Monday, November 30, 2015

அடுத்த ஆண்டு ஜனவரி 26–ந்தேதி முதல் கார், பஸ், மோட்டார் சைக்கிள்கள் எத்தனாலில் ஓடும் மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவிப்பு

பதிவு செய்த நாள்:
திங்கள் , நவம்பர் 30,2015, 2:51 AM IST

முசாபர்நகர்,


அடுத்த ஆண்டு ஜனவரி 26–ந்தேதி முதல் கார், பஸ், மோட்டார் சைக்கிள்கள் மாற்று எரிபொருளான எத்தனாலில் ஓடும் என மத்திய போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி அறிவித்தார்.

எத்தனால்

உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகரில், மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பிரேசில் நாட்டைப்போல கார்கள், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் என மோட்டார் வாகனங்கள் அனைத்தும், அடுத்த ஆண்டு ஜனவரி 26–ந்தேதி முதல் எத்தனாலில் ஓடும்.

ஹோண்டா, யமஹா மோட்டார் வாகன நிறுவனங்கள், இத்தகைய மோட்டார் சைக்கிள்களை தயாரித்து உள்ளன. எத்தனால் கொண்டு ஓடும் மோட்டார் சைக்கிள்கள் மூலம் வரும் லாபத்தினை கரும்பு விவசாயிகள் நேரடியாக அனுபவிப்பார்கள்.

எத்தனால் பம்புகள்

பெட்ரோல் பம்புகளைப் போன்று எத்தனால் பம்புகள் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26–ந்தேதி) செயல்பட தொடங்கும். இதற்கான உரிமங்கள் வழங்குவது தொடங்கி உள்ளது.

நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலையை மேம்படுத்துவதற்கு அரசு உறுதி கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரேசில், அமெரிக்காவுடன் இந்தியா

தற்போது நமது நாட்டில் மோட்டார் வாகனங்கள் பெரும்பாலும் பெட்ரோல், டீசலில்தான் ஓடுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இவற்றை இறக்குமதி செய்வதால் நாட்டுக்கும் பெருமளவு அன்னியச்செலாவணி இழப்பு ஏற்படுகிறது.

எத்தனால் கரும்புச்சாறைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், கரும்பு விவசாயிகளின் வாழ்வில் ஏற்றம் ஏற்படும். சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும். அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மாற்று எரிபொருளாக எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில் நமது நாடும் சேரப்போகிறது.

வங்கக்கடல் பகுதியில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

பதிவு செய்த நாள்:
திங்கள் , நவம்பர் 30,2015, 4:07 AM IST

சென்னை

இலங்கை அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலவுகிறது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை அந்தமான் அருகே உருவாகி உள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-

நேற்று முன்தினம் தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அதே இடத்தில் நீடிக்கிறது. இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதியில், புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.

வட மாவட்டங்களில் கனமழை

இந்த இரு நிகழ்வு காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதியில் கனமழை பெய்யும். அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் அருகே வந்தால், தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் கன்னிமாரில் 14 செ.மீ. மழையும், பூதப்பாண்டியில் 4 செ.மீ. மழையும், பாபநாசமில் 3 செ.மீ. மழையும், காட்டுக்குப்பம், மகாபலிபுரம், செங்கோட்டை தலா 2 செ.மீ. மழையும், மயிலாடி, மயிலாடுதுறை, நாகர்கோவில், செங்கல்பட்டு, கேளம்பாக்கம், தாமரைப்பாக்கம் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

நொடிக்கு 224 GB வேகத்தில் இண்டர்நெட்; அமெரிக்காவில் விஞ்ஞானிகள் வெற்றிகர சோதனை

நியூயார்க்,

தற்போது நாம் பயன்படுத்தி வரும் வை-ஃபை இண்டர்நெட் வேகத்தைவிட 100 மடங்கு அதிக வேகம் கொண்ட 'லை-ஃபை' (லைட் பெடிலெட்டி) எனும் புதிய தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர் விஞ்ஞானிகள். அதிகபட்சமாக நொடிக்கு 224 GB வேகத்தில் சோதனை செய்து பார்த்துள்ளனர். இந்த அதிவேக இண்டர்நெட் வாயிலாக கண் இமைக்கும் நேரத்திற்குள் 18 திரைப்படங்களை டவுண்லோடு செய்துவிடலாம். பிளாஷ் எல்.இ.டி விளக்குகளின் வாயிலாக பைனரி கோடு தொழில்நுட்பத்தில் இந்த அளவிற்கு அதிவேக இண்டர்நெட்டை தர முடியும் என நிரூபித்துள்ளனர்.

Document source: daily thanthi

இயற்கையை நாம் அழித்தால்...

logo


தமிழ்நாட்டில் கடந்த பல நாட்களாகவே, வடகிழக்கு பருவமழை வானத்தில் இருந்து பெருக்கெடுத்தோடும் அருவிபோல பொழிந்து, மண்மகளை கடல் மகளாக்கி பல சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த பேரழிவுக்கு என்ன காரணம் என்பதை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் நெற்றி அடியாக ஒரேவாக்கியத்தில் சொல்லிவிட்டார். ‘இயற்கையை நாம் அழித்தால், இயற்கை நம்மை அழித்துவிடும்’ என்று இவ்வளவு மழை சேதத்துக்கான காரணத்தை மட்டுமல்லாமல், இனி செய்யவேண்டிய நடவடிக்கைக்கான பாடமாகவும் சொல்லிவிட்டார். கடந்த 23–ந் தேதி மாலையில் 4 மணி நேரம் பெய்த மழை சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டது. மாலையில் சாலையில் நடந்தும் செல்ல முடியவில்லை. வாகனங்களும் ஊர்ந்துகூட போகமுடியாத அளவு சாலைகளில் எல்லாம் தண்ணீர் நிறைந்து இருந்தது. இந்த போக்குவரத்து நெரிசல் தொடர்பாக ஐகோர்ட்டில் ஒருவழக்கு தொடரப்பட்ட நேரத்தில், நானும் அன்று ஐகோர்ட்டில் இருந்து வீட்டுக்கு செல்ல 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டேன். இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பின்விளைவு இது. இயற்கையை நாம் அழிக்கிறோம், பதிலுக்கு இயற்கை நம்மை அழிக்கிறது என்று தலைமை நீதிபதி கூறியிருக்கிறார்.

நிச்சயமாக இந்த கருத்தை அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள் அனைவரும் சிந்தித்து, இனியும் இதுபோல ஒரு நிலைமை ஏற்படாதவகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இந்த மழையிலும் சில ஏரிகள், குளங்களில் முழு கொள்ளளவை தேக்கி வைக்கமுடியவில்லை. காரணம் ஏரிகளின் கரைகள் பலப்படுத்தப்படவில்லை. தூர் வாரப்படாததால் முழுமையாக தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. பல ஏரிகள், குளங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி பாதி நீர்நிலைகள் வீடுகளாகிவிட்டன. இதற்கு காரணம் ஆக்கிரமிப்பு தொடங்கியவுடனேயே நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், அங்கு வீடுகள் கட்டப்பட்டவுடன் அரசு செலவில் சாலைகள் அமைத்துக்கொடுத்து, மின்சார சப்ளை, குடிநீர், கழிவுநீர் வசதி செய்துகொடுத்து, சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுத்து இலவசங்களையும் வாரி வாரி வழங்குவதுதான். மேலும் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆட்சிகாலங்களில் கட்டப்பட்ட ஏரி, குளங்களில் பெரும்பகுதியை மக்களாட்சியில் காணாமல் போகத்தான் செய்துவிட்டார்களே தவிர, பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப புதிய ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் தோண்டப்படவில்லை.

இந்த மழையிலும் பல கோவில்குளங்கள் வறண்ட நிலையில் அல்லது மழைதண்ணீரால் சற்று மட்டும் நிறைந்து இருக்கிறது. காரணம் அந்த குளங்களுக்கு மழைநீர் கொண்டுவரும் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புதான். மேலும் ஆறுகள், ஏரிகளில் பெருக்கெடுத்து ஓடி வீணாக கடலில் போய் கலக்கும் நீரை சேமிக்க புதிய கால்வாய்கள், ஏரிகள் தோண்டப்படவேண்டும். நகர்ப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, அந்த தண்ணீரை சேமித்துவைக்க புதிய நீர்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்.

மொத்தத்தில், அழிக்கப்பட்ட இயற்கைக்கு மீண்டும் உயிரூட்டவேண்டும். உடனடியாக நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளைக் கணக்கிட்டு, தயவு தாட்சணியம் இல்லாமல் அகற்றவேண்டும். நீர்நிலைகளில் தூர்வாருவதற்கான திட்டங்களைத்தீட்டி பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி, நீர் வற்றியவுடன், அல்லது நீர்மட்டம் குறைந்தவுடன் தூர்வாரவேண்டும். தேர்தல் வரப்போகிறது, அரசியல் கட்சிகள் அழிந்துபோன இயற்கையை, புதிய இயற்கை வசதிகளை உருவாக்கும் திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து, ஆட்சிக்கு வருபவர்கள் அதை உடனடியாக நிறைவேற்றவேண்டும்.

ஏனெனில் தேர்தல் அறிக்கைகளில் மக்கள் இப்போது அடைந்துவரும் இன்னல்களை தீர்க்க அரசியல் கட்சிகள் இப்போது இல்லாத என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள் என்பதை பார்க்க ஆவலோடு இருப்பார்கள்.

வகுப்பு அறையிலேயே மது குடித்த மாணவிகள்

logo

என்னதான் டாஸ்மாக் கடைகளில், ‘‘குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்’’ என்று கடையின் போர்டிலும் சரி, பாட்டில் களிலும் சரி எழுதப்பட்டிருந்தாலும், அதைப்பார்த்து யாரும் குடிக்காமல் இருப்பதுபோலத் தெரியவில்லை. ஆண்டுக்கு, ஆண்டு குடிப்பவர்கள் எண்ணிக்கையும், மதுபாட்டில்களின் விற்பனையும் உயர்ந்துகொண்டேப்போகிறது. அரசின் கஜானாவுக்கு மது விற்பனையின் மீது போடப்படும் வரியினால் மட்டுமே கடந்த ஆண்டு 24 ஆயிரத்து 164 கோடியே 95 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்து இருக்கும்.

ஆனால், சமுதாயத்தை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டுசெல்லும் வகையில் இப்போது, நாளைய ஒளிமிகுந்த தமிழ்நாட்டை உருவாக்கவேண்டிய இளைய சமுதாயமான மாணவர் சமுதாயத்தினர், அதுவும் பள்ளிக்கூட பருவத்தில் உள்ள பிஞ்சு உள்ளங்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் கொடுமையான செய்திகள் கேட்டு நெஞ்சமெல்லாம் பதறுகிறது. ஏற்கனவே பல பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் குடித்துவிட்டு ரகளை செய்த சம்பவங்களையெல்லாம் தாண்டி, சில மாதங்களுக்கு முன்பு முதலில் கல்லூரி மாணவிகள் என்று தொடங்கி, கோவையில் ஒரு பள்ளிக்கூட மாணவி சீருடையிலேயே போதையில் சாலையில் உருண்டு, புரண்ட சம்பவம் பார்க்க சகிக்கவில்லை. இப்போது சிலநாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் 11–வது படிக்கும் 4 மாணவிகள் பள்ளிக்கூடத்திலேயே பாட்டிலைத்திறந்து குடித்த சம்பவம், தமிழ் நெஞ்சங்களை சுக்கு நூறாக நொறுக்கிவிட்டது. இடைநிலைத்தேர்வு நடக்கும் நேரம். ஒரு மாணவிக்கு பிறந்தநாளாம். அதைக்கொண்டாட இருமாணவிகள் மதுபாட்டிலை வாங்கிக்கொண்டுவந்து இருக்கிறார்கள். மிகவும் கைதேர்ந்த குடிகாரர்கள்போல, 4 பேர்களும் குளிர்பானத்தை கலந்து குடித்து இருக்கிறார்கள். அதில் சிலர் வாந்தி எடுத்து இருக்கிறார்கள். இந்த மாணவிகளை பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே அனுப்பிவிட்டார்கள்.

இதனால் பிரச்சினை தீர்ந்துவிடாது. இவ்வளவுக்கும் இந்த மாணவிகள் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்கக்கூடாது என்று சட்டம் இருக்கும்போது, இவர்களுக்கு எப்படி தாராளமாக கிடைக்கிறது?. பணக்காரர்கள் செல்லும் பப்கள், நட்சத்திர ஓட்டல் பார்களில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், டாஸ்மாக் கடைகளில் மட்டும் இவ்வாறு விற்பனை செய்வதை உடனடியாக தடுக்கவேண்டும். எல்லோருக்கும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என்று ஏதாவது அடையாள அட்டைகள் இருக்கும்போது, அடையாள அட்டை கட்டாயமாக்க பரிசீலிக்கலாம். 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டால், அதைவிற்ற ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை பாயவேண்டும். மதுவை ஒரு எட்டாக்கனியாக்கும் வகையில் வரியைக் கூட்டினாலும் தவறில்லை.

அனைத்துக்கும் மேலாக மதுவின் கேடு குறித்து மாணவர்களுக்கு மனரீதியாக பாடங்களை பள்ளிக்கூடங்களிலேயே கற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். பள்ளிக்கூடங்களில் மனநல ஆலோசகர்களின் பணியை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும். ஆசிரியர்களும் தங்கள் பணி பாடம் சொல்லிக்கொடுப்பது மட்டுமல்லாமல், ஒழுக்கமுள்ள மாணவர் சமுதாயத்தை படைக்கவேண்டும் என்பதே தலையானது என்பதை உள்ளத்தில் கொள்ளவேண்டும். இதில் பெற்றோருக்கும் முக்கிய கடமை இருக்கிறது. டீன் ஏஜ் பருவத்தில் பெற்றோருடைய அன்பு, அரவணைப்பு, நெருக்கம் இல்லாத சூழ்நிலையும் அவர்களை மதுபக்கம் பார்வையை செலுத்தக்கொண்டு போய்விடுகிறது. எனவே, இளைய தலைமுறையை மதுப்பக்கம் கொண்டுபோகாமல் இருக்க, பெற்றோர், ஆசிரியர்கள், அரசு என்று ஒட்டுமொத்த சமுதாயமே பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்.

Wednesday, November 25, 2015

திருமணங்களும், தனி மனித பொருளாதாரமும்!

Dinamani


By எஸ். ராமன்

First Published : 23 November 2015 12:56 AM IST


தனி மனித வாழ்க்கையில், திருமணம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். அந்த நிகழ்வு, பலருடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாகவும் அமைகிறது. சமூகத்தில் பல மட்டங்களில் உள்ளவர்கள், தங்கள் சமூக அந்தஸ்துக்கு ஏற்றபடி, திருமண நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அதற்குத் தகுந்தாற்போல், திருமண செலவினங்களிலும் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. தங்கள் வருமானத்துக்கு மேல், திருமண செலவுகள் செய்வதற்கு, இந்திய நடுத்தர வர்க்கம் தயங்குவதில்லை. கல்வி செலவைவிட, திருமண செலவுகள் பல மடங்கு அதிகம் என்பதுதான் உண்மை.
நடுத்தர வர்க்கத்தினரைப் பொருத்தவரை குடும்ப திருமணங்கள், சந்தோஷ சுமைகளாக அமைகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. பெண்ணைப் பெற்றவர்களுக்கு திருமண நிகழ்வுகள் சந்தோஷத்தை அளித்தாலும், அது பெரும் பொருளாதார சுமையாகவும் உருவெடுத்து, வாழ்க்கை முழுவதும் அந்த சுமை அவர்களை அழுத்துகிறது என்பதுதான் நடைமுறை நிகழ்வுகளாகும்.
நம் சமூக அமைப்பைப் பொருத்தவரை, பெண்ணின் பெற்றோர்கள்தான் பெரும்பாலும் அந்த பொருளாதாரச் சுமையைச் சுமக்கின்றனர். தங்கள் பெண்ணின் நிம்மதியான எதிர்கால வாழ்க்கைக்கு வழிவகுக்கும், அத்தியாவசிய முதலீடாகத்தான் பெற்றோர்கள் அந்தச் சுமையைக் கருதுகின்றனர். இது ஒரு சூதாட்டம் போல்தான். பெண்ணின் வாழ்க்கை, எதிர்பார்த்ததுபோல் சரியாக அமையவில்லை என்றால், பொருளாதாரச் சுமையோடு, மனக்கஷ்டத்தையும் சேர்த்து, அவர்கள் சுமக்க ஆரம்பிக்கின்றனர்.
வரதட்சணை பரிமாற்றம் சட்டத்தால் தடை செய்யப்பட்டது என்றாலும், அதை அனைத்து தரப்பினரும் மதித்து செயல்படுவதாகத் தெரியவில்லை. மணமகனின் படிப்பு, வேலை, சம்பளம், குடும்பச் சொத்து மற்றும் பிற வருமானங்களைச் சுற்றி வரதட்சணை தேவைகள் வட்டமிடுகின்றன.
மணமகளின் கல்வித் தகுதி, வேலை, மாத வருவாய் ஆகிய காரணிகள் வரதட்சணை அளவீட்டை ஓரளவு குறைக்கும் வல்லமை படைத்தவை. நாங்கள் ஒன்றும் கேட்கமாட்டோம். ஆனால், உங்கள் பெண்ணுக்கு செய்ய வேண்டியதை செய்யுங்கள் என்ற பிள்ளை வீட்டாரின் பொதுவான பேச்சு, அளவு எல்லையை நிர்ணயிக்காமல் அவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதற்கான அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அவர்கள் வீட்டின் இன்னொரு ஆண் பிள்ளைக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்திருந்தால், குறைந்தபட்சம் அந்தப் பிள்ளைக்கு வழங்கப்பட்ட சீர் வரிசைக்கு இணையாக பொன்னையும், பொருளையும், தங்கள் பெண்ணுக்கு பெற்றோர் கொடுக்க வேண்டும். அவர்கள் வீட்டுப் பெண்ணின் திருமணத்துக்குக் கொடுக்கப்பட்ட சீர்வரிசையின் மதிப்பீடும் ஒரு முக்கிய அளவுகோலாக கருதப்படும் என்பது, பெண்ணை பெற்றவர்களுக்கிடையே எழுதப்படாத நியதியாக அமைந்துவிட்டது.
20 ஆண்டுகளுக்கு மேலான உழைப்பில், பெற்றோர் சிறு சிறு துளிகளாகச் சேர்த்த சேமிப்பு, இரண்டு நாள் திருமண செலவில் கரைந்து, அது பெரும்பாலும் வாழ்நாள் கடன் சுமையோடு முடிவடைகிறது. பெரும்பாலான நடுத்தர குடும்ப திருமண நிகழ்வுகளுக்கு வீடு, நிலம் மற்றும் பிற சொத்துகள் அடமானம் வைக்கப்படுகின்றன அல்லது விற்கப்படுகின்றன.
இம்மாதிரி செலவுகள், திருமண வைபவத்தோடு மற்றும் முடிவடைவதில்லை. திருமணத்திற்கு பின்பும் தீபாவளி, பொங்கல் உள்பட பல பண்டிகைகளில் ஆரம்பித்து, குழந்தை பிறப்பு வரையிலான நிகழ்வுகள் வரை செலவுகள் தொடர்கின்றன. இதனால், பெற்றோரின் கடன் சுமையும், அதற்கான வட்டி சுமையும் அதிகரிக்கின்றன.
திருமணத்துக்கான செலவுகளை, அவசியமானவை, அவசியமற்றவை என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவசிய செலவுகளில் அழைப்பிதழ், திருமண சத்திரம் மற்றும் சாப்பாடு சார்ந்த செலவுகள் முங்கியப் பங்கு வகிக்கின்றன. அவசியம் அழைக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை ஆழ்ந்த ஆலோசனைகளுக்கு பிறகு தயாரித்து, அந்த எண்ணிக்கையின் அடிப்படையில்தான் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட வேண்டும். தொலைபேசி மூலமும் அழைப்பு விடுக்கலாம். இதனால், போக்குவரத்து செலவும் குறைய வாய்ப்பிருக்கிறது.
சத்திரங்களைப் பொறுத்தவரை, அவைகளுக்கு செலுத்தப்பட வேண்டிய மொத்த கட்டணத் தொகையில், தவிர்க்கப்படக்கூடிய பல கட்டணங்கள் ஒளிந்திருக்கின்றன. ஆகையால், சத்திர பயன்பாட்டுக்கான பல்வேறு கட்டணங்களின் முழு விவரங்களை முன்கூட்டியே விசாரித்து அறிந்து, அவைகளில் அவசியமற்ற செலவுகளுக்கு சம்மதத்தை மறுப்பதால், கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும்.
உதாரணமாக, தார்ப் பாய், தலையணைகள், ஜமுக்காளம், மின்விசிறி, ஏ.சி, ஜெனரேட்டர், மின் கட்டணம், பாதுகாப்பு, துப்புரவாளர்கள் ஆகியவற்றுக்கான கட்டணங்கள், கடைசிக்கட்ட பில் தொகையில் வெகுவாக மிகைப்படுத்தப்பட்டிருக்கும். சத்திரத்தில் உள்ள பல்வேறு வசதிகளைப் பயன்படுத்தாவிட்டாலும், அவைகளுக்கான கட்டணங்கள், பில் தொகையில் பட்டியலிடப்பட்டிருக்கும்.
ஜெனரேட்டர் ஓடாவிட்டாலும், அதற்கான ஒரு நாள் வாடகையாக ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வசூலிக்கப்பட்டுவிடும். இரண்டு துப்புரவுப் பணியாளர்கள் பணி செய்யும் சிறிய சத்திர பயன்பாட்டில், 20 துப்புரவாளர்களுக்கான கட்டணத் தொகை உள் அடங்கியிருக்கும். முன்கூட்டியே சத்திர நிர்வாகத்திடம் சுமுகமாகப் பேசி, கட்டணங்களைப் பற்றிய முழு விவரங்களைக் கேட்டறிந்து, செலவினங்களை குறைக்க முற்பட்டால், பொருள் செலவு ஓரளவு மிச்சமாகும்.
தற்காலத்தில், வசதி படைத்தவர்களின் வீட்டுத் திருமணங்களில்கூட, முகூர்த்தம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு தனித் தனி அழைப்பிதழ்கள் கொடுக்கப்படுகின்றன. நெருங்கிய சுற்றத்தினர் மட்டும் முகூர்த்த நிகழ்ச்சிக்கும், நண்பர்கள் வரவேற்புக்கும் அழைக்கப்படுகின்றனர். இந்த முறையில், பல்வேறு செலவினங்கள் குறைய வாய்ப்பிருப்பதால், இதையே மற்ற தரப்பினரும் பின்பற்றலாம்.
திருமண ஏற்பாடுகள் அனைத்தையும், ஒப்பந்தக்காரர்களிடம் விடும் முறை, இப்பொழுது வேரூன்றிவிட்டது எனலாம். ஒப்பந்தக் கட்டணங்களில் உள்ளடங்கிய விவரங்களைக் கேட்டு அறிந்து, தேவை இல்லாதவைகளை ஒப்பந்தப் பட்டியலிலிருந்து நீக்குவதன் மூலம் செலவை ஓரளவு குறைக்கலாம்.
உணவு பரிமாறப்படும் கூடத்தின் மேற்பார்வைக்கென நெருங்கிய உறவினர் அல்லது நண்பரை நியமிப்பதால், விருந்தோம்பலை பேணிக் காப்பதோடு மட்டுமல்லாமல், உணவு வீணாவதையும் தடுக்கலாம். தனியாக ஆள் இல்லாத இலைகளில்கூட சாப்பாடு பரிமாறி, அதற்கும் சேர்த்து கட்டணம் கணக்கிடுவதை மேற்பார்வையாளர் தடுக்கலாம். உணவு பந்திகள், அக்கறையுடன் மேற்பார்வையிடப்பட்டால், வீணாகும் செலவுகளைக் குறைக்க அது பெருமளவில் வழி வகுக்கும்.
கடன் வாங்கி கொண்டாடப்படும் திருமணங்களில், பிள்ளை வீட்டார், தங்களுக்குத் தெரிந்த எண்ணற்ற நபர்களுக்கு அழைப்பு விடுக்கும் பழக்கம் இன்றும் நிலவுகிறது. பெண்ணைப் பெற்றவர்கள் இந்த செலவுகளை முழுவதும் ஏற்பது நியாயமாகாது. இம்மாதிரி சூழ்நிலையில், பிள்ளை வீட்டினரும், விருந்து செலவின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்வதுதான் சரியான முறையாகும்.
காதல் திருமணங்கள் சகஜமாகிவிட்ட இந்த காலக் கட்டத்தில், திருமண செலவுகளை பெருமளவு குறைப்பதோடு மட்டுமல்லாமல், அந்த செலவுகளை பெண்ணைப் பெற்றவர்கள் மீது மட்டும் பெருமளவில் சுமத்தாமல், இரு தரப்பினரும் சம பங்கில் ஏற்றுக்கொள்ளும் உடன்பாடுகளையும், மாப்பிள்ளையும், பெண்ணும் தங்கள் பெற்றோரிடம் விளக்கி சம்மதிக்க வைக்கவேண்டும். இக்கால இளம் பெண்கள், பெரும்பாலும் ஆடம்பர நகைகளை அணிவதில்லை.
ஆகையால், மாப்பிள்ளையின் பெற்றோர்கள், தங்க நகைகளுக்கான தேவையைக் குறைத்துக்கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். தங்கள் பெண்களுக்கு தங்கம் வழங்க விரும்பும் பெற்றோர்கள், மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டி ஈட்டக்கூடிய தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்து, அதை பரிசாக வழங்கலாம்.
பெண் குழந்தையின் எட்டு வயது முதல், அவளுடைய கல்வி, திருமணச் செலவுகளுக்கு பெற்றோர்கள் சேமிக்கத் துவங்க வேண்டும். வங்கி வைப்பு நிதிகளின் மீதான வட்டி விகிதம், பண வீக்கத்திலிருந்து முற்றிலும் பாதுகாப்பு அளிப்பதில்லை.
ஆகவே, சேமிப்பின் ஒரு பகுதியை, முறையான தொடர் முதலீட்டு முறையின் மூலம் பங்கு மூலதனம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும், மற்றொரு பகுதியை பங்கு மூலதனம் மற்றும் கடன்பத்திரங்களை உள் அடக்கிய மியூச்சுவல்
ஃபண்டு திட்டங்களிலும் முதலீடு செய்வதால், பண வீக்கத்தைத் தாண்டிய பொருளாதார பலனைப் பெறலாம்.
பொருளாதாரத் தகுதிக்கு அப்பாற்பட்ட, பிரமாண்ட திருமணங்களால், தங்கள் பெண்ணின் இல்லற வாழ்க்கையின் தரத்தை உயர்த்திவிடலாம் என்ற எண்ணங்கள் பெற்றோர்களால் களையப்பட வேண்டும். மணமகனுக்கும், மணப்பெண்ணுக்கும் இடையேயான மனப்பொருத்தம் மட்டும்தான் அதை சாதிக்க முடியும் என்பதை உணர வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல் வளர்ப்பு மட்டுமன்றி, தெளிவும், ஆரோக்கியமும் மிகுந்த மன வளர்ப்பிலும் கவனம் செலுத்தினால், வாழ்க்கையில் எத்தகைய சூழ்நிலைக்கும் அவர்கள் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள அது உதவும்.
தங்கள் திருமணத்திற்குப் பிறகு, பெற்றோர்களை நிரந்தர கடனாளியாக்காத திருமணங்களை திட்டமிடுவதில், தற்கால இளைய சமுதாயத்திற்கு பெரும் பங்கும், பொறுப்பும் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
20 ஆண்டுகளுக்கு மேலான உழைப்பில், பெற்றோர் சிறு சிறு துளிகளாகச் சேர்த்த சேமிப்பு, இரண்டு நாள் திருமண செலவில் கரைந்து, அது பெரும்பாலும் வாழ்நாள் கடன் சுமையோடு முடிவடைகிறது.

வரலாறு மிக முக்கியம்...

Dinamani

By என். செந்தில்குமார்

First Published : 23 November 2015 12:56 AM IST


வரலாறு என்றாலே கடந்த காலம் தானே? அதை எதற்காக நாம் அறிந்துகொள்ள வேண்டும்? என்ற கேள்வி பொதுவாகப் பலருக்கும் இருக்கிறது. வரலாறு என்பது கடந்த காலம் அல்ல. அது, நிகழ்காலத்தை நிர்ணயிக்கும் விசை. எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்ற மறைமுக சக்தி.
மன்னன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? அவனது செயல்பாடுகள் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கி.மு. 262-இல் நிறுவப்பட்ட அசோகரது கல்வெட்டுகளில் ஒன்றைப் பாருங்கள். அதன் முக்கியத்துவம் இன்றும்கூட எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.
"மாமன்னராகிய நான் எந்த நேரத்திலும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், தேரில் பயணம் செய்து கொண்டிருந்தாலும், வேறு எந்த இடத்தில் எப்படி இருந்தாலும், அரசு அலுவலர்கள் மூலம் மக்களின் பிரச்னைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் எனக்கு அனுப்பப்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே மக்களின் பிரச்னைகளை உடனடியாக என்னால் கவனிக்க முடியும்.
கொடை மற்றும் நலத்திட்டப் பொது அறிவிப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தைகளாகப் பிறப்பித்திருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர உத்தரவுகள் தொடர்பாக யாருக்காவது ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அது தொடர்பான தகவல்கள் உடனடியாக மன்னராகிய என்னிடம் வந்து சேர வேண்டும்.
இதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் சிறப்பாகச் செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆகவே, வேலைகளைத் தாமதமின்றி உடனே முடிக்க வேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதும் இல்லை. இந்தத் தர்ம ஆணை வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், வருங்கால சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணுவதற்காகவும் கல்வெட்டில் எழுதப்படுகிறது' - இவ்வாறு அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டு உணர்த்தும் உண்மையை ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் எப்போதும் நினைவில் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு, இப்போது இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் மன ஆறுதலுக்குக்கூட மத்திய அரசு வாய்த் திறக்காமல் மெளனம் சாதிப்பது.
அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழகத்தில், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் நேரிட்டுள்ள சேதங்களை முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசிடம் விளக்கிக் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் இப்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், 23-ஆம் தேதிக்குள் (திங்கள்கிழமை) தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், மத்திய அரசின் பிற நிதியுதவிகளைக் கோரியும் விரிவான மனு, மத்திய அரசிடம் அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அப்போது தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் பேசியபோது, மத்தியக் குழு தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார் என்பது தமிழக அரசு சார்பில் வெளியாகியுள்ள செய்தி.
இதேபோல், அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் மழை நிவாரணப் பணிகளுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காகவும் மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என்று அம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மழை பாதித்துள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளுக்கு உதவ வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஆகியோருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நடைமுறைகள் இந்தக் காலத்தில் தேவைதானா? அமெரிக்காவிலும், பிரான்ஸிலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரிட்டால், ஏன் பாகிஸ்தானில் ஏற்பட்டால்கூட அடுத்த சில மணி நேரங்களுக்குள் வருத்தம் தெரிவிக்கும் இந்திய பிரதமருக்கு தமிழகத்திலும், ஆந்திரத்திலும் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களை அந்தந்த மாநில அரசுகள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
நாட்டில் இயற்கைப் பேரிடர்கள், சீற்றங்கள் ஏற்படும்போது மத்தியில் ஆளும் அரசு தாமாகவே முன்வந்து பாதிப்புக்குள்ளான மாநிலங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கி நிவாரணப் பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும்.
மாநிலத்திலிருந்து கிடைக்கும் உற்பத்தி வரி, விற்பனை வரி, வருமான வரி என அத்தனை வரிகளையும் உயரதிகாரத்துடன் பெற்றுக் கொள்வதை தார்மீகக் கடமையாகக் கொண்டுள்ள மத்திய அரசுக்கு, பாதிக்கப்படும் மாநில மக்களுக்குத் தானே முன்வந்து உதவ வேண்டியதும் தமது தார்மீகக் கடமை என்பது தெரியாதா?
பிரதமர் மோடி பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது, நாட்டுக்காக உழைத்தவர்களையும், அவர்களது தியாகங்களையும் நாம் நினைவுக்கூர வேண்டும். வரலாற்று நிகழ்வுகளை நாம் எப்போதும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பார்.
அவர், தற்போது மாமன்னர் அசோக சக்ரவர்த்தியின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்திருப்பாராயின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்கூட சொல்லாத நிலையை அவர் கடைப்பிடித்திருக்கமாட்டார். நேரடியாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு வருகைத் தந்து நிவாரணப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டிருப்பார்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்கிறது சிலப்பதிகாரம்.

NEWS TODAY 18.12.2025