Monday, July 18, 2016

'அ.தி.மு.க. பிரமுகரிடமிருந்து செத்துப் பிழைத்து வந்தேன்!' - ஒரு இன்ஸ்பெக்டரின் குமுறல்!

VIKATAN NEWS

வேலூர்: மணல் கடத்தல் லாரியை பிடிக்கப்போன சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளரை, லாரி உரிமையாளரான அ.தி.மு.க. பிரமுகர் ஜி.ஜி.ரவி, தனக்கு சொந்தமான கல்லூரியில் வைத்து தாக்கியதில் ஆய்வாளர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம், வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி. இவர், நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெருமுகை அருகே, ஒரு லாரி போலீஸ் வாகனத்தை பார்த்தவுடன் வேகமாக திரும்பிச் சென்றுள்ளது. அதனை தனது ஜீப்பில் விரட்டிப் பிடிக்க ஆய்வாளர் பாண்டி முயன்றுள்ளார். அந்த லாரி, பிள்ளையார் குப்பத்தில் உள்ள ஜி.ஜி. ஆர். பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்திருக்கிறது.

அங்கு சென்ற காவல் துறை ஆய்வாளரை, உள்ளே விடாமல் அங்கிருந்தவர்கள் கேட்டை இழுத்துப் பூட்டி உள்ளனர். அவர்களிடம் வாக்குவாதம் செய்து உள்ளே நுழைந்த ஆய்வாளர், லாரி டிரைவரை தேடி உள்ளார். அப்போது, அங்கு வந்த கல்லூரி தலைவரும், அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகருமான ஜி.ஜி.ரவி, ஆய்வாளர் பாண்டியின் சட்டையைப் பிடித்து வெளியே போகுமாறு கூறி இருக்கிறார்.

என்ன நடந்தது என்று ஆய்வாளர் பாண்டியிடம் கேட்டோம். "நேற்று இரவு நானும் ஒரு ஏட்டும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு லாரி எங்கள் வண்டியை பார்த்துவிட்டு பின்வாங்கி வேகமாக திரும்பிப் போனது. அந்த லாரியை சந்தேகப்பட்டு விரட்டிச் சென்றோம். அது ஒரு பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்தது. முதலில் அந்தக் கல்லூரி யாருடையது என்று எனக்கு தெரியவில்லை.

அந்த கல்லூரிக்குள் நாங்கள் நுழைந்து லாரியை தேடினோம். மணல் லோடுடன் அந்த லாரி அங்கு நின்று கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த ரவி 'யாரோட லாரியை பிடிக்க வர்ற. நாங்கதான் இப்ப கவர்மெண்ட். மரியாதையா வெளிய போ, இல்லைனா இங்கயே புதைச்சுடுவேன்னு' சொல்லி என்னை தள்ளினார். அதில் என் சட்டை 'நேம் பேட்ஜ்' உடைந்துவிட்டது. ஆனாலும் நான், 'போக முடியாது, லாரியையும் டிரைவரையும் அனுப்புங்க' ன்னு சொன்னேன்.

அவர் உடனே அடியாளுங்களுக்கு குரல் கொடுத்தார். இருபது, முப்பது அடியாட்கள் கட்டை, கம்போடு கல்லூரிக்குள்ளே இருந்து வந்து என்னை சூழ்ந்து கொண்டார்கள் . நானும் ஒரு போலீசும் மட்டும் போனதால அவங்கக்கிட்ட மாட்டிக்கிட்டோம். ஆனாலும் வாக்கி டாக்கயில ஃபோர்ஸை அனுப்பச் சொன்னேன். வேலூர் டி.எஸ்.பி. தலைமையில் போலீஸ் ஃபோர்ஸ் வந்ததால, நான் உயிரோட வர முடிஞ்சது. ஒரு போலீசா இருந்துக்கிட்டு இப்படிச் சொல்றது எனக்கே அசிங்கமா இருக்கு. கட்சி பேரை இப்படி தப்பா பயன்படுத்திக் கொள்ளை அடிக்கிறாங்க" என்றார் குமுறலோடு.

ஜி.ஜி.ரவி மீது ஆய்வாளர் பாண்டி அளித்த புகார் குறித்து நேற்று மாலை வரை வழக்குப் பதியவில்லை. அதன் பிறகே கொலை முயற்சி உட்பட 7 பிரிவுகளின் கீழ், ஜி.ஜி.ரவி மீது போலீசார் வழக்குப் போட்டு வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, ஜி.ஜி. ரவி தரப்பினரும் பதிலுக்கு ஆய்வாளர் பாண்டி மீது, குடித்துவிட்டு கல்லூரிக்குள் வந்து தகராறு செய்ததாக புகார் அளித்து இருக்கின்றனர்.

காவல்துறை அதிகாரி ஒருவரே அ.தி.மு.க. பிரமுகரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம், போலீஸ் வட்டாரத்தில் மட்டுமல்லாது பொதுமக்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



- அ.அச்சணந்தி

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...