Thursday, April 14, 2016

ஏற்க முடியவில்லை!

ஏற்க முடியவில்லை!
By ஆசிரியர்
First Published : 13 April 2016 01:54 AM IST

எம்பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு (என்.இ.இ.டி.) நடத்துவதற்கு, 2013-இல் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான மூன்று பேர் அமர்வு விதித்திருந்த தடையை இப்போது உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. இந்தப் பிரச்னையை தொடக்கத்திலிருந்து மறுவிசாரணை செய்யவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனில் தவே உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆணை பிறப்பித்திருக்கிறது.
 அதாவது, மறுவிசாரணை நடந்து தீர்ப்பு வரும்வரை தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொது நுழைவுத் தேர்வு நடத்தும் அதிகாரம் இந்திய மருத்துவக் குழுமத்துக்கு (எம்.சி.ஐ.) கிடையாது என்று ஏற்கெனவே 2013-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை இதன்மூலம் இப்போது உச்சநீதிமன்றம் விலக்கிக்கொண்டுள்ளது.
 மருத்துவத்துக்கான பொது நுழைவுத் தேர்வைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட பல மாநில முதல்வர்கள் எதிர்த்தனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்துவந்தன. இந்நிலையில், மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் குழுமம் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவத்துக்கான பொதுநுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துள்ளது. இதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள முதன்மைக் காரணம்: தனியார் கல்லூரிகளில் பெரும் பணத்தை நன்கொடையாகச் செலுத்தி, தகுதியில்லாத மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதால், மருத்துவத் துறை பாதிக்கப்படுகிறது என்பதுதான்.
 நீதிமன்றத்தின் கருத்து உண்மையே. அதேவேளையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடுவதுபோல, ஏழைகளும், கிராமப்புற மாணவர்களும் வாய்ப்புகள் கிடைக்காமல் பின்தள்ளப்படுவார்கள் என்பதும் உண்மை என்பதால், இந்தப் பிரச்னையில் தெளிவான முடிவு எட்டப்படாமல் இருக்கிறது.
 இந்தியாவில் எம்.சி.ஐ. அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகள் 381 உள்ளன. இவற்றில் 188 தனியார் கல்லூரிகள். இக்கல்லூரிகள் பெரும்பாலும் 50% இடங்களைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்கின்றன. அந்த வகையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் சுமார் 20,000 மாணவர்களைத் தங்கள் விருப்பம்போல சேர்த்துக்கொள்கின்றன. குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.
 மேலும் சில கல்லூரிகள், உதாரணமாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி போன்றவை மத்திய தொகுப்புக்கு இடம் தர மறுத்தல் அல்லது குறைவான இடங்களையே ஒதுக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதோடு, மாணவர் சேர்க்கையில் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ளும் போக்கும் நடைமுறையில் காணப்பட்டது.
 தமிழகத்தில் உள்ள 39 மருத்துவக் கல்லூரிகளில் 20 தனியார் மருத்துவக் கல்லூரிகள். இந்தக் கல்லூரிகளில் அதிக மதிப்பெண் பெற்று, "கட்-ஆஃப்' 197 வரை பெறும் மாணவர்கள், தனியார் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் சேர்க்கப்படுகிறார்கள் என்றாலும், இந்தக் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டிலும் மாணவர்களைச் சேர்த்து வருகின்றன. இவை நன்கொடை இல்லாமல் நடப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை. நன்கொடை தரும் வசதி படைத்தவர்கள் மருத்துவர்களாகி, மருத்துவமனை நடத்துபவர்களாகவும் மாறும்போது, மருத்துவம் முழுக்க முழுக்க வணிகமாகிவிடுகிறது.
 இருப்பினும், தேசிய மருத்துவக் கல்விக்கான தேசிய பொதுத் தேர்வு நடத்தப்படுமேயானால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவது மிகமிக உறுதி. ஏனென்றால், மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேசிய பாடநூல் திட்டத்தின்படியே வினாக்களைத் தொகுப்பார்கள். தற்போது சமச்சீர் கல்வி முறையில், சற்று எளிமைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தில் பயிலும் தமிழக மாணவர்களால் சரியாக விடை எழுத முடியாது.
 சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும்கூட தமிழகத்திலிருந்து அதிகளவு வெற்றி பெறுவதில்லை. இந்நிலையில், தமிழகத்தில் அரசு மேனிலைப் பள்ளி மற்றும் தனியார் மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களால் இந்தப் பொது நுழைவுத் தேர்வில் எந்த அளவுக்கு வெற்றிபெற முடியும் எனத் தெரியவில்லை.
 அதிக மதிப்பெண் பெற்று, "கட்-ஆஃப்' 198 பெற்ற மாணவர்கள் கலந்தாய்வின் மூலம் தமிழ்நாட்டின் அரசுக் கல்லூரிகளில் இடம் பெற்று எம்.பி.பி.எஸ். படிப்பைத் தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம்பெறுவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவது மிகமிக அரிதாகவே இருக்கும்.
 மருத்துவக் கல்வி பயில கடும் போட்டி நிலவுகிறது. 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் முன்பாக நடத்தப்பட்ட மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் 6.58 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அந்த அளவுக்குப் போட்டி உள்ளது. இந்தப் போட்டியில் தமிழக மாணவர்கள், குறிப்பாக சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் எத்தனைப் பேர் பொது நுழைவுத் தேர்வு எழுதுகிறார்கள், எத்தனை பேர் வெற்றி பெறுகிறார்கள் என்பதைக் கணக்கிட்டால், தமிழகத்தின் பாடத்திட்டம் செழுமையானதுதானா, மாற்றம் தேவைப்படுகிறதா என்பதைத் தீர்மானிக்க உதவும்.
 மருத்துவம் மட்டுமன்றி பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதத் தகுதி மதிப்பெண் 75% (எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு 65%) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றவர்களை வரிசைப்படுத்துவதில் (ரேங்கிங்) பள்ளித்தேர்வு மதிப்பெண்களுக்காக கொடுக்கப்பட்டுவந்த 40% "வெயிட்டேஜ்' கிடையாது என்றும் அறிவித்துவிட்டார்கள்.
 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு என்ற பெயரில் பணம் வாங்கிச் சேர்க்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது மகிழ்ச்சியே என்றாலும், மருத்துவம், பொறியியல் இரண்டிலுமே அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்கள் அதிக இடங்களைப் பெறும் வாய்ப்பில்லை என்பதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...