Friday, July 15, 2016

ஜெகத்ரட்சகனின் வீடு, மதுபான ஆலை உட்பட 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை: வரி ஏய்ப்பு புகாரில் நடவடிக்கை; முக்கிய ஆவணங்கள் சிக்கின


திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவரது வீடு, மதுபான ஆலை உட்பட 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தொழிலதிபரும், கல்வி யாளருமான இவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து வருமானவரித் துறை அதிகாரிகள் ஜெகத்ரட்சகனின் அடையாறு வீடு, மகாலிங்கபுரம் வீடு, குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீடு மற்றும் அலுவல கங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அடையாறில் உள்ள வீட்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜெகத்ரட்சகன் வீட்டில் இருந்தார்.

கிழக்கு தாம்பரம் சேலையூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி கள், குரோம்பேட்டையில் உள்ள கல்லூரிகள், வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் உள்ள கல்லூரிகள் ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது. தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல், நிர்வாக அலுவலகங்கள், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரி ஊசுட்டேரியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லும் ஊழியர்களையும் அவர்களது வாகனங்களையும் தீவிர சோத னைக்குப் பிறகே வெளியே அனுப்பினர். புதுச்சேரியில் உள்ள ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான நட்சத்திர விடுதி, வழுதாவூரில் உள்ள அவரது வீடு, தொழில் நிறுவனங்களிலும் வருமானவரித் துறை சோதனை நடந்தது.

உதகை - கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சிகரம் அருகே உள்ள அவரது ஹோட்டலிலும் சோதனை நடந்தது.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி என 40 இடங்களில் 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். தனித்தனி குழுவாக பிரிந்து சென்ற அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் காலை 6 மணி அளவில் சோதனையை தொடங்கினர். இரவு வரை நீடித்தது. சோதனையின்போது ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆவணங் களை வைத்து சம்பந்தப் பட்டவர்களிடம் அதிகாரிகள் விசா ரணை நடத்தினர். இந்த சோதனை குறித்து எந்த தகவல்களையும் கூற முடியாது என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

15 கோடி பறிமுதல்

சோதனையில் சுமார் ரூ. 200 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது. முதல்கட்டமாக கணக்கில் வராத ரூ. 15 கோடியை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெற்றது.

8 பேர் உயிரை காப்பாற்றிய டாபர்மேன்... 4 நாகங்களுடன் சண்டையிட்டு உயிரிழந்தது!



ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தில்  சேப்கபூர் கிராமத்தை சேர்ந்தவர் திபாகர் ரய்தா, இவர் தனது  வீட்டில் டாபர் மேன் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். அவரது வீட்டை பொறுப்புடன் பாதுகாத்து வந்துள்ளது அந்த டாபர்மேன். 

கடந்த திங்கட்கிழமை அருகிலிருந்த காட்டுப்பகுதியில் இருந்து 4 நாகப்பாம்புகள் திபாகர் ரய்தாவின் வீட்டிற்குள் புகுந்துள்ளன. இதனைக்  கண்ட அவரின் வளர்ப்பு நாய், அந்த 4 பாம்புகளுடன் கடுமையாக  சண்டையிட்டிருக்கிறது. 

முடிவில் 4 நாகப் பாம்புகளையும் அந்த நாய் கடித்துக் கொன்றது. அதே நேரத்தில், நான்கு நாகங்களும் நாயைக் கொத்தியதில் அதன் உடலில் பாம்புகளின் கொடிய விஷம் பரவியது. இதனால் மயங்கிய நிலையில் கீழே விழுந்த டாபர்மேன் உயிரழந்தது. வீட்டருகே தனது செல்லநாயும் பாம்புகளும் இறந்து கிடப்பதைக்  கண்டு திபாகர் ராய்தா அதிர்ச்சியடைந்தார். பின்னர் நிலைமையை ஊகித்து கொண்ட திபாகரும், அவரின் குடும்பத்தினரும் கண்ணீர் சிந்தினர். 

திபாகர் வீட்டில் மொத்தம் 8 பேர் இருந்துள்ளனர். வீட்டிற்குள் பாம்புகள் புகுந்திருந்தால் கண்டிப்பாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். இதனை தெரிந்து கொண்ட அந்த ஐந்தறிவு ஜீவன், 4 பாம்புகளையும் தீரத்துடன் எதிர்த்து போராடி தனது உயிரையும் மாய்த்து கொண்டுள்ளது. நாயின் நன்றியையும், விசுவாசத்தையும் அறிந்த அந்த பகுதி மக்கள் ஏராளமானோர், திரண்டு வந்து மலர்கள் தூவி, தக்க மரியாதையுடன் அந்த டாபர்மேனை அடக்கம் செய்துள்ளனர்.

இந்தியாவில் எந்த ரக போனில் இனி வாட்ஸ் ஆப் இயங்காது?



இந்தியாவில் சில ஸ்மார்ட் போன் ரகங்களில் வாட்ஸ் ஆப் சேவை இந்த ஆண்டு இறுதியில் இருந்து ரத்து செய்யப்படுகிறது.



இந்தியாவில் 95 சதவீத ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் பயன்பாட்டில் இருக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சில மொபைல் போன்களில் வாட்ஸ் ஆப் வசதி ரத்து செய்யப்படும் என கடந்த மார்ச் மாதத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்திருந்தது.
னைத்து பிளாக்பெரி, பிளாக்பெரி 10 ரக போன்கள், நோக்கியா எஸ் 40, நோக்கியா சிம்பியன் எஸ் 60, ஆண்ட்ராயிட் 2..1 ஆண்ட்ராய்ட் 2.2 ரக போன்கள், வின்டோஸ் போன் 7.1, ஐபோன் .-3ஜிஎஸ், ஐஓஎஸ் 6 ரக போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வகை ஸ்மார்ட் போன்களில் பாதுகாப்பு வசதிகள் குறைபாடு இருப்பதாக வாட்ஸ்ஆப் சேவை ரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

'ஆங்கிலத்தில் பேசத் தெரியாதது அவமானமா?' -மாணவியின் மரணம் சொல்லும் பாடம்

vikatan.com

கல்லூரியில் ஆங்கிலத்தில் பேச முடியாத காரணத்திற்காக, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் பி.காம் மாணவி ஒருவர். " ஆங்கில மோகத்தின் உச்சகட்ட அவலம் இது. தாய்மொழியில் படித்தால் அவமானம் எனக் கற்பிக்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" எனக் கவலையோடு பேசுகின்றனர் கல்வியாளர்கள்.

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார் மாணவி ராஜலட்சுமி. மிகுந்த வறுமைச் சூழலுக்கு இடையில் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்தார். முழுக்க தமிழ் வழிக் கல்வியில் படித்தவருக்கு, கல்லூரியின் ஆங்கிலச் சூழல் ஒத்துவரவில்லை. சக மாணவ, மாணவிகளிடையே சரளமான ஆங்கிலத்தில் பேச முடியாமல் வேதனைப்பட்டு வந்திருக்கிறார். நேற்று ராஜலட்சுமியின் தாய் சுசீலா வேலைக்குச் சென்றதும், வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார் மாணவி.

தற்கொலைக்கான காரணமாக மாணவி குறிப்பிட்டுள்ள ஒற்றைக் காரணம், ' ஆங்கிலத்தில் பேச முடியாததால் அவமானமாக இருக்கிறது' என்பதுதான். " மாணவியின் மரணம் மிகுந்த வேதனையைத் தருகிறது. தாய்மொழியில் படிக்கும் பொறியாளர்கள் இருந்தால்தான், நமது மாநிலத்தை வளர்த்தெடுக்க முயற்சி செய்வார்கள். சொந்த மொழியில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள்தான், நமது மக்களின் நலன் குறித்து சிந்திப்பார்கள். இங்கு உருவாக்கப்படும் மாணவர்களின் நோக்கமெல்லாம் வெளிநாட்டை நோக்கித்தான் இருக்கிறது. வணிகமயமான கல்விச் சூழலில் ஆங்கிலத்தையே உயர்த்திப் பிடிக்கிறார்கள்" என வேதனையோடு பேச தொடங்கினார் திண்டிவனத்தில் தாய்த் தமிழ் பள்ளியை நடத்தி வரும் பேராசிரியர்.பிரபா கல்விமணி.

அவர் நம்மிடம், " இந்தி மொழி திணிப்புக்கு எதிராக, ' உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' எனச் சொல்லி உயிர்த் தியாகம் செய்தவர்கள் ஏராளம். அந்தத் தியாகத்தின் பலனாக ஆட்சிக்கு வந்தவர்கள், தாய்மொழியை வளர்த்தெடுப்பதற்கு எந்த அக்கறையையும் காட்டாததின் விளைவைத்தான், மாணவியின் மரணம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இது முழுக்க முழுக்க நமது கல்விமுறையில் ஏற்பட்ட குளறுபடி. வெளிநாடுகளில் பத்து லட்சம் மக்கள் இருக்கக் கூடிய மாநிலங்களில் உயர்கல்வி படிப்பு முழுவதையும் தங்கள் மொழியிலேயே கற்றுக் கொள்கிறார்கள். அதன்மூலம் எண்ணற்ற கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்துகிறார்கள். பத்து கோடி மக்கள் பேசக் கூடிய தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தை நோக்கி ஓட வைக்கிறார்கள்.

கற்றுக் கொள்வேன்' எனக் கூறும் சமூகத்தை உருவாக்க வேண்டும். கடந்த தி.மு.க ஆட்சியில் பொறியியில் படிப்பில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட மூன்று படிப்புகளை தமிழில் கொண்டு வந்தார்கள். எங்கள் தாய்த் தமிழ்ப் பள்ளியில் படித்த அகிலா என்ற மாணவி, தாய்மொழியில் பொறியியல் படித்து வருகிறார். சிறந்த மதிப்பெண்களை வாங்கியிருக்கிறார். இந்த மாணவர்களுக்கு தமிழ்வழிப் பொறியியல் படிப்புகளைக் கொடுத்தவர்கள், அதற்கென சரியான புத்தகங்களைக்கூட அச்சிடவில்லை. இலவச தொலைக்காட்சிக்கும் மிக்ஸிக்கும் பணத்தை செலவிடுபவர்கள், தாய்மொழிக் கல்விக்கான புத்தகங்களை அச்சிடக்கூட பணத்தை ஒதுக்குவதில்லை.

தற்போது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதிலும், ' ஐந்தாம் வகுப்பு வரையில் மாநில அரசு விரும்பினால், தாய்மொழியில் கல்வி கற்க வைக்கலாம். ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலக் கல்விதான்' என்கின்றனர். இது மிகவும் வேதனையானது. மல்டி நேஷனல் கம்பெனிகளுக்குத் தேவையான ஆட்களைத் தயார் செய்வதற்கான திட்டம் இது. நமது நாட்டில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் முறையே தவறானது. ஒரு குழந்தைக்கு மொழியை அறிமுகப்படுத்தும்போது, முதலில் கேட்பது, பிறகு பேசுவது, அடுத்து எழுதுவது என மூன்று படிநிலைகளில்தான் ஒரு மொழி புரிய வைக்கப்படுகிறது. இங்கு எடுத்த உடனேயே, ஆங்கிலத்தில் எழுதுவதைத்தான் முதலில் செய்கிறார்கள். அடிப்படையே தவறாக இருக்கிறது. ஆங்கிலத்தில் படித்தால் பெருமை என நினைக்கும் மெத்தப் படித்த மேதாவிகள் இருப்பதால்தான், தற்கொலையை நோக்கி மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். அரசின் பார்வையில் மாற்றம் வர வேண்டும்" என ஆதங்கப்பட்டார் பிரபா கல்விமணி.

ஆ.விஜயானந்த்

சுவாதி கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம்: ராம்குமார் அளித்துள்ள வாக்குமூலம் பதிவு


ரயில் நிலையத்துக்கு சென்று நடித்துக் காட்டுகிறார்

‘சுவாதியை நான்தான் கொலை செய்தேன்’ என்று ராம்குமார் அளித் துள்ள தெளிவான வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று நடிக்க வைத்து வீடியோவில் பதிவு செய்யவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) கடந்த மாதம் 24-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் செங் கோட்டை அடுத்த டி.மீனாட் சிபுரத்தை சேர்ந்த ராம் குமார் (24) கடந்த 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். போலீஸார் பிடிக்க முயன்றபோது பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு அவர் தற் கொலைக்கு முயன்ற தாக கூறப்படு கிறது. போலீஸார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.

அவரை 3 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, 13-ம் தேதி மாலை முதல் ராம்குமாரிடம் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரா சென்றது ஏன்?

சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை கொலை செய்ய வேறு யாராவது உதவி செய்தார்களா? என்பது போன்ற பல கேள்வி களை ராம்குமாரி டம் போலீ ஸார் கேட்டுள்ளனர். சுவாதி கொலைக்கு முன்பு, 20, 21-ம் தேதி களில் ராம்குமார் ஆந்திர மாநிலம் சென்று வந்துள் ளார். அங்கு சென்று வந்தது ஏன்? கொலை செய் யச் சொல்லி வேறு யாரும் தூண்டி னார்களா? என்றும் ராம்குமாரிடம் போலீஸார் கேட்டுள்ளனர்.

‘நான்தான் கொன்றேன்’

விசாரணைக்குப் பிறகு, ‘கொலையை நான்தான் செய்தேன்’ என்று ராம்குமார் ஒப்புக்கொண்ட தாகவும், அவரது வாக்குமூலத்தில் அது தெளிவாக இருப்பதாகவும் போலீஸார் தெரி வித்துள்ளனர். ராம்குமார் வாக்கு மூலம் கொடுக் கும்போது அதை ரிக்கார்டு செய்து வைத்திருக்கி றோம். யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் அவரே கொடுத்த வாக்குமூலம் அது என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

ரகசிய இடத்தில்தான் ராம்குமா ரிடம் விசாரணை நடந்தது. நேரில் நடித் துக் காட்டுவதற்காக நுங்கம்பாக்கம் காவல் நிலை யத்துக்கு அவரை போலீஸார் நேற்று காலை அழைத்து வந்தனர். மேஜை முன்பாக இருந்த சேரில் அவரை உட்கார வைத்து, உதவி ஆணையர் தேவராஜ் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

சுவாதி கொலை நடந்த நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்துக்கு ராம் குமாரை நேரில் அழைத்துச் சென்று, கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டுவதற்கான ஏற்பாடு கள் தீவிரமாக நடந்தன. ஆனால் செய்தியாளர்கள் அதிக அளவில் கூடியதால், அந்த திட் டத்தை போலீஸார் ஒத்திப்போட் டனர்.

நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று நடித்துக் காட்டச்சொல்லி விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய் துள்ளனர். அதை போலீஸார் வீடியோ எடுத்து, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள். அவர் தங்கி யிருந்த மேன்ஷனுக்கும் அழைத் துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்கிடையில், சுவாதி பற்றிய பல தகவல்கள் அவரது நண்பர் பிலால் மாலிக்குக்கு தெரிவதால், அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்குமார் கூறும் தகவல்களை பிலால் மாலிக்கிடம் கேட்டு, அதுபற்றி சுவாதி அவரிடம் ஏதாவது கூறி யிருக்கிறாரா என்று போலீஸார் விசாரிக் கின்றனர். போலீஸாருக்கு உதவும் வகையில் பிலால் மாலிக் கும் நேற்று காலை முதல் மாலை வரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலேயே இருந்தார்.

போலீஸ் காவல் முடிகிறது

ராம்குமாருக்கு வழங்கப்பட்ட 3 நாள் போலீஸ் காவல் இன்று டன் முடிகிறது. இன்று மாலை 5 மணி அல் லது அதற்கு முன்பாக எழும்பூர் நீதி மன்றத்தில் ராம்கு மாரை போலீஸார் ஆஜர்படுத்து வர். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக் கப்படுவார்.

புதுக்கோட்டையில் 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அடுத்த கல்வியாண்டு முதல் செயல்படும்: தமிழக அரசு தகவல்

THE HINDU

புதுக்கோட்டையில் 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் தொடங் கப்பட உள்ள புதிய அரசு மருத் துவக் கல்லூரி அடுத்த கல்வி யாண்டு முதல் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அனைத்து மக்க ளும், குறிப்பாக ஏழை எளிய மக்கள், தரமான மருத்துவ சேவை பெற வேண்டும் என்ற அடிப்ப டையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு முன்னோடி சுகாதாரத் திட்டங்க ளை செயல்படுத்தி வருகிறது.

மக்கள் உடல் நலன் காக்கும் வகையிலான நல்வாழ்வுத் திட்டங்களை திறம்பட செயல்ப டுத்தத் தேவையான மருத்துவர் கள் இருப்பது அவசியமாகும். எனவேதான், அரசு ஆண்டுதோ றும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சிவகங் கை, திருவண்ணாமலை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் ஆகிய இடங் களில் 3 மருத்துவக் கல்லூரி கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர்க்கப்ப டுகின்றனர். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் 7 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 410 மருத் துவ பட்டப்படிப்பு இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலில் அனுமதி பெறப்பட்டு மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர்க்கப்படு கின்றனர்.

இந்த ஆண்டு, கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 மாணவர் கள் சேர்க்கையுடன் மருத்துவப் படிப்பை தொடங்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு மாண வர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 810 மருத் துவ பட்டப்படிப்பு இடங் கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கரூர் மற்றும் புதுக்கோட்டை யில் தலா 150 மருத்துவ மாணவர் கள் சேர்க்கையுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங் கப்பட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இந்த 2 இடங்களி லும் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக் கவும் தலா ரூ.229 கோடியே 46 லட்சம் நிர்வாக ஒப்புதலும், நிதி ஒப்பளிப்பும் வழங்கப் பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி 2017 - 2018-ம் கல்வியாண்டு முதல் 150 மாண வர்கள் சேர்க்கை யுடன் தொடங்க கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற் கான ஆயத் தப் பணிகளை மேற் கொள்ள ஒரு சிறப்பு அலுவலர் மற்றும் முதல்வர் நியமனம் செய்யப்பட் டுள்ளார்.

கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத் துவக் கல்லூரி மருத்துவமனை யில் தேவையான பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர் கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள் என 808 புதிய பணியிடங்கள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்தப்படுவ தால் அரசுக்கு தொடர் செலவின மாக ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.39 கோடியே 68 லட்சம் செலவாகும்.

புதுக்கோட்டையில் தொடங் கப் பட உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதற்கட்டமாக பேராசிரியர்கள், இணைப் பேராசி ரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் மருத்துவம் சாராத பணியாளர் கள் என 161 புதிய பணியி டங்களை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த கூடுதல் பணியிடங்கள் காரணமாக, அர சுக்கு தொடர் செலவினமாக ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.8 கோடியே 87 லட்சம் செலவாகும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தலைவர்

காமராஜர்: மக்கள் தலைவர்

    சாரி
    கே.கே.மகேஷ்
    சிவசு
    வெ.சந்திரமோகன்
    நீதிராஜன்
    வடிவமைப்பு: ம.ரீகன்



ஞானத் தந்தைக்கு மரியாதை!

பெருந்தலைவர் காமராஜர் மறைந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாளுக்கு நாள் அவருடைய கீர்த்தி உயருகிறதே அன்றி குறையவில்லை. தமிழகம் இன்றைக்கு எவற்றையெல்லாம் பெருமையாகக் கொண்டாடுகிறதோ அவற்றில் பெரும்பாலானவற்றுக்குத் தன்னுடைய வெறும் 9 ஆண்டுகள் (1954-1963) ஆட்சிக் காலகட்டத்தில் விதை போட்டவர்.
காமராஜரைப் பற்றிப் பேசும்போதெல்லாம், அவருடைய எளிமையை, நேர்மையை, தொலைநோக்குப் பார்வை கொண்ட செயல்பாடுகளைக் கொண்டாடிப் பேசுவதும், அவரை இன்றைய அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு, ஏக்கப் பெருமூச்சை வெளிப்படுத்துவதும் நம்முடைய இயல்பு. அரசியலில் மட்டும் அல்ல; ஒவ்வொரு துறையிலும் காமராஜர்கள் இன்றைக்குத் தேவைப்படுகிறார்கள். காந்தியம் உருவாக்கிய தமிழகத்தின் மகத்தான ஆளுமைகளில் ஒருவரான காமராஜரிடம் நாம் வியந்து பேசும் பண்புகள் நாடு மட்டும் கோரும் பண்புகள் அல்ல; ஒவ்வொரு வீடும் கோருபவை.
காமராஜர் ஆட்சிக்குப் பிந்தைய இந்த அரை நூற்றாண்டில், ஏன் இன்னொரு காமராஜரை நம்மால் உருவாக்க முடியவில்லை என்ற கேள்விக்கான பதில் நம்முடைய மதிப்பீடுகளின், விழுமியங்களின் வீழ்ச்சியில் இருக்கிறது. வரலாற்றை மறக்கும் சமூகம் வரலாற்றைத் தனதாக்க முடியாது. இதை 'தி இந்து' உணர்ந்திருக்கிறது. கூடவே, இளைய தலைமுறையினரிடம் நம் வரலாற்றையும் வரலாற்று நாயகர்களின் சாதனைகளையும் தொடர்ந்து பேச வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறது. தொடர்ந்து வரலாறு பேசுவோம்! புதிய வரலாறுகளை உருவாக்குவோம்!

காமாட்சி ராஜா!

இன்றைய விருதுநகருக்கு அன்றைய பெயர் விருதுபட்டி. 1903 ஜூலை 15-ல் பிறந்தார் காமராஜர். அப்பா குமாரசாமி, தேங்காய் வியாபாரி. அம்மா சிவகாமி. இவர்களுடைய குலதெய்வத்தின் பெயர் காமாட்சியம்மன். அதனால், பிள்ளைக்குக் காமாட்சி என்று பெயர் வைத்தார்கள். சிவகாமியோ பிள்ளையை எப்போதும் செல்லமாக 'ராஜா' என்றே அழைத்தார். காமாட்சியும் ராஜாவும் கலக்க 'காமராஜர்' ஆகிவிட்டார். காமராஜருக்கு ஒரு தங்கை உண்டு. நாகம்மாள். காமராஜருக்குத் தன் தங்கை மீது கொள்ளைப் பாசம்!

அழைத்தது தேசம்!

விருதுபட்டியில் திண்ணைப் பள்ளி நடத்தியவர் வேலாயுதம் வாத்தியார். அவரிடம்தான் காமராஜர் முதலில் படித்தார். பிறகு, ஏனாதி நாயனார் வித்யாசாலை. பிறகு சத்திரிய வித்யாசாலை. படிக்கும் காலத்திலேயே சுதந்திரப் போராட்டக் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்துவிட்டார் காமராஜர். விளைவாக, படிப்பை ஆறாம் வகுப்போடு நிறுத்திவிட்டு, மாமன் துணிக்கடைக்கு வேலைக்கு அனுப்பினார்கள். அங்கும் காமராஜரின் கவனம் அரசியலை நோக்கியே போனது. பக்கத்தில் எங்கு கூட்டம் நடந்தாலும் போய் விடுவார். காமராஜரின் இன்னொரு மாமன் திருவனந்தபுரத்தில் மரக் கடை வைத்திருந்தார். அங்கே அனுப்பினார்கள். ஆனால், அங்கேயும் காந்தியின் காங்கிரஸ் காமராஜரைத் துரத்தியது.

சுயம்பு!

காமராஜரைப் 'படிக்காதவர்' என்று சொல்லிவிட முடியாது. கல்விக் கூடங்களுக்கு வெளியே தன்னை வளர்த்துக்கொண்ட சுயம்பு அவர். பத்திரிகைகள், புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார். சொந்த முயற்சியில் ஆங்கிலம் கற்றார். கேரளத்தில் இருந்த கொஞ்ச காலத்தில் மலையாளத்தைக் கற்றுக்கொண்டுவிட்டார். தெலுங்கும் தெரியும். இந்தியும் பேசுவார். நாடாளுமன்றத்தில் அவர் ஒரு முறை ஆங்கிலத்தில் உரையாற்றியதை 'மாசற்ற ஆங்கிலம்' என்று புகழ்ந்து எழுதியது 'தி இந்து' ஆங்கில நாளிதழ். ஆனாலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் மாநாடுகளில் பேசும்போது தலைவர் பேசுவது என்னவோ தமிழில்தான். கையெழுத்தும் தமிழில்தான்!

காந்தி தரிசனம்!

காந்தி 1921-ல் மதுரைக்கு வந்தபோது அவரைப் பார்த்தார் காமராஜர். காந்தியே தனது வழிகாட்டி என்று முடிவெடுத்தார். காமராஜரிடம் வெளிப்பட்ட சுயமரியாதை, எளிமை, நேர்மை இப்படிக் கொண்டாடத் தக்க பல பண்புகளுக்கு உந்துசக்தி காந்தி. பின்னாளில் நேருவையும் தனது மனதில் உயர்ந்த பீடத்தில் வைத்திருந்தார் காமராஜர். இளம் வயதிலேயே அவருக்குள் இருந்த ஊக்கம் மிக்க தலைவனை அடையாளம் கண்டவர் சத்தியமூர்த்தி. தன்னுடைய தலைவராக சத்தியமூர்த்தியையே வரித்துக்கொண்டார் காமராஜர்.

படைக்கு முந்து!

போராட்டங்களுக்கு அஞ்சாத மனிதர் காமராஜர். கேரளத்தின் வைக்கத்தில் 1923-ல் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் நடந்தபோது, பிற்காலத் தமிழகத்தைச் செதுக்கிய இரு தலைகள் அதில் பங்கேற்றன. ஒருவர் பெரியார்; இன்னொருவர் காமராஜர்! சிறைக்கும் அஞ்சியதில்லை. தன் வாழ்வில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் காமராஜர். போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் காமராஜரின் பூர்விகச் சொத்துகளைச் செல்லரித்தன. தேசத்துக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை திருமணம் செய்துகொள்ளவதில்லை என்று நண்பர்களுடன் சபதம் எடுத்துக்கொண்டவர், கடைசி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. காமராஜர் அகராதியில் தியாகம் இல்லாத பொது வாழ்வுக்கு எந்த அர்த்தமும் இல்லை!

பூசல்களிடையே பூத்த பூ!

ஆங்கிலேயர் கால இந்தியாவில் நடத்தப்பட்ட தேர்தல்களை ஆரம்பத்தில் காங்கிரஸ் புறக்கணித்தது. பிறகு, தேர்தலில் பங்கேற்பது என்று முடிவெடுத்தது. 1934-ல் நடந்த தேர்தலில் வெற்றிகளைக் குவித்தது தமிழ்நாடு காங்கிரஸ். 1936-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சத்தியமூர்த்தி தலைவர் ஆனார். காமராஜர் பொதுச்செயலர் ஆனார். 1937-ல் சென்னை மாகாண சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தது. விருதுநகரை உள்ளடக்கிய சாத்தூர் தொகுதியில் போட்டியின்றி காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் ஏற்பட்ட அதிகாரச் சண்டை தீவிரமானது. ராஜாஜியை எதிர்கொள்ள காமராஜர்தான் பொருத்தம் என்று முடிவு செய்தார் சத்தியமூர்த்தி. 1940-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தமிழகத் தலைவர் ஆனார் காமராஜர்.

மக்களின் முதல்வர்!

தமிழக காங்கிரஸில் சத்தியமூர்த்தி, ராஜாஜி என்று இரு மையங்கள் இருந்தன. முதல்வராக ஆட்சியை ராஜாஜி வைத்திருந்தாலும், கட்சியைத் தன் வசம் வைத்திருந்தார் சத்தியமூர்த்தியின் சீடரான காமராஜர். ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை அறிவித்தபோது கடும் எதிர்ப்பு உருவானது. காலையில் பள்ளியில் படிப்பு: மாலையில் அவரவர் குலத்தொழிலை மேற்கொள்வது எனும் முறை இது. எதிர்ப்பை எதிர்கொள்ள பதவி விலகும் முடிவெடுத்தார் ராஜாஜி. இக்கட்டான இந்தச் சூழல்தான் காமராஜரை முதல்வர் இருக்கையை நோக்கி நகர்த்தியது. முதல்வரான உடனேயே குலக்கல்வி முறையை ஒழித்தார்.

சீர்திருத்த முதல்வன்!

சமூக நீதி இல்லாமல் இந்தியாவில் முன்னேற்றம் சாத்தியம் இல்லை என்பதை முழுமையாக உணர்ந்தவர் காமராஜர். அரசியல் சாசனத்தில் அவர் முன்முயற்சியால் செய்யப்பட்ட முதல் திருத்தம் இதற்குச் சிறந்த உதாரணம். "கல்லூரியில் எங்களுக்கு இடம் கிடைக்காததற்குக் காரணம் இடஒதுக்கீடு முறை. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" என்று ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சீனிவாசன், செண்பகம் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுவில் இருந்த அல்லாடி கிருஷ்ணமூர்த்தி ஐயரே அவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். சென்னை உயர் நீதிமன்றமும் இடஒதுக்கீட்டுக்குத் தடை விதித்துவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் போனது தமிழக அரசு. அங்கும் கதவு அடைக்கப்பட்டது. இதையடுத்து, அரசியல் சாசனத்தைத் திருத்த வேண்டும் என்று முழங்கினார் பெரியார். பிரதமர் நேருவிடம் பேசினார் காமராஜர். முதல் முறையாக அரசியல் சாசனம் திருத்தப்பட்டது. இன்றும் இடஒதுக்கீட்டு முறையைக் காக்கும் அரணாக அது நீடிக்கிறது.

கல்விப் புரட்சி!

காமராஜரின் சாதனைகளிலேயே மகத்தானது, தமிழக வரலாற்றிலேயே கல்வித் துறையில் அதிகபட்ச வளர்ச்சியைக் கொடுத்தவர் அவர் என்பது. அனைவருக்குமான இலவச கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். 1957-1962 இடைப்பட்ட காலகட்டத்தில் 13,000-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தார். மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ஆக உயர்ந்தது. இந்தச் சாதனையைப் போற்றும் வகையிலேயே 2008 முதல் கல்வி வளர்ச்சி தினமாக காமராஜரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்.

முடியாது.. அது அகராதியில் கிடையாது!

அரசு அதிகாரிகளை காமராஜர் கையாளும் விதம் சுவாரஸ்யமானது. விவசாயம், வளர்ச்சித் திட்டம் என்று எதுவாகயிருந்தாலும் "இதைச் செய்ய முடியாது" என்று எந்த அதிகாரியும் அவரிடம் சொல்ல முடியாது. "முடியாதுன்னு சொல்ல நீ எதுக்குன்னேன்?'' என்பார். அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால், சாதிக்க வேண்டும்; சாக்குபோக்கு சொல்லக் கூடாது!

கல்விப் பசியாற்றியவர்!

காமராஜர் கொண்டுவந்த புரட்சித் திட்டமான மதிய உணவுத் திட்டம்கூட இப்படியான தடைகளைத் தாண்டியே வந்தது. பள்ளிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்கவும், இடைநிற்றலைக் குறைக்கவும் திட்டமிட்டு 1956-57-ல் இத்திட்டத்தைக் கொண்டுவந்தார். அன்றைக்கெல்லாம் இப்படியான திட்டத்தைக் கொண்டுவரும் அளவுக்கு அரசாங்க கஜானாவில் பணம் கிடையாது. ஆனாலும் மக்களின் ஆதரவோடு இந்த மகத்தான திட்டத்தைத் தொடங்கினார். விவசாயிகள் தங்கள் விளைச்சலில் ஒரு பங்கை இத்திட்டத்துக்குத் தந்தனர். ஊர் கூடி தேர் இழுத்த திட்டம் இது.

ஆவடி சோஷலிஸம்!

சென்னை, ஆவடிக்கு அழியாப் புகழைத் தந்தவர் காமராஜர். அவர் முதல்வராக இருந்தபோது காங்கிரஸ் தேசிய மாநாட்டை அங்கே 1955-ல் நடத்தினார். சோஷலிஸம்தான் காங்கிரஸின் சமூகக் கொள்கை என்பதை உரக்கச் சொல்லிய மாநாடு அது. மாநாட்டை நடத்தியதோடு மட்டும் அல்லாமல், சோஷலிஸத்துக்கான முன்னுதாரண மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகத்தை வளர்த்தெடுத்தார். தமிழகத்திலுள்ள பெரும்பாலான தொழிற்பேட்டைகள், பொதுத்துறை நிறுவனங்கள் காமராஜர் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவையே. இன்றைக்குத் தெற்காசிய அளவில் பிரம்மாண்டமானதாகக் கருதப்படும் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கான விதை ஆவடி மாநாட்டின் தொடர்ச்சி.

மின்னிய பொற்காலம்!

தமிழகத்தின் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட காமராஜர், தொழில் சூழலுக்கு மின் உற்பத்தி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியவர். பெரியார் நீர் மின்னுற்பத்தித் திட்டம், குந்தா நீர் மின்னுற்பத்தித் திட்டம் எல்லாம் அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டவை. இன்றைக்கு தேசிய அளவில் கொண்டாடப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டமும் காமராஜரின் பொற்கால ஆட்சியின் விளைவேயாகும். மின்னுற்பத்தியில் சென்னை மாகாணத்துக்கு மூன்றாவது இடம் பெற்றுத் தந்ததும் அவரது சாதனைகளுள் ஒன்று!

விவசாயிகளின் ஒளிவிளக்கு!

ஒரு நல்ல ஆட்சியாளர் முதலில் விவசாயிகளைத்தானே கொண்டாடுவார்? காமராஜர் ஆட்சிக்கு வந்த உடனே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1962-ல்
நில உச்சவரம்புச் சட்டத்தைக் கொண்டுவந்தார். 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும் மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்க வழிவகுக்கப்பட்டது. நீர்வளத்தைப் பெருக்க மணிமுத்தாறு திட்டம், கீழ்பவானி திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், அமராவதி திட்டம், ஆரணியாறு திட்டம், வைகை திட்டம், காவிரி கழிமுக வடிகால் திட்டம், புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்தார். தமிழகத்தின் பெரும்பாலான நதிநீர்த் திட்டங்கள் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை.

தமிழ்த் தொண்டர்!

தமிழில் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தவர் காமராஜர். அவரது ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி வெளியிடப்பட்டது. தமிழ் ஆட்சி மொழிச் சட்டம், தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், 'தமிழ்ப் பாடநூல் வெளியீட்டுக் கழகம்' என்று தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். 'மெட்ராஸ் ஸ்டேட்'டைத் தமிழில் தமிழ்நாடு என்று மாற்றி எழுத 1962-ல் அவரது ஆட்சியில் மசோதா கொண்டுவரப்பட்டது. அது தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை என்றாலும், 1969-ல் அண்ணா ஆட்சியில் பெயர் மாற்றம் நிறைவேற அதுவும் ஒரு முக்கியக் காரணி எனலாம்.

பஞ்சாயத்து ஆட்சி!

கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சியில் அக்கறை செலுத்தினார். ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அதிகாரங்களும் நிதி ஆதாரமும் உட்கட்டுமான வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன.

மக்களில் ஒருவர்!

காமராஜர் ஒன்பது ஆண்டு காலம் முதல்வராக இருந்தார். அதற்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் எப்போதும் அவருக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளியே இருந்ததில்லை. மக்களால் எளிதில் அணுகக் கூடிய தலைவராகவே இறுதிவரை இருந்தார். முக்கியமாக, அரசு அதிகாரத்தின் பல்வேறு மட்டங்கள் தனக்கும் மக்களுக்கும் தடையாக இருந்துவிடக் கூடாது என்று உறுதியுடன் இருந்தார்.

கே.பிளான்!

'மூத்த தலைவர்கள் அரசுப் பொறுப்புகளிலிருந்து விலகி கட்சிப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இளைய தலைவர்களை அரசுப் பதவிகளில் அமர்த்த வேண்டும்' என்பது காமராஜர் முன்வைத்த திட்டம். காங்கிரஸ் இயக்கத்தை மேலும் பலமடங்கு பலப்படுத்துவதற்காக இதைக் கொண்டுவந்தார். அவரது பெயரிலேயே 'கே.பிளான்' என்று நாடு முழுவதும் இத்திட்டம் பேசப்பட்டது.
தானே ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதால் முதல்வர் பதவியை துறப்பதற்கு காமராஜர் தயாரானார். ஆனால், அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்த பெரியார் இதைக் கடுமையாக எதிர்த்தார். இது ஒரு அரசியல் தற்கொலையாக அமையும் என்று எச்சரித்தார். எனினும், தனது முடிவில் உறுதியாக இருந்த காமராஜர் பதவி விலகியதுடன், பக்தவத்சலத்தைப் பதவியில் அமர்த்தினார். இறுதியில் பெரியார் சொன்னதுபோலவே நடந்தது. காமராஜரோடு சேர்ந்து தமிழகத்தில் காங்கிரஸும் அதோடு சரிந்தது.

கிங் மேக்கர்!

நேருவின் மறைவுக்குப் பின்னர் பிரதமர் பதவிக்கான போட்டி எழுந்தது. லால் பகதூர் சாஸ்திரி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்ன ணியில் காமராஜரின் பங்கு அளப்பரியது. அடுத்த 20 மாதங்க
ளில் சாஸ்திரி மரணம் நிகழ மீண்டும் பிரதமருக்கான போட்டி தொடங்கியது. கடந்த முறை போலவே மொரார்ஜி தேசாய் இம்முறையும் நேரடியாகக் களத்தில் நின்றார். பிரதமர் பதவியில் காமராஜரே அமர வேண்டும் என்ற குரல்களும் ஒலித்த காலகட்டத்தில் இந்த முடிவுகளை எடுத்தார் காமராஜர். இந்திய அரசியலில் 'கிங் மேக்கர்' எனும் வார்த்தைக்கு அழுத்தமான அர்த்தம் கொடுத்தவர் காமராஜர்தான்!

எதிரிக்கட்சி அல்ல!

காங்கிரஸைத் தமிழ்நாட்டை விட்டு ஒழித்துக்கட்டுவேன் என்று சபதம் போட்டவர் பெரியார். அவரே பின்னாளில், "இன்றைய காமராஜர் ஆட்சியில் நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்திராதது" என்று தள்ளாத வயதிலும் ஊர் ஊராக காமராஜர் ஆட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார். அரசியல்ரீதியாக காமராஜருக்குக் கடும் சவாலாக இருந்த திமுக நிறுவனர் அண்ணா தனிப்பட்ட வகையில் காமராஜரைக் கொண்டாடினார். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தத்துடனும் நெருங்கிய நட்பு காமராஜருக்கு இருந்தது. எதிர் தரப்பாக இருந்தாலும், எதிரி மனப்பான்மை காட்டாத காமராஜரின் அரசியல் பண்பு அது.

ஏன் காமராஜர் நமக்குத் தேவை?

மனிதன் என்பவன் பணம் காய்ச்சி மரம் அல்ல. ஒட்டுமொத்த சமூகத்துக்காகவும் தன்னாலான பங்களிப்பை நிறைவேற்ற எத்தனிக்கும் ஒரு சமூக ஊழியன். இன்றைக்குத் தமிழ்ச் சமூகம் அனுபவிக்கும் ஒவ்வொரு சந்தோஷத்துக்கும் பின்னும் காமராஜரைப் போன்ற எண்ணற்ற ஆளுமைகளின் தியாகம் இருக்கிறது. ஒரு சமூகத்தை உயிரோட்டத்தோடு அடுத்த தளத்தை நோக்கி நகர்த்துவது இந்தத் தியாகம்தான். இந்தத் தியாகத்தைப் போற்றுவதன் மூலம் உண்மையில் நமக்கு நாமே எரிபொருள் ஊற்றிக்கொள்கிறோம். உந்துசக்தி பெறுகிறோம்.

காமராஜரைத் தரிசிக்க!

காமராஜரைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள விரும்புபவர்கள் சென்னையிலுள்ள அவரது நினைவில்லத்துக்குச் செல்லலாம். விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த வீடும், கன்னியா
குமரியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபமும் பார்க்க வேண்டிய இடங்கள். இங்கெல்லாம் காமராஜர் பயன்படுத்திய பொருட்களும், ஏராளமான புகைப்படங்களும் அவரது உன்னத வாழ்வின் சாட்சியங்களாக இருக்கின்றன. ஆ.கோபண்ணா எழுதிய 'காமராஜ் ஒரு சகாப்தம்' புத்தகம் காமராஜர் வாழ்க்கை தொடர்பான அரிய ஆவணம்!

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...