Monday, May 23, 2016

குஜராத்தில் தகிக்கும் வெயில்: உருகும் தார்ச்சாலைகளில் சிக்கி மக்கள் அவதி

குஜராத் மாநிலத்தில் கொளுத்தும் வெயில் காரணமாக தார்ச் சாலைகள் உருகுகின்றன. உருகிய தார்களில் மக்களின் காலனிகள் சிக்கி அவர்கள் கீழே விழுகின்றனர். மேலும் வாகனங்களும் பிடிமானமின்றி வழுக்கிச் செல்கின்றன.

வல்சாத் பகுதியில் தார்ச்சாலைகள் உருகி, தார் குழம்பாக மாறி நிற்கிறது. சிலர் சாலையைக் கடக்காமல் வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர். சிலர் துணிச்சலாகக் கடக்கின்றனர். அவ்வாறு சாலைகளைக் கடப்பவர்களின் செருப்பு, ஷூ போன்றவை தாரில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிலர் காலணி மாட்டிக் கொள்வதால் தடுமாறி விழுகின்றனர்.

ஒரு பெண் கீழே விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. அவர் விபத்துக்கு உள்ளாவதற்கு சில நொடிகளுக்கு முன்புதான் அதே இடத்தில் ஒரு லாரி, சாலையில் டயர்கள் பிடிமானமின்றி வழுக்கிச் சென்றது.

வல்சாத் பகுதியில் நேற்று முன்தினம் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. ஆமதாபாத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வெயில் கொடுமைக்கு நாடு முழுவதும் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா பகுதியில் 2 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தானின் சுரு, ஸ்ரீகங்கா நகர் பகுதியில் 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேசமயம் வங்காள விரிகுடா பகுதியில் புயல் காரணமாக கடலோர பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 3.4.2025