Thursday, April 28, 2016

ஆயூஸ்' டாக்டர்களை மிரட்டி ஓடுக்கியது அரசு


தமிழக சுகாதாரத் துறையில், அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறுகிறோம். ஆனால்,
உண்மையில் அத்தகைய வளர்ச்சி கிடைத்துள்ளதா, டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்க
முடிகிறதா என்றால் இல்லை.

இந்திய பாரம்பரிய மருத்துவ சிகிச்சையை மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில், மத்திய அரசின், தேசிய ஊரக சுகாதார திட்டமான, என்.ஆர்.எச்.எம்., நிதி உதவியில், தமிழகம் முழுவதும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும், 2009ல், சிறப்பு பிரிவு துவக்கப்பட்டது. 
இதற்காக, சித்தா, ஆயுர்வேதம், யோகா உள்ளிட்ட, 475, 'ஆயுஷ்' டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர். உதவியாக மருந்தாளுனர், உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டனர். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தனிப் பிரிவு துவக்கப்பட்டது. 'வாரத்தில், மூன்று நாள் வேலை, தினக் கூலி, 1,000 ரூபாய்' என்ற நிபந்தனையுடன் வேலை செய்கின்றனர். இது வாரத்தில், மூன்று நாட்கள் என்பது, ஆறு நாட்களாக மாற்றப்பட்டது.

இத்திட்டத்தில், ஆயுஷ் டாக்டர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய்; அலோபதி டாக்டர்களுக்கு, 45 ஆயிரம் ரூபாய் என, சம்பள விகிதத்திலும் குளறுபடி உள்ளது. சம்பளம் குறைவு என, பல டாக்டர்கள் ஓடி விட்டனர். மீதம், 200 பெண்கள் உட்பட, 375 பேர் வேலை செய்கின்றனர். காலி இடங்களுக்கு ஏற்ப, இந்த திட்டத்தில் பணியாற்றிய, மருந்தாளுனர்கள், யோகா டாக்டர்கள், சுகாதாரத் துறைக்கு மாற்றப்பட்டு, நிரந்தரம் செய்யப்பட்டனர்.

ஆனால், சித்தா, ஆயுர்வேதம் பிரிவு காலியிடங்களை, அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பினர்; என்.ஆர்.எச்.எம்., என்ற, தேசிய ஊரக சுகாதாரத் திட்ட டாக்டர்களை, அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது.தற்போது, மருத்துவமனை திறப்பது, சுத்தம் செய்வது, சிகிச்சை அளிப்பது, மருந்து வழங்குவது என, அனைத்து வேலைகளையும், டாக்டர்களே செய்கின்றனர். போதிய வசதிகளை செய்து கொடுங்கள் என்றால், அரசு காதில் வாங்கவில்லை. ஆனால், நிலவேம்பு கஷாயம் கொடுக்க மட்டும், நேரம், காலம் இன்றி வேலை வாங்கினர். விடுமுறை நாட்களிலும், ஆர்வத்துடன் வேலை செய்தும், சம்பளம் தரவில்லை.

தி.மு.க., ஆட்சிக் காலத்தில் பணியில் சேர்க்கப்பட்டதால், அ.தி.மு.க., அரசு, இந்த டாக்டர்களை புறக்கணித்து வருகிறது. ஏழு ஆண்டுகளாக, தினக்கூலிகளாக உள்ளனர். அரசு ஊழியர்கள், ஐந்து ஆண்டுகளாக போராடியும் கண்டுகொள்ளாதது போல், ஆயுஷ் டாக்டர்கள் பிரச்னையையும், அரசு கண்டு கொள்ளவில்லை. பெண் டாக்டர்களுக்கு, மகப்பேறு விடுப்பு கூட கிடையாது.
நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம் அறிவித்த டாக்டர்களை, ஆட்சியாளர்கள் நெருக்கடியால், இயக்குனரக அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் போனிலும், நேரிலும் மிரட்டினர். சங்க மாநில தலைவரான எனக்கே, மிரட்டல் விடுக்கப்பட்டது. நெருக்கடியை சமாளிக்க முடியாமல், போராட்டத்தை தள்ளி வைத்தோம்.

மருத்துவ மையங்களுக்கு நீராவி குளியல் இயந்திரம், ஆயில் மசாஜ் இயந்திரம், பயிற்சி இயந்திரங்களை வாங்கி குவித்துள்ளனர். இவற்றை இயக்க ஆட்கள் இல்லை. இன்னும் வெட்கக்கேடு என்னவென்றால், இந்த திட்டத்தின் கீழ் செயல்படும், ஓமியோபதி மருத்துவமனைகளுக்கு, இரண்டு ஆண்டுகளாக மாத்திரைகளை கூட அரசு தரவில்லை; அப்புறம் எப்படி, சிகிச்சை அளிக்க முடியும்?மாவட்ட சுகாதார மருத்துவமனைகளில், கெஞ்சாத குறையாக கடன் வாங்கி, சிகிச்சைக்கு வந்தோருக்கு மருந்து கொடுத்து, டாக்டர்கள் சமாளித்தனர். கடைசி நேரத்தில், அரசு கொடுத்த மருந்துகள் கூட, கடன் வாங்கியதைத் திருப்பிக் கொடுக்கும் அளவில் கூட இல்லை. இந்த லட்சணத்தில் தான், பாரம்பரிய மருத்துவமனைகள் செயல்பட்டன. இனி வரும் புதிய அரசாவது, இதுபோன்ற பல சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும்.

டாக்டர் எஸ்.செல்லையா
மாநில தலைவர், ஆயுஷ் டாக்டர்கள் சங்கம் - என்.ஆர்.எச்.எம்., தமிழ்நாடு.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...