Monday, June 27, 2016

சுவாதியை நடத்தைக் கொலை செய்யாதீர்: ராமதாஸ்


THE HINDU TAMIL

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண் சுவாதியை நடத்தைக் கொலை செய்ய வேண்டாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னை நுங்கம்பாக்கம் புறநகர் தொடர்வண்டி நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சுவாதி என்ற மென்பொருள் பொறியாளர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், அவரது கொலைக்கு காரணம் கற்பித்து கற்பனையாக பரப்பப்படும் அவதூறுகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பெண் மென்பொறியாளர் சுவாதி கடந்த வெள்ளிக்கிழமை காலை செங்கல்பட்டு பகுதியிலுள்ள அலுவலகத்திற்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்த போது, மர்ம மனிதர் ஒருவரால் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அந்த நேரத்தில் தொடர்வண்டி நிலையத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் நடந்துகொண்ட விதம் மிகவும் வருத்தமளிக்கிறது. சுவாதியை ஒருவன் சரமாரியாக வெட்டும்போது, தொடர்வண்டி நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் அதிகாரிகளில் ஒருவர் குரல் எழுப்பியிருந்தாலோ தங்களின் கைகளில் கிடைத்த பொருளை வீசியிருந்தாலோ கொலையாளிக்கு சிறிதளவாவது அச்சம் ஏற்பட்டிருக்கக் கூடும்; சுவாதியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அதுவே போதுமானதாக இருந்திருக்கும்.

ஆனால், சுவாதியை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடும் வரை எவரும் அதற்காக முயற்சி கூட செய்யவில்லை. கொலைகாரன் கையில் கொடுவாளுடன் ஆவேசமாக இருக்கும் போது, அவனை எதிர்ப்பது விவேகமானதா? இப்படி கேள்வி எழுப்புபவர்கள் சம்பவ இடத்தில் இருந்தால் அவ்வளவு துணிச்சலுடன் நடந்து கொள்வார்களா? என்றெல்லாம் எதிர்க்கேள்விகள் எழுப்பப்படலாம். அவ்வாறு கேள்வி எழுப்புபவர்களின் குடும்பத்திலுள்ள பெண்ணுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டால், அவர்கள் இப்படித்தான் கண்டும் காணாமலும் சென்றிருப்பார்களா? என்றொரு வினாவை எழுப்பி, அதற்கு விடை காணும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டால் தெளிவு பிறந்து விடும்.

அதுமட்டுமின்றி, காலை 6.30 மணிக்கு சுவாதி கொல்லப்பட்ட நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு சுவாதியின் உடல் காட்சிப் பொருளாகவே கிடந்தது. சுவாதியின் உடலை வேடிக்கைப் பார்த்துவிட்டு சென்றவர்களில் ஒருவருக்குக் கூட அந்த உடலை துணியால் மூட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை என்பதைப் பார்க்கும்போது நாமெல்லாம் குறைந்தபட்ச மனசாட்சியும், மனிதநேயமும் அற்றவர்களாக மாறிவிட்டோமா? என்ற எண்ணம் உறுத்துகிறது. இதற்காக நமது சமுதாயமே வெட்கத்தில் தலைகுனிய வேண்டியுள்ளது.

இவற்றையெல்லாம் விட கொடுமை சுவாதி படுகொலையை அடிப்படையாக வைத்து அவதூறுகள் பரப்பப்படுவது தான். சுவாதி ஒருவரை காதலித்தார், சுவாதியை ஒருவர் காதலித்தார், ஒருவரின் காதலை சுவாதி ஏற்கவில்லை அதனால் ஏற்பட்ட பகையால் தான் சுவாதி படுகொலை செய்யப்பட்டார் என்று சமூக ஊடகங்களிலும், சில ஊடகங்களிலும் அவதூறுகள் பரப்பப்படுகின்றன.

சுவாதியின் நடத்தையை பேசுபொருளாக்கி கொடிய இன்பம் காணும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர். சுவாதியை கொலை செய்ததை விட இது கொடிய குற்றமாகும். சுவாதியை கொன்றவர் யார்? என காவல்துறை இன்னும் அறிவிக்கவில்லை, கொலைக்கான காரணம் என்ன? என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது எழுதுவதற்கு இடம் இருக்கிறது, எழுதினால் இன்பம் கிடைக்கிறது என்பதற்காக ஒருவரைப் பற்றி தவறாக எழுதுவது எந்த வகையில் நியாயம்?

ஒருவேளை, வாதத்திற்காக சுவாதி மீது தவறு இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவையெல்லாம் ஒருவரின் உயிரைப் பறிக்க வழங்கப்பட்ட உரிமங்களாகி விட முடியுமா? இதை உணராமல் அவதூறு பரப்புவது மன்னிக்க முடியாதது.

சுவாதி அப்பாவி, இரக்க குணம் கொண்டவர் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். சென்னை மாநகரில் கடந்த நவம்பர், திசம்பர் மாதங்களில் கடுமையான மழையால் வெள்ளம் ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெள்ள நீரில் நீந்திச் சென்று உணவு உள்ளிட்ட உதவிகளை சுவாதியும், அவரது குடும்பத்தினரும் வழங்கியதாக அப்பகுதிகளில் உள்ள மக்கள் கூறுகின்றனர்.

அப்படிப்பட்ட பெண் பொறியாளரின் நடத்தை குறித்து மனம் போன போக்கில் வதந்திகளையும், அவதூறுகளையும் பரப்புவது, புதைக்கப்பட்ட சுவாதியின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் படுகொலை செய்வதற்கு சமமானதாகும். அற்ப மகிழ்ச்சிக்காக இவ்வாறு நடந்து கொள்வதை விடுத்து, சுவாதி கொல்லப்பட்டது குறித்த தகவல் அறிந்தவர்கள் அதை காவல்துறையிடம் தெரிவித்து விசாரணைக்கு உதவ வேண்டும்.

அதேபோல், சுவாதிக்கு நேர்ந்தது போன்ற கொடுமை இனிவரும் காலங்களில் வேறு எவருக்கேனும் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக தலையிட்டு காப்பாற்றும் அளவுக்கு பொதுமக்கள் துணிச்சலுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். அதுவே சுவாதிக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

ஈ, எறும்புக்கு கூட தீங்கி நினைக்காதவர் சுவாதி: தோழிகள் கண்ணிர்...DINAMANI

ஒரு ஈ, எறும்புக்கு கூட தீங்கு நினைக்காதவர் சுவாதி என அவரது உறவினர்கள், தோழிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சந்தான கோபாலகிருஷ்ணன் மகள் சுவாதி (24), பரனூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளாராகப் பணியாற்றி வந்தார்.
இவரை கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன்.24) காலை அவரது தந்தை அழைத்து வந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றார். ரயில் நிலையத்தில் செங்கல்பட்டு மின்சார ரயிலுக்காக காத்திருந்தபோது, சுவாதியின் தலை, முகம், கழுத்தில் கத்தியால் இளைஞர் வெட்டிக் கொலை செய்தார்.
இந்த கொலை சம்பவம் அவரது குடும்பத்தினரையும், தோழிகளையும் சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அதில் இருந்து நிச்சயமாக ஆயுளுக்கும் அவர்களால் மீண்டுவர முடியாது.

எப்போதுமே பெண் பிள்ளைகள் மீது அப்பாக்கள் அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்கள். சுவாதியின் மீது அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் வைத்திருந்த பாசத்துக்கு எல்லையே இல்லை. தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் துறையில் பி.இ முடித்தவுடன் இன்போசிஸ் நிறுவனத்தில் உடனடியாக பணியும் கிடைத்தது.

சிறுவயதில் இருந்தே இளகிய மனம் கொண்ட சுவாதி, வளந்த பின்னரும் அதே மனநிலையில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக சமீபத்தில் சென்னையில் பெய்த பேய்மழையில் மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது, அப்போது சுவாதி ஓடோடி சென்று உதவிகளை செய்துள்ளார். சூளைமேடு மற்றும் அதனைச்சுற்றியுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு பொட்டலங்களை தயார் செய்துகொண்டு போய் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இப்படி மற்றவர்களுக்கு புன்னகையுடன் உதவி புரிந்துவந்த சுவாதி கடந்த வெள்ளிக்கிழமை காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த காட்சியை யாராலும் மறந்து விடமுடியாது. யாரிடமும் அதிர்ந்து பேசாத குணம் கொண்ட சுவாதி, அருகில் உள்ள குடும்பத்தார்களிடமும் அன்பாக பழகியுள்ளார். எறும்புக்கு கூட தீங்கு நினைக்காத சுவாதிக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்று குடும்பத்தினரும், தோழிகளும் கண்ணீர் வடிக்கும் காட்சி பார்கும்போது கள்நெஞ்சம் கொண்டவர்களின் மனதையும் கரையை வைக்கிறது.
ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்தையடுத்து, சென்னையில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வெளியூர்களிலிருந்து பேசுபவர்கள் எல்லாம் இப்போது கேட்கும் கேள்வி இதுதான் "சென்னையில... என் நடக்குது" என்று கேட்கும் அவர்கள், சுவாதியின் கொலை சம்பவம் பற்றியும் பேட்க தவறவில்லை.

சுவாதியின் மரணம் தொடர்பாக முகநூல் பக்கத்தில் பதிவிடப்படும் காரசாரமான கருத்துக்கள் மனசை போட்டு கசக்கும் விதத்தில் உள்ளன. தமிழகத்தையே உலுக்கிப் போட்டிருக்கும் சுவாதியின் கொலைக்கு உரிய நீதியும் நியாமும் கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து தசரப்பினரின் ஆவேச குரலாக உள்ளது. காவல்துறை அதிரடியாக செயல்பட்டு கொலையாளியை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டனையை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கட்டண சலுகையை விட்டு கொடுங்கள்..! -மூத்த குடிமக்களை கேட்கும் ரயில்வே துறை

புதுடெல்லி: சமையல் கியாஸ் மானியத்தை தாமாக முன்வந்து விட்டு கொடுப்பதுபோல, மூத்த குடிமக்களும் ரயில் பயணக் கட்டணச் சலுகையை விட்டு கொடுக்க முன் வரலாம் என இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது.

ரயில்வே துறைக்கு பயணிகள் ரயில் மூலம் ஆண்டுதோறும் ரூ.34 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனை மத்திய அரசு வழங்கும் மானியம் மூலம் ரயில்வே துறை ஈடு செய்கிறது. இந்நிலையில், சமையல் கியாஸ் மானியத்தை தாமாக முன்வந்து விட்டு கொடுப்பது போல, மூத்த குடிமக்களும் ரயில் பயண சலுகையை விட்டு கொடுக்க முன் வரலாம் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே துறைக்கு ஏற்படும் மானிய சுமை மற்றும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. 58 வயது நிரம்பிய பெண்களுக்கு ரயில் பயணக் கட்டணத்தில் 50 சதவீதமும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு பயணக் கட்டணத்தில் 40 சதவீதமும் சலுகை வழங்கப்படுகிறது. மேலும், பயணிகளுக்காக ரயில்களில் முதியோர், விளையாட்டுத்துறையில் பதக்கம் பெற்றவர்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட 55 பிரிவினருக்கு பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது.
இதற்காக கடந்த நிதியாண்டில் ரூ.1,600 கோடியை மானியமாக ரயில்வே துறை செலவழித்து உள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்களின் சலுகைக்காக மட்டும் கடந்த ஆண்டில் ரூ.1,100 கோடியை ரயில்வே துறை மானியமாக செலவழித்துள்ளது. அதே வேளையில் சாதாரண பயணிகள் செலுத்தும் பயணக் கட்டணத்திலும் பயணத்துக்கு ஏற்படும் செலவில் முழு தொகையை ரயில்வே துறையால் பெற முடியவில்லை.

அதாவது ஒருவரின் பயணத்துக்கு ஏற்படும் செலவில் 57 சதவீதத்தை மட்டுமே அவர் செலுத்தும் கட்டணத்தில் இருந்து பெற முடிகிறது. அந்த வகையில் ஒரு பயணியின் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? என்பதை பயணச்சீட்டுகளின் கீழ் அச்சடிக்கும் புதிய முறையை ரயில்வேத்துறை கடந்த சில நாட்களாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், மானியத்தை குறைக்கும் வகையில் முதியவர்கள் தாமாக முன்வந்து சலுகையை விட்டு கொடுக்கும் புதிய முறையை ரயில்வே துறை அமல்படுத்தி உள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ''முதியவர்கள் பயணச்சீட்டு பெறும் முன்பாக தாங்கள் சலுகையை பெற விரும்பவில்லை என்பதை குறிப்பிடுவதற்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சலுகையை பெற விரும்பாதவர்கள் முழு கட்டணத்தை செலுத்தலாம். அதற்கேற்ற வகையில் தொழில்நுட்பங்களிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது" என்றார்

வீடியோ: லஞ்சபணத்தை பிரித்து கொள்வதில் போலீசார் கட்டி புரண்டு சண்டை

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் முக்கிய சாலையில் நான்கு போலீச்சார் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு கட்டி புரளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது

லாரி டிரைஅவர்கலீடம் இருந்து பெறபட்ட லஞ்சம் பணம் மொத்தத்தையும் ஒரே அதிகாரி கொண்டு செல்ல முற்பட்டதாகவும், அத்னால் உடன் இருந்த அதிகாரி ஒருவர் லஞ்ச பணத்தை சரி சமமாக பங்கு பிரித்துதரும் படி கூறியதாகவும். இதை தொடர்ந்து இருவருக்கும் இடையில் நடந்த வாக்கு வாதம் முற்றி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது

வீடியோவில் மேம்பாலம் அருகே பணியில் இருந்த போது, போலீசார்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும், பொதுமக்கள் முன்னிலையில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

அருகில் இருந்த சக போலீசார் அவர்களை தடுக்க முயன்றும், அதனைப் பொருட்படுத்தாத இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். போலீஸ் சீருடையில் இருந்தும் இருவரும் ஒருவரை ஒருவர்‌ தாக்கிக் கொண்டதை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்தவாரே சென்றுள்ளனர்.

இந்நிலையில், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக உள்ளுர் போலீஸ் நிலையத்தில், குற்றவாளி போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரெயில்நிலைய கேமராவில் தெரியும் நபரே கொலையாளி, ரெயில்வே போலீஸ் உறுதி

சென்னை, DAILY THANTHI


நுங்கம்பாக்கம் ரெயில்நிலைய கேமராவில் தெரியும் நபரே பொறியாளர் சுவாதியை கொலை செய்தவர் என்று ரெயில்வே போலீஸ் உறுதிசெய்து உள்ளது.


சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் மர்ம ஆசாமியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மர்ம ஆசாமியை வலைவீசி தேடிவரும் போலீஸ் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது.


நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ‘டிராவல் பேக்’கில் ரத்தக்கறையுடன் கத்தி ஒன்றை கைப்பற்றினார்கள். சுவாதியை கொல்ல மர்ம ஆசாமி இந்த கத்தியை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். கத்தியில் இருந்து கை ரேகை எடுக்கப்பட்டது, இந்த ரேகையானது குற்றவாளிகள் தொடர்பான தரவுகளுடன் ஒத்து போகிறதா என்று சோதிக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவத்தால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ரெயில்வே போலீஸ் உறுதி


இந்நிலையில் ரெயில் நிலைய கேமரா பதிவில் தெரியும் நபரே பொறியாளர் சுவாதியை கொலை செய்தவர் என்று ரெயில்வே போலீஸ் உறுதிசெய்து உள்ளது.


கொலை செய்தநபர் தொடர்பாக கூடுதல் பதிவானது கிடைத்து உள்ளது என்று ரெயில்வே போலீஸ் தெரிவித்து உள்ளது. மர்மநபர் கொலை செய்துவிட்டு தப்பித்து செல்லும் காட்சிகள் புதிய பதிவுகளில் இடம்பெற்று உள்ளது என்றும் புதிய காட்சியில் இடபெற்று உள்ளவரின் அடையாளம் ஏற்கனவே வெளியானதுடன் ஒத்துபோகிறது என்றும் போலீஸ் குற்றவாளியை நெருங்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புதிய வீடியோ ஆதாரம் சிக்கியது: 8 நிமிடத்தில் சுவாதியை தீர்த்து கட்டி தப்பி ஓடிய கொலையாளி இன்னும் 4 நாட்களில் கைது செய்துவிடுவோம் என போலீசார் தகவல்

சென்னை,

8 நிமிடத்தில் சுவாதியை தீர்த்து கட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய குற்றவாளியை இன்னும் 4 நாட்களில் கைது செய்துவிடுவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுவாதி

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த 24–ந் தேதி காலையில் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் சுவாதியை மர்ம ஆசாமி ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். அவர் யார்? எதற்காக சுவாதியை கொலை செய்தார்? என்பது தொடர்ந்து மர்மமாகவே நீடித்து வருகிறது.

ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லாததால், கொலையாளியை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஆனால் அதே சமயம், ரெயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை அன்று (24–ந் தேதி) மாலையிலேயே போலீசார் வெளியிட்டனர்.

அதன்பின்னர், பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கிய ரெயில்வே போலீசார், அந்த குற்றவாளிக்கும், சுவாதிக்கும் என்ன சம்பந்தம்? என்பது குறித்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய வீடியோ காட்சி

இந்த நிலையில், நேற்று இந்த கொலை சம்பவம் தொடர்பாக புதிய வீடியோ காட்சி ஆதாரத்தை போலீசார் அதிகாரபூர்வமாக வெளியிட்டனர். அந்த காட்சியில் இடம்பெற்றிருக்கும் நபரும், கடந்த 24–ந் தேதி போலீசார் வெளியிட்ட சந்தேகப்படக்கூடிய நபரின் உருவப்படமும் ஒத்துப்போகிறது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் வந்த சந்தேகப்படக்கூடிய மர்மநபரின் உருவப்படத்தை தனியாக எடுத்து அதை பெரிதாக்கி அவரை அடையாளம் தெரிகிற வகையில் படத்தை போலீசார் தயார் செய்து விட்டதாகவும், இன்னும் 4 நாட்களில் அவனை பிடித்துவிடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

6.35 மணிக்கு...

சுவாதியை கொலை செய்த குற்றவாளி இவர் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் நேற்று கிடைத்த வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றது. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் காலை 6.32 மணிக்கு குற்றவாளி என்று சந்தேகப்படக்கூடிய அந்த நபர் தலையை கீழே குனிந்தபடி நடந்து வருகிறார்.

சுவாதியை அவருடைய தந்தை ரெயில் நிலையத்தில் இறக்கிவிட்ட நேரம் காலை 6.35 மணி, இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் அந்த கொலையாளி ரெயில் நிலையத்துக்குள் சென்றிருக்க வேண்டும். சுவாதி 6.35 மணிக்கு ரெயில் நிலையத்துக்குள் வந்ததும், தான் எப்போதும் ஏறும் பெண்கள் பெட்டியின் அருகே உட்கார சென்றுள்ளார்.

சுவாதி அந்த இடத்தில் தான் உட்காருவார் என்று ஏற்கனவே வேவு பார்த்து வைத்திருந்த குற்றவாளி, அதே இடத்தில் அரிவாளுடன் காத்து கொண்டு இருந்துள்ளார்.

கொலையாளி ஓட்டம்

கொலையாளி ஏற்கனவே திட்டம் தீட்டியது போல் அதே இடத்தில் உட்கார வந்த சுவாதியை, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு கொலையாளி சரமாரியாக வெட்டி இருக்கிறார். ரத்தம் பீறிட்டு வர கீழே விழுந்த சுவாதி துடி துடிக்க உயிரிழந்தை உறுதியும் செய்துள்ளார்.

பின்னர், ரெயில் நிலையத்துக்குள் பயணிகள் அதிகம் வரத்தொடங்கி இருக்கின்றனர். மேலும், அதே நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றும் வேகமாக வந்துள்ளது. இதை பார்த்த கொலையாளி, தன்னை யாராவது அடையாளம் கண்டுவிடுவார்களோ? என்ற அச்சத்தில் அங்கிருந்து ஓட தொடங்குகிறார்.

சுமார் 8 நிமிடத்தில்...

சுவாதியை 2–வது நடைமேடையில் வைத்து கொலை செய்யும் அந்த மர்மஆசாமி, 6.43 மணிக்கு முதலாவது நடைமேடையில் வெட்ட பயன்படுத்திய அரிவாளை கையில் வைத்து கொண்டு ஓடுகிறார். மொத்தத்தில் கொலையாளி சுமார் 8 நிமிடத்தில் சுவாதியை தீர்த்துக்கட்டிவிட்டு அங்கிருந்து சென்று இருக்கிறார்.

கொலைக்கு பயன்படுத்திய அந்த அரிவாளை நுங்கம்பாக்கம்–கோடம்பாக்கம் இடையே தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் வைத்து விட்டு, அதன் அருகே இருந்த சுற்றுச்சுவரை தாவி குதித்து தப்பி சென்று இருக்கிறார்.

4 நாட்களில் பிடித்துவிடுவோம்

தற்போது அந்த வீடியோ காட்சியில் பதிவான அந்த நபர் தான் இந்த கொலையை செய்துள்ளார் என்பது இந்த வீடியோ மூலம் தெளிவாக தெரிகிறது. வீடியோ காட்சியில் பதிவான அந்த நபரின் உருவப்படத்தை பெரிதாக்கி, அதில் முகம் தெளிவாக தெரியும் அளவுக்கு தயார் செய்து வருகிறோம்.

அந்த படத்தை வைத்து குற்றவாளியை இன்னும் 4 நாட்களில் பிடித்துவிடுவோம். அவன் வெளிநாடுகளுக்கோ அல்லது வெளியூருக்கோ செல்லவில்லை. தான் செய்த சம்பவத்தை நினைத்து பயந்து சென்னைக்குள் தான் சுற்றிக்கொண்டு இருக்கிறான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு சொந்த ஊர் ஸ்ரீரங்கம் என்பதால், திருச்சி ரெயில்வே போலீசார் நேற்று சென்னை நுங்கம்பாக்கம், சூளைமேட்டில் உள்ள சுவாதியின் வீட்டில் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் துக்கம் விசாரித்து விட்டு, அவர்களிடம் விசாரணையும் நடத்தினர்.

சுவாதி கொலை: சென்னை போலீஸ் கமிஷனர் அவசர ஆலோசனை



சென்னை

பெண் என்ஜினீயர் சுவாதி கொலை தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அவசர ஆலோசனை நடத்தினார்.

கமிஷனர் அவசர ஆலோசனை

சென்னை நகரில் அரங்கேறி வரும் தொடர் கொலை சம்பவங்களை அடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அவரச ஆலோசனை நடத்தினார்.

இதில், சென்னை நகரில் கொலை, கொள்ளை சம்பவங்கள், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பத்திரிகையாளர்களையும் அழைத்து கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது சென்னை நகரில் குற்ற சம்பவங்களை ஒடுக்குவதற்கு மேற் கொண்டுள்ள நடவடிக்கைகளையும், மேற்கொள்ள நடவடிக்கைகள் குறித்தும் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சென்னை நகரில் நடந்துள்ள கொலை சம்பவங்களில் கூலிப்படைக்கு எந்தவித தொடர்பு இல்லை. சொந்த விறுப்பு, வெறுப்பு சம்பவங்களால் தான் கொலைகள் அரங்கேறி உள்ளன. கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரவு ரோந்து தீவிரம்

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜீனியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ரெயில்வே போலீசாருக்கு உதவியாக சென்னை நகர போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர். சம்பந்தப்பட்ட குற்றவாளி விரைவில் சிக்குவான் என்ற நம்பிக்கை உள்ளது.

சென்னை நகரில் குற்றச்செயல்களை முற்றிலும் ஒடுக்கும் வகையில் இரவு ரோந்து பணி மேலும் தீவிரப்படுத்தப்படும். சாலைகளில் மட்டுமின்றி சந்து, முடுக்குகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டவுடன், மதுகுடிப்பவர்கள் கலைந்து சென்று விட வேண்டும். கடையின் வெளியே கூட்டமாக நின்று பேசக் கூடாது. இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் சேஷசாயி, சங்கர், நுண்ணறிவுப்பிரிவு ஐ.ஜி. வரதராஜீ உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் அருகில் இருந்தனர்.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...