Sunday, July 24, 2016

வருவாயைப் பெருக்குவோம்; செலவுகளை குறைப்போம்



DAILY THANTHI   THALAYANGAM

தமிழக அரசின் பட்ஜெட் பெரிய எதிர்பார்ப்புகளை மக்களிடம் ஏற்படுத்தியிருந்தது. அதற்கேற்ப, இந்த ஆண்டு பட்ஜெட்டையும், வரியில்லாத, வரிஉயர்வு இல்லாத பட்ஜெட்டாகவே தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. ஆனால், வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை பட்ஜெட்டாகவே இருக்கிறது. எதிர்பார்த்த வருவாய் இல்லாதநிலையில், நினைத்ததற்கும் அதிகமாக செலவுகள் உயர்ந்துவிட்டநிலையில், இனி எந்தக்கோரிக்கை வைத்தாலும், சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்ற நிலைமை உருவாகிவிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல்செய்யும்போது, இந்த நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 4 கோடியே 23 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், இப்போது தாக்கல்செய்யப்பட்ட திருத்த பட்ஜெட்டில் அரசின் வருவாய் இந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 175 கோடியே 9 லட்சமாகத்தான் இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆக, வருவாய் குறைந்துவிட்டது. ஆனால், இடைக்கால பட்ஜெட் மதிப்பீட்டில் குறிப்பிட்டதைவிட செலவு அதிகமாகியிருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் இந்த நிதியாண்டில் அரசின் செலவு ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 159 கோடியே ஒரு லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டதற்கு மாறாக, ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 29 கோடியே 56 லட்சமாக செலவு உயரும் என்று திருத்தி மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 2016–17–ம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.15 ஆயிரத்து 854 கோடியே 47 லட்சமாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.40 ஆயிரத்து 533 கோடியே 84 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய நிலுவையில் உள்ள விவசாயக்கடன் தள்ளுபடி மற்றும் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் போன்ற புதிய அறிவிப்புகளை செயல்படுத்துவதாலும், ஏற்கனவே உள்ள பல்வேறு நலத்திட்டங்கள், மானியங்களை தொடர்ந்து கொடுக்கவேண்டிய இருப்பதாலும் அரசுக்கு செலவு அதிகரித்துள்ளது.

அரசின் செலவில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய வகைகள் செலவினங்கள் மட்டும் ரூ.64 ஆயிரத்து 410 கோடியே 34 லட்சமாகும். இது மொத்தசெலவில் 39.27 சதவீதமாகும். இதுபோல, மானியம் மற்றும் உதவித்தொகைக்கான ஒதுக்கீடு ரூ.68 ஆயிரத்து 211 கோடியே 5 லட்சமாகும். அரசு வாங்கியுள்ள கடன்தொகை ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி என்றநிலையில் வட்டியாக மட்டும் ரூ.21 ஆயிரத்து 215 கோடியே 67 லட்சம் கட்டவேண்டியதிருக்கிறது. இது மொத்த வருவாய் செலவில் 12.93 சதவீதமாகும். ஆக, அரசின் மொத்தவருவாயில் அரசு ஊழியர்கள் சம்பளம், பென்சன், மானியம் மற்றும் உதவித்தொகை, வாங்கிய கடனுக்கான வட்டி ஆகியவற்றிற்கு மட்டும் 93.8 சதவீதம் சென்றுவிடுகிறது. மீதமுள்ள 6.2 சதவீத தொகையை வைத்துத்தான் அரசின் வளர்ச்சித்திட்டங்களுக்கான முதலீடுகள், புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான செலவுகளை சமாளிக்க வேண்டியதிருக்கும்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவால், ஆயத்தீர்வை வசூல் குறைந்தது உள்பட வணிகவரி வசூலும் பெருமளவு குறைந்துவிட்டது. சர்வதேச பொருளாதார வீழ்ச்சி காரணமாக, சிமெண்டு, இரும்பு, மின்சார சாதனங்கள், வாகனங்கள் விற்பனை, எல்லாவற்றிற்கும் மேலாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்டவீழ்ச்சியும் வருவாய் குறைவுக்கு காரணமாகும். 500 டாஸ்மாக் மதுபானக்கடைகளை அடைத்ததிலேயே ரூ.1,500 கோடி வருமானம் இழப்பு ஏற்படும். இந்த சூழ்நிலையில், புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், தேர்தல் அறிக்கைகளில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் நிதிவேண்டும். எனவே, வருமானத்தை பெருக்குவதிலும், செலவுகளை குறைப்பதிலும் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசர, அவசியம் வந்துவிட்டது. தேவையற்றவர்களுக்கு மானியங்கள் செல்வதை தவிர்க்க, மத்திய அரசாங்கம் மானியங்களை நேரடியாக வங்கியில் செலுத்தும் திட்டம்போல, புதிய திட்டங்களை செயல்படுத்துவதே நல்லது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...