Tuesday, August 9, 2016

ரயிலின் மேற்கூரையை உடைத்து வங்கிப் பணம் கொள்ளை..! - அதிர்ச்சி க்ளைமாக்ஸ்

VIKATAN

சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகே இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில், இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு காலை 6.35 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் சேலத்தில் இருந்த இரவு 9 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு, அதிகாலை 4.45 மணிக்கு வந்தடைகிறது.

இந்த நிலையில், சேலத்தில் இருந்து நேற்றிரவு 9.45 மணிக்கு இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டுள்ளது. இந்த ரயிலின் பார்சல் பெட்டியில், 228 பெட்டிகளில் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.342 கோடி என்று கூறப்படுகிறது. இந்த ரயில் அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தது. பயணிகள் இறங்கிச் சென்ற பிறகு, துப்புரவு பணியாளர்கள் ரயிலில் ஏறி, ஒவ்வொரு பெட்டிகளையும் சுத்தம் செய்துள்ளனர். ஆனால், பார்சல் பெட்டியை மட்டும் அவர்கள் சுத்தம் செய்யவில்லை என்று தெரிகிறது.

இதனிடையே, நண்பகல் 12 மணி அளவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரயில் பெட்டியில் இருந்த பணத்தை ஆய்வு செய்ய சென்றுள்ளனர். அப்போது, ரயிலின் மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து வந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். ரயிலில் 23 டன் ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே ஐ.ஜி ராமசுப்பிரமணியன் நேரில் விசாரணை நடத்தினார்.





கொள்ளை நடந்தது எங்கே ?

சேலம் பகுதிகளில் உள்ள வங்கிகளில் 5 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணம் சேகரிக்கப்பட்டுள்ளது. சேலம் டிஐஜி நாகராஜ் தலைமையில் துப்பாக்கி ஏந்திய 10 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்திருக்கிறார்கள். பார்சல் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் இவர்கள் பயணித்துள்ளனர். கொள்ளையர்கள் ரயிலின் மேற்கூரையை வெல்டிங் மிஷின் மூலம் ஒரு ஆள் செல்லும் அளவுக்கு துளை போட்டுள்ளனர். இந்த சத்தம் அடுத்த பெட்டியில் இருந்து காவல்துறையினருக்கு தெரியவில்லை. சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரயில் டீசல் என்ஜின் மூலமே இயக்கப்பட்டுள்ளது. விருத்தாசலத்தில் ரயிலை நிறுத்தி இன்ஜின் மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து ரயில் இங்கிருந்து புறப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட இடங்களில்தான் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை, சேலம், விருத்தாசலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே பாதுகாப்புப்படை பாதுகாப்பு ஆணையர் அஸ்ரா தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இதில் கொள்ளையர்கள் எதிர்பார்க்காத அதிர்ச்சி க்ளைமாக்ஸ் ஒன்று உள்ளது. அது, 'கொள்ளையடிக்கப்பட்ட அந்தப் பணம் அனைத்தும் செல்லாதவை’ என்பதுதான்.

இருப்பினும் ரயிலின் மேற்கூரையை உடைத்து வங்கிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


-சகாயராஜ்

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...