Saturday, May 28, 2016

வெளிநாட்டு எம்.பி.பி.எஸ். படிப்பை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா?....VIKATAN

வெளிநாடு சென்று கல்வி பெற விரும்புபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான விஷயங்கள் பற்றிய தகவல்களைத் தருகிறார் கல்வியாளர் தா.நெடுஞ்செழியன்.

எந்த வயதில் வெளிநாட்டில் படிக்கச் செல்லலாம்?

17 முதல் 21 வயது வரை உள்ளவர்கள், படிப்பதற்காக வெளிநாடு செல்ல வேண்டாம். காரணம், இந்த வயதில் சமுதாயத்தைச் சீர்தூக்கிப் பார்க்கக்கூடிய பக்குவம் இருக்காது. மாணவர்களை வழிநடத்தக்கூடிய சரியான ஆட்களும் அங்கு இல்லை. நாம் 'தவறு’ எனச் சொல்வதை வெளிநாட்டினர் 'சரி’ என்பர். இதனால், ஏதேனும் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். ஆகவே முதுநிலை அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளைப் படிப்பதற்கு ஏற்ற வயதில் வெளிநாடு செல்வதே நல்லது. 

வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது நல்லதா?
வெளிநாடு சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு சரியான பயிற்சி வழங்கப்படுவது இல்லை என்பதால், அங்கு சென்று படிப்பதில் பெரிய அளவில் பயன் இல்லை. அங்கு படித்துவிட்டு வரும் மாணவர்கள் பலர், இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical council of India) நடத்தும் தேர்வில், குறைந்த விகிதத்திலேயே தேர்ச்சி அடைகிறார்கள்.
மேலும் அத்தகைய மாணவர்களில் பலருக்கு, நோயாளிகளைக் கையாளத் தெரிவது இல்லை. அதனால், அவர்களை இங்கு குறைந்த சம்பளத்திலேயே பணியில் அமர்த்துகிறார்கள். மேலும், வெளிநாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகள் பல, அதற்கான தகுதிகளுடன் இருப்பதில்லை. ஆகவே, வெளிநாட்டில் சென்று மருத்துவம் படிக்கும் மோகத்தைத் தவிர்த்து, நம் நாட்டிலேயே மருத்துவப் பயிற்சி பெறுவது சிறப்பு. (இது, எம்.பி.பி.எஸ் படிப்புக்கு மட்டும் பொருந்தும்.)

வெளிநாட்டுக் கல்லூரிகளில் பணம் செலுத்திப் படிக்கலாமா?

மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி,  அவர்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்கின்றன. போதுமான மதிப்பெண்கள் இருந்தால் முன்னணி பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிடும். அந்த மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் உரிய சலுகையும் வழங்கப்படும். மாறாக, மதிப்பெண்கள் குறைவாக இருக்கும்போது, ஒரு மாணவருக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகள் எதுவும் கிடைக்காது. அடுத்தடுத்த தரத்தில் உள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்கலாம். ஆனால், கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள தரமான பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தால் படிக்கலாம். இல்லையென்றால், அங்கு சென்று கட்டணம் செலுத்திப் படிப்பது வீண்தான். 

 
SAT - 1 மற்றும் SAT - 2 நுழைவுத்தேர்வுகளை எழுதுவதற்கான தகுதிகள் என்ன?

மாணவர்களின் கல்வித் தகுதியைப் பொறுத்து (Scholastic Aptitude Test ) SAT - 1 மற்றும் SAT - 2 நுழைவுத் தேர்வுகளை எழுதலாம். இதில் SAT - 1 தேர்வை எழுத, பத்தாம் வகுப்புத் தேர்ச்சி போதும். கணிதம், கிரிட்டிக்கல் ரீடிங், ஆங்கிலக் கட்டுரை போன்றவையே இந்த நுழைவுத்தேர்வின் வினாக்களாக இருக்கும். இதில் தேர்வானவர்கள் SAT - 2 நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். 

பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர்கள், SAT - 2 நுழைவுத்தேர்வை எழுதலாம். தேர்வு செய்யும் துறை சார்ந்த பாடங்களில் கேள்விகள் கேட்கப்படும். அதாவது கணிதம், வேதியியல் என எந்தத் துறையில் சேர விருப்பமோ, அந்தத் துறை சார்ந்த பாடங்களில் கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்வானவர்கள் வெளிநாட்டில் ஆங்கிலம், வேதியியல், உயிரியல், கணிதம், இசை, சட்டம் போன்ற நாம் தேர்வுசெய்யும் பட்டப்படிப்புகளைப் படிக்கலாம். இந்த இரண்டு தகுதித்தேர்வுகளிலும் தேர்வாகும் மாணவர்கள்தான், வெளிநாட்டுக்குச் சென்று படிக்க முடியும். 

SAT தேர்வு, அனைத்து மெட்ரோ நகரங்களிலும் நடைபெறும். இந்தத் தேர்வை, இ.டி.எஸ் (Educational Testing Service) என்ற அமைப்பினர் நடத்துகின்றனர். வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்கள், இந்த இரண்டு நுழைவுத்தேர்வுகளையும் இலவசமாக எழுதலாம். அதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் தேர்வுக்கான மேலதிக தகவல்களை, ets.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

-பாசுமணி, கே.அபிநயா

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...