்ளிக்கூடங்களுக்கு அரசு மானியம் கிடையாது என்பதால், இத்தகைய பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கப் பட்டு, அந்த வருமானத்தைக்கொண்டுதான் ஆசிரியர் களுக்கு சம்பளம் முதல் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் என்று அனைத்து செலவுகளையும் தனியார் பள்ளிக்கூடங்கள் சமாளித்து வருகிறது.

இந்த நிலையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழக அரசின் கல்வித்துறை 1–4–2013 மற்றும் 12–5–2014–ல் பிறப்பித்த அரசு உத்தரவுகளில் விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இதன்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிக்கூடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இடம் வழங்கவேண்டும். இந்த மாணவர்களுக்கான கல்விக்கட்டணம், சீருடைக்கான செலவு உள்பட அவர்களுக்கு ஆகும் செலவுகளை அரசே தந்துவிடும் என்பது திட்டவட்டமாக அந்த சட்டத்தில் உறுதிபட தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்தில் பல குழப்பங்கள் இருந்தன.

சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் இந்த ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடம் ஒதுக்கத் தேவையில்லை என்பதும், வெறும் கல்வி கட்டணத்தை மட்டும் தந்து அந்த ஏழை மாணவர்களை அந்த பள்ளிக் கூடத்துக்கு அனுப்பும்போது அங்கு படிக்கும் மற்ற வசதிபடைத்த குழந்தைகள் அனுபவிக்கும் வசதிகள் எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், இந்த குழந்தை களுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகி, அது அவர்களின் படிப்பை பாதிக்கிறது என்றெல்லாம் குறைகள் கூறப்படுகிறது. என்றாலும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 593 ஏழை மாணவர்கள் இந்த 25 சதவீத ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள்.

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக கடந்த 4–ந்தேதி முதல் விண்ணப்பம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு கொடுக்கப்படவில்லை. காரணம் கடந்த 2 ஆண்டுகளாக இவ்வாறு ஏழை மாணவர்களை தங்கள் பள்ளிக்கூடங்களில் சேர்த்ததற்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசாங்கமோ, மாநில அரசோ தராத நிலையில், தங்களால் இந்த ஆண்டு எப்படி சேர்க்கமுடியும். மாணவர்களின் கல்விக்கட்டணத்தை வைத்துதானே எங்கள் நிர்வாக செலவை எதிர்கொள்ளமுடியும். ஆக, எங்களுக்கு தரவேண்டிய பணத்தை தாருங்கள், நாங்கள் மாணவர்களைச் சேர்க்கிறோம் என்கிறார்கள், சுயநிதி பள்ளிகளின் நிர்வாகிகள். தமிழக அரசோ, மத்திய அரசாங்கம் இதற்காக தரவேண்டிய 97 கோடியே 4 லட்ச ரூபாயை தரவில்லை, கேட்டு எழுதியிருக்கிறோம் என்கிறார்கள். இந்த காரணம், சரியாக இராது.

தமிழக அரசு முதலில் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இந்த நிதியை தங்கள் பணத்தில் இருந்து கொடுத்து உடனடியாக மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்கவேண்டும். பிறகு மத்திய அரசாங்கத்திடம் நாங்கள் கொடுத்துவிட்டோம், நீங்கள் தாருங்கள் என்று வலியுறுத்தி கேட்டுப்பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக இத்தகைய திட்டங்களை போடும்போது, அதற்கான நிதியை தயாராக வைத்துக் கொண்டு அமல்நடத்தினால் நல்லது.

Friday, May 8, 2015

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தராக எஸ்.மணியன் நியமனம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு பொறுப்பேற்ற பின்னர் முதல் துணைவேந்தராக பேராசிரியர் முனைவர் எஸ்.மணியனை தமிழக ஆளுநர் ரோசய்யா நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டது. அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனா என்ற ஐஏஎஸ் அதிகாரியை கடந்த 2013-ம் ஆண்டு ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார். அப்போதிருந்த துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் தமிழகஅரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக அரசு இடஒதுக்கீடு அடிப்படையிலும், பிளஸ்டூ மதிப்பெண்கள் அடிப்படையிலும் கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ், எம்டி, பிடிஎஸ். பிபிடி, பிஇ, பிஎஸ்சி வேளாண்மை ஆகிய படிப்புகளுக்கு அனுமதி சேர்க்கை செய்யப்பட்டது. இதனால் ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் எவ்வித நன்கொடை அளிக்காமல் பயனடைந்தனர்.

இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தமிழகஅரசு ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவினர் மூவரை பரிந்துரை செய்து தமிழக ஆளுநருக்கு கோப்புகளை அனைப்பி வைத்தனர். இந்நிலையில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக தாவரயியல் துறை பேராசிரியர் முனைவர் எஸ்.மணியனை நியமனம் செய்து தமிழக கவர்னர் ரோசய்யா உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய துணைவேந்தர் விரைவில் பொறுப்பார் என பல்கலைக்கழக வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த இரு ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தை சிறப்பாக நிர்வகித்து வந்த பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ரத்தினசாமி, ஸ்ரீமாலினி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் புதிய துணைவேந்தரிடம் நிர்வாக பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு வெளியேறுவார்கள் எனக்கூறப்படுகிறது.

பிளஸ் 2 ரிசல்ட்டே வரவில்லை, எப்படி பெயிலாவேன்‍: சொல்கிறார் லட்சுமிமேனன்


சென்னை:  பிளஸ் 2 தேர்வில் நான் ‘பெயில்’ ஆகவில்லை என்று நடிகை லட்சுமிமேனன் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த நடிகை லட்சுமிமேனன் தமிழ் மற்றும் மலையான படங்களில் நடித்து வருகிறார். இவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பாரதிய வித்யா மந்திர் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் அதற்கான தேர்வு எழுதினார்.

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கேரளாவிலும் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதாகவும், இதில் நடிகை லட்சுமிமேனன் ‘பெயில்’ ஆகிவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

ஆனால் இதனை மறுத்துள்ளார் லட்சுமிமேனன். அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் இருந்த லட்சுமிமேனனிடம், சமூகவலைத்தளங்களில் பரவிய தகவல் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டத்தில் படிக்கவில்லை. சி.பி.எஸ்.இ.யில் (மத்திய பாடத்திட்டம்) படித்தேன். சி.பி.எஸ்.இ-யில் தான் பிளஸ் 2 தேர்வு எழுதினேன்.

அந்த தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. 20ஆம் தேதிக்கு மேல்தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறுகிறார்கள். நான் பிளஸ் 2 தேர்வில் ‘பெயில்’ ஆனதாக வெளியான தகவல் தவறானது. அதை யாரும் நம்பவேண்டாம்" என்று தெரிவித்தார்.

உறவுமுறை சொல்லி அழைப்பது அழகு!



விமானத்தில், ‘அங்கிள்’ என்று தன்னை அழைத்ததால், ஜூனியர் விமானியைத் தாக்கிய சீனியர் விமானி!’

சமீபத்தில் வெளியான இச்செய்தியைப் படித்ததும், `வேடிக்கையாக இருக்கிறதே' என்று நினைத்திருப்பீர்கள். இது, வேதனையானதும்கூட! இது செய்தியல்ல; கலாசார சீரழிவு. ஒருவரை ஒருவர் உறவு முறை சொல்லி அழைக்கும் நம் பாரம்பர்யம் சமாதியாவதைக் குறிக்கும் சம்பவம். இன்னொரு பக்கம், இன்று திரைப்படங்களில் காதலனை ‘பிரதர்’, ‘அண்ணா’ என்றெல்லாம் அழைத்து, கலாசாரக் கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.



நம் தலைமுறையில் குழந்தை பேச ஆரம்பிக்கும்போதே உறவு முறைகளையும் அழகாக அறிமுகப்படுத்தினார்கள் நம் பெற்றோர். அம்மா, அப்பாவில் தொடங்கி, அண்ணன், அக்கா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, அப்பத்தா, அம்மாச்சி, அய்யா, தாத்தா, அத்தான், மச்சான், அத்தாச்சி, மதினி, அண்ணி என்று... நம் தமிழ் மொழியில் ஒவ்வோர் உறவுக்கும் உண்டு, அழகழகான பெயர்கள்! ஆனால், இந்தத் தலைமுறை குழந்தைகள், ஆண்கள் அனைவரையும் ‘அங்கிள்’, பெண்கள் அனைவரையும் ‘ஆன்ட்டி’ என இந்த இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே சுருக்கிவிடுகிறார்கள். இதனால் நாம் தொலைத்தது, ஒவ்வோர் உறவுக்கான பிரத்யேக சொல்லை மட்டுமல்ல... அந்த பந்தங்களின் பிரத்யேகத்தையும்தான்!

அண்ணன், அக்கா என்று அழைக்கும்போது, வயதில் சிறிது மூப்பு என்பதற்கான மரியாதையுடன், மனதில் கொஞ்சம் சிநேகத்தையும் சேர்த்து வெளிப்படுத்தும் அந்த அழைப்பு. சித்தியும், சித்தப்பாவும் அப்பா, அம்மாவிடம் எதிர்பார்க்கும் உரிமையையும், உறவையும் தரக்கூடியவர்கள். அத்தை, மாமா, மச்சான், அத்தான் என இவையெல்லாம் ‘முறைக்கார’ உறவுகள். கேலியும், கிண்டலும் ததும்பும் பந்தங்கள். வயதில் மூத்தவர்கள் ஆனாலும் வார்த்தைகளில் சீண்டி விளையாடும் உரிமை தரும் சொந்தங்கள்.

அத்தாச்சி, மதினி, அண்ணி என்பவர்களும் கிண்டல் செய்யும் உரிமைக்கு உட்பட்டசொந்தங்களே! அப்பா வழி அப்பத்தா, அய்யாவும், அம்மா வழி தாத்தா, பாட்டியும்... கிளைகளின் வேர் சொந்தங்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால், நம் தமிழ்க் குடும்பங்கள் ரத்த சொந்தங்களுக்கு மட்டும் இந்த உறவை எழுதிவைக்கவில்லை. பக்கத்து வீட்டு ‘அத்தை’, எதிர்வீட்டு ‘சித்தப்பா’, கடைசி வீட்டு ‘அப்பத்தா’, தெரு முக்குக் கடை ‘அண்ணன்’ என்று அனைவரையும் முறை சொல்லிக் கூப்பிடும் அன்பு நிறை கலாசாரம் நம்முடையது. இதில் வயதின் அடிப்படையில் தங்களுக்குப் பிடித்தமான, பாதுகாப்பான, கண்ணியமான உறவுமுறைப் பெயர்களை அவரவர்க்கு ஏற்ப அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். உதாரணமாக, ஒரு பெண் தன்னைவிட வயதில் சற்று மூத்த ஆணை, ‘அண்ணே’ என்று அழைத்து, ஒரு பாதுகாப் பான பந்தத்தை உருவாக்கிக்கொண்டார். அதேபோல, தங்களைவிட வயதில் இளைய பெண்ணாக இருந்தாலும்கூட, ஆண்கள் பலர், திருமணமான பெண்களை ‘அண்ணி’, ‘மதினி’ என்று அழைத்து, தங்கள் மரியாதையை வெளிப்படுத்தினர்.

ஆனால் ‘வெஸ்டர்ன்’ கலாசார மோகத்தில் இருக்கும் குடும்பங்கள், ‘என் பிள்ளைக்கு தெரிஞ்ச ரெண்டே உறவுகள்... அங்கிள், ஆன்ட்டிதான்!’ என்று அதைப் பெருமையாகவே சொல்வதைக் கேட்கும்போது, வருத்தமாக இருக்கிறது. மேலும், நெருங்கிய ரத்த சொந்தங்களையும்கூட, அவர்களுக்கு ‘அங்கிள்’, ‘ஆன்ட்டி’ என்றே பழக்குவது கொடுமை! இன்னும் கொடுமையாக, இன்று பல இளம்பெண்கள் தங்கள் மாமனார், மாமியாரையும் ‘அங்கிள்’, ‘ஆன்ட்டி’ என்று அழைப்பதைப் பார்க்கிறேன்.

நீங்களே யோசித்துப் பாருங்கள். ஓர் இளம்பெண், தெரியாத ஓர் இடத்தில், எதிர்ப்படும் ஓர் ஆணிடம் விலாசம் கேட்கிறாள். ‘சார் இந்த அட்ரஸ் சொல்லுங்க’ எனும்போது, அவரும் சம்பிரதாயமாக வழி சொல்வார். ‘அங்கிள்... இந்த அட்ரஸ் தெரியுமா?’ என்று கேட்டால், 30+ ஆசாமியாக இருந்தால், அந்த விமானி போல கோபப்படவும் வாய்ப்பிருக்கிறது. ‘அண்ணே... இந்த அட்ரஸ் எங்கனு சொல்றீங்களாண்ணே..?’ என்று கேட்டால், அந்த உறவுமுறைக்கான பொறுப்பை தான் ஏற்று, அக்கறையுடன் வழி சொல்லி அனுப்பி வைப்பார். சந்தேகமாக இருந்தால், உங்கள் வீட்டில் உள்ள ஆண்களிடம் இந்தச் சூழலைச் சொல்லி அவர்களின் மனதைக் கேட்டுப் பாருங்கள். அதேபோல, வெளியிடத்தில் ஓர் ஆண், பெண்ணிடம் பேசும் சூழலை ‘அக்கா’, ‘அண்ணி’ போன்ற அழைப்புகள் சுமூகமாக்கும். இதை நீங்களே உணரலாம்.

உறவுமுறைப் பெயர் சொல்லி அழைப்பது, வெறும் வார்த்தை இல்லை. அது அந்த உறவுக்குத் தரும் மரியாதை. இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை, இடைவெளியை நிர்ணயிப்பது. குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்... உறவு களையும், அதன் உன்னதங்களையும்!

- ரிலாக்ஸ்...

ஒரு நிமிடம் பெற்றோர்களே..!

பெரியவர்களைப் பார்த்து தான் குழந்தைகள் அதிக விஷயங் களைக் கற்றுக்கொள்கிறார்கள். எனவே, உங்களின் உறவுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, ‘என் அப்பாவோட தம்பி எனக்கு சித்தப்பா’ என்று உறவு வழிகளை விளக்குங்கள்.

‘நீ அண்ணி என்றால், உன் கணவர் எனக்கு என்ன முறை வேண்டும்?’ என்று உறவுகளை விளையாட்டு விடுகதைகளாக குழந்தைகளுக்கு மனப்பாட மாக்குங்கள்.

குழந்தைகள் சொல்லும் உறவுமுறைகளைக் கவனித்து சரி செய்யுங்கள்.

பள்ளி, கடைகள் என்று, ‘சார்’ என்ற பொதுஉறவை எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை யும் கற்றுக்கொடுங்கள்.

வயதில் பெரியவர்களை ‘வா, போ’ என்று அழைப்பது, பெயர் சொல்லி அழைப்பது போன்ற தவறான பழக்கங்களைத் திருத்துங்கள்.

டாக்டர் அபிலாஷா

தொகுப்பு: சா.வடிவரசு

சல்மான் கானுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு; ஜாமீனும் நீட்டிப்பு!



மும்பை: மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி மும்பையின் பாந்த்ரா பகுதியில் சல்மான் கான் சென்ற கார் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. இதில் நுருல்லா மெஹ்பூப் செரிஃப் என்பவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.

அன்றைய தினமே கைது செய்யப்பட்ட சல்மான் கான், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். பின்னர் 2002 அக்டோபரில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு மீதான விசாரணை 2006ஆம் ஆண்டு பாந்த்ரா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தொடங்கியது.

2012ஆம் ஆண்டு வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு புதிதாக விசாரணை தொடங்கியது. 2013ஆம் ஆண்டு சல்மான் மீது மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

சல்மான் கான் மது அருந்தி கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டு சாட்சியங்களும் பெறப்பட்டன. இந்நிலையில் சம்பவத்தின் போது தான் கார் ஓட்டவில்லை எனவும், தனது டிரைவர் அசோக் சிங் தான் கார் ஓட்டினார் எனவும் சல்மான் வாக்குமூலம் அளித்தார். அசோக் சிங்கும் நீதிமன்றத்தில் ஆஜராகி அதனை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் சல்மான் கானுக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் கடந்த 6ஆம் தேதி 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த தண்டனையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் சல்மான் கான் அன்றைய தினமே மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இரண்டு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கினார்.

தண்டனை நிறுத்தி வைப்பு

இந்நிலையில், இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாமீனும் நீட்டிப்பு

அத்துடன் சல்மான் கான், கீழ்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்த நீதிபதி, சல்மான் கான், செசன்ஸ் கோர்ட்டில் 30,000 ரூபாய் மதிப்பிலான உறுதிமொழி பத்திரத்தை அளித்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

அதே சமயம் வெளிநாடு செல்ல விரும்பினால் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கொண்டாட்டமும், அதிருப்தியும்

இதனிடையே ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சல்மான் கான் வீட்டு முன்பாக திரண்டிருந்த அவரது ரசிகர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதே சமயம் உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவு, ''பணமும், செல்வாக்கும் இருந்தால், நீங்கள் தொடர்ந்து குடித்துவிட்டு, வாகனம் ஓட்டலாம்' என்ற ஒரு தவறான செய்தியை நாட்டிற்கு உணர்த்திவிடும்" பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

NEWS TODAY 25.07.2026