Tuesday, August 9, 2016

'ரூ.570 கோடி கன்டெய்னர் பணத்துக்காக போலி ஆவணம் தயாரித்தார்களா?' -வங்கி அதிகாரிகளைக் குறிவைத்த சி.பி.ஐ.


VIKATAN

'ரூ.570 கோடி கன்டெய்னர் பணத்துக்காக போலி ஆவணம் தயாரித்தார்களா?' -வங்கி அதிகாரிகளைக் குறிவைத்த சி.பி.ஐ.

திருப்பூர் அருகே கன்டெய்னரில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் குறித்த சர்ச்சையில் சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துவிட்டது. ' 18 மணிநேரம் கழித்து போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டனவா? இதற்கு வங்கி அதிகாரிகள் துணை போனார்களா என்பதுதான் வழக்கின் மிக முக்கியமான பகுதி' என்கின்றனர் சி.பி.ஐ அதிகாரிகள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, மே 13-ம் தேதி அன்று, திருப்பூர் அருகில் மூன்று கன்டெய்னர் லாரிகளை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையத்தின், பறக்கும் படை. ரெய்டின் போது கன்டெய்னர் லாரிகளில் வந்தவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்தது, 18 மணி நேரம் கடந்தும் பணத்திற்கு யாரும் உரிமை கோராதது என தொடக்கம் முதலே கன்டெய்னர் விவகாரத்தில் சந்தேகம் வலுத்து வந்தது. இதையடுத்து, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடர்ந்தார் தி.மு.க எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன். நீதிமன்றமும், ' கன்டெய்னர் விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, சி.பி.ஐ விசாரணை நடத்தலாம்' என உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று கன்டெய்னர் பணம் தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது சி.பி.ஐ.

'எங்கள் வங்கியின் கிளையில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பணம் இது' என கோவை ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூறினாலும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கிவிட்டது சி.பி.ஐ.

இதுகுறித்து நம்மிடம் பேசிய புலனாய்வு அதிகாரி ஒருவர், " பணம் வங்கிக்குச் சொந்தமானது என அதிகாரிகள் தெரிவித்தாலும், கன்டெய்னர் கையாளப்பட்ட விதம் சட்டத்திற்கு விரோதமானது. 570 கோடி ரூபாய் தொடர்பான ஆவணங்களைக் கொண்டு வந்து தருவதற்கே 24 மணி நேரத்தை அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர்.

மீண்டும் பணம் வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, எவ்வளவு பணம் இருந்தது என யார் முன்னிலையிலும் எண்ணப்படவில்லை. அதிலும், நள்ளிரவில் பணம் அனுப்பப்பட்டதன் மர்மம்; ஒரு கன்டெய்னருக்குப் பதிலாக மூன்று கன்டெய்னர்களைப் பயன்படுத்தியதற்கான காரணம்; கோயம்புத்தூரில் இருந்து பணத்தை நள்ளிரவில் அனுப்ப வேண்டிய அவசியம்; பணம் கொண்டு செல்லப்படும் தகவலை மாவட்ட காவல்துறை அதிகாரிக்குத் தெரியப்படுத்தப்படாதது; முதலில் விசாகப்பட்டினத்திற்குப் பணம் போவதாகத் தெரிவித்த அதிகாரிகள், பின்னர் விஜயவாடாவுக்குச் செல்ல இருந்தது என மாற்றிச் சொன்னது என கன்டெய்னர் குறித்த சந்தேகங்கள் அப்படியேதான் இருக்கின்றன.

கோயம்புத்தூரில் இருந்து சோதனைச் சாவடிகளின் கண்களில் படாமல், கிருஷ்ணகிரி வழியாக ஆந்திராவுக்குள் நுழைவதற்கு கன்டெய்னர் லாரி டிரைவர்களுக்கு ரூட் சொல்லப்பட்டிருக்கிறது. நான்கு வழி புறவழிச் சாலை வழியாக செல்லாமல், குறுக்கு வழியில் பணம் சென்றதே அரசியல்கட்சிகளின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. விசாகப்பட்டினம் முகவரியில் உள்ள அந்த லாரிகளில் போலியான நம்பர் பிளேட்டுகள் (AP 13 X 5204, AP 13 X 8650, AP 13 X 5203) பொருத்தப்பட்டுள்ளன. சட்டரீதியாகக் கொண்டு செல்லப்படும் பணத்திற்கு, கள்ளத்தனமான நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டிருப்பது சட்டவிரோதமானது.

வாகனம் பிடிபட்டதும், ஸ்டேட் வங்கி அதிகாரிகளின் துணையோடு போலி ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம். இதற்கு ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரிகள் சிலர் தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எங்களுக்கு இருக்கிறது. குறிப்பாக, பணம் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் கோவை ஸ்டேட் வங்கி அதிகாரிகள் செயல்பட்டார்களா என்பது மிக முக்கியமான கேள்வி. கன்டெய்னர் தொடர்பாக வெளியான செய்திகள், ஸ்டேட் வங்கி கொடுத்த ஆதாரம், வாகனத்தின் உரிமையாளர்கள், வங்கி அதிகாரிகள் என பலதரப்பிலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது" என்றார் விரிவாக.

இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனிடம் பேசினோம்.


" பணம் கொண்டு செல்லப்பட்டதில் சரியான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றுதான் சொல்லி வருகிறோம். பத்து கோடிக்கு மேல் பணம் சென்றாலே வங்கியின் ஏதாவது ஒரு அதிகாரி உடன் செல்ல வேண்டும். ஆனால் 570 கோடி ரூபாய்க்கு, ஒரு சாதாரண கிளார்க் அந்தஸ்தில் உள்ள ஊழியர் மட்டுமே உடன் சென்றிருக்கிறார். அதிகாரிகளிடம் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததுதான் சர்ச்சைக்கு மூல காரணம். கன்டெய்னரைக் காப்பாற்ற, வங்கி உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுப்படி கோவை ஸ்டேட் வங்கி அதிகாரிகள் செயல்பட்டார்களா என்பதெல்லாம் சி.பி.ஐ விசாரணையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். வரும்காலங்களில் வங்கி அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மிக முக்கியமான வழக்கு இது" என்றார் தெளிவாக.

-ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...