Wednesday, August 10, 2016

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரை கொலையாளி போல நடிக்க வைத்து வீடியோ எடுக்க தடை கோரி மனு: தேதி குறிப்பிடாமல் உத்தரவு தள்ளி வைப்பு


சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள ராம்குமாரை கொலையாளி போல நடிக்க வைத்து வீடியோ பதிவு செய்ய தடை கோரி உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான உத்தரவை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் கைதான இளைஞர் ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். ஏற்கெனவே 3 நாள் போலீ்ஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட ராம்குமாரை, சம்பவம் நடந்தபோது கைப்பற்றப்பட்ட முந்தைய வீடியோ ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக மீண்டும் அதேபோன்று வீடியோ பதிவு செய்ய அனுமதி கோரி போலீஸ் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் ஆகஸ்டு 8-ம் தேதி (நேற்று) வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்கியது.

இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது.

அப்போது ராம்குமார் தரப்பு வழக்கறிஞர், ‘‘ராம்குமாரிடம் ஏற்கெனவே 3 நாட்கள் போலீஸார் போதுமான அளவுக்கு விசாரணை நடத்திவிட்டனர். தற்போது அந்த 3 நாளில் போலீஸார் ஜோடித்த ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே, மீண்டும் அவரை கொலையாளி போல நடிக்க வைத்து வீடியோ பதிவு செய்ய வேண்டும் என போலீஸார் அனுமதி கோருகின்றனர். அதற்கு எழும்பூர் நீதிமன்றமும் அனுமதித்துள்ளது. இது சட்டவிரோதமானது. அதுவும் தற்போது சிறைக்குள் வைத்தே வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனக் கோருவதால் சுவாதி கொலையில் எல்லா பழியையும் ராம்குமார் மீது சுமத்த திட்டமிட்டுள்ளனர்’’ என்றார். அரசு தரப்பில், இந்த வீடியோ பதிவு, வழக்குக்கு தேவை யான ஒன்றுதான் என வாதிடப் பட்டது.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 3.4.2025