Sunday, July 17, 2016

சவ்கார்பேட் ஆவோஜி... பாவ் பாஜி... வாவ் ஜி!

சவ்கார்பேட் ஆவோஜி... பாவ் பாஜி... வாவ் ஜி!


சென்னையின் சவுகார்பேட்டைக்குப் பல சிறப்புகள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுபவை அங்கேயிருக்கும் தெருவோர உணவுச் சந்தைகள். இவற்றை சென்னைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும், நம்ம ஊர் உணவுப் பிரியர்களுக்கும் அறிமுகப்படுத்துவதற்கு ஒரு முயற்சி எடுத்திருக்கிறது ‘ஸ்டோரி டிரெயில்ஸ்’ (Story Trails) நிறுவனம். அதன் விளைவுதான் இரண்டு மாதங்களாக அந்நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கும் ‘ஃபுட் டிரெயில்’ (Food Trail). அப்படியொரு சனிக்கிழமை மாலை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ‘ஃபுட் டிரெயி’லில் கலந்துகொண்ட அனுபவம் சுவையானது மட்டுமல்ல; சுவாரஸ்யமானதும்கூட.

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மின்ட் தெருவில் உள்ள சின்னக்கடை மாரியம்மன் கோயிலிலிருந்து ஏழு பேர் அடங்கிய குழுவுடன் தொடங்கியது அந்த உணவு உலா. இந்த உலாவின் ஒருங்கிணைப்பாளர் லக்ஷ்மி ஒரு கதைசொல்லி. அதனால், எங்கள் அனைவருக்கும் முதலில் உணவின் வரலாற்றைச் சுவையாகச் சொன்னார். பின்னர்தான், உணவுகளைச் சுவைக்க அழைத்துச் சென்றார். சவுகார்பேட்டையின் தெருக்களில் எப்போதுமே மக்கள் சுறுசுறுப்பாக நடமாடிக்கொண்டிருப்பார்கள். அந்தச் சத்தத்தில் உணவுக் கதைகளை நாம் ‘மிஸ்’ பண்ணிவிடக் கூடாது என்பதற்காக அவர் பேசுவதைக் கேட்பதற்கு ஆரம்பத்திலே நமக்கு ஒரு ‘இயர்பீஸ்’ கொடுத்துவிடுகிறார் லக்ஷ்மி.

ஜார்ஜ் டவுனின் வரலாறு, ராஜஸ்தான், குஜராத்திலிருந்து எப்படி மக்கள் இங்கே வந்து குடியேறினார்கள், சவுகார்பேட்டையின் பெயர்க் காரணம், அந்த மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் என எல்லாவற்றையும் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தை லக்ஷ்மி கொடுத்த பின் தொடங்குகிறது உணவு உலா.

# மன்சூக்லால் மிட்டாய்வாலா

உணவு உலாவில் நாங்கள் சென்ற முதல் இடம் ‘மன்சூக்லால் மிட்டாய்வாலா’ கடை. அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார் லக்ஷ்மி. “1946-லிருந்து செயல்படும் இந்தக் கடையின் இனிப்புகள் இங்கே ரொம்பப் பிரபலம். அதுவும் இந்தக் கடையில் தயாரிக்கும் ‘துதி அல்வா’வுக்கு (சுரைக்காய் அல்வா) நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அத்துடன், ‘மேதி பூரி’ (வெந்தயக்கீரை தட்டை), ஷக்கர் பாரா (சர்க்கரையும் மைதாவும் கலந்து செய்யப்படும் பதார்த்தம்) போன்ற இனிப்பு வகைகளும் இந்தக் கடையின் சிறப்பு” என்று சொல்லி நமக்கு அவற்றை வாங்கித் தருகிறார் அவர்.

# நோவல்டி டீ ஹவுஸ்

அங்கிருந்து நாம் சென்ற அடுத்த கடை ‘நோவல்டி டீ ஹவுஸ்’. இந்தக் கடையின் தேநீர் சிறப்பானது. ஆனால், இந்தக் கடையில் நமக்கு ‘பாவ் பாஜி’யைப் பரிந்துரைக்கிறார் லக்ஷ்மி. உண்மையிலேயே சுவையான ‘பாவ் பாஜி’தான். நம்ம ஊருக்கு ‘பாவ் பாஜி’யும், ‘வடா பாவ்’வும் எப்படி வந்தன என்று லக்ஷ்மி சொன்ன கதையைக் கேட்டுக்கொண்டே ‘பாவ் பாஜி’யை அனைவரும் சாப்பிட்டோம். அதற்குள் குழுவிலிருந்த ஒருவர் தேநீரைச் சுவைக்க ஆசைப்பட, அதை ஆர்டர் செய்தார் லக்ஷ்மி. தேநீர் வருவதற்குள் அதன் வரலாற்றைச் சொல்லிமுடித்தார்.



# ஜெய் ஸ்ரீ வைஸ்னவாஸ்

என்னதான் குஜராத்தி, ராஜஸ்தானி உணவு என்றாலும் நம்ம ஊர் இட்லியில்லாமல் ஓர் உணவு உலா இருக்க முடியுமா? அதுவும் சாதாரண இட்லி அல்ல. ‘தட்டு இட்லி!’ ஜெய்  வைஸ்னவாஸ் கடையிலிருந்து லக்ஷ்மி அதை வாங்கிவந்தவுடன் குழுவினர் அனைவரும் உற்சாகமாகிவிட்டனர். இட்லி பொடி தூவி, நெய்யில் மிதந்த அந்தத் தட்டு இட்லியை சாம்பார், சட்னியுடன் சுவைத்த எல்லோருக்கும் அப்படியொரு திருப்தி. நாங்கள் அனைவரும் இட்லியைச் சுவைப்பதில் பிஸியாக இருந்தாலும், விடாமல் எங்களுக்கு இந்தோனேஷியாவிலிருந்து இட்லி இங்கே பயணமாகிவந்த கதையையும், மராட்டிய மன்னர் சாம்பாஜியின் பெயரை சாம்பாருக்கு வைத்ததன் பின்னணியையும் சொல்லி முடித்தார் லக்ஷ்மி.

# ஜக்துஷா

தட்டு இட்லியைச் சுவைத்தபின் நாங்கள் அடுத்துச் சென்ற இடம் ஜக்துஷா. அங்கே நாங்கள் சுவை பார்ப்பதற்காகக் காத்திருந்தன ‘முறுக்கு சாண்ட்விச்’சும் குலாப் ஜாமூனும். “இப்போது அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சாட் உணவு வகைகளில் ‘முறுக்கு சாண்ட்விச்’சுக்கு முக்கிய இடமுண்டு. ஒரு தென்னிந்தியாவின் தின்பண்டத்தை வைத்து உருவாக்கியதால் நம்ம உள்ளூர் மக்களுக்கு இது பிடித்துவிட்டது. அத்துடன், கைமுறுக்கு என்பது நம்ம மக்களின் பாரம்பரியத் தின்பண்டங்களில் ஒன்று. திருமணமாகிச் செல்லும் பெண்ணுக்குச் சீதனமாகக் கொடுக்கப்படுபவை முறுக்குகள். அவற்றின் சுற்றுகளைப் பெருமையாகக் கருதிய காலமும் உண்டு. கிட்டத்தட்டப் பதினொரு சுற்றுகள் உள்ள கைமுறுக்குகள் இருக்கின்றன” என்று அவர் முறுக்குக் கதையைச் சொல்லி முடிக்கவும், நாங்கள் முறுக்கு சாண்ட்விச்சை சாப்பிட்டு முடிக்கவும் சரியாக இருந்தது.

# காக்கடா ராம்பிரசாத்

சவுகார்பேட்டைக்குச் சாப்பிடச் சென்றவர்கள் யாரும் காக்கடா ராம்பிரசாத்தில் சாப்பிடாமல் வர மாட்டார்கள். இந்தக் கடையின் சிறப்பாகச் சூடான ஜிலேபிகளும், பாதாம் பாலும் இருக்கின்றன. லக்ஷ்மி எங்களுக்கு வாங்கிவந்த பாதாம் பாலைச் சுவைப்பதற்கு வயிற்றில் இடமில்லையென்றாலும் அதை வேண்டாம் என்று யாராலும் மறுக்க முடியவில்லை. பாதாம் பாலைக் குடித்து முடித்தவுடன் உணவு உலா நிறைவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தோம்.

ஆனால், ‘பான்’ இல்லாமல் உணவு உலா முழுமையாக நிறைவுபெறாது என்று சொல்லி, பாண்டே பான் ஹவுஸ்ஸில் எங்கள் அனைவருக்கும் பான் வாங்கிக் கொடுத்தார் லக்ஷ்மி. இந்த உணவு உலாவில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் சுவையான உணவைச் சாப்பிட்ட திருப்தியுடன் மட்டுமல்லாமல் உணவு வரலாற்றைத் தெரிந்துகொண்ட திருப்தியுடன் விடைபெற்றுச்சென்றனர்.

இந்தச் சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு ரூ.1,300 வசூலிக்கப்படுகிறது. அத்துடன் ‘ஸ்டோரி டிரெயில்ஸ்’ சார்பாகச் சென்னை, மதுரை, புதுச்சேரி போன்ற நகரங்களில் பல்வேறு உலாக்கள் (‘டிரெயில்ஸ்’) நடத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு: http://www.storytrails.in/india/

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...