Saturday, May 28, 2016

எம்ஜிஆர் 100 | 74 - குழந்தை உள்ளம்!


எம்ஜிஆர் 100 | 74 - குழந்தை உள்ளம்!

குழந்தையைக் கொஞ்சும் குழந்தை உள்ளம்.
M.G.R.இந்த நாட்டின் எதிர்காலச் செல்வங்களான குழந்தைகள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். நல்ல கருத்துக்களை குழந்தைகளுக்குச் சொல்வதோடு, தவறு செய்தாலும் அன்பால் அவர்களை திருத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.

எம்.ஜி.ஆர். தனது மானசீக குரு வாகக் கருதியவர்களின் திரை யுலக மேதை வி.சாந்தாராம் முக்கியமானவர். எம்.ஜி.ஆர். முதல்வ ராக இருந்தபோது, தமிழக அரசின் சார் பில் சென்னை கலைவாணர் அரங்கில் குழந்தைகள் திரைப்பட விழா கொண் டாடப்பட்டது. குழந்தைகள் படச் சங்கத் தின் தலைவராக அப்போது இருந்த சாந்தாராமும் விழாவில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கும்போது, ‘‘எனது மானசீக ஆசான் சாந்தாராம் அவர்களே!’’ என்று அழைத்து பெருமைப்படுத்தினார்.

குழந்தைகளுக்கான படங்களின் தேவையைப் பற்றி எம்.ஜி.ஆர். அருமை யாக உரையாற்றினார். குழந்தைகள் மனதில் விபரீத எண்ணங்கள் தோன்றக் கூடாது என்றும் அதை விளக்க, தான் படித்த தமிழாக்கம் செய்யப்பட்ட வங்கமொழி சிறுகதையையும் கூறினார்.

கதையின் களம் வங்கத்திலே இந்து முஸ்லிம் கலவரம் நடந்து கொண்டிருந்த சமயம். இரண்டு குழந்தைகள். ஒன்று இந்து, மற்றொன்று முஸ்லிம். இருவரும் நெருங்கிய நண்பர்கள். தினமும் விதவிதமாய் விளையாடி மகிழ்வார்கள். ஒருநாள் இன்று என்ன விளையாடுவது? என்று அவர்களுக்குள் விவாதம்.

‘‘அப்பா அம்மா விளையாட்டு’’ என்று யோசனை கூறியது ஒரு குழந்தை.

‘‘எத்தனை முறைதான் அதையே விளையாடுவது? அலுத்துவிட்டது’’ என்றது மற்றொரு குழந்தை.

‘‘சமையல் விளையாட்டு’’

‘‘ஊகூம், வேண்டாம்’’

பல விளையாட்டுக்களைப் பற்றி விவாதித்த பின்னர் இறுதியில் ஒரு குழந்தை கேட்டது, ‘‘கத்தி எடுத்து ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டு விளையாடலாமா?’’.

அந்தக் குழந்தையின் கேள்வியோடு கதை முடிகிறது.

இந்தக் கதையை எம்.ஜி.ஆர். குறிப் பிட்டு, குழந்தைகளுக்கு முன்மாதிரி களான நாம் எப்படி ஒற்றுமையாகவும் அன்போடும் இருக்க வேண்டும் என் பதையும் நல்ல சூழலில் குழந்தைகள் வளர வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார். ‘‘குழந்தை உள்ளத்தை நன்கு அறிந்தவர்கள் அவர்களுக்கான படம் எடுக்க வேண்டும். அதற்கு சாந்தாராம் பொருத்தமானவர்’’ என்று பாராட்டினார்.

1967-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி. மதுரையில் திமுக பிரமுகர் ஒருவருடைய மகளின் பரத நாட்டிய அரங்கேற்றம், சவுராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம். திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரத் தில் இருந்த எம்.ஜி.ஆர்., விழாவுக்கு வருவாரா என்று சந்தேகம். இரவு ஏழு மணி ஆகியும் எம்.ஜி.ஆர். வரவில்லை. நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி தொடங் கியது. கூட்டத்தினருக்கு ஏமாற்றம்.

சற்று நேரத்தில் தெப்பக்குளம் பகுதியில் இருந்து விரைவாக வந்த எம்.ஜி.ஆரின் கார், விழா நடந்த பள்ளி மைதான வளாகத்துக்குள் நுழைந்தது. இரவில் வந்த சூரியனைப் போல் வெளிச்ச மனிதராய் காரில் வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட கூட்டம் ஆர்ப்பரித்தது. பெரியவர் களே உற்சாகத்தின் உச்சிக்குச் சென்றபோது, சிறுவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா? திடீரென இரண்டு சிறுவர்கள் எம்.ஜி.ஆர். வந்த காரின் ஜன்னலில் கையை விட்டு தொங்கியபடி வந்தனர். சிறிது தூரம் சென்று மேடை அருகே கார் நின்றது.

காரில் இருந்து கோபத்துடன் வேக மாக இறங்கிய எம்.ஜி.ஆரைப் பார்த்து, காரில் தொங்கியபடி வந்த சிறுவர்கள் ஓட முயன்றனர். அந்த சிறுவர்களின் கைகளை சடாரென பிடித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவர்களை ஓங்கி அறையப்போவதுபோல கையை ஓங்கினார். ஆனால், அடிக்கவில்லை. அந்த சிறுவர்களைப் பார்த்து, ‘‘ஏன் இப்படி காரில் தொங்கிக் கொண்டு வந்தீர்கள்? கொஞ்சம் தவறி யிருந்தால் விபரீதமாகி யிருக்குமே? உங்கள் பெற்றோருக்கு யார் பதில் சொல்வது? இனிமேல் இப்படி செய்வீர்களா?’’ என்று அதட்டலாக கேட்டுக் கொண்டிருந்த போதே பயத்தில் சிறுவர்கள் அழ ஆரம்பித்துவிட்டனர்.

அதற்குள் கூட்டம் எம்.ஜி.ஆரை சுற்றி நெருக்கியது. அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று முன்வரிசையில் அமரவைத்தனர். நாட்டிய நிகழ்ச்சியை எம்.ஜி.ஆர். ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுமி தன் தாயின் பிடியில் இருந்து விடுபட்டு எம்.ஜி.ஆரை நோக்கி வர முயற்சித்தாள். அருகில் இருந்தவர்கள் அந்த சிறுமியை தடுத்தனர். இதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த சிறுமியை அருகில் அழைத்தார். வெட்கத்துடன் வந்த சிறுமியை தன் மடியில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு நாட்டியத்தை பார்த்தார். அந்த சிறுமிக்கு மகிழ்ச்சி ஒருபுறம், எல்லோ ரும் தன்னையே பார்க்கிறார்களே என்ற வெட்கம் மறுபுறம். புகைப் படங்கள் எடுக்கப்பட்டபோதும் எம்.ஜி.ஆர். மடியில் அமர்ந்தபடி வெட்கத்துடன் நகம் கடித்தபடி இருந்தாள் சிறுமி.

நிகழ்ச்சி முடிந்தபின், நாட்டியம் ஆடிய திமுக பிரமுகரின் மகளை எம்.ஜி.ஆர். பாராட்டி பரிசளித்தார். அவர் பேசும்போது, காரில் தொங்கியபடி வந்த சிறுவர்களின் செயலைப் பற்றிக் கூறிவிட்டு, ‘‘குழந்தைகள் அக்கறையாக கவனமுடன் வளர்க்கப்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டார். கார் வந்து கொண்டிருக்கும்போதே கையை விடச் சொல்லி சத்தம்போட்டால் பதற்றத்தில் சிறுவர்கள் கையை விட்டு சக்கரத்தில் மாட்டி விபரீதம் ஆகியிருக்கும் என்பதால்தான் காரில் இருந்து இறங்கிய பின் அவர்களைக் கண்டித்ததாக தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது, பயத்துடன் கூட்டத்தில் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்த எம்.ஜி.ஆர்., சிரித்தபடியே அவர்களின் கன்னத்தை செல்லமாக தட்டிவிட்டு புறப்பட்டார். தங்களது தவறுக்கு மன்னிப்பு கிடைத்துவிட்ட நிம்மதியும் மகிழ்ச்சியும் சிறுவர்கள் முகத்தில் மின்னியது.

எம்.ஜி.ஆர். நடித்த ‘நீதிக்குத் தலைவணங்கு’ படத்தில் இடம்பெற்ற ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்…’ என்ற அருமையான தாலாட்டுப் பாடலில் வரும் வரிகள் இவை...

‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே;

பின் நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பதிலே!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்




‘தூங்காதே தம்பி தூங்காதே…’, ‘திருடாதே பாப்பா திரு டாதே…’, ‘சின்னப் பயலே, சின்னப் பயலே சேதி கேளடா…’ என்பன போன்ற, குழந்தை களுக்கு அறிவுரை சொல் லும் திரைப்படப் பாடல்கள் எம்.ஜி.ஆர். படங் களில்தான் அதிகம் இடம் பெற்றன.

No comments:

Post a Comment

How chatbots became the new-age parenting guru

How chatbots became the new-age parenting guru  AI tools like ChatGPT are not only coming in handy for homework assignments ( don’t judge, p...