Friday, April 15, 2016

எம்ஜிஆர் 100 | 44 - போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!

எம்ஜிஆர் 100 | 44 - போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. போட்டி என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார். நிஜமான போட்டிகளில் மட்டுமல்ல; விளையாட்டுக்காக நடந்த போட்டிகளில் கூட அவர் தோற்றது இல்லை.

படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஓய்வாக இருக்கும்போது, பொழுது போக்குக்காக நண்பர்களுடன் எம்.ஜி.ஆர். சீட்டு விளையாடுவார். பணம் வைத்து விளையாடும் பழக்கம் கிடையாது. விளையாட்டில் தோற்றுப் போனவர்கள் தனது தலைக்கு மேல் தலையணையை வைத்துக் கொண்டு ‘‘நான் தோத்து போயிட்டேன், நான் தோத்து போயிட்டேன்’’ என்று சொல்ல வேண்டும். இந்த விளையாட்டு அந்த இடத்தையே கலகலப்பாக்கிவிடும்.

‘உரிமைக்குரல்’ படத்தின் சில காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன. ‘மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை…’ என்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரை நடிகை லதாவும் அவரது தோழிகளும் கிண்டல் செய்து பாடுவது போல காட்சி. இந்தப் பாடலில் கடைசியில் இரண்டு வரிகள் மட்டும் கோவை சவுந்தரராஜன் பாடியிருப்பார். எம்.ஜி.ஆருக்காக அவர் குரல் கொடுத்த ஒரே பாடல் இது. படத்தின் நடன இயக்குனர் சலீம். அவரது உதவியாளர்தான் புலியூர் சரோஜா.

பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும், நடனக் கலைஞர்களை பாராட்டி அவர்களுக்கு விருந்தளிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார். தங்களை எம்.ஜி.ஆர். கவுரவிக்கிறார் என்பதால் நடனக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சொன்னபடி, நடனக் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்தார். அப்போது, குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் திடீரென ஒரு போட்டியை அறிவித்து அவர்களுக்கு சவாலும் விடுத்தார்.

‘‘எல்லோரும் முடிந்த வரையில் பாயசம் குடியுங்கள். யார் அதிகம் குடிக்கிறார்களோ அவர்களை விட ஒரு கப் பாயசம் நான் கூடுதலாக குடிக்கிறேன்’’ என்று சவால் விட்டார். பலர் ஒதுங்கிக் கொண்டனர். ஒரு சிலர் மட்டும் அதை ஏற்றுக் கொண்டு மளமளவென பாயசத்தைக் குடிக்கத் தொடங்கினர். ஐந்தாறு கப் குடிப்பதற்குள்ளேயே சிலர் கழன்று கொண்டனர். எட்டாவது கப் குடித்துவிட்டு ஒருவர் பின்வாங்கினார்.

ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்தார். எம்.ஜி.ஆரும் சளைக்காமல் அவருக்கு போட்டியாக தானும் பாயசத்தை குடித்துக் கொண்டே வந்தார். விளையாட்டாக நடக்கும் இந்தப் போட்டியை படத்தின் இயக்குநர் தரும் மற்றவர்களும் ரசித்தனர். போட்டியின் வேகம் அதிகரித்தபோது, ஒரு கட்டத்தில் தருக்கு பயம் வந்து விட்டது.

‘எம்.ஜி.ஆர். அளவுக்கு அதிகமாக பாயசத்தைக் குடித்துவிட்டு வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டால் என்னாவது? அவரது உடல் நலம் பாதிக்கப்படுவ தோடு, படப்பிடிப்பும் பாதிக்கப்படுமே?’ என்று தர் கவலை அடைந்தார். பயமும் கவலையும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன. எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘‘அண்ணே, அதிகம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது’’ என்று கூறி தடுக்கப் பார்த்தார். எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘போட்டி என்று வந்து விட்டால் விளையாட்டாக இருந்தாலும் போட்டிதான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

போட்டியில் தாக்குப் பிடித்த ஒருவர் கடைசியாக 12-வது கப் பாயசத்தைக் குடித்துவிட்டு இனி ஒரு துளி கூட உள்ளே இறங்காது என்று சொல்லி எழுந்துவிட்டார். பின்னர், எம்.ஜி.ஆர். ‘‘13-வது கப்’’ என்று கூறி உயர்த்திக் காட்டி மடமடவென்று குடித்து விட்டார். பின்னர், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக சிறு குழந்தை போல கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டி கூடியிருந்தவர்களைப் பார்த்து பூவாய் புன்னகைத்தார். சுற்றி இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கக் கூடாதே என்ற கவலையால், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாயசம் கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் தர் ஜாடை காண்பித்தார். எம்.ஜி.ஆருக்கு கொடுக்கும் கப்பில் முழுதாக பாயசம் ஊற்றாமல் முக்கால் கப் மட்டும் ஊற்றிக் கொடுக்கும்படி சைகையால் சொன்னார். எம்.ஜி.ஆரின் கண்களில் இருந்து எதுவும் தப்புமா? இதை கவனித்துவிட்டார். பாயசம் கொடுப்பவரிடம் ‘‘முழுதாக ஊற்றிக் கொடு’’ என்று அதட்டலாக சொன்னார். எம்.ஜி.ஆரின் நேர்மை உணர்வு தரை நெகிழ வைத்தது.

‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பெக்டர் ராமு, அப்துல் ரஹ்மான் என இரட்டை வேடங்கள். அப்துல் ரஹ்மானாக நடிக்கும் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சியில் ‘ஒன்றே சொல்வான், நன்றே செய்வான், அவனே அப்துல் ரஹ்மானாம்…’ என்ற கருத்துள்ள பாடல் இடம்பெறும். அந்தப் பாடலில் வரும் வரிகள் இவை…

‘ஆடும் நேரத்தில் ஆடிப் பாடுங்கள்

ஆனாலும் உழைத்தே வாழுங்கள்

வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்

இரண்டும் உலகில் தேவை

ஆடும்போதும் நேர்மை வேண்டும்

என்றோர் கொள்கை தேவை’

படங்கள் உதவி: ஞானம்

‘உரிமைக்குரல்’ படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகள் வண்டலூர் அருகே நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜிக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தில் படமாக்கப்பட்டன. வில்லனின் ஆட்கள் பயிர்களுக்கு நெருப்பு வைப்பதுபோல காட்சி.

படத்துக்காக பயிர்களுக்கு நெருப்பு வைக்கப் போவதை அறிந்த எம்.ஜி.ஆர்., ‘‘மக்களுக்கு உணவாக பயன்படும் நெற்பயிரை கொளுத்துவதை அனுமதிக்க முடியாது’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். பின்னர், வைக்கோல்களுக்கு தீ வைக்கப்பட்டு காட்சி படமாக்கப்பட்டது.

- தொடரும்...

Thursday, April 14, 2016

கல்லூரிகளில் பி.காம்., 'சீட்'டுக்கு போட்டி ஏற்படும்

கல்லூரிகளில் பி.காம்., 'சீட்'டுக்கு போட்டி ஏற்படும்
DINAMALAR

பிளஸ் 2 பொதுத்தேர்வில், வணிகவியல் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் நிலை காணப்படுகிறது. எனவே, வரும் கல்வி ஆண்டிலும் பி.காம்., 'சீட்'டுக்கு கல்லுாரிகளில் கடும் போட்டி இருக்கலாம். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வினாத்தாளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 'புளூ பிரின்ட்' அடிப்படையில் வினாக்கள் கேட்கப்பட்டாலும், புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றன. இதனால், கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த, முதல் பிரிவு மாணவர்கள் அதிக சிக்கலுக்கு ஆளாகினர்.

எனவே, இந்த ஆண்டு கணிதத்துடன் இணைந்த அறிவியல் பிரிவு மாணவர்களை விட, வெறும் அறிவியல் மற்றும் வணிகவியல் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று, மாநில, 'ரேங்க்' பட்டியலில் முன்னணி பெற வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு, முதல் மூன்று இடங்களை, வணிகவியல் பிரிவு மாணவர்களே பெற்றனர்.அதேபோல், அதிக மதிப்பெண் எடுப்பதிலும், வணிகவியல் பிரிவு மாணவர்கள் சாதிக்க வாய்ப்புஉள்ளது. அதனால், கலை கல்லுாரிகளில் பி.காம்., படிப்புக்கு இடம் கிடைப்பதில் கடும் போட்டி ஏற்படும்.

கூடுதல் இடங்களை தயார்படுத்த வேண்டும்:இதுகுறித்து, பேராசிரியர் சிலர் கூறியதாவது:
கடந்த ஆண்டு பி.காம்., 'சீட்'டுக்கு அதிக போட்டி ஏற்பட்டது. ஆனால், கல்லுாரிகளில் இடம் தான் கிடைக்கவில்லை. சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை போன்ற பல்கலைகளின் அனுமதி பெற்று, கூடுதலாக, 20 சதவீதம் வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்த அனுமதி வர தாமதமானதால், தகுதியான பல மாணவர்கள் அதிக பணம் கொடுத்து, சுயநிதி கல்லுாரிகளில் சேர்ந்தனர். எனவே, இந்த ஆண்டு கல்லுாரி நிர்வாகங்கள்,
முன்கூட்டியே பல்கலைகளின் அனுமதி பெற்று, கூடுதல் இடங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

காரை கழுவினால் அபராதம்: தண்ணீர் பஞ்சத்தால் முடிவு

காரை கழுவினால் அபராதம்: தண்ணீர் பஞ்சத்தால் முடிவு

DINAMALAR
சண்டிகர்:யூனியன் பிரதேசமான சண்டிகரில், கடுமையான கோடை காரணமாக தண்ணீருக்கு பற்றாக்குறை நிலவுகிறது. தண்ணீரை சேமிக்க, மாநகராட்சி
நிர்வாகம், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வீடுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கும் நேரமான, காலை 5:30 மணியில் இருந்து, 8:30 மணி வரை, நீரை வீணாக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அந்த சமயத்தில், கார்களை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது; மீறுபவர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏப்., 15 முதல், ஜூன் 30ம் தேதி வரை, இந்த தடை அமலில் இருக்கும். தொடர்ந்து தண்ணீரை வீணாக்குவது தெரிந்தால், அவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கைரேகை அழிந்தோருக்கு பென்ஷன் இல்லை

கைரேகை அழிந்தோருக்கு பென்ஷன் இல்லை

DINAMALAR

சிவகங்கை;கைரேகை அழிந்த ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஓய்வூதியர்களுக்கு மாவட்ட கருவூலம், சார் கருவூலங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நேர்காணல் நடக்கிறது. பங்கேற்க செல்வோர் ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் இதுவரை ஆதார் எண், வருமான வரி கணக்கு எண், ரேஷன்கார்டு சமர்ப்பிக்காதோர், அவற்றின் நகல்களை ஓய்வூதிய கொடுவை ஆணை எண்ணை குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல் நேரில் வர இயலாதோர், ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் எண், வருமான வரி கணக்கு எண், ரேஷன்கார்டு ஆகியவற்றின் நகல்களுடன் வாழ்வுரிமைச் சான்றை இணைத்து கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும் என, கருவூல கணக்குத்துறை தெரிவித்துள்ளது.இதில் 70 வயதை கடந்த ஓய்வூதியர்கள் சிலரது கைகளில் ரேகை அழிந்துவிட்டன. மேலும் ஆதார் எண் எடுப்போர் பல ஆண்டுகளாக ஒரே இயந்திரத்தை பயன்படுத்துவதால், தெளிவான கைரேகை இருந்தால் மட்டுமே பதிவாகிறது. இதனால் ஓய்வூதியர்களில் சிலர் ஆதார் அட்டை எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

தற்போது ஆதார் அட்டை இல்லாதோரை நேர்காணல் நடத்தாமல் கருவூல கணக்குத்துறை
அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் ஓய்வூதியர்கள் பென்சன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆதார் எண் கொடுக்காத சிலருக்கு மார்ச் மாத பென்ஷனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தவிக்கின்றனர். கருவூல கணக்குத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஆதார் அட்டை எண் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்,'' என்றார்.

விரைவில் பேஸ்புக் வழியே இலவச பணப்பரிமாற்றம்

விரைவில் பேஸ்புக் வழியே இலவச பணப்பரிமாற்றம்

நியூயார்க் : சமூக வலைதளமான பேஸ்புக் தனது மெசஞ்சர் ஆப் வழியாக இலவச பணிப்பரிமாற்றத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு பரிமாற்றம் செய்யும் இரு நபர்களிடமும் டெபிட் கார்டு வசதி இருந்தால் போதுமானது. தற்போது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஏற்க முடியவில்லை!

ஏற்க முடியவில்லை!
By ஆசிரியர்
First Published : 13 April 2016 01:54 AM IST

எம்பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு (என்.இ.இ.டி.) நடத்துவதற்கு, 2013-இல் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான மூன்று பேர் அமர்வு விதித்திருந்த தடையை இப்போது உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. இந்தப் பிரச்னையை தொடக்கத்திலிருந்து மறுவிசாரணை செய்யவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனில் தவே உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆணை பிறப்பித்திருக்கிறது.
 அதாவது, மறுவிசாரணை நடந்து தீர்ப்பு வரும்வரை தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொது நுழைவுத் தேர்வு நடத்தும் அதிகாரம் இந்திய மருத்துவக் குழுமத்துக்கு (எம்.சி.ஐ.) கிடையாது என்று ஏற்கெனவே 2013-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை இதன்மூலம் இப்போது உச்சநீதிமன்றம் விலக்கிக்கொண்டுள்ளது.
 மருத்துவத்துக்கான பொது நுழைவுத் தேர்வைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட பல மாநில முதல்வர்கள் எதிர்த்தனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்துவந்தன. இந்நிலையில், மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் குழுமம் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவத்துக்கான பொதுநுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துள்ளது. இதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள முதன்மைக் காரணம்: தனியார் கல்லூரிகளில் பெரும் பணத்தை நன்கொடையாகச் செலுத்தி, தகுதியில்லாத மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதால், மருத்துவத் துறை பாதிக்கப்படுகிறது என்பதுதான்.
 நீதிமன்றத்தின் கருத்து உண்மையே. அதேவேளையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடுவதுபோல, ஏழைகளும், கிராமப்புற மாணவர்களும் வாய்ப்புகள் கிடைக்காமல் பின்தள்ளப்படுவார்கள் என்பதும் உண்மை என்பதால், இந்தப் பிரச்னையில் தெளிவான முடிவு எட்டப்படாமல் இருக்கிறது.
 இந்தியாவில் எம்.சி.ஐ. அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகள் 381 உள்ளன. இவற்றில் 188 தனியார் கல்லூரிகள். இக்கல்லூரிகள் பெரும்பாலும் 50% இடங்களைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்கின்றன. அந்த வகையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் சுமார் 20,000 மாணவர்களைத் தங்கள் விருப்பம்போல சேர்த்துக்கொள்கின்றன. குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.
 மேலும் சில கல்லூரிகள், உதாரணமாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி போன்றவை மத்திய தொகுப்புக்கு இடம் தர மறுத்தல் அல்லது குறைவான இடங்களையே ஒதுக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதோடு, மாணவர் சேர்க்கையில் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ளும் போக்கும் நடைமுறையில் காணப்பட்டது.
 தமிழகத்தில் உள்ள 39 மருத்துவக் கல்லூரிகளில் 20 தனியார் மருத்துவக் கல்லூரிகள். இந்தக் கல்லூரிகளில் அதிக மதிப்பெண் பெற்று, "கட்-ஆஃப்' 197 வரை பெறும் மாணவர்கள், தனியார் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் சேர்க்கப்படுகிறார்கள் என்றாலும், இந்தக் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டிலும் மாணவர்களைச் சேர்த்து வருகின்றன. இவை நன்கொடை இல்லாமல் நடப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை. நன்கொடை தரும் வசதி படைத்தவர்கள் மருத்துவர்களாகி, மருத்துவமனை நடத்துபவர்களாகவும் மாறும்போது, மருத்துவம் முழுக்க முழுக்க வணிகமாகிவிடுகிறது.
 இருப்பினும், தேசிய மருத்துவக் கல்விக்கான தேசிய பொதுத் தேர்வு நடத்தப்படுமேயானால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவது மிகமிக உறுதி. ஏனென்றால், மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேசிய பாடநூல் திட்டத்தின்படியே வினாக்களைத் தொகுப்பார்கள். தற்போது சமச்சீர் கல்வி முறையில், சற்று எளிமைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தில் பயிலும் தமிழக மாணவர்களால் சரியாக விடை எழுத முடியாது.
 சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும்கூட தமிழகத்திலிருந்து அதிகளவு வெற்றி பெறுவதில்லை. இந்நிலையில், தமிழகத்தில் அரசு மேனிலைப் பள்ளி மற்றும் தனியார் மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களால் இந்தப் பொது நுழைவுத் தேர்வில் எந்த அளவுக்கு வெற்றிபெற முடியும் எனத் தெரியவில்லை.
 அதிக மதிப்பெண் பெற்று, "கட்-ஆஃப்' 198 பெற்ற மாணவர்கள் கலந்தாய்வின் மூலம் தமிழ்நாட்டின் அரசுக் கல்லூரிகளில் இடம் பெற்று எம்.பி.பி.எஸ். படிப்பைத் தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம்பெறுவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவது மிகமிக அரிதாகவே இருக்கும்.
 மருத்துவக் கல்வி பயில கடும் போட்டி நிலவுகிறது. 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் முன்பாக நடத்தப்பட்ட மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் 6.58 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அந்த அளவுக்குப் போட்டி உள்ளது. இந்தப் போட்டியில் தமிழக மாணவர்கள், குறிப்பாக சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் எத்தனைப் பேர் பொது நுழைவுத் தேர்வு எழுதுகிறார்கள், எத்தனை பேர் வெற்றி பெறுகிறார்கள் என்பதைக் கணக்கிட்டால், தமிழகத்தின் பாடத்திட்டம் செழுமையானதுதானா, மாற்றம் தேவைப்படுகிறதா என்பதைத் தீர்மானிக்க உதவும்.
 மருத்துவம் மட்டுமன்றி பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதத் தகுதி மதிப்பெண் 75% (எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு 65%) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றவர்களை வரிசைப்படுத்துவதில் (ரேங்கிங்) பள்ளித்தேர்வு மதிப்பெண்களுக்காக கொடுக்கப்பட்டுவந்த 40% "வெயிட்டேஜ்' கிடையாது என்றும் அறிவித்துவிட்டார்கள்.
 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு என்ற பெயரில் பணம் வாங்கிச் சேர்க்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது மகிழ்ச்சியே என்றாலும், மருத்துவம், பொறியியல் இரண்டிலுமே அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்கள் அதிக இடங்களைப் பெறும் வாய்ப்பில்லை என்பதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அலட்சியத்தால் விளைந்த அசம்பாவிதம்!

அலட்சியத்தால் விளைந்த அசம்பாவிதம்!

THE HINDU
பாதுகாப்பு விஷயத்தில் அசட்டையாக இருப்பதிலும், அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்குப் பொறுப்பேற்க மறுப்பதிலும் புகழ்பெற்று விளங்குபவர்கள் இந்தியர்கள். அப்படிப்பட்டவர்களையே உலுக்கி எடுத்துவிட்டது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள புட்டிங்கல் தேவி கோயிலில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை நடந்த வெடிவிபத்து. வாண வேடிக்கை நிகழ்ச்சியின்போது, வானை நோக்கிச் செல்ல வேண்டிய வெடி ஒன்று தரையிலேயே வெடித்துச் சிதறியிருக்கிறது. அதன் தீப்பொறிகள், வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் விழுந்ததால் அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறின. இந்தக் கொடூர விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

அலட்சியமும், அடுத்தவர்களின் பாதுகாப்பைப் பற்றிய அக்கறையின்மையும்தான் இந்த விபத்துக்கு முக்கியக் காரணங்களாக இருந்திருக்கின்றன. வாண வேடிக்கை நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்திருந்தும், அதை மீறி வாண வேடிக்கை நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் செயல் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மாவட்ட நிர்வாகமே அனுமதி மறுத்திருந்த நிலையில், அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பில் இருந்த காவல் துறை என்ன செய்துகொண்டிருந்தது என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. இரவு 10 மணிக்கு மேல் வெடி வெடிக்கக் கூடாது என்று விதிமுறை இருந்தும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிகாலை 3.30 மணி வரை வாண வேடிக்கை நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

கேரளாவில் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், இந்தச் சம்பவத்தை வைத்து ஆதாயம் தேட அரசியல் கட்சிகள் முயலக் கூடாது. இந்தச் சம்பவம் தொடர்பாக, புட்டிங்கல் கோயில் நிர்வாகத்தினர், வாண வேடிக்கை நிகழ்ச்சியை நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பான நீதி விசாரணைக்கும் கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது ஏற்படும் விபத்துகள் தொடர்பாக ஆராய, கேரள மாநிலத்தின் வருவாய்த் துறையும், பேரிடர் மேலாண்மைத் துறையும் இணைந்து ஒரு ஆய்வு நிறுவனத்தை நடத்திவருகின்றன. இதன் மூலம், விழா ஏற்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளையும் உருவாக்கியிருக்கிறது கேரள அரசு. ஆனால், இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதுதான் சோகம்.

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை, தொலைதூரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வது போன்ற விஷயங்களில் ஒருபோதும் சமரசம் கூடாது. கொல்லத்தில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு எடுத்திருக்கும் உடனடி நிவாரண நடவடிக்கைகள், சம்பவ இடத்துக்கு உடனடியாகப் பாதுகாப்புப் படைகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் விரைந்தது போன்றவை இதுபோன்ற அசம்பாவிதங்களின்போது மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கின்றன.

கேரளாவில் திருச்சூர் பூரம் உட்பட 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கும் நிலையில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாதவண்ணம் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அம்மாநில அரசுக்கு இருக்கிறது. அண்டை மாநிலத்தில் நடந்திருக்கும் இந்த விபத்து, நமக்கும் ஒரு பாடம் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில், அரசியல் நிகழ்ச்சிகள், மத வழிபாட்டு நிகழ்ச்சிகளின்போது பாதுகாப்பு விஷயங்களில் உரிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டிய பொறுப்பு எல்லா அரசுக்கும் இருக்கிறது. ஏனெனில், மனித உயிர்கள் விலைமதிக்க முடியாதவை!

NEWS TODAY 08.06.2026