ரகுராம் ராஜன் மீதான சுப்பிரமணியன் சுவாமியின் விமர்சனம் சரிதானா?- ஓர் அலசல் பார்வை
Tஆர்.முத்துக்குமார்

'ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இந்திய பொருளாதாரம் முன்னேறவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்' என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து சமீபகாலமாக விமர்சனம் வைத்து வருகிறார்.
அதற்கு அவர் கூறும் காரணம் ஒன்று, 'வட்டி விகிதத்தை அதிகரிக்கிறார் அல்லது குறைக்க மறுக்கிறார். இதனால் பொருளாதாரம் பின்னடைவு கண்டு வேலைவாய்ப்பின்மை ஏற்படுகிறது'. இரண்டாவது, 'பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வட்டி விகிதத்தை குறைக்க மறுக்கிறார்' என்பது.
மேலும், நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தக அடிப்படையிலான மொத்த விற்பனை விலை குறியீடிலிருந்து மக்கள் நுகர்வுத்திறன் சார்ந்த நுகர்வோர் விலை குறியீடுக்கு அவரது இலக்கு தாவியுள்ளது; மொத்த விற்பனை விலை குறியீடில் அவர் கவனம் குவிந்திருந்தால் பொருளாதாரம் முன்னேறியிருக்கும் - சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை நசிவடைந்திருக்காது' என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இவையெல்லாம் அவர் கூறும் பொருளாதார காரணங்கள்.
ஆனால், 'அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்; அவர் மனதளவில் இந்தியராக இல்லை, அமெரிக்க கிரீன் கார்டு வைத்திருக்கிறார்' என்றெல்லாம் கூறுவது பாஜகவின் மைய அரசியல் பார்வை என்பதைத் தவிர வேறில்லை.
அதேவேளையில், சுப்பிரமணியன் சுவாமி கூறும் அரசியல் ரீதியான பார்வையை விடுத்து, நாம் அவரது பொருளாதார காரணங்களில் ஏதாவது சாராம்சம் உள்ளதா என்பதை மட்டும் ஒரு முதற்கட்ட அலசலுக்கு உட்படுத்துவோம்.
செப்டம்பர் 2013-ல் ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னராக பொறுப்பேற்றபோது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.70-ல் இருந்தது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து கொண்டிருந்தது. 2012-ம் ஆண்டின் இறுதி காலாண்டிலிருந்து பணவீக்க விகிதம் இரட்டை இலக்கமாக அதிகரித்திருந்தது.
இதனையடுத்து பணவீக்க விகிதத்தை குறைப்பதும், அயல்நாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு செல்லாமலும் இருப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியிருந்தது. இதற்காக கைவசம் இருந்த உடனடி வழி வட்டி விகிதத்தை அதிகரிப்பது, இதன் மூலம் அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவுக்குள் அதிக முதலீட்டைக் கொண்டு வருவது. இந்தத் திட்டம் வெற்றி கண்டதாகவே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அன்னிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறாமல் தடுக்கப்பட்டதோடு, சில மாதங்களில் 10 முதல் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு வரத்து ஏற்பட்டது.
இதனைச் செய்யாதிருந்தால் பணவீக்க விகிதம் உச்சத்திற்குச் சென்று உலகப் பொருளாதாரம் சந்தித்த நெருக்கடியை இந்தியாவும் சந்தித்திருக்கும். ரகுராம் ராஜன் இந்த இடத்தில்தான் இந்திய பொருளாதாரத்தைக் காத்தார். வட்டி விகிதத்துக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் எந்த வித தொடர்புமில்லை என்பது உலக பொருளாதார நிபுணர்களின் கருத்து. இது ஆளுங்கட்சியின் பிரச்சார எந்திரங்கள் செய்யும் வேலை. வட்டி விகித குறைப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதே பொருளாதார நிபுணர்களின் வரலாற்றுச் சான்றுகளுடனான கருத்தாகும்.
மேலும், நிதிநிலைமைகள் ஓரளவுக்கு உறுதித்தன்மை அடைந்து வட்டி விகிதத்தையும் சீராக வைத்திருந்ததன் விளைவாக ஜனவரி 2015-க்குப் பிறகு வட்டி விகிதத்தை 150 அடிப்படை புள்ளிகள் (1.5%) குறைத்தார், அதாவது அவர் அதிகரித்ததை விட அதிகமாகக் குறைத்தார். பொறுப்பேற்கும் போது வட்டி விகிதம் 7.25% ஆக இருந்தது, அதனை 8% ஆக அதிகரித்தார். 2014-ல் அதனை அப்படியே வைத்திருந்தார். இதைத்தான் சுப்பிரமணியன் சுவாமி சாடுகிறார். ஆனால் ஜனவரி 2015-க்குப் பிறகு 6.5% ஆகக் குறைத்தார். அவர் இதனை ஏன் செய்தார் என்றால் இரட்டை இலக்க பணவீக்க விகிதம் 6%-க்கும் குறைவாக இறங்கியதாலேயே.
இந்த வட்டி விகிதக் குறைப்பு 2 ஆண்டுகால வறட்சி நிலைமைகளுக்கிடையே செய்யப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மாறாக, பொருளாதாரம் மந்தமடைவதற்குக் காரணம் நிதியமைச்சர் அரசு செலவீடுகளைக் குறைத்ததே என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
வட்டிக்குறைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்ற மாயை:
பணவீக்கம் என்பது பொருளாதார வீழ்ச்சியின் எதிர்ப்பதம் அல்ல. பணவீக்கம் என்பது பணவாட்டம் என்பதன் எதிர்ப்பதமே. பணவீக்கம் என்பது பொத்தாம் பொதுவாகக் கூற வேண்டுமென்றால் ‘விலைவாசி உயர்வு’ என்பதே. பொருட்களின் சராசரி மதிப்பை ஒப்பிடும்போது பணத்தின் மதிப்பு குறைவது பணவீக்கத்தின் ஒரு விளக்கம் என்று வைத்துக் கொள்வோம். ரூபாய் மதிப்பிழக்கிறது என்று கூறினால் நமக்கு உடனே எதனுடன் ஒப்பிடும்போது என்ற கேள்வி எழும். உதாரணத்திற்கு பால் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரித்தால் ஒன்று ரூபாய் தன் மதிப்பை சற்றே இழந்துள்ளது என்றோ, பாலின் மதிப்பு அதிகரித்துள்ளது என்றோ கொள்வோம். அதாவது, நாட்டில் விற்கப்படும் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் ரூபாயின் சராசரி அதிகரிப்பே பணவீக்கம்.
இதற்கும் பொருளாதார மந்த நிலை, வீழ்ச்சி ஆகியவற்றுக்கும் தொடர்பில்லை. விலைவாசி குறைகிறது என்றாலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. விலைவாசி அதிகரித்தாலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. அதாவது இதற்கும் பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சிக்கும் சம்பந்தமில்லை. எனவே பணவீக்கத்தைக் குறைக்க வட்டி விகிதத்தை அதிகரிப்பது என்ற அவசியமான நடவடிக்கையினால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது என்பது பிரச்சார உத்திதானே தவிர பொருளாதார கோட்பாடு அடிப்படைகள் இல்லாதது.
வட்டி விகிதத்தை குறைத்தால் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பது அமெரிக்காவில் தப்பும் தவறுமாக கையாளப்பட்ட ஒரு கொள்கை. பொருளாதார வளர்ச்சிக்காக அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஏகப்பட்ட முறை வட்டி விகிதங்களை குறைத்ததற்கான வரலாறு உண்டு. பெடரல் ரிசர்வ் சேர்மன் கிரீன்ஸ்பான் எண்ணற்ற வட்டிவிகிதக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் அதனால் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை. மாறாக, அதிபர் புஷ் வரிவிதிப்பை கடுமையாகக் குறைத்தே அதற்குத் தீர்வு கண்டார்.
ஆனாலும் அமெரிக்கா வட்டி விகிதக் குறைப்பிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேயில்லை. பெடரல் ரிசர்வ் சேர்மன் பெனாங்கேயும் வட்டி விகித குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் நடந்தது 2008-ம் ஆண்டு பொருளாதார நசிவு.
அதாவது, வட்டி விகித குறைப்பின் மூலம் அமெரிக்கர்கள் கிரெடிட் கார்டுகளில் அதிக அளவில் செலவு செய்து கடனாளி ஆனதுதான் மிச்சம் என்று எஸ்.குருமூர்த்தி போன்றவர்கள் எச்சரித்து கட்டுரை மேல் கட்டுரையாக எழுதியுள்ளனர். அதாவது சேமிப்பேயில்லாமல் செலவு செய்வது, பொருட்களை வாங்கிக் குவிப்பது. காரணம் வட்டி விகிதம் குறைவானது. இது ஒரு மாயையான பொருளாதார வளர்ச்சியே. ஒரு விதமான மாயையான செல்வச் செழிப்புக்கும் ஊக செல்வச்செழிப்புக்கும் அமெரிக்கர்களை இட்டுச் சென்றது. இது உண்மையான செல்வச் செழிப்பல்ல.
அதாவது கோட்பாட்டு அடிப்படையில் ஒரு வர்த்தகத்திற்கு 100 கோடி தேவைப்படுகிறது என்றால் வட்டி குறைவாக இருந்தால் அவர்கள் கடன் வாங்குவார்கள். அதேபோல் கடன் நுகர்வோரும் கடன் வாங்கி செலவழிப்பதில் தயக்கம் காட்ட மாட்டார்கள். எனவே இதுதான் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது கோட்பாடு. ஆனால் நடைமுறையில் இதன் இன்னொரு பக்கத்தை கவனிக்கத் தவறுகிறோம். பணம் கொடுப்பவர்கள் பகுதிக்கு ஏற்படும் இழப்பை கவனிக்கத் தவறுகிறோம். அளிக்கும் பணத்திற்கு ஏற்ப ரிடர்ன் கிடைக்கவில்லையெனில் பணத்தை ஏன் செலவு செய்ய வேண்டும்? என்ற கேள்வி எழும், இதனால் பொருளாதார மந்த நிலையே ஏற்படும்.
எனவே வளரும் பொருளாதாரத்துக்குத் தேவை அதிக பணப்புழக்கம். வட்டி விகிதங்களைக் குறைப்பது பொருளாதாரத்தில் கூடுதல் பணத்தை அளிப்பதாகாது. இது கோட்பாட்டு அடிப்படையிலும் செயல்பாட்டு தளத்திலும் பொய்த்துப்போனதை அமெரிக்க வட்டிக் குறைப்பு வரலாற்றை இன்னும் தீவிரமாக ஆய்வு செய்தால் தெரியவரும்.
இன்னும் சொல்லப்போனால் அதிக வட்டி விகித காலங்களில் கூட ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் தருணங்கள் இருந்திருக்கின்றன. மாறாக, குறைந்த வட்டி விகிதங்களினால் ஜிடிபி ஊக்குவிக்கப்பட்டதாகவும் வரலாறுகள் இல்லை.
ஒரு பொருளாதரத்தை ஊக்குவிப்பது என்றால் என்ன? அதனை மேலும் பரவலாக்குவது. ஒரு பரவலான பொருளாதாரத்துக்கு அதிக பணம் தேவை. எனவே பொருளாதார வளர்ச்சிக்குத் தேவை அதிக பணம்.
எனவே, வட்டி விகிதத்தை ரகுராம் ராஜன் அதிகரித்தது தவறு என்ற பார்வையும் தவறு. வட்டி விகிதத்தைக் குறைத்தால் பொருளாதாரம் வளர்ச்சியுறும் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. பொருளாதார தோல்விகளுக்கு ஆட்சி செய்யும் தலைமைகளின் கொள்கைகளே காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது, அரசு செலவினத்தை குறைக்காமல் அதிகரிக்க வேண்டும்; வேலைவாய்ப்பை நேரடியாக அதிகரிக்க அரசு செலவிட வேண்டும். நுகர்வோரிடத்தில் தடையில்லா பணப்புழக்கம் ஏற்படவும் அரசு செலவினத்தை கஞ்சத்தனம் செய்தவதாகாது. வரிவிதிப்பை குறைக்க வேண்டும். விவசாய உற்பத்தியைப் பெருக்க வேண்டும். இந்தப் பிரிவில் அரசின் செலவினங்களைக் குறைத்து கஞ்சப்பொருளாதாரம் செய்யக்கூடாது. மக்களின் கல்வி, மருத்துவச் செலவுகளைக் குறைக்க வழிவகை செய்ய வேண்டும். பொருளாதாரத்தை பரவலாக்க வேண்டும் இவற்றுக்கான கொள்கைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே பால் குருக்மேன் போன்ற பொருளாதார நிபுணர்கள் ஆய்வு ரீதியாக கண்டடைந்த முடிவு.
எனவே. தொடர்புபடுத்த முடியாத வட்டி விகித - பொருளாதார வளர்ச்சி / பின்னடைவு பார்முலாவை தொடர்புபடுத்தி, அதற்கு ரகுராம் ராஜனைக் குறைகாண்பதில் எந்தவிதமான ஆய்வுபூர்வமான பொருளாதார அடிப்படைகள் இல்லை என்பதே பல பொருளாதார ஆய்வுகள் நமக்கு எடுத்துரைப்பதாகும்.
ஆர்.முத்துக்குமார் - தொடர்புக்கு muthukumar.r@thehindutamil.co.in
No comments:
Post a Comment