Thursday, May 19, 2016

முதல்வர் பதவி ஏற்பு விழா பல்கலை அரங்கு தயார்


DINAMALAR

விரைவில், முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளதால், நேரு விளையாட்டு அரங்கம், சென்னை பல்கலை மண்டபத்திற்கு, தடையில்லா மின்சாரம் வழங்கும் பணிகளை, மின் வாரியம் முடுக்கி விட்டு உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று 
எண்ணப்படுகின்றன. ஆட்சியை பிடிப்பது யார் என்பது, மதியத்திற்குள் தெரியும். யார் ஆட்சியை பிடித்தாலும், ஒரு வாரத்திற்குள், புதிய முதல்வர் பொறுப்பேற்பார்.
தி.மு.க., ஆட்சியை பிடித்தால், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கம்; அ.தி.மு.க., ஆட்சியை பிடித்தால், சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா மண்டபம் அல்லது, நந்தம்பாக்கத்தில் உள்ளவர்த்தக மையத்தில், முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்க இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழையால், மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால், பல இடங்களில், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்கும் என, எதிர்பார்க்கப்படும் நேரு உள் விளையாட்டு அரங்கம், வர்த்தக மையம், சென்னை பல்கலை மண்டபத்திற்கு, தடையில்லா மல் மின்சாரம் வழங்குவதற்கான பணிகளில், மின் வாரியம் ஈடுபட்டுள்ளது. அதே போல், அந்த இடங்களில், விழா ஏற்பாடிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

11.31 ...19.05.2016 TN ELECTION LEADING INFORMATION


ஜெயலலிதாவுக்கு காத்திருக்கும் சவால்கள்..

Return to frontpage
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தற்போதைய‌ சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு என வருகின்ற நாட்களில் அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கின்றன. இதனை ஜெயலலிதா எவ்வாறு எதிர்கொள்வார் என தமிழகம் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கூட்டணியையும் எதிர்பார்க்காமல் சிறிய கட்சிகளின் துணையுடன் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலே ஜெயலலிதா களமிறங்கினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது இருந்த நிலை மாறி, தற்போது தமிழக அரசியல் களம் வேறுவிதமாக காட்சியளிக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக வந்துள்ளன. முதல்வர் போட்டியில் ஜெயலலிதாவை முந்தி விட்டார் கருணாநிதி என ஊட கங்கள் தெரிவித்து வ‌ருகின்றன. இந்நிலையில் நாளை வெளியாகும் தேர்தல் முடிவை ஜெயலலிதா பெரிதும் எதிர்பார்த்து கொண்டி ருக்கிறார்.

ஒருவேளை தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தால், ஆட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வியூகங்கள் அமைத்து வருகிறார். அதேபோல முடிவுகள் பாதகமாக வந்தால் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், களையெடுக்க வேண்டிய தலைகள் குறித்து திட்டங்களை தீட்டி வருகிறார் என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தீர்ப்பு எப்படி வரும்?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளைவிட, உச்சநீதிமன்றத் தில் நிலுவையில் இருக்கும் ஜெய லலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எப்படி வரும் என்று தான் தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. ஏனென்றால் ஊழல் வழக்கில் வெளியாகப் போகும் இந்த தீர்ப்புதான் உண்மையில் ஜெயலலி தாவின் அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இவ்வழக்கில் கர்நாடக அரசு மற்றும் ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. எனவே உச்சநீதிமன்றம் இவ்வழக்கை கோடை விடுமுறை காலத்திலே தீர்ப்பை அறிவிக்க முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக வருகிற ஜூன் 1-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து, அன்றைய தினம் அரசு தரப்பு, குற்றம்சாட்டப்பட்டோர் இறுதி தொகுப்பு வாதத்தை முடிக்க காலக்கெடு விதித்துள்ளது.

ஒருவேளை வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் அன்றைய தினமே முடிவடைந்தால், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைக்க வாய்ப்பு இருக்கிறது. மாறாக, கர்நாடக அரசு தரப்பிலோ, ஜெயலலிதா தரப்பிலோ கால அவகாசம் கோரினால் முடிந்தவரை வழக்கை விரைவாக முடிக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே வழக்கின் ஆவணங்களை அலசி ஆராய்ந்துள்ள உச்சநீதி மன்ற நீதிபதிகள், தீர்ப்பை அறிவிக்க பெரிதாக கால அவகாசம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிபதி குன்ஹாவின் தண்டனை தீர்ப்பை உறுதி செய்யுமா அல்லது நீதிபதி குமாரசாமியின் விடுதலை தீர்ப்பை மீண்டும் அறிவிக்குமா என அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் டெல்லியிலே தங்கி இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நிறைய குரல்கள் எழுந்துள்ளன. கடந்த முறை தீர்ப்பு வெளியானபோது ஆச்சார்யாவுக்கு மிரட்டல்கள் வந்ததால், இம்முறை தீர்ப்பு வெளியாகும்போது கூடுதல் பாது காப்பு கோர ஆச்சார்யா முடிவெடுத் துள்ளார். குறிப்பாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்னம் ஆச்சார் யாவுக்கு ஆதரவாக களமிறங்கி யுள்ளார். இந்நிலையில் வழக் கறிஞர் ரத்னம் சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ‘‘நீதியை நிலைநாட்ட துணை புரியும் அரசு வழக் கறிஞர் ஆச்சார்யாவுக்கு இடை யூறாக இருக்க கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜ ராகும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’என முறை யிட்டு இருந்தார். இம்மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஆனால் வழக் கறிஞர் ரத்னம், ஆச்சார்யாவுக்கு எதிராக வழக்கு தொடுத்த தாக ஊடகங்களில் தவறான‌ செய்தி வெளியானது.

இது தொடர்பாக ஆச்சார்யா கூறுகையில்,

‘‘வழக்கறிஞர் ரத்னம் என்னை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தமிழகத்தில் பலர் என்னை எதிர்க்கும் நிலையில் வழக்கறிஞர் ரத்னம் எனக்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தி ருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நீதியை நிலைநாட்ட துடிக்கும் ரத்னம் போன்றவர்களின் ஆதரவு என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது’’ என்றார்.

தமிழக தேர்தல் முடிவுகள், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஆகிய வற்றுக்கு இடையில் வழக்கறிஞர் ரத்னத்தின் மனு ஜெயலலிதாவுக்கு சவாலாக மாறியுள்ளது. அரசு வழக்கறிஞரை மிரட்டிய விவகாரத்தை உச்சநீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. எனவே இந்த மனு தீர்ப்பின் போக்கை மாற்றவும் வாய்ப்பு இருப்பதாக‌ நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன‌.

தேர்தல் முடிவுகள் 10 மணி நிலவரம்: அதிமுக முன்னிலை

Return to frontpage

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி அதிமுக கூட்டணி 118 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 81 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கன்றன.

ஜெயலலிதா முன்னிலை:

சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி, உளுந்தூர்பேட்டையில் மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

8 மணிக்கு தொடங்கியது:

தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அதிகளவு பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 65 ஆயிரத்து 486 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

தமிழகம் முழுவதும் இறுதி நிலவரப்படி 232 தொகுதிகளிலும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Wednesday, May 18, 2016

மார்க்கும் மார்க்கமும்

Return to frontpage

மார்க்கும் மார்க்கமும்



டாக்டர் ராமானுஜம்


கொளுத்தும் கோடையின் வெப்பத்தைவிட கொடுமையானது காத்திருப்பு. தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்களைப் போன்றே தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களின் தவிப்பும். “நமக்கு எவ்வளவு மார்க் கிடைக்குமோ” என்று கலக்கத்துடன் காத்திருந்தவர்கள் ஒரு பக்கம். முதலிடம் பெற்றால் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு எப்படிப் பேட்டி கொடுக்கலாம் என்ற தயாரிப்போடு இருந்தவர்கள் இன்னொரு பக்கம். அத்தனை காத்திருப்புக்கும் முடிவு வந்துவிட்டது.

மதிப்பெண் வாழ்க்கை இல்லை

நம்முடைய கல்வி முறையில் மதிப்பெண்களுக்கே மதிப்பு அதிகம் இருப்பதால், மார்க்குகளே நாம் போகப் போகும் மார்க்கத்தை நிர்ணயிப்பதாக அமைகிறது. ஒருவரது உள்ளார்ந்த திறமையும் ஆர்வமும் எந்தத் துறையின்பால் இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கல்விக் கூடங்களை ஒரே மாதிரியான இயந்திரங்களைச் செய்யும் தொழிற்கூடங்கள்போல் கருதும் மனநிலைதான் நிலவுகிறது.

பொதுத்தேர்வு முடிவுகள் வந்தாச்சு. மட்டற்ற மகிழ்ச்சியில் வானத்தையே எட்டிப் பிடித்த மனநிலையில் சிலர் இருப்பார்கள். சிலருக்கு உலகமே இருண்டு பாதாளத்துக்குள் விழுந்ததுபோல இருக்கலாம். இரண்டு வகையான உணர்வுகளுமே மிகையானவை. தேவையற்றவையும்கூட!

வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் வாழ்க்கைத் தேர்வில் தோல்வி அடைந்திருப்பதை நாம் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். அதேபோல் அதிக மதிப்பெண்கள் பெறாமல் தோல்வியடைந்த பலரும் வாழ்க்கையில் வெற்றி பெற்று மதிப்போடு வாழ்வதைக் காண்கிறோம்.

முடிவு உங்கள் கையில்

‘மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’ என்று சொல்வதைப்போல் படித்தால் மருத்துவம், பொறியியல்தான்; இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் மனப்பான்மை குறுகிய பார்வை.

இவற்றைத் தாண்டி வேறு எதையும் பார்க்கவிடாத குறுகிய குகைப் பார்வையை Tunnel Vision என்பார்கள். இந்தக் குகைப் பார்வை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்பட முக்கியக் காரணம் சமூகம் பொதுபுத்தியில் திணித்திருக்கும் மதிப்பீடுகள்தான்.

நமக்கு என்ன வேண்டும், எது நன்றாக வரும் என்பதையெல்லாம் நினைக்கையில் சமூகம் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதற்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதுதான் சிக்கல்.

முதன்முதலாகப் பத்திரிகை நிருபர் வேலைக்குச் சேர்ந்த ஒருவரைத் துறைமுகத்திலிருந்து கப்பல் கிளம்புவதைப் பற்றிச் செய்தி சேகரிக்க அனுப்பினார்களாம். காலையில் சென்ற அவரிடமிருந்து அன்று இரவுவரை எந்தத் தகவலும் இல்லையாம். நடு இரவில் அலுத்துக் களைத்த வந்த அவரிடம் செய்தி எங்கே என்று பத்திரிகை ஆசிரியர் கேட்டதற்கு ‘போங்க சார்! கப்பல் கவிழ்ந்து பலர் இறந்துவிட்டார்கள்’ என்று பதில் சொன்னாராம். ‘அடப்பாவி இதுதானே நாளைய தலைப்புச் செய்தி! இதைத்தானே நீ உடனடியாகச் சொல்லியிருக்கணும்!’ என்றாராம் பத்திரிகை ஆசிரியர். இதுபோல எது முக்கியமோ அதைச் சுயமாகத் தீர்மானிக்காமல் போடப்பட்ட பாதையில் குறுகிய பார்வையோடு இருப்பதுதான் சிக்கல்.

ஆராய்ச்சிகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் தேவையான மனித ஆற்றல் இல்லாமல் பல்வேறு துறைகள் இருக்கின்றன. சற்று கவனமாகக் கண்காணித்தால் போதும். வாய்ப்புகள் நம் வசப்படும்.

எது கவுரவம்?

அப்துல்கலாமைப் பற்றிச் சொல்லாமல் சுயமுன்னேற்றக் கட்டுரை எழுத முடியுமா? அவர் மிகப் பெரும் கல்வி நிலையத்தில் கற்றவர் அல்ல. ஆனால் தமது துறைமீது கொண்ட ஆர்வமே அவரை ராக்கெட் தொழில்நுட்ப வல்லுநராக்கியது. இன்னும் கணினி மற்றும் மென்பொருள் துறையின் பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க் போன்ற வெற்றியாளர்களது கதைகளை எல்லாம் எடுத்துப் பார்த்தால் பலரும் முறையான பள்ளிப் படிப்வைக்கூடப் படித்திருக்கவில்லை.

இது போன்ற உதாரணங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் மதிப்பெண் பின்னால் ஓடும் மனப்பான்மைக்குக் காரணம் நல்ல மதிப்பெண் எடுப்பது கார், வீடு வாங்குவது போல் ஒரு சமூகக் கவுரவமாகக் கருதப்படுவதால்தான்.

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் வெற்றிபெறத் தேவை, முதலில் ஆர்வம். மகாபாரதத்தில் தர்மரிடம் ஒரு யக்ஷன் பல கேள்விகளைக் கேட்பான். அதில் ஒன்று “யார் மிகச் சிறந்த ஆசிரியர்?” என்பதாகும். அதற்குத் தர்மர் “ஆர்வமே மிகச் சிறந்த ஆசிரியர்” என்றார். “கல்வி என்பது விஷயங்களைத் தெரிந்து கொள்வதல்ல. எப்படிச் சிந்திக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தருவதே” என்பது ஐன்ஸ்டீனின் கருத்து. எனவே, புரிந்தோ புரியாமலோ மனப்பாடம் செய்து பெறும் மதிப்பெண் சான்றிதழ் வெறும் அச்சடித்த காகிதம்தான்.

அதைத் தாண்டி நமக்கு நன்கு வரக்கூடிய, நமக்கு மிகவும் பிடித்த விஷயத்தைச் செய்வதே வெற்றி. ஆனால் நாமோ பொருள்ரீதியான விஷயங்களைப் பெறுவதே வெற்றி என்ற சமூக அழுத்தங்களுக்கு ஆளாகிறோம். மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு மதிப்பெண்கள் பின்னால் ஓடுவது கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவது போன்றதே.

ஆகவே மதிப்பெண்களைப் பற்றிக் கவலைப்படுவதை விடுங்கள். வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டால் மிக்க மகிழ்ச்சி!

மிகமிக முக்கியமான விஷயம், தயவு செய்து இந்த அச்சிடப்பட்ட காகிதத்தில் சில எண்கள் நீங்கள் நினைத்ததுபோல் அமையவில்லை என்பதால் வாழ்க்கையே அவ்வளவுதான் என நினைக்க வேண்டாம்.

அது எலிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது போன்றதாகும். கலைக்காகவே கலை என்று இலக்கியத்தில் சொல்வதைப்போல் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துக்காக கற்றலே உண்மையான வாழ்க்கைக் கல்வி. அது மதிப்பெண்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. கற்றல் இனிதானது. வாழ்தல் அதனினும் இனிமையானது.

கட்டுரையாளர், மனநல மருத்துவர், தொடர்புக்கு: ramsych2@gmail.com

ரகுராம் ராஜன் மீதான சுப்பிரமணியன் சுவாமியின் விமர்சனம் சரிதானா?- ஓர் அலசல் பார்வை

Return to frontpage

'ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இந்திய பொருளாதாரம் முன்னேறவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்' என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து சமீபகாலமாக விமர்சனம் வைத்து வருகிறார்.

அதற்கு அவர் கூறும் காரணம் ஒன்று, 'வட்டி விகிதத்தை அதிகரிக்கிறார் அல்லது குறைக்க மறுக்கிறார். இதனால் பொருளாதாரம் பின்னடைவு கண்டு வேலைவாய்ப்பின்மை ஏற்படுகிறது'. இரண்டாவது, 'பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வட்டி விகிதத்தை குறைக்க மறுக்கிறார்' என்பது.

மேலும், நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தக அடிப்படையிலான மொத்த விற்பனை விலை குறியீடிலிருந்து மக்கள் நுகர்வுத்திறன் சார்ந்த நுகர்வோர் விலை குறியீடுக்கு அவரது இலக்கு தாவியுள்ளது; மொத்த விற்பனை விலை குறியீடில் அவர் கவனம் குவிந்திருந்தால் பொருளாதாரம் முன்னேறியிருக்கும் - சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை நசிவடைந்திருக்காது' என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இவையெல்லாம் அவர் கூறும் பொருளாதார காரணங்கள்.

ஆனால், 'அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்; அவர் மனதளவில் இந்தியராக இல்லை, அமெரிக்க கிரீன் கார்டு வைத்திருக்கிறார்' என்றெல்லாம் கூறுவது பாஜகவின் மைய அரசியல் பார்வை என்பதைத் தவிர வேறில்லை.

அதேவேளையில், சுப்பிரமணியன் சுவாமி கூறும் அரசியல் ரீதியான பார்வையை விடுத்து, நாம் அவரது பொருளாதார காரணங்களில் ஏதாவது சாராம்சம் உள்ளதா என்பதை மட்டும் ஒரு முதற்கட்ட அலசலுக்கு உட்படுத்துவோம்.

செப்டம்பர் 2013-ல் ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னராக பொறுப்பேற்றபோது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.70-ல் இருந்தது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து கொண்டிருந்தது. 2012-ம் ஆண்டின் இறுதி காலாண்டிலிருந்து பணவீக்க விகிதம் இரட்டை இலக்கமாக அதிகரித்திருந்தது.

இதனையடுத்து பணவீக்க விகிதத்தை குறைப்பதும், அயல்நாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு செல்லாமலும் இருப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியிருந்தது. இதற்காக கைவசம் இருந்த உடனடி வழி வட்டி விகிதத்தை அதிகரிப்பது, இதன் மூலம் அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவுக்குள் அதிக முதலீட்டைக் கொண்டு வருவது. இந்தத் திட்டம் வெற்றி கண்டதாகவே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அன்னிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறாமல் தடுக்கப்பட்டதோடு, சில மாதங்களில் 10 முதல் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு வரத்து ஏற்பட்டது.

இதனைச் செய்யாதிருந்தால் பணவீக்க விகிதம் உச்சத்திற்குச் சென்று உலகப் பொருளாதாரம் சந்தித்த நெருக்கடியை இந்தியாவும் சந்தித்திருக்கும். ரகுராம் ராஜன் இந்த இடத்தில்தான் இந்திய பொருளாதாரத்தைக் காத்தார். வட்டி விகிதத்துக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் எந்த வித தொடர்புமில்லை என்பது உலக பொருளாதார நிபுணர்களின் கருத்து. இது ஆளுங்கட்சியின் பிரச்சார எந்திரங்கள் செய்யும் வேலை. வட்டி விகித குறைப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதே பொருளாதார நிபுணர்களின் வரலாற்றுச் சான்றுகளுடனான கருத்தாகும்.

மேலும், நிதிநிலைமைகள் ஓரளவுக்கு உறுதித்தன்மை அடைந்து வட்டி விகிதத்தையும் சீராக வைத்திருந்ததன் விளைவாக ஜனவரி 2015-க்குப் பிறகு வட்டி விகிதத்தை 150 அடிப்படை புள்ளிகள் (1.5%) குறைத்தார், அதாவது அவர் அதிகரித்ததை விட அதிகமாகக் குறைத்தார். பொறுப்பேற்கும் போது வட்டி விகிதம் 7.25% ஆக இருந்தது, அதனை 8% ஆக அதிகரித்தார். 2014-ல் அதனை அப்படியே வைத்திருந்தார். இதைத்தான் சுப்பிரமணியன் சுவாமி சாடுகிறார். ஆனால் ஜனவரி 2015-க்குப் பிறகு 6.5% ஆகக் குறைத்தார். அவர் இதனை ஏன் செய்தார் என்றால் இரட்டை இலக்க பணவீக்க விகிதம் 6%-க்கும் குறைவாக இறங்கியதாலேயே.

இந்த வட்டி விகிதக் குறைப்பு 2 ஆண்டுகால வறட்சி நிலைமைகளுக்கிடையே செய்யப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மாறாக, பொருளாதாரம் மந்தமடைவதற்குக் காரணம் நிதியமைச்சர் அரசு செலவீடுகளைக் குறைத்ததே என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

வட்டிக்குறைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்ற மாயை:

பணவீக்கம் என்பது பொருளாதார வீழ்ச்சியின் எதிர்ப்பதம் அல்ல. பணவீக்கம் என்பது பணவாட்டம் என்பதன் எதிர்ப்பதமே. பணவீக்கம் என்பது பொத்தாம் பொதுவாகக் கூற வேண்டுமென்றால் ‘விலைவாசி உயர்வு’ என்பதே. பொருட்களின் சராசரி மதிப்பை ஒப்பிடும்போது பணத்தின் மதிப்பு குறைவது பணவீக்கத்தின் ஒரு விளக்கம் என்று வைத்துக் கொள்வோம். ரூபாய் மதிப்பிழக்கிறது என்று கூறினால் நமக்கு உடனே எதனுடன் ஒப்பிடும்போது என்ற கேள்வி எழும். உதாரணத்திற்கு பால் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரித்தால் ஒன்று ரூபாய் தன் மதிப்பை சற்றே இழந்துள்ளது என்றோ, பாலின் மதிப்பு அதிகரித்துள்ளது என்றோ கொள்வோம். அதாவது, நாட்டில் விற்கப்படும் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் ரூபாயின் சராசரி அதிகரிப்பே பணவீக்கம்.

இதற்கும் பொருளாதார மந்த நிலை, வீழ்ச்சி ஆகியவற்றுக்கும் தொடர்பில்லை. விலைவாசி குறைகிறது என்றாலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. விலைவாசி அதிகரித்தாலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. அதாவது இதற்கும் பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சிக்கும் சம்பந்தமில்லை. எனவே பணவீக்கத்தைக் குறைக்க வட்டி விகிதத்தை அதிகரிப்பது என்ற அவசியமான நடவடிக்கையினால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது என்பது பிரச்சார உத்திதானே தவிர பொருளாதார கோட்பாடு அடிப்படைகள் இல்லாதது.

வட்டி விகிதத்தை குறைத்தால் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பது அமெரிக்காவில் தப்பும் தவறுமாக கையாளப்பட்ட ஒரு கொள்கை. பொருளாதார வளர்ச்சிக்காக அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஏகப்பட்ட முறை வட்டி விகிதங்களை குறைத்ததற்கான வரலாறு உண்டு. பெடரல் ரிசர்வ் சேர்மன் கிரீன்ஸ்பான் எண்ணற்ற வட்டிவிகிதக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் அதனால் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை. மாறாக, அதிபர் புஷ் வரிவிதிப்பை கடுமையாகக் குறைத்தே அதற்குத் தீர்வு கண்டார்.

ஆனாலும் அமெரிக்கா வட்டி விகிதக் குறைப்பிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேயில்லை. பெடரல் ரிசர்வ் சேர்மன் பெனாங்கேயும் வட்டி விகித குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் நடந்தது 2008-ம் ஆண்டு பொருளாதார நசிவு.

அதாவது, வட்டி விகித குறைப்பின் மூலம் அமெரிக்கர்கள் கிரெடிட் கார்டுகளில் அதிக அளவில் செலவு செய்து கடனாளி ஆனதுதான் மிச்சம் என்று எஸ்.குருமூர்த்தி போன்றவர்கள் எச்சரித்து கட்டுரை மேல் கட்டுரையாக எழுதியுள்ளனர். அதாவது சேமிப்பேயில்லாமல் செலவு செய்வது, பொருட்களை வாங்கிக் குவிப்பது. காரணம் வட்டி விகிதம் குறைவானது. இது ஒரு மாயையான பொருளாதார வளர்ச்சியே. ஒரு விதமான மாயையான செல்வச் செழிப்புக்கும் ஊக செல்வச்செழிப்புக்கும் அமெரிக்கர்களை இட்டுச் சென்றது. இது உண்மையான செல்வச் செழிப்பல்ல.

அதாவது கோட்பாட்டு அடிப்படையில் ஒரு வர்த்தகத்திற்கு 100 கோடி தேவைப்படுகிறது என்றால் வட்டி குறைவாக இருந்தால் அவர்கள் கடன் வாங்குவார்கள். அதேபோல் கடன் நுகர்வோரும் கடன் வாங்கி செலவழிப்பதில் தயக்கம் காட்ட மாட்டார்கள். எனவே இதுதான் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது கோட்பாடு. ஆனால் நடைமுறையில் இதன் இன்னொரு பக்கத்தை கவனிக்கத் தவறுகிறோம். பணம் கொடுப்பவர்கள் பகுதிக்கு ஏற்படும் இழப்பை கவனிக்கத் தவறுகிறோம். அளிக்கும் பணத்திற்கு ஏற்ப ரிடர்ன் கிடைக்கவில்லையெனில் பணத்தை ஏன் செலவு செய்ய வேண்டும்? என்ற கேள்வி எழும், இதனால் பொருளாதார மந்த நிலையே ஏற்படும்.

எனவே வளரும் பொருளாதாரத்துக்குத் தேவை அதிக பணப்புழக்கம். வட்டி விகிதங்களைக் குறைப்பது பொருளாதாரத்தில் கூடுதல் பணத்தை அளிப்பதாகாது. இது கோட்பாட்டு அடிப்படையிலும் செயல்பாட்டு தளத்திலும் பொய்த்துப்போனதை அமெரிக்க வட்டிக் குறைப்பு வரலாற்றை இன்னும் தீவிரமாக ஆய்வு செய்தால் தெரியவரும்.

இன்னும் சொல்லப்போனால் அதிக வட்டி விகித காலங்களில் கூட ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் தருணங்கள் இருந்திருக்கின்றன. மாறாக, குறைந்த வட்டி விகிதங்களினால் ஜிடிபி ஊக்குவிக்கப்பட்டதாகவும் வரலாறுகள் இல்லை.

ஒரு பொருளாதரத்தை ஊக்குவிப்பது என்றால் என்ன? அதனை மேலும் பரவலாக்குவது. ஒரு பரவலான பொருளாதாரத்துக்கு அதிக பணம் தேவை. எனவே பொருளாதார வளர்ச்சிக்குத் தேவை அதிக பணம்.

எனவே, வட்டி விகிதத்தை ரகுராம் ராஜன் அதிகரித்தது தவறு என்ற பார்வையும் தவறு. வட்டி விகிதத்தைக் குறைத்தால் பொருளாதாரம் வளர்ச்சியுறும் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. பொருளாதார தோல்விகளுக்கு ஆட்சி செய்யும் தலைமைகளின் கொள்கைகளே காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, அரசு செலவினத்தை குறைக்காமல் அதிகரிக்க வேண்டும்; வேலைவாய்ப்பை நேரடியாக அதிகரிக்க அரசு செலவிட வேண்டும். நுகர்வோரிடத்தில் தடையில்லா பணப்புழக்கம் ஏற்படவும் அரசு செலவினத்தை கஞ்சத்தனம் செய்தவதாகாது. வரிவிதிப்பை குறைக்க வேண்டும். விவசாய உற்பத்தியைப் பெருக்க வேண்டும். இந்தப் பிரிவில் அரசின் செலவினங்களைக் குறைத்து கஞ்சப்பொருளாதாரம் செய்யக்கூடாது. மக்களின் கல்வி, மருத்துவச் செலவுகளைக் குறைக்க வழிவகை செய்ய வேண்டும். பொருளாதாரத்தை பரவலாக்க வேண்டும் இவற்றுக்கான கொள்கைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே பால் குருக்மேன் போன்ற பொருளாதார நிபுணர்கள் ஆய்வு ரீதியாக கண்டடைந்த முடிவு.

எனவே. தொடர்புபடுத்த முடியாத வட்டி விகித - பொருளாதார வளர்ச்சி / பின்னடைவு பார்முலாவை தொடர்புபடுத்தி, அதற்கு ரகுராம் ராஜனைக் குறைகாண்பதில் எந்தவிதமான ஆய்வுபூர்வமான பொருளாதார அடிப்படைகள் இல்லை என்பதே பல பொருளாதார ஆய்வுகள் நமக்கு எடுத்துரைப்பதாகும்.

ஆர்.முத்துக்குமார் - தொடர்புக்கு muthukumar.r@thehindutamil.co.in

'108' ஆன அரசு பஸ்: சென்னையில் 'மனிதத்துக்கு' ஒருநாள்!

Return to frontpage

சென்னையில் மனிதம் மிக்க மனிதர்களும் இருக்கிறார்கள் என்று அவ்வப்போது உணர்த்துவது உண்டு. கடந்தாண்டு டிசம்பர் மழை மனிதம் மிக்க மனிதர்கள் எவ்வளவு பேர் கொண்டது சென்னை என்பதை உலகுக்கு உணர்த்தியது.

'சென்னையில் ஒரு நாள்' படத்தைப் போல ஒரு பிரசவ வலியால் துடித்த பெண்ணை, அரசு பஸ் ஒன்று தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு அதிவேகத்தில் ஓட்டிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். அந்த பேருந்தில் பயணித்த இளவரசன் சுகுமாரிடம் பேசிய போது அவர் சொல்லிய வார்த்தைகள் அனைத்துமே ஆச்சர்யமூட்டுபவை. அரசு பேருந்து ஒட்டுநரும், நடத்துனரும் அப்பேருந்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்காக துரிதமாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

அன்று நடந்த சம்பவத்தை பகிர்கிறார் இளவரசன் சுகுமார்:

எனக்கு காஞ்சிபுரம் சொந்த ஊர். தாம்பரம் சானிட்டோரியத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு அரசுப் பேருந்தில் ஏறினேன். அடுத்த நாள் தேர்தல் என்பதால் கடுமையான கூட்டம் இருந்தது. தாம்பரம் தாண்டி படப்பைக்கு கொஞ்சம் முன்பு ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அலறல் சத்தம் கேட்டது.

கடுமையான கூட்டத்தில் நான் பின்னால் இருந்தேன். அப்போது தான் அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது என தெரிந்தது. அங்கிருந்து பிரசவம் பார்க்கும் மருத்துவமனையை நோக்கி காஞ்சிபுரத்துக்கு செல்ல 1 மணி நேரமாகும் என்பதால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவருமே சீக்கிரமாக செல்ல திட்டமிட்டார்கள்.

பயணிகள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இருந்து 200 அடி தாண்டி தான் பேருந்தை நிறுத்தினார்கள். உடனடியாக இறங்க வேண்டும், வேறு எங்குமே பேருந்து நிற்கவில்லை. இந்த சூழலில் இன்னொரு நடத்துனர் அப்பெண்மணிக்கு பக்கத்தில் இருந்துகொண்டு தண்ணீர் கொடுத்து கவனமுடன் பார்த்துக்கொண்டார்.

ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் பேருந்தை மிக வேகமாக இயக்கினார். ஒவ்வொரு நிறுத்தத்திலும் 200 அடியைத் தாண்டி நிறுத்திவிட்டு, இறங்க வேண்டியவர்கள் இறங்கியவுடன் பேருந்தும் வேகமாக கிளம்பியது. ஒரு நிறுத்தத்தில் காவல் துறை அதிகாரி ஒருவர் பேருந்தை நிறுத்த கைகாட்டினார். அப்போது கூட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவில்லை.

காஞ்சிபுரம் நெருங்கும் முன்பு நடத்துனர் 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்தார். ஆம்புலன்ஸ் ரங்கசாமி குளம் என்ற இடத்தில் தயாராக இருந்தது. இதற்கு முன்பே பிரசவ வலியால் துடித்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் போன் செய்து விட்டதால் அவர்களும் காத்திருந்தனர். அப்பெண்ணை ரங்கசாமி குளத்தில் இறங்கிவிடும் போது கூட "அம்மா.. போயிருவீங்களா. கூட யாரையும் அனுப்பட்டுமா?" என்று கேட்டார் ஒட்டுநர். என் குடும்பத்தினர் இருக்கிறார்கள் என நன்றி கூறிவிட்டு இறங்கி சென்றார்.

அந்த ஒட்டுநர் மற்றும் நடத்துநர் பெயரை எல்லாம் நான் பார்க்கவில்லை. அவர்களுடைய மனிதம் மட்டும் என்னுடைய கண்ணிலும், நெஞ்சிலும் தெரிந்தது என்று கூறிய இளவரசன் சுகுமாரன் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்தப் பதிவுக்கு 84,482 விருப்பம் தெரிவித்தனர். 18 ஆயிரம் பேர் பகிர்ந்திருந்தனர். அவை எல்லாம் எனக்கு எண்களாகத் தெரியவில்லை. நான் கண்டுகொண்டது மனிதர்களையும், மனிதத்தையும் மட்டுமே.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...