Monday, August 8, 2016

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தீர்வில்லையா?


தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றங்கள் சமூகநீதியின் விளைநிலமான தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. ஸ்வாதி கொலையைத் தொடர்ந்து கடந்த வாரம் லதா* (20) என்ற தலித் பெண்ணும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நவீனாவும் (17) கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

சாதியப் படுகொலை

தஞ்சாவூரின் சாலியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த லதா, கடந்த ஜூலை 31-ம் தேதி இரவு வீட்டின் பின்புறத்தில் திறந்த வெளிக் கழிப்பிடத்துக்குச் சென்றிருக்கிறார். அதற்குப் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜா, குமார் என்ற இரண்டு ஆதிக்கச் சாதி ஆண்கள் லதாவைப் பாலியல் வன்புணர்ச்சி செய்து விவரிக்க இயலாத கொடூரத்தைக் கையாண்டு கொலைசெய்து, அருகிலிருக்கும் முட்புதரில் வீசிச் சென்றிருக்கின்றனர். அவர்கள் இருவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகிறது.

லதாவின் இந்தக் கொடூரமான கொலைக்குப் பின்னால் அவர் பெண் என்பதோடு, அவரது சாதியும் காரணம் என்றே கருத வேண்டியுள்ளது. சாலியமங்கலத்தில் தலித் பெண்களில் ஆண்டுக்குப் பதினைந்து பேர் அங்கிருக்கும் ஆதிக்கச் சாதி ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது மனித உரிமை அமைப்பான எவிடென்ஸ். ஆனால், இந்தக் குற்றங்களுக்கு எதிராகக் காவல் துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுத்ததில்லை என்று தெரிவித்திருக்கின்றனர் அப்பகுதி தலித் சமூகத்தினர். அந்த மக்கள் காவல் துறையின் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்திருக்கின் றனர் என்று தெரிவிக்கிறது எவிடென்ஸ் அமைப்பு.

சிறுமியை எரித்த சைக்கோ காதல்

விழுப்புரத்தைச் சேர்ந்த நவீனாவின் கொலை, செந்தில் குமார் (32) என்பவரின் ‘காதல்’ வெறியால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஜூலை 30-ம் தேதி செந்தில்குமார், நவீனாவின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயமாகப் பார்த்து, வீட்டுக்குள் சென்று நவீனாவை உயிரோடு எரிக்க முயன்றிருக்கிறார். நவீனா அதிலிருந்து தப்பிக்க முயன்றதால் தன்மீது நெருப்பு வைத்துக்கொண்டு, அருகிலிருந்த நவீனாவையும் சேர்த்து எரித்திருக்கிறார். இதில் செந்தில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். எழுபது சதவீதத் தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நவீனா அங்கு சிகிச்சை பலனின்றிக் கடந்த புதன்கிழமை இறந்துவிட்டார்.

ஓராண்டுக்கு மேலாக, நவீனாவைப் பின்தொடர்ந்து பிரச்சினை கொடுத்துவந்திருக்கிறார் செந்தில். நவீனா விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகே பின்தொடர்வதை நிறுத்தியிருக்கிறார். ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு திரும்ப வந்திருக்கிறார். தன்னுடைய ஒரு கை மற்றும் காலை விபத்தில் இழந்துவிட்டு, நவீனாவின் அப்பாதான் வெட்டினார் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலியான புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். காவல் துறையினர் விசாரித்தபோது, செந்தில் கூறியவை அனைத்தும் பொய் என்பதும், அவர் ரயில் விபத்து ஒன்றில் காலை இழந்ததும் உறுதியாகி யிருக்கிறது. அதற்குப் பிறகு, காவல் துறையினர் அவரைக் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜாமீனில் வெளிவந்த செந்தில் மீண்டும் நவீனாவைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறார். பள்ளிச் சிறுமியான நவீனாவுக்குச் செவிலியர் படிப்பு படித்து நோயுற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியக் கனவு இருந்துள்ளது. அந்தக் கனவைத் தன் ஒருதலையான காதலின் கொடுந்தீயால் எரித்துச் சாம்பலாக்கிவிட்டார் செந்தில்.

தீர்வு என்ன?

கடந்த சில ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொலைகளில் ஒரு விஷயம் புலனாகிறது. இந்தக் கொலைகள் உயிரைப் பறிக்கும் நிகழ்வுகளாக மட்டும் நடந்துவிடவில்லை. வன்மமும் ஆண் திமிரின் மூர்க்கமும் வெளிப்பட்டுள்ள கொடூரக் கொலைகள் அவை. கொலையுண்ட பெண்கள் எல்லோருமே கொடூரமாகச் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். பெண்களைச் சக உயிராக நினைக்காமல் தன் உடல் இச்சைக்கும் வக்கிரங்களுக்கும் தீனியாகக் கொள்ளத்தக்க ஒரு நுகர்வுப் பண்டமாக மட்டுமே நினைக்கும் நோய்க்கூறு கொண்ட ஆண்களின் எண்ணிக்கை தமிழ்ச் சமூகத்தில் அதிகரித்திருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. வினோதினி, ஸ்வாதி, வினுப்பிரியா, லதா, நவீனா போன்றவர்களின் கொடூர மரணங்கள் நமக்குத் தெரியும். நமக்குத் தெரியாமல் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிர்ச்சி தரும் வகையில் அதிகமாகவே இருக்கும்.

யாருக்கோ நடக்கிறது, எங்கோ நடக்கிறது என்று இனியும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் விளைவு மோசமானதாகவே இருக்கும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ‘பாலின சமத்துவ’த்தைப் பாடமாகச் சொல்லிக்கொடுத்துவிட்டால் மட்டுமே நிலைமை மாறிவிடப்போகிறதா? வெகுஜன ஊடகங்கள் அன்றாடம் போதிக்கும் பாலியல் அசமத்துவத்தை முறியடிக்க என்ன வழி? தலித்துகள்,பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிரான வன்மங்கள் அதிகரித்துவருவதற்கும் அதிகாரத்தில் உள்ள சித்தாந்தத்துக்கும் தொடர்பு உள்ளது. இதையும் நாம் கணக்கில் கொண்டே பிரச்சினையைப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.

சாதியற்ற, பால் சமத்துவம் கொண்ட ஒரு சமூகம் மட்டுமே பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்துகொண்டிருக்கும் வன்கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவரும். அது ஒரு தொலைதூரப் பெருங்கனவு. அதற்கு முன்பாக, பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்களைத் தடுப்பதற்கான தீர்வுகளை எல்லாத் தரப்பினரும் ஒன்றிணைந்து சிந்தித்து செயல்படுத்த வேண்டியது உடனடித் தேவை. சமூகநீதிக்கு முன்னுதாரணமாக ஒரு காலத்தில் திகழ்ந்த தமிழ்ச் சமூகம் சாதி ரீதியான இத்தகைய கொலைகள் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியாது.

(லதா* - பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்டதால் பெயர் மாற்றப்பட்டுள்ளது).

No comments:

Post a Comment

UGC Chairman Jagadesh Kumar says new foreign degree norms will align Indian education with global standards

UGC Chairman Jagadesh Kumar says new foreign degree norms will align Indian education with global standards  The University Grants Commissio...