Tuesday, July 19, 2016

பாரதிராஜா

பாரதிராஜா 10

இயக்குநர் பாரதிராஜா
தமிழ் சினிமாவின் ‘திருப்புமுனை’ இயக்குநர் என போற்றப்படும் பாரதிராஜா (Bharathiraja) பிறந்தநாள் இன்று (ஜூலை 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* தேனி அல்லி நகரில் (1941) பிறந்தவர். இயற்பெயர் சின்னச்சாமி. சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்தார். பெரியவர்களுடன் சேர்ந்து வேட்டைக்குச் செல்வதில் இவருக்கு அலாதி ஆசை. சிறு வயதிலேயே புத்தகம் படிக்கும் ஆர்வமும் பற்றிக்கொண்டது.

* விளையாட்டுப் பருவம் முடிந்ததும், நாடகம் எழுதுவது, இயக்குவது, நடிப்பதில் கவனம் திரும்பியது. ‘ஊர் சிரிக்கிறது’, ‘சும்மா ஒரு கதை’ ஆகிய நாடகங்களை எழுதி, அவ்வப்போது திருவிழா மேடைகளில் அரங்கேற்றினார். சுகாதார ஆய்வாளராக சிறிது காலம் பணிபுரிந்தார்.

* சினிமா மோகத்தில், அரசு வேலையை உதறிவிட்டு, சென்னைக்குப் புறப்பட்டார். உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, தாய் மட்டும் ஆசி கூறி அனுப்பிவைத்தார். மேடை நாடகம், வானொலி நிகழ்ச்சி, பெட்ரோல் பங்க் என பல்வேறு வேலைகளை செய்துகொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

* சென்னையில் இளையராஜா, கங்கை அமரன், ஆர்.செல்வராஜ் ஆகியோர் ஆரம்ப காலத்தில் ஒரு சிறிய வீட்டில் இவருடன் சேர்ந்து தங்கியிருந்தவர்கள். இவரது நண்பர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மூலம் திரையுலக அறிமுகம் கிடைத்தது. இயக்குநர் பி.புல்லையாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் சேர்ந்து சினிமா நுணுக்கங்களைக் கற்றார்.

* 1978-ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ‘16 வயதினிலே’, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல். அதுவரை ஸ்டுடியோவுக்குள் மட்டுமே சுழன்ற கேமராக்களை, கிராமங்களை நோக்கிப் படையெடுக்க வைத்தார். முதல் திரைப்படத்திலேயே மாபெரும் வெற்றியை சாதித்துக் காட்டியவர்.

* தொடர்ந்து இவர் இயக்கிய ‘சிகப்பு ரோஜாக்கள், ‘கிழக்கே போகும் ரயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘கருத்தம்மா’ உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த படைப்புகள்.

* தமிழ், தெலுங்கு, இந்தியில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பாக்யராஜ், ராதிகா, மணிவண்ணன், நெப்போலியன், நிழல்கள் ரவி, விஜயசாந்தி, ரோகிணி, கவுண்டமணி, கார்த்திக், ரேவதி உள்ளிட்ட பலரை அறிமுகம் செய்தவர்.

* ‘தாஜ்மஹால்’, ‘கருத்தம்மா’, ‘அல்லி அர்ஜுனா’ ஆகிய படங்களைத் தயாரித்தார். சிறப்பாக ஓவியம் வரைவார். காட்சி அமைப்புகளை வரைந்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு ஓவியத் திறன் பெற்றவர்.

* இவரது ‘முதல் மரியாதை’ படம் 1986-ல் தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தன் தாய் கருத்தம்மாவின் பெயரில் வெளிவந்த படத்துக்கான தேசிய விருதை தன் தாயையே பெற்றுக்கொள்ள வைத்தார். பத்மஸ்ரீ, 6 முறை தேசிய விருதுகள், 3 முறை மாநில அரசு விருதுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ‘நந்தி’ விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

* தனது நீண்டகால கனவுத் திரைப்படம் என இவர் குறிப்பிடும் ‘குற்றப் பரம்பரை’ வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். ‘இயக்குநர் இமயம்’ என போற்றப்படும் பாரதிராஜா இன்று 75-வது வயதை நிறைவு செய்கிறார்.

ஆயுள் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவித்தால் போதும்: உச்ச நீதிமன்றம்


THE HINDU

குற்றவாளிக்கு வழங்கப்படும் ஆயுள் தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவித்தால் போதுமானது. அதை அவர் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டியது இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சில வழக்குகளில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையோ அல்லது அதற்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனையோ வழங்கப்படுவது உண்டு. அவ்வாறாக வழங்கப்படும் ஆயுள் தண்டனைகளை குற்றவாளி எதிர்கொள்ளும் முறையை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையில் நீதிபதி எப்.எம்.ஐ.கலிபுல்லா, ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஒரு வழக்கிலோ அல்லது பல்வேறு வழக்குகளிலோ தொடர்புடைய குற்றவாளி ஒருவர், அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளை எப்படி அனுபவிக்க வேண்டும் என்ற கேள்வியுடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலானது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "விசாரணை நீதிமன்றங்களோ அல்லது உயர் நீதிமன்றங்களோ குற்றத்துக்கான தண்டனைக் காலத்துடன் ஆயுள் தண்டனையையும் சேர்த்து விதித்திருந்தால், அந்த தண்டனைகளை ஏக காலத்தில் குற்றவாளி அனுபவித்தால் போதுமானது எனத் தீர்ப்பளித்தனர்.

அதாவது, ஒருவருக்கு ஒரு வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனையும், அத்துடன் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டால், அவர் இரண்டையும் ஒரே காலகட்டத்தில் அனுபவிப்பார். முதலில் 5 ஆண்டு சிறைத் தண்டனை; பின்னர் ஆயுள் தண்டனை எனப் பிரித்து அனுபவிக்கத் தேவையில்லை.

குறள் இனிது:

குறள் இனிது: சுமாரா வேலை செய்யலாமா குமாரு?

சோம.வீரப்பன்

நான் சென்னையில் 1977ல் வங்கியில் பணி யாற்றிய பொழுது கருப்பையா எனும் பியூன் எனது கிளையில் வேலை செய்தார். பெயர் பிடிச்சிருக்கா?
7ஆம் வகுப்பு வரை தான் படித்தவர் என்றாலும் வேலையில் கில்லாடி. டெஸ்பாட்ச் எனும் தபால் அனுப்பும் வேலை. தினமும் சுமார் 150 கவர் அனுப்ப வேண்டும். மனுஷன் ஏதோ குஸ்தி சண்டையில் எதிரியைக் கையசைத்து அழைப்பது போல ‘கொடுங்க, கொடுங்க' என்று எல்லோரது இருக்கைக்கும் அவரே சென்று கவர்களை வாங்கிச் செல்வார்!
சென்னையில் வாடிக்கையாளர் திங்கள் மாலை 4.30 க்கு சேலம் காசோலையைக் கொடுத்தால், அன்றே அதை எங்களது சேலம் கிளைக்கு அனுப்பி விடுவோம். அவர்களும் அதை செவ்வாயன்றே கிளியரிங்கில் எஸ்பிஐ-க்கு அனுப்பி அது பணமாகி விட்ட விபரத்தை உடனே தபாலில் அனுப்புவார்கள். இல்லாவிட்டால் நம்ம கருப்பையா தொலைபேசியில் துளைப்பாரே!
அப்புறம் என்ன, துறுதுறு கருப்பையா சென்னையில் தானே இருந்தார். காலை 10.30க்கே தபாலைப் பிரித்து வாடிக்கையாளரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விடும்.
அதாவது திங்கள் மாலை சென்னையில் செலுத்தப்பட்ட காசோலை புதன் காலையே பணமாகிவிடும். எல்லாப் புகழும் கருப்பையாவிற்கே!
இதில் வேடிக்கை என்னவென்றால் சென்னையில் எங்கள் கிளைக்கு எதிரிலேயே இருக்கும் வங்கிக் காசோலையை திங்கள் மாலை வாடிக்கையாளர் கொடுத்தால் அது செவ்வாயன்று உள்ளூர் கிளியரிங்கில் ஆர்பிஐக்குப் போகும். பின் புதனன்று காசோலை திரும்பவில்லை என்பதறிந்து வியாழக்கிழமை தான் பணமாகும்!
அடிப்படையில் கருப்பையாவிற்கு வேலை செய்வது ரொம்பப் பிடிக்கும். பெரிய கடனுக்கான விண்ணப்பப் படிவங்களைக் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமெனில், இரவு 7, 8 மணியானாலும் காத்திருந்து பேப்பர்களை எல்லாம் அடுக்கி, கனத்த நூல் போட்டுக் கட்டிக் கவரில் போட்டு அனுப்பி விட்டு உளம் புளகாங்கிதம் அடைவார்! ஒப்புதல் வந்துவிட்டால் கடன் வாங்குபவரை விடவும் அதிகம் மகிழ்வார்!
‘மகத்தான பணி செய்ய ஒரே வழி செய்யும் காரியத்தை நேசிப்பது தான்' என்று ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னது சரிதானே!
அண்ணே, பணியாளர்களை இருவகைப்படுத்தலாம். மகிழ்ச்சியாக உத்வேகத்துடன் பணி செய்வோர் ஒரு ரகம். வேண்டா வெறுப்பாய், அலட்சியமாய் வேலை செய்பவர்கள் மற்றொரு ரகம்!
கருப்பையா தம் பணியில் காட்டிய ஆர்வத்தினால் அவரை வங்கியில் எல்லோரும் கொண்டாடினர். பல கிளைகளின் மேலாளர்களும் அவரைத் தம் கிளைக்கு மாற்றுமாறு கேட்டனர். உயரதிகாரிகளுக்கு மேலாளர்களைத் தெரிகிறதோ இல்லையோ, கருப்பையாவை நன்கு தெரியும்! வாடிக்கையாளரில் பலர் எங்கள் வங்கியை ‘கருப்பையா வங்கி' என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர்!
படிப்போ பதவியோ கொடுக்க முடியாத பெருமையை அவரது கடமை மறவாமை கொடுத்து விட்டது!
செய்ய வேண்டிய கடமையை அலட்சியப் படுத்துகிறவர்களுக்குப் புகழ் வாழ்வு இல்லை. இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்துமென்கிறார் வள்ளுவர்.
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு (குறள்: 533)

Monday, July 18, 2016

'நர்சிங் கவுன்சலிங் கனவு நிறைவேறுமா?' -அகதிகளின் கண்ணீர் கோரிக்கை

vikatan news

நர்சிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க இருக்கிறது. 'பொறியியல் படிப்புகளுக்கு அனுமதி கொடுத்ததைப் போலவே, மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான கவுன்சலிங்கில் அகதி மாணவர்கள் பங்கேற்பதற்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்' எனக் கோரிக்கை வைக்கின்றனர் இலங்கை அகதிகள்.

தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டுக்கு முன்பு வரையில், இலங்கை அகதிகளின் பிள்ளைகள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவர் நாகராஜின் கோரிக்கை மூலம்தான் அதற்கு விடிவு பிறந்தது. பிளஸ் 2 படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நாகராஜால் கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை. இந்த விவகாரத்தை முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார் வழக்கறிஞர் சிவக்குமார். இதையடுத்து, பொறியியல் விண்ணப்பப் படிவத்தில் இலங்கை அகதிகளுக்கு என தனி இடத்தை உருவாக்கிக் கொடுத்தார் கருணாநிதி. இதனால், நாகராஜைப் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் பொறியியல் கனவுகள் நிறைவேறின. ஆனால், மருத்துவம், நர்சிங், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, இந்த மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இவர்கள் அனைவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு உயர்கல்வி கனவுகளோடு 75-க்கும் மேற்பட்ட அகதி மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சிவக்குமார், " தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் ஒன்றரை லட்சம் இலங்கை அகதிகள் வாழ்கின்றனர். இவர்களின் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் முதல்வர். பிரதமர் மோடியை சந்தித்தபோது, ' இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். பொறியியல் படிப்புகளில் அகதிகள் பங்கேற்க எவ்விதத் தடையுமில்லை. ஆனால், தற்போதுள்ள காலகட்டத்தில் பொறியியல் படிப்பை விடவும், மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட பாடப் பிரிவுகளை எடுத்துப் படித்தால், நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

பொறியியல் படிப்புகளுக்கு சுமார் நான்கு லட்ச ரூபாய் வரை செலவாகிறது. அதற்கேற்ப அவர்களுக்கு வசதியுமில்லை. நர்சிங் பிரிவுகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தாலே, அதன்மூலம் தனியார் கல்விக் கூடங்களில் அவர்கள் சேர்ந்து படிக்க முடியும். தற்போது மருத்துவக் கலந்தாய்வில் அரசுக்கான இடங்கள் பெருமளவில் நிரப்பப்பட்டுவிட்டன. வரும் நாட்களில் நர்சிங் கவுன்சலிங் நடக்க இருக்கிறது. அதற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகிறோம். இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கும் உயர்கல்வித் துறை அமைச்சரின் கவனத்திற்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம். நர்சிங் கலந்தாய்வு தொடங்குவதற்குள், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என முகாம்களில் உள்ள அகதி மாணவர்கள் காத்திருக்கிறார்கள்" என்றார் கவலையோடு.

ஆந்திரா, கேரளாவில் பிளஸ் 2 முடித்துவிட்டு, தமிழக அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேரக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படித்து முடித்த அகதி மாணவர்கள், அரசின் கண்ணசைவுக்காக காத்திருக்கிறார்கள்.

'அ.தி.மு.க. பிரமுகரிடமிருந்து செத்துப் பிழைத்து வந்தேன்!' - ஒரு இன்ஸ்பெக்டரின் குமுறல்!

VIKATAN NEWS

வேலூர்: மணல் கடத்தல் லாரியை பிடிக்கப்போன சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளரை, லாரி உரிமையாளரான அ.தி.மு.க. பிரமுகர் ஜி.ஜி.ரவி, தனக்கு சொந்தமான கல்லூரியில் வைத்து தாக்கியதில் ஆய்வாளர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம், வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி. இவர், நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெருமுகை அருகே, ஒரு லாரி போலீஸ் வாகனத்தை பார்த்தவுடன் வேகமாக திரும்பிச் சென்றுள்ளது. அதனை தனது ஜீப்பில் விரட்டிப் பிடிக்க ஆய்வாளர் பாண்டி முயன்றுள்ளார். அந்த லாரி, பிள்ளையார் குப்பத்தில் உள்ள ஜி.ஜி. ஆர். பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்திருக்கிறது.

அங்கு சென்ற காவல் துறை ஆய்வாளரை, உள்ளே விடாமல் அங்கிருந்தவர்கள் கேட்டை இழுத்துப் பூட்டி உள்ளனர். அவர்களிடம் வாக்குவாதம் செய்து உள்ளே நுழைந்த ஆய்வாளர், லாரி டிரைவரை தேடி உள்ளார். அப்போது, அங்கு வந்த கல்லூரி தலைவரும், அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகருமான ஜி.ஜி.ரவி, ஆய்வாளர் பாண்டியின் சட்டையைப் பிடித்து வெளியே போகுமாறு கூறி இருக்கிறார்.

என்ன நடந்தது என்று ஆய்வாளர் பாண்டியிடம் கேட்டோம். "நேற்று இரவு நானும் ஒரு ஏட்டும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு லாரி எங்கள் வண்டியை பார்த்துவிட்டு பின்வாங்கி வேகமாக திரும்பிப் போனது. அந்த லாரியை சந்தேகப்பட்டு விரட்டிச் சென்றோம். அது ஒரு பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்தது. முதலில் அந்தக் கல்லூரி யாருடையது என்று எனக்கு தெரியவில்லை.

அந்த கல்லூரிக்குள் நாங்கள் நுழைந்து லாரியை தேடினோம். மணல் லோடுடன் அந்த லாரி அங்கு நின்று கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த ரவி 'யாரோட லாரியை பிடிக்க வர்ற. நாங்கதான் இப்ப கவர்மெண்ட். மரியாதையா வெளிய போ, இல்லைனா இங்கயே புதைச்சுடுவேன்னு' சொல்லி என்னை தள்ளினார். அதில் என் சட்டை 'நேம் பேட்ஜ்' உடைந்துவிட்டது. ஆனாலும் நான், 'போக முடியாது, லாரியையும் டிரைவரையும் அனுப்புங்க' ன்னு சொன்னேன்.

அவர் உடனே அடியாளுங்களுக்கு குரல் கொடுத்தார். இருபது, முப்பது அடியாட்கள் கட்டை, கம்போடு கல்லூரிக்குள்ளே இருந்து வந்து என்னை சூழ்ந்து கொண்டார்கள் . நானும் ஒரு போலீசும் மட்டும் போனதால அவங்கக்கிட்ட மாட்டிக்கிட்டோம். ஆனாலும் வாக்கி டாக்கயில ஃபோர்ஸை அனுப்பச் சொன்னேன். வேலூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீஸ் ஃபோர்ஸ் வந்ததால, நான் உயிரோட வர முடிஞ்சது. ஒரு போலீசா இருந்துக்கிட்டு இப்படிச் சொல்றது எனக்கே அசிங்கமா இருக்கு. கட்சி பேரை இப்படி தப்பா பயன்படுத்திக் கொள்ளை அடிக்கிறாங்க" என்றார் குமுறலோடு.

ஜி.ஜி.ரவி மீது ஆய்வாளர் பாண்டி அளித்த புகார் குறித்து நேற்று மாலை வரை வழக்குப் பதியவில்லை. அதன் பிறகே கொலை முயற்சி உட்பட 7 பிரிவுகளின் கீழ், ஜி.ஜி.ரவி மீது போலீசார் வழக்குப் போட்டு வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, ஜி.ஜி. ரவி தரப்பினரும் பதிலுக்கு ஆய்வாளர் பாண்டி மீது, குடித்துவிட்டு கல்லூரிக்குள் வந்து தகராறு செய்ததாக புகார் அளித்து இருக்கின்றனர்.

காவல்துறை அதிகாரி ஒருவரே அ.தி.மு.க. பிரமுகரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம், போலீஸ் வட்டாரத்தில் மட்டுமல்லாது பொதுமக்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



- அ.அச்சணந்தி

உயர் நீதிமன்றம் உத்தரவு

மனநல காரணம் கூறி மனைவிக்கு ஜீவனாம்சம் மறுக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

மனநலம் சரியில்லை என்று கூறி மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க மறுக்கக்கூடாது எனஉயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜீவனாம்சம் கேட்டு ரேவதி, நாங்குநேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் முடிவில் மனைவி மற்றும் மகனுக்கு தலா ரூ.2 ஆயிரம் ஜீவனாம்சமாக வரதராஜன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து வரதராஜன் நெல்லை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், தனது மனைவிக்கு மனநலம் சரியில்லாத காரணத்தால் ஜீவனாம்சம் வழங்க இயலாது என்று குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மனைவிக்கு மனநலம் சரியில்லை என்று கூறி அவருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ரேவதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு:
மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்றோ, மனநலம் சரியில்லை என்றோ சாதாரண ஒரு காரணத்தை கூறி ஜீவனாம்சம் வழங்க கணவன் மறுக்கக்கூடாது.
இந்த ஒரே காரணத்துக்காக மனைவியை, கணவர் கைவிட முடியாது. மனைவி நல்ல மனநலத்துடன் இருந்தாலும் சரி, மனநலம் சரியில்லாமல் இருந்தாலும் சரி, திருமணம் முடிந்ததுமே கணவன் தனது மனைவியை பராமரிக்க வேண்டும் என்ற நடைமுறை நீண்டகாலமாகவே உள்ளது.
மனைவி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டியது கணவனின் கடமை. எனவே, மனுதாரருக்கு அவரது கணவர் நியாயமான தொகையை ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். மனநலம் சரியில்லை என்பதால் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை என்ற திருநெல்வேலி நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரர், அவரது குழந்தை ஆகியோருக்கு தலா ரூ.2 ஆயிரம் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று நாங்குநேரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, இருவருக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும என மறக்கடிக்கப்படுகிறது. இந்த தொகையை வழக்கு தொடர்ந்த நாளான 3.1.2014 முதல் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ அறிவிப்பு

பலத்த மழை பெய்தாலும் திட்டமிட்டபடி மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 24-ம் தேதி நடக்கும்: சிபிஎஸ்இ அறிவிப்பு


பலத்த மழை பெய்தாலும் திட்ட மிட்டபடி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெறும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) வரும் 24-ம் தேதி நாடுமுழுவதும் நடக்கிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேர்வு நடத்துகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி போன்ற மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கேரளா மற்றும் வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால், திட்டமிட்டபடி தேர்வு நடக்குமா அல்லது தேர்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதா என்று மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய இடை நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஜூலை 24-ம் தேதி நடக்கிறது. அப்போது பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கலாம். பலத்த மழை பெய் தாலும் தேர்வு திட்டமிட்டபடி நடை பெறும். அதனால் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் முன்கூட்டியே சென்று தேர்வு மையம் எங்கு உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வானிலை நிலவரம், போக்குவரத்து, தேர்வு மையத்தின் இடம் உள்ளிட்ட அம்சங்களை கணக்கில் கொண்டு மாணவர்கள் முன்கூட்டியே வீட்டில் இருந்து புறப்பட வேண்டும். வெளியூர்களை சேர்ந்த மாணவர் கள் எந்த பகுதியில் தேர்வு மையம் அமைந்திருக்கிறதோ, அந்த பகுதிக்கு முன்கூட்டியே சென்று விட வேண்டும். காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு மையத் திற்கு வரும் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக் கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

NEWS TODAY 21.12.2025