Wednesday, August 31, 2016

அறிவியல் அறிவோம்: ஒரே மூச்சில் 400 கி.மீ. தூரம்!


பறவைகள் பறப்பதே ஓர் அதிசயம். அப்படி என்றால், சிறகடித்துக்கொள்ளாமல் கடல்களையே கடக்கிற ‘கப்பல் பறவை’ (frigate birds) அதிசயமே அசந்து போகும் அதிசயம் அல்லவா? ‘கப்பல் கூழைக்கடா’, ‘கடற்கொள்ளைப் பறவை’ போன்ற பெயர்களிலும் அழைக்கப்படும் பறவையைப் பற்றிய வியக்க வைக்கும் புதிய தகவல்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

உணவின்றி, தண்ணீரின்றி, ஓய்வு உறக்கமின்றி, தரையிறங்காமல் தொடர்ந்து 400 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் பயணிக்கக்கூடியவை என்று உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள். காரணம், இதன் இறகுகள் நீர் ஒட்டும் தன்மையைக் கொண்டவை. எனவே, வாத்துபோலத் தண்ணீரில் மிதந்து ஓய்வெடுக்கவோ, முக்குளிப்பான் போலத் தண்ணீரில் மூழ்கி மீனைப் பிடிக்கவோ இதனால் முடியாது.

சாப்பிடாமல் கொள்ளாமல் எப்படி இவ்வளவு தூரம் பறக்கிறது என்கிறீர்களா? அது எங்கே பறக்கிறது? காற்றில் மிதக்கிறது! பெரும்பாலும் இறகை அசைப்பதே இல்லை. அந்த விஷயத்தில் இவர் நம்மூர் பருந்துக்கெல்லாம் அண்ணன்.

மடகாஸ்கர் பகுதியில் வாழும் கப்பல் பறவைகள் சிலவற்றைப் பிடித்து, அதில் உணர்வுக் கருவிகளைப் பொருத்தினார்கள் வெய்மர்ஸ்க்ரிச் தலைமையிலான ஆய்வாளர்கள். இப்பறவை எப்படி இரை எடுக்கிறது, எவ்வளவு வேகத்தில் பறக்கிறது, எத்தனை முறை இறகை அசைக்கிறது, எவ்வளவு தூரம் செல்கிறது போன்ற விஷயங்கள் மட்டுமின்றி, இதயத்துடிப்பு, இறக்கை அசைப்பு உள்ளிட்டவற்றையும் நுட்பமாக ஆராய்ந்தார்கள்.

வானில் சுமார் 400 முதல் 1,000 மீட்டர் உயரத்தில் உள்ள, மிகமிக அடர்த்தியான மேகக் கூட்டத்துக்குப் பெயர்தான் ‘குமுலஸ்’. விமான ஓட்டிகளுக்கே சவால் தருபவை. பார்ப்பதற்குப் பஞ்சு போலத் தெரிந்தாலும் இந்த வகை மேகத்துக்குள் காற்று மேல் நோக்கிச் சென்றபடி அமளிதுமளியாக இருக்கும். இதற்குள் விமானம் சென்றுவிட்டால், விமானம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து ஜிவ்வென்று மேல் நோக்கிச் செல்லும். அடுத்த நொடியே திடுமெனக் கீழே இறங்கும். நான்குவழிச் சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் வாகனம், திடீரென மாட்டுவண்டிப் பாதைக்கு மாறியது போலக் குலுங்கும். இதனால் பொதுவாக ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், விமானத்தில் பயணம் செய்யும் பாதிப் பேருக்கு வாந்தி மயக்கம்கூட ஏற்படும். பல ஆயிரம் கிலோ எடையுள்ள விமானத்தையே அதிர வைக்கிற இந்த மேகத்துக்குள் புகுந்து நம்மாள் சடுகுடு ஆடுகிறான்.

மேகத்துக்குள் புகுந்து, அங்கே வீசுகிற மேல் நோக்கிய காற்றின் உதவியால் காகிதம் போல மேலெழுந்து செல்கிறது கப்பல் பறவை. பிறகு, கிளைடர் போல லாகவமாக காற்றில் மிதந்தபடி கீழ்நோக்கிவரும். நிலத்துக்கு அருகே வந்த பிறகுதான் சிறகை அசைத்துப் பறக்கும். ஆக, உயரே செல்லவும் நெடுந்தூரம் செல்லவும் எந்தவித ஆற்றலையும் பயன்படுத்தாமல், ஆற்றலைச் சிக்கனப்படுத்துகிறது இந்தப் பறவை.

அதெல்லாம் இருக்கட்டும்… சோறு தண்ணி இல்லாமல் எப்படி உயிர் வாழ முடியும் என்று நுட்பமாக ஆராய்ந்தார்கள். அப்போது, கடலுக்கு மேலே தாழ்வாகப் பறந்தபடி லாகவமாக மீனைப் பிடித்து உண்பது தெரியவந்தது. வழியில் கடற்பாறை கிடைத்தால் ஓய்வெடுக்கவும் செய்கின்றன. வழியில் உணவோ, ஓய்விடமோ கிடைக்காவிட்டாலும்கூட இவை கவலைப்படுவதில்லை. இருந்தாலும், கப்பல் பறவை எப்படித் தூங்குகிறது என்பதுதான் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

- த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...