Monday, August 8, 2016

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தீர்வில்லையா?


தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றங்கள் சமூகநீதியின் விளைநிலமான தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. ஸ்வாதி கொலையைத் தொடர்ந்து கடந்த வாரம் லதா* (20) என்ற தலித் பெண்ணும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நவீனாவும் (17) கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

சாதியப் படுகொலை

தஞ்சாவூரின் சாலியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த லதா, கடந்த ஜூலை 31-ம் தேதி இரவு வீட்டின் பின்புறத்தில் திறந்த வெளிக் கழிப்பிடத்துக்குச் சென்றிருக்கிறார். அதற்குப் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜா, குமார் என்ற இரண்டு ஆதிக்கச் சாதி ஆண்கள் லதாவைப் பாலியல் வன்புணர்ச்சி செய்து விவரிக்க இயலாத கொடூரத்தைக் கையாண்டு கொலைசெய்து, அருகிலிருக்கும் முட்புதரில் வீசிச் சென்றிருக்கின்றனர். அவர்கள் இருவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகிறது.

லதாவின் இந்தக் கொடூரமான கொலைக்குப் பின்னால் அவர் பெண் என்பதோடு, அவரது சாதியும் காரணம் என்றே கருத வேண்டியுள்ளது. சாலியமங்கலத்தில் தலித் பெண்களில் ஆண்டுக்குப் பதினைந்து பேர் அங்கிருக்கும் ஆதிக்கச் சாதி ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது மனித உரிமை அமைப்பான எவிடென்ஸ். ஆனால், இந்தக் குற்றங்களுக்கு எதிராகக் காவல் துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுத்ததில்லை என்று தெரிவித்திருக்கின்றனர் அப்பகுதி தலித் சமூகத்தினர். அந்த மக்கள் காவல் துறையின் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்திருக்கின் றனர் என்று தெரிவிக்கிறது எவிடென்ஸ் அமைப்பு.

சிறுமியை எரித்த சைக்கோ காதல்

விழுப்புரத்தைச் சேர்ந்த நவீனாவின் கொலை, செந்தில் குமார் (32) என்பவரின் ‘காதல்’ வெறியால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஜூலை 30-ம் தேதி செந்தில்குமார், நவீனாவின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயமாகப் பார்த்து, வீட்டுக்குள் சென்று நவீனாவை உயிரோடு எரிக்க முயன்றிருக்கிறார். நவீனா அதிலிருந்து தப்பிக்க முயன்றதால் தன்மீது நெருப்பு வைத்துக்கொண்டு, அருகிலிருந்த நவீனாவையும் சேர்த்து எரித்திருக்கிறார். இதில் செந்தில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். எழுபது சதவீதத் தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நவீனா அங்கு சிகிச்சை பலனின்றிக் கடந்த புதன்கிழமை இறந்துவிட்டார்.

ஓராண்டுக்கு மேலாக, நவீனாவைப் பின்தொடர்ந்து பிரச்சினை கொடுத்துவந்திருக்கிறார் செந்தில். நவீனா விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகே பின்தொடர்வதை நிறுத்தியிருக்கிறார். ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு திரும்ப வந்திருக்கிறார். தன்னுடைய ஒரு கை மற்றும் காலை விபத்தில் இழந்துவிட்டு, நவீனாவின் அப்பாதான் வெட்டினார் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலியான புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். காவல் துறையினர் விசாரித்தபோது, செந்தில் கூறியவை அனைத்தும் பொய் என்பதும், அவர் ரயில் விபத்து ஒன்றில் காலை இழந்ததும் உறுதியாகி யிருக்கிறது. அதற்குப் பிறகு, காவல் துறையினர் அவரைக் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜாமீனில் வெளிவந்த செந்தில் மீண்டும் நவீனாவைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறார். பள்ளிச் சிறுமியான நவீனாவுக்குச் செவிலியர் படிப்பு படித்து நோயுற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியக் கனவு இருந்துள்ளது. அந்தக் கனவைத் தன் ஒருதலையான காதலின் கொடுந்தீயால் எரித்துச் சாம்பலாக்கிவிட்டார் செந்தில்.

தீர்வு என்ன?

கடந்த சில ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொலைகளில் ஒரு விஷயம் புலனாகிறது. இந்தக் கொலைகள் உயிரைப் பறிக்கும் நிகழ்வுகளாக மட்டும் நடந்துவிடவில்லை. வன்மமும் ஆண் திமிரின் மூர்க்கமும் வெளிப்பட்டுள்ள கொடூரக் கொலைகள் அவை. கொலையுண்ட பெண்கள் எல்லோருமே கொடூரமாகச் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். பெண்களைச் சக உயிராக நினைக்காமல் தன் உடல் இச்சைக்கும் வக்கிரங்களுக்கும் தீனியாகக் கொள்ளத்தக்க ஒரு நுகர்வுப் பண்டமாக மட்டுமே நினைக்கும் நோய்க்கூறு கொண்ட ஆண்களின் எண்ணிக்கை தமிழ்ச் சமூகத்தில் அதிகரித்திருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. வினோதினி, ஸ்வாதி, வினுப்பிரியா, லதா, நவீனா போன்றவர்களின் கொடூர மரணங்கள் நமக்குத் தெரியும். நமக்குத் தெரியாமல் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிர்ச்சி தரும் வகையில் அதிகமாகவே இருக்கும்.

யாருக்கோ நடக்கிறது, எங்கோ நடக்கிறது என்று இனியும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் விளைவு மோசமானதாகவே இருக்கும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ‘பாலின சமத்துவ’த்தைப் பாடமாகச் சொல்லிக்கொடுத்துவிட்டால் மட்டுமே நிலைமை மாறிவிடப்போகிறதா? வெகுஜன ஊடகங்கள் அன்றாடம் போதிக்கும் பாலியல் அசமத்துவத்தை முறியடிக்க என்ன வழி? தலித்துகள்,பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிரான வன்மங்கள் அதிகரித்துவருவதற்கும் அதிகாரத்தில் உள்ள சித்தாந்தத்துக்கும் தொடர்பு உள்ளது. இதையும் நாம் கணக்கில் கொண்டே பிரச்சினையைப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.

சாதியற்ற, பால் சமத்துவம் கொண்ட ஒரு சமூகம் மட்டுமே பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்துகொண்டிருக்கும் வன்கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவரும். அது ஒரு தொலைதூரப் பெருங்கனவு. அதற்கு முன்பாக, பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்களைத் தடுப்பதற்கான தீர்வுகளை எல்லாத் தரப்பினரும் ஒன்றிணைந்து சிந்தித்து செயல்படுத்த வேண்டியது உடனடித் தேவை. சமூகநீதிக்கு முன்னுதாரணமாக ஒரு காலத்தில் திகழ்ந்த தமிழ்ச் சமூகம் சாதி ரீதியான இத்தகைய கொலைகள் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியாது.

(லதா* - பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்டதால் பெயர் மாற்றப்பட்டுள்ளது).

Saturday, August 6, 2016

வங்கி கணக்குகள் இல்லாத ஏடிஎம்மிலும் டெபாசிட் செய்யலாம்

வங்கி கணக்குகள் இல்லாத ஏடிஎம்மிலும் டெபாசிட் செய்யலாம் என்ற திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.


ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், சம்பந்தப்பட்ட வங்கி ஏடிஎம்மில் அல்லாமல் எல்லா வங்கி ஏடிஎம்மிலும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்மில்தான் தங்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்ய முடியும் என்ற நிபந்தனை இருந்தது.

இனி, எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், வேறு வங்கி ஏடிஎம் மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் வர உள்ளது. இத்திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மூன்று வங்கிகளுக்கு இதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி தேசிய பேமன்ட் கார்ப்பொரேஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வேறு வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்வது குறித்து பரிசோதனை முயற்சியாக 3 வங்கிகளில் செயல்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பரிசோதனை முயற்சி துவங்கும். டெபாசிட்டுக்கு ரூ.10,000 வரை ரூ.25, ரூ.50,000க்கு மேல் ரூ.50 சேவை வரியாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

5 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க மத்திய அரசு முடிவு



மக்களவையில் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாவது:

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் போன்று, மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகள் தொடங்க 17 மாநிலங்களில் இருந்து பரிந்துரைகள் வந்துள்ளன. மத்திய அரசு படிப்படியாக இந்த மாநிலங்களில் எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இதில் மங்களகிரி (ஆந்திரப் பிரதேசம்), கல்யானி (மேற்கு வங்கம்), நாக்பூர் (மகாராஷ்டிரா), கோரக்பூர் (உத்தரப் பிரதேசம்), பதின்டா (பஞ்சாப்) ஆகிய 5 இடங் களில் புதிய எய்ம்ஸ் மருத்துவ மனைகள் தொடங்க தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், அசாம், பிஹார் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவனைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசாம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் அமையவுள்ள இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

மும்பையில் விடிய, விடிய கொட்டிய கனமழை: சாலை, ரயில், விமான போக்குவரத்து முடங்கியது


மும்பையில் பெய்த கனமழையால் வெள்ள நீரில் மெல்ல மிதந்து செல்லும் மாநகரப் பேருந்து | படம்: பிடிஐ
மும்பையில் நேற்று அதிகாலை முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக புறநகர் ரயில் மற்றும் விமான போக்குவரத்து முடங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக கிழக்கு எக்ஸ்பிரஸ், மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை கள் மற்றும் முக்கியமான வடக்கு தெற்கு சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன. இத னால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர் குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.

சியோன்-குர்லா இடையே ரயில் தண்டவாளங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால், புறநகர் ரயில் சேவை ஸ்தம்பித்தது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது குறித்து மத்திய ரயில்வே செய்திதொடர்பாளர் கூறும்போது, ‘‘சியோன், மஸ்ஜித் மற்றும் சந்த்ரஸ்ட் சாலை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள இருப்புப் பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மும்பை சிஎஸ்டி மற்றும் தானே இடையிலான புறநகர் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பகல் 12.00 மணிக்குப் பின் இயக்கப்பட்டது’’ என்றார்.

எனினும் ரயில்கள் மெதுவாக இயக்கப்படுவதால் அனைத்து ரயில்களும் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக வந்து சேர்கின்றன. இதற்கிடையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கடலோர கொங்கன் பகுதியிலும், மகாராஷ்டிராவின் மத்திய பகுதியில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், போலீஸார் உட்பட அனைத்து துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மும்பையை அடுத்த தானே, பால்கர், ராய்கட் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று கனமழை கொட்டியது. இதனால் மும்பையில் இருந்து அகமதாபாத், புனே, நாசிக் மற்றும் கோவாவை இணைக்கும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகா பலேஷ்வர் (159.6 மி.மீ) ராதாநகரி (128.0 மி.மீ), ராய்கட் (84 மி.மீ), மதேரன் (72 மி.மீ) மற்றும் ரத்னகிரி யில் (71.8 மி.மீ) மழை பதிவான தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சினிமாஸ்கோப்: ஒரு ஓடை நதியாகிறது



ஒரு திரைக்கதையை எதற்குப் படமாக்குகிறார்கள்? சும்மா பொழுதுபோக்குக்காகவா? நூற்றுக்கணக்கானோர் இரவு பகல் பாராமல் உழைத்து ஒரு படத்தை உருவாக்குவதன் காரணம் வெறும் கேளிக்கையல்ல. பொழுதுபோக்குக்கான சினிமாவில்கூட ஏதாவது செய்தி சொல்லவே திரைப்படத் துறையினர் விரும்புகிறார்கள். பிறகு ஏன் சிலருடைய படங்கள் புகழப்படுகின்றன, சில படங்கள் இகழப்படுகின்றன என்று கேட்கிறீர்களா? ஒரு படம் நல்ல படமாவதும் கெட்ட படமாவதும் திரைக்கதையில் இல்லை. அந்தத் திரைக்கதையை எப்படித் திரையில் காட்சிகளாகக் காட்டுகிறார்களோ அந்தத் தன்மையில் இருக்கிறது. அதாவது அதை எப்படிக் காட்சிப்படுத்துகிறார்கள் என்பதில்தான் அதன் தரம் அடங்கியுள்ளது.

அடிப்படையில் மகேந்திரன் முதல் விசுவரை அனைவரும் சமூகத்தை மேம்படுத்த வேண்டும் என்றுதான் படமெடுக்கிறார்கள். இயக்குநர் மகேந்திரன் போன்றோர் தங்கள் திரைக்கதையில், அது சொல்லவரும் விஷயத்தை நேரடியாக வெளிப்படுத்தும் காட்சிகளை அமைக்காமல், திரைக்கதை எதை உணர்த்த வேண்டுமோ அது தொடர்பான காட்சிகளை அமைக்கிறார்கள். ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் ஒரு காட்சி சட்டென்று நினைவுக்குவருகிறது. தன் குழந்தைக்குப் பெரியம்மை என ஆதுரத்துடன் அஸ்வினி கூறுவார். மிகவும் பொறுமையாக விஜயன், ‘பெரியம்மையை ஒழித்துவிட்டதாக அரசு சொல்கிறது, அரசாங்க மருத்துவமனையில் போய்ச் சொல். பணம் தருவார்கள்’என உரைப்பார். தன் குழந்தையின் நோய் குறித்த விஷயத்தில் இப்படிக் குரூரமாக ஒரு தகப்பனால் யோசிக்க முடியும் என்றால் அவர் எப்பேர்ப்பட்ட சாடிஸ்டாக இருக்க முடியும் என்று பார்வையாளர்கள் புரிந்துகொள்வார்கள். இப்படியான காட்சிகளைக் கொண்ட திரைக்கதை மேம்பட்டதாக வெளிப்படும்.

கலையம்சம் கொண்ட திரைக்கதை



இயக்குநர்கள் சிலர் தாம் சொல்ல வரும் விஷயத்தை அப்படியே காட்சியாக்கிவிடுகிறார்கள். இயக்குநர் விசு வகையறா படங்கள் இப்படி நேரடியான வெளிப்படுத்தல்களாக இருக்கும். ஒரு விஷயத்தை இலைமறை காயாக உணர்த்தும்போது அதில் வெளிப்படும் நாசூக்குத் தன்மை திரைக்கதையின் கலையம்சத்தைக் கூட்டுகிறது. பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தால் திரைக்கதை சிதறு தேங்காய் போல் ஆகிவிடுகிறது. கலை எதையும் நேரடியாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்தும். கோயிலில் சிலை மூலம் கடவுளை உணர்த்துவதைப் போன்றது அது. அதே நேரத்தில் சமூகத்தின் பழக்கவழக்கங்களை அப்படியே விதந்தோதுவதும் ஒரு நல்ல திரைக்கதையின் வேலையாக இருக்காது. அது சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் வழக்கங்களைக் குறித்த பல கேள்விகளை எழுப்பும். அதுதான் திரைக்கதையின் பிரதானப் பண்பு. அப்படியெழும் கேள்விகளுக்கான பதில்களை நோக்கிப் பார்வையாளர்களை நகர்த்தும். இந்த இடத்தில் தரின் ‘அவளுக்கென்று ஓர் மனம்’ ஞாபகக் குளத்தின் மேற்பரப்பில் ஓர் இலையாக மிதக்கிறது.

திரைக்கதையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவர்கள் தரின் எந்தப் படத்தையும் தவறவிட மாட்டார்கள். அவரது திரைக்கதை உத்தி மிகவும் கவனிக்கத்தக்கது. மிக இயல்பாகத் திரையில் சம்பவங்களை நகர்த்திச் செல்லும் சாமர்த்தியம் கொண்டவர் அவர். இல்லையென்றால் ஒரு வரிக் கதையான ‘தென்றலே என்னைத் தொடு’ படத்தைச் சுவையான பாடல்களால் உருவாக்கி ஒரு வருடம் ஓடக்கூடிய வெற்றிப் படைப்பாக மாற்றியிருக்க முடியுமா? அவரது எல்லாத் திரைக்கதைகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. பெரும்பாலானவை முக்கோணக் காதல் கதைகள். பார்வையாளர்களின் உணர்வெழுச்சியை ஒட்டியே விரிந்து செல்லும் திரைக்கதையின் முடிவில் அவர்கள் எதிர்பாராத முடிவு காத்திருக்கும்.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கணவன் உயிரை முன்னாள் காதலனிடம் விட்டுவிட்டுக் காத்திருக்கிறாள் மனைவி. கணவன் பிழைப்பானா மாட்டானா என்று எல்லோரும் காத்திருக்க தரோ ஈவிரக்கமற்று, சற்றும் எதிர்பாராத வகையில் மருத்துவரைக் கொன்றுவிடுகிறார். ஆனால் தன் பிரியத்துக்குரிய காதலியின் கணவரது உயிரைக் காப்பாற்றிவிட்டார் மருத்துவர். அந்த மனநிறைவே அவருக்குப் போதும், இதற்கு மேல் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறார் என்பதே திரைக்கதை உணர்த்தும் செய்தி.

இலக்கணத்தை மீறிய நாயகி

‘அவளுக்கென்று ஓர் மனம்’ படமும்கூட ஒருவகையில் முக்கோணக் காதல் கதையே. இந்தப் படத்தின் தலைப்பே வித்தியாசமானது. பொதுவாக ஒரு சொல்லைத் தொடர்ந்து உயிரெழுத்துடன் ஆரம்பிக்கும் சொல் வரும்போது மட்டுமே ‘ஓர்’ என எழுதுவது தமிழ் மரபு. அப்படிப் பார்த்தால் அவளுக்கென்று ஒரு மனம் என்பதுதான் தலைப்பாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் ‘அவளுக்கென்று ஓர் மனம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது, தலைப்பு இலக்கணத்தை மீறியதைப் போலவே இந்தப் படத்தின் நாயகியும் இலக்கணங்களை மீறியவள். அதைத்தான் தலைப்பின் மூலம் சொல்லாமல் சொல்கிறார் தர் என்று தோன்றுகிறது. அவள் இலக்கணங்களை எதற்காக மீறுகிறாள் என்பதை அறியும் பார்வையாளர்கள் அவளது மீறல்களின் நியாயங்களை உணர்ந்துகொள்வார்கள். அதுதான் இந்தத் திரைக்கதையின் சிறப்பு.

செல்வந்தப் பெண்ணான லலிதா பருவ வயதில் பெற்றோரை இழந்து, உயர் நீதிமன்ற நீதிபதியான மாமா வீட்டில் தஞ்சமடைகிறாள். மாமாவின் மகன் கண்ணனைக் காதலிக்கிறாள். இருவருக்கும் மணம் முடிக்க வேண்டும் என்று கண்ணனின் பெற்றோர் நினைக்கிறார்கள். கண்ணனுக்கோ லலிதாவின் கல்லூரித் தோழி மீனா மீது காதல். மீனா ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் கண்ணனின் நண்பனான கோபால் என்னும் இளைஞனைக் காதலிக்கிறாள். அவன் ஒரு பெண் பித்தன். தன் சுகத்துக்காகப் பிறரைப் பயன்படுத்தத் தயங்காதவன். யதேச்சையாக அவனது சுயரூபத்தை அறிந்துகொண்ட மீனா அவனிடமிருந்து விலகிவிடுகிறாள். அவள் விலகிய தருணத்தில் தோழி லலிதா மூலம் கண்ணனின் கண்களில் பட்டுவிடுகிறாள். அவனுக்கு மீனாவை மிகவும் பிடித்துவிடுகிறது. அவளையே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். லலிதா ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு தோழிக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்கிறாள்.



இதன் பின்னர் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களால் லலிதாவுக்கும் கோபாலுக்கும் உறவு ஏற்படுகிறது. லலிதாவின் நடவடிக்கைகள் மாறுகின்றன. இரவில் தாமதமாக வீட்டுக்கு வருகிறாள். சில நாள்களில் குடித்துவிட்டு வருகிறாள். இதனால் குடும்ப மானம் போவதாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் குடும்ப மானத்தைக் காப்பாற்றத்தான் லலிதா இவை அனைத்தையும் செய்கிறாள் என்பதுதான் திரைக்கதையின் விசேஷம். குடும்ப மானத்தைக் காப்பாற்ற மீனா வீட்டிலேயே பூஜை செய்கிறாள், தீர்த்தம் பருகுகிறாள், லலிதாவோ கோபாலுடன் பாருக்குப் போகிறாள், குடிக்கிறாள். இரண்டும் இரண்டு துருவமான செய்கைகள். ஒன்றை உலகம் கையெடுத்துக் கும்பிடும். மற்றொன்றைக் காறித் துப்பும். ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும்போது குடிகாரியாக மாறிய லலிதாமீது நம்மால் கோபப்பட முடியாது. அவளது செய்கைகளுக்குப் பின்னே அப்பழுக்கற்ற தூய எண்ணம் நிறைந்திருப்பதை நம்மால் உணர முடியும். அப்படியான திரைக்கதையை அமைத்திருப்பார் தர். அதுதான் ஒரு திரைக்கதையின் சிறப்பு.

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in

Friday, August 5, 2016

சிகலா நடத்திய ஆடிவெள்ளி சிறப்பு பூஜை! -தேர்தல் வெற்றிக்குப் பரிகாரமா


சசிகலா நடத்திய ஆடிவெள்ளி சிறப்பு பூஜை! -தேர்தல் வெற்றிக்குப் பரிகாரமா?





தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, இன்று அதிகாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். ' ஆடிவெள்ளிக் கிழமை நாளில் அம்பாளை வழிபடுவது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நன்மையை அதிகரிக்கும்' என்கின்றனர் ஆலய நிர்வாகிகள்.



மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சசிகலா வரும் தகவல் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. கோவில் தக்கார் தொழிலதிபர் கருமுத்து.கண்ணன், பூஜைக்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார். கோவிலில், அம்மனுக்கு நடந்த பூஜையில் சசிகலா கலந்து கொண்டிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு, உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர்கள் குவிந்தனர். ஆனால், கோவிலுக்கு வந்த சுவடே தெரியாமல் பூஜையை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார் சசிகலா.



சசிகலாவின் சிறப்பு வழிபாடு குறித்து நம்மிடம் பேசிய ஆலய நிர்வாகி ஒருவர், " பருவநிலை மாற்றத்தை உண்டாக்கக் கூடிய மாதம் என்றவகையில் ஆடிக்கு சிறப்பு உண்டு. இந்த மாதத்தில் முளைக் கொட்டு நிகழ்ச்சிகள் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகின்றன. அதிலும், ஆடி வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு பூஜை செய்யும்போது, ஏராளமான நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகமாக இருக்கிறது.


. குறிப்பாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அம்மனுக்குப் பெயரே ராஜமாதங்கி. பச்சை வர்ணத்தில் வீற்றிருப்பவர். அதிகாரத்தில் இருப்பவர்கள் ராஜ மாதங்கியை வணங்கும்போது, எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் அரசாட்சி தொடரும் என்ற நம்பிக்கை வலம் வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலை மீனாட்சி அம்மன் சந்நிதியில் வைத்து வழிபட்டார் சசிகலா. தேர்தலுக்குப் பிறகு அம்மனுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார்" என்றார்.


- செ.சல்மான்
படங்கள்: வீ.சதீஷ்குமார்

DailyMotivation

சம்பளத்தைத் தாண்டி, இந்த 3 காரணங்களுக்காகவும் வேலை செய்யுங்கள்! #DailyMotivation


vikatan.com

ஓவ்வொரு நாளும் நாம் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை நாம் விருப்பத்துக்கும், இலக்குகளுக்கும் ஏற்றவாறு வேலை செய்கிறோம். என்னதான் மாதச் சம்பளம் என்ற ஒரு விஷயம் இருந்தாலும் சில விஷயங்கள் நம்மை சிறப்பாக வேலை செய்ய தூண்டும். அது நம் அலுவலக சூழல் என்பது துவங்கி ஆர்வம், தேவை என பல விஷயங்களை பொருத்து அமைகிறது. ஆனால் இந்த மூன்று காரணங்களுக்காக நீங்கள் வேலை செய்வது சம்பளம், பதவி என்பதைத் தாண்டி உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும்.

1. நீங்கள் கற்றுக் கொள்வது உங்களுக்காக!

அலுவலகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு மணி நேரமும் உங்களுக்கு நல்ல அனுபவத்தையும், இங்கு கற்கும் விஷயங்கள் அலுவலக இலக்குகளுக்காக மட்டுமல்ல, நீங்கள் கற்றது கண்டிப்பாக உங்கள் வளர்ச்சிக்கும் உதவும் என்ற திறந்த மனதோடு கற்றுக் கொள்ளுங்கள். வயது குறைந்த நபர் எனக்கு பாடம் எடுக்கிறார், இவருக்கு வயதாகிவிட்டது நான் சொல்வது புரியவில்லை என்று நினைக்காமல் எல்லாரிடம் இருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக் கொள்வது உங்களுக்காகத் தான். இது உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். அதிகம் கற்றுக்கொள்ளுங்கள்.

2. நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள்!

நீங்கள் ஒரே வேலையைச் செய்கிறீர்கள், சம்பளம் மட்டும் மாறுகிறது வேலை அதே வேலை தான் என நினைக்காமல், நீங்கள் செய்யும் வேலைகளை முன்பை விட புதிய உத்திகள், வேகத்தோடு அணுகுங்கள். அந்த வேலையில் நிபுணத்துவம் பெறுங்கள். உங்களுக்கு அது நற்பெயரைக் கொடுக்கும். அந்த நற்பெயர் உங்களது பதவி உயர்வு, சம்பளம் ஆகியவற்றில் தானாகவே தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கெல்லாம் உங்களால் அந்த வேலையை கூடுதல் நிபுணத்துவத்துடன் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அதிகரியுங்கள்.

3. இன்ஃப்ளுயன்ஸ் செய்யுங்கள்!

உங்களது வேலையைத் தாண்டி உங்களது குணத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துங்கள். அருகில் இருப்பவர்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்யுங்கள். இது வேலையும் செயல்திறனையும், தனிப்பட்ட முறையில் தலைமைப் பண்பையும் வளர்க்கும். அணியில் சில தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் நீங்கள் சொல்லும் போது அதனை ஏற்றுக் கொள்ளும் சூழலும், நீங்கள் தவறு செய்யும் போது உங்களிடம் தயக்கமின்றி கூறி அதனை திருத்தவும் அணியினருக்கு இந்த செயல்கள்  உத்வேகத்தை தரும். எப்போதும் அதிகம் இன்ஃப்ளூயன்ஸ் செய்யும் நபராக இருக்க பழகிக் கொள்ளுங்கள். சரியான கொள்கைகளில் நிலையாக இருங்கள்.

இந்த மூன்று காரணங்களை நீங்கள் அலுவலக சூழலில் எளிதில் கற்க முடியும். பணம், இலக்கு, பதவி உயர்வு என்பதைத் தாண்டி இந்த மூன்று காரணங்களுக்காக வேலை செய்யுங்கள். இந்த மூன்றால் மகிழ்ச்சி, உங்களைத் தானாகத் தேடி வரும்.

ச.ஸ்ரீராம்.

NEWS TODAY 21.12.2025