Tuesday, August 9, 2016

'காவல் நிலையமும் ஏ.டி.எம்மும் எப்படி இயங்குகிறது?' -அசர வைக்கும் சிவகங்கை அரசுப்பள்ளி



ஓர் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் எப்படிச் செயல்பட வேண்டும்' என்பதை விளக்குகிறது பள்ளிக் கல்வித்துறையின் யூ டியூப் வீடியோ காட்சி ஒன்று. ' கள ஆய்வுகள், வாரத் திருவிழா, அதிகாரிகளுடன் கலந்துரையாடல்' என மாதிரிப் பள்ளியை அடையாளம் காட்டுகிறார்கள் அதிகாரிகள்.

தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், புதுமையான கற்றல் வீடியோக்களை யூ ட்யூப்பில் பதிவேற்றியுள்ளனர். இதில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனில், வித்தியாசமான முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஒருபுறம் என்றால், பள்ளியின் தலைமை ஆசிரியர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் விளக்குகிறார்கள். குறிப்பாக, சிவங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் செயல்பாடுகள் வியக்க வைக்கின்றன. இம்மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,320 பள்ளிகளில் இந்தப் பள்ளி மட்டுமே, கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் யூ டியூப் வீடியோ பதிவுக்காக தேர்வாகியுள்ளது. ' மாணவர்களின் பங்களிப்புடன் வகுப்பறையை சிறப்பானதாக மாற்றும் முயற்சிகள் வெற்றி பெற்றதையும்' முன்வைக்கிறார் இப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம். கூடவே, தாங்கள் கற்றுத் தேர்ந்த விஷயங்களைப் பற்றியும் யூ டியூப்பில் பேசுகின்றனர் மாணவர்கள்.

தலைமை ஆசிரியர் சொக்கலிங்கத்திடம் பேசினோம்.

" மாணவர்களை நான்கு சுவர்களுக்குள் பூட்டி வைத்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன். இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் கிராமப்புறப் பின்னணியில் இருந்து படிக்க வருபவர்கள். வகுப்பறை நேரம் போக, மற்ற நேரங்களில் மாணவர்களின் எதிர்காலத்திற்கும் எது தேவையோ, அதைக் கற்றுக் கொடுப்பதில் நேரத்தைச் செலவிடுகிறோம். ஒவ்வொரு வாரமும் பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி என மாணவர்களை உற்சாகப்படுத்துகிறோம். ஒரு வாரம் வெற்றி பெற்ற மாணவர், அடுத்த வாரம் பார்வையாளனாகத்தான் அமர்ந்திருக்க வேண்டும்.

அனைத்து மாணவர்களும் போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். வகுப்பறைகளில் பேச்சுப் போட்டி நடந்து முடிந்ததும், தேர்வான மாணவர்கள் அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் பேச வேண்டும். இதன்பின்னர் நடக்கும் மாதத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறோம். இது ஒருபுறம் தொடர்ந்து நடந்து வருகிறது. மற்ற நேரங்களில் வங்கிகளுக்கு அழைத்துச் செல்கிறோம். கிரீன் கார்டு என்றால் என்ன? ஏ.டி.எம் இயந்திரங்கள் எப்படி இயங்குகின்றன? ஏ.டி.எம் அட்டைகளைப் பயன்படுத்துவது எப்படி? வங்கி செலான்களை எப்படிப் பூர்த்தி செய்வது என வங்கி அதிகாரிகளின் துணையோடு செயல் விளக்கம் அளிக்கிறோம்.

கடந்த வாரம் தேவகோட்டை தாலுகா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். காவல்துறை மீதான பயத்தைப் போக்குவது மட்டுமல்லாமல், ஒரு காவல்நிலையம் எவ்வாறு இயங்குகிறது எனவும் உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மாணவர்களும் அவர்களிடம், ' படத்தில் காட்டுவது போல ஒரு பிஸ்டலை அழுத்தினால் ஐம்பது தடவை சுட முடியுமா' என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள். தொடக்கக் கல்வியிலேயே மாணவர்கள் எதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பட்டியலிட்டு, கள ஆய்வுகளுக்கு அழைத்துச் செல்கிறோம்.

தவிர, அரசின் உயர் அதிகாரிகளை அழைத்து வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். அனைத்து மாணவர்களும் கேள்வி கேட்கும் வகையில் தயார்படுத்தியுள்ளோம். இதுவரை எங்கள் பள்ளிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான இறையன்பு, ராஜேந்திரன், ஆல்பி ஜான், நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வந்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, களஆய்வு, மாணவர் பங்களிப்பு என அனைத்து நிலைகளிலும் மனதளவில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறோம். எங்களின் முயற்சிக்கு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மிகுந்த உறுதுணையாக இருக்கின்றனர்" என்றார் உற்சாகமாக.

-ஆ.விஜயானந்த்

ரயிலின் மேற்கூரையை உடைத்து வங்கிப் பணம் கொள்ளை..! - அதிர்ச்சி க்ளைமாக்ஸ்

VIKATAN

சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகே இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில், இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு காலை 6.35 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் சேலத்தில் இருந்த இரவு 9 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு, அதிகாலை 4.45 மணிக்கு வந்தடைகிறது.

இந்த நிலையில், சேலத்தில் இருந்து நேற்றிரவு 9.45 மணிக்கு இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டுள்ளது. இந்த ரயிலின் பார்சல் பெட்டியில், 228 பெட்டிகளில் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.342 கோடி என்று கூறப்படுகிறது. இந்த ரயில் அயோத்தியாபட்டினம், வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தது. பயணிகள் இறங்கிச் சென்ற பிறகு, துப்புரவு பணியாளர்கள் ரயிலில் ஏறி, ஒவ்வொரு பெட்டிகளையும் சுத்தம் செய்துள்ளனர். ஆனால், பார்சல் பெட்டியை மட்டும் அவர்கள் சுத்தம் செய்யவில்லை என்று தெரிகிறது.

இதனிடையே, நண்பகல் 12 மணி அளவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரயில் பெட்டியில் இருந்த பணத்தை ஆய்வு செய்ய சென்றுள்ளனர். அப்போது, ரயிலின் மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து வந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். ரயிலில் 23 டன் ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே ஐ.ஜி ராமசுப்பிரமணியன் நேரில் விசாரணை நடத்தினார்.





கொள்ளை நடந்தது எங்கே ?

சேலம் பகுதிகளில் உள்ள வங்கிகளில் 5 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணம் சேகரிக்கப்பட்டுள்ளது. சேலம் டிஐஜி நாகராஜ் தலைமையில் துப்பாக்கி ஏந்திய 10 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்திருக்கிறார்கள். பார்சல் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் இவர்கள் பயணித்துள்ளனர். கொள்ளையர்கள் ரயிலின் மேற்கூரையை வெல்டிங் மிஷின் மூலம் ஒரு ஆள் செல்லும் அளவுக்கு துளை போட்டுள்ளனர். இந்த சத்தம் அடுத்த பெட்டியில் இருந்து காவல்துறையினருக்கு தெரியவில்லை. சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரயில் டீசல் என்ஜின் மூலமே இயக்கப்பட்டுள்ளது. விருத்தாசலத்தில் ரயிலை நிறுத்தி இன்ஜின் மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து ரயில் இங்கிருந்து புறப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட இடங்களில்தான் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை, சேலம், விருத்தாசலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே பாதுகாப்புப்படை பாதுகாப்பு ஆணையர் அஸ்ரா தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இதில் கொள்ளையர்கள் எதிர்பார்க்காத அதிர்ச்சி க்ளைமாக்ஸ் ஒன்று உள்ளது. அது, 'கொள்ளையடிக்கப்பட்ட அந்தப் பணம் அனைத்தும் செல்லாதவை’ என்பதுதான்.

இருப்பினும் ரயிலின் மேற்கூரையை உடைத்து வங்கிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


-சகாயராஜ்

மருத்துவமனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்... - இரு மருத்துவர்களின் ஆய்வறிக்கை...! VIKATAN

அந்த அறுவை சிகிச்சை நிபுணருக்கு, ஒரு ஆயுர்வேத மருத்துவர் நெருங்கிய நண்பராக இருந்தார். ஒரு நாள், அந்த ஆயுர்வேத மருத்துவர்,  தனது காரில் செல்லும் போது, அந்த வாகனம் விபத்திற்குள்ளாகிறது. சிறு விபத்துதான். அவருக்கு முதல் நாள் எந்த வலியும் இல்லை; சாதாரணமாகத்தான் இருந்தார். ஆனால், இரண்டாவது நாள் அவர் வயிற்றுப் பகுதியிலும், மார்பிலும் கடுமையான வலி எடுக்க துவங்குகிறது.

அவரை அந்த நகரத்தில் உள்ள அதி நவீன மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். முதலில் அங்கு ஆஞ்சியோகிராபி எடுக்கப்பட்டு, பின் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்படுகிறது. ஆனாலும், வலி நிற்பதாய் இல்லை. அடுத்த நாள் அவர்,  கடுமையாக வயிறு வலிப்பதாக மருத்துவர்களிடம் சொல்கிறார். ஆனால், ஐ.சி.யூ வில் இருந்த மருத்துவர்கள் யாரும் இதை கண்டு கொள்ளவில்லை. பின் இந்த விஷயத்தை, அந்த ஆயுர்வேத மருத்துவரின் நெருங்கிய நண்பரான, அறுவை சிகிச்சை நிபுணருக்கு தெரிவிக்கிறார்கள். அவர் உடனடியாக அந்த மருத்துவமனைக்கு விரைகிறார்.   அங்கு இருந்த மருத்துவர்களிடம், அடிவயிற்றில் சோனாகிராஃபி சோதனைச் செய்து, அதை உடனடியாக, அவர்களின் மூத்த மருத்துவர்களிடம் காட்ட சொல்கிறார். அதை வைத்துதான் அடுத்தகட்ட சிகிச்சை அளிக்க முடியும்.

மூன்று நாட்கள் செல்கிறது. மீண்டும் அந்த ஆயுர்வேத மருத்துவரின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அழைப்பு வருகிறது. அந்த ஆயுர்வேத மருத்துவரின் நிலை மிக மோசமாக இருக்கிறது. 'அவரது ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. அடிவயிறு உப்பி இருக்கிறது. உடனடியாக வாருங்கள்' என்கிறது அழைப்பு. இவரும் விரைந்து செல்கிறார். அங்கிருந்த மருத்துவர்களிடம் சோனோகிராபி அறிக்கையை கேட்கிறார்.  ஆனால், அவர்கள் சர்வ சாதாரணமாக,  'சோனோகிராபி எடுக்கவில்லை' என்று அலட்சியமாக சொல்கிறார்கள்.

ஆயுர்வேத நண்பர் இறக்கிறார். ஒரு வேளை அந்த டெஸ்ட் ஏற்கெனவே எடுக்கப்பட்டு இருந்தால், அவர் அடிவயிற்றுப் பகுதியில் விபத்தினால் ரத்தம் உறைந்து போயிருந்தது தெரிந்திருக்கும், அவரும் காப்பற்றப்பட்டு இருப்பார். ஆனால், அந்த மருத்துவமனையின் அலட்சியத்தால் அவர் இறந்து போனார். ஆனால், அதன் பின்னும் மருத்துவமனை அவர்களை விடுவதாக இல்லை... ஆம், 'எட்டு லட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்தினால், இறந்தபின் சவத்தை தருவோம்' என்று மிரட்டி இருக்கிறது. ஒரு நீண்ட பேச்சுவர்த்தைக்கு பின், நான்கு லட்ச ரூபாய்க்கு இறங்கி வந்து இருக்கிறது.

இது ஏதோ, புனைவு அல்ல.  உண்மை சம்பவம். அதுவும் அந்த அறுவை சிகிச்சை மருத்துவர், 'மருத்துவர்களுக்கே இந்த நவீன மருத்துவமனைகள் இழைத்த துரோகம்' என்று வருத்தத்துடன் பகிர்ந்த சம்பவம்.  

ஆம், இவர் மட்டும் அல்ல, 78 நேர்மையான மருத்துவர்கள் இப்போது இந்திய மருத்துவத் துறையில் நடக்கும் அவலங்கள் குறித்து தங்கள் வருத்தங்களையும், இயலாமையும் பகிர்ந்திருக்கிறார்கள். இதை மருத்துவர் அருண் காட்ரேவும், மருத்துவர் அபய் சுக்லாவும்  பதிந்து 'Dissenting Diagnosis'  என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.  (இது குறித்து முன்பே விகடன் தளத்தில் சுருக்கமாக பதிந்து  இருக்கிறோம்.). மருத்துவத் துறையில் நடக்கும் தகிடுதத்தங்கள் குறித்து நமக்கு முன்பே ஓரளவு தெரியும் என்றாலும், ஏன் நமக்கே மோசமான அனுபவங்கள் இருந்தாலும் கூட,   இவர்கள் பகிர்ந்திருக்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மையில் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன.

மருந்து நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் மருத்துவர்கள்:

மருத்துவர் சுசித்ரா, சென்னையை சேர்ந்த பொது மருத்துவர்.  மருந்து நிறுவனங்களின் நலன்களுக்காக அல்லாமல், நேர்மையாக நோயாளிகளின் நலனுக்காக, நேர்மையாக மருத்துவத் தொழிலை பார்த்து வருபவர். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்தின் விலை அதிகரித்துவிட்டது என்பதற்காக, அந்த மருந்தை பரிந்துரைப்பதை நிறுத்திவிட்டு, விலை குறைவாக உள்ள வேறொரு நிறுவனத்தின் மருந்தை பரிந்துரைக்க துவங்கி இருக்கிறார். உடனடியாக, அந்த மருந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் அவரை சந்திக்க வந்திருக்கிறார்கள். மீண்டும் தங்கள் நிறுவனத்தின் மருந்தை பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு இந்த மருத்துவர், “இல்லை... உங்கள் நிறுவனத்தின் மருந்தின் விலை அதிகமாக இருக்கிறது.” என சொல்லி இருக்கிறார். ஆனால், அந்த மருந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் விடுவதாக இல்லை. ஏறத்தாழ ஒரு மணிநேரம் அவருடன் விவாதித்து இருக்கிறார்கள். " நாங்கள் பல ஆய்வுகளில் ஈடுபடுகிறோம். அதனால்தான் மருந்தின் விலை எங்களிடம் அதிகமாக இருக்கிறது"  என்று தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி இருக்க்கிறார்கள்.

உடனடியாக இந்த மருத்துவர், தன் பர்சிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டி இருக்கிறார். “நீங்கள் மனித குலத்திற்காக உன்னத ஆய்வில் ஈடுப்படுகிறீர்கள். அதற்கான எனது சிறு பங்களிப்பு... உங்கள் ஆய்விற்காக நான் உதவி செய்ய முடியும்.  னால், உங்கள் சுமையை எப்படி நான் அப்பாவி நோயாளிகளின் தோளில் இறக்கி வைக்க முடியும்...?” என்று வினவி உள்ளார்.
 
இது போல இன்னொரு சம்பவம் மிக வித்தியாசமானது. ஒரு மருந்து நிறுவனத்தின் மூத்த பிரதிநிதிகளின் படை, கும்பலாக சென்று ஒரு மாநகரத்தை சேர்ந்த, ஒரு மகப்பேறு மருத்துவரை சந்திக்கிறது. அந்த மருந்து பிரதிநிதிகளுக்கு,' ஏன் அந்த மருத்துவர் நம் நிறுவன மருந்துகளை பரிந்துரைக்கிறார்' என்பது குறித்து ஐயம். அவர்கள் அதனை நேரடியாக அந்த மருத்துவரிடமே கேட்டு இருக்கிறார்கள், “நாங்கள் உங்களுக்கு எந்த கமிஷனும், பரிசுப் பொருட்களும் தருவது இல்லை... பின் ஏன் நீங்கள் எங்கள் நிறுவன மருந்துகளை பரிந்துரைக்கிறீர்கள்...?”

அந்த மருத்துவர், மிக பொறுமையாக, “உங்கள் நிறுவன மருந்துகள்தான் விலை குறைவாக இருக்கிறது... அதனால்தான்” என்று பதிலளித்துள்ளார்.

ஆனால், அதை அந்த மருத்து பிரதிநிதிகள் நம்பவே இல்லை, “அது எப்படி மேம் முடியும்... ப்ளீஸ் சொல்லுங்க... ஏன் எங்களது நிறுவன மருந்துகளை பரிந்துரைக்கிறீர்கள் ...” என்று தொடர்ந்து கேட்டு இருக்கிறார்கள்.

இதுதான் மருத்துவத் துறையின் இன்றைய உண்மை நிலை. பெரும்பாலான மருத்துவர்களுக்கு, நோயாளிகளின் நலனை விட, மருந்து நிறுவனங்கள் தங்களுக்கு தரும் பரிசுப் பொருட்கள்தான் பிரதானமாக இருக்கிறது. இந்த பரிசுகள், மருத்துவர்கள் அணியும் உள்ளாடை முதல், அமெரிக்க பயணம் வரை நீள்கிறது... யார் அதிகம் பரிசுப் பொருட்கள் தருகிறார்களோ, அவர்கள் சொல்லும் மருந்துதான் நோயாளியின் உடலுக்குள் செல்லும். அது உண்மையாக அந்த நோயாளிக்கு தேவை இருக்கிறதோ... இல்லையோ...?

“நாம் பல ஆண்டுகள் மருத்துவம் படிக்கிறோம். ஆயிரக்கணக்கான நோயாளிகளை சந்திக்கிறோம். ஆனால், துரதிருஷ்டமாக, நாம் இந்த அனுபவங்களை எல்லாம், பரிசுப் பொருட்களுக்காக, ஒரு மருத்துவ பிரதிநிதிகளின் கால்களில் வைக்கிறோம்... இது வெட்கக்கேடானது..” என்கிறார் ஒரு மூத்த மருத்துவர் மிக கவலையாக.

கொல்கத்தாவை சேர்ந்த இதய நோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் கெளதம் மிஸ்ட்ரி, “கெடுவாய்ப்பாக , மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு ஆசிரியராக ஆகிவிட்டன” என்கிறார்.

மருத்துவ பரிசோதனைகள்:

இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயத்தையும் இந்த புத்தகத்தில் அருணும், அபயும்  பதிவு செய்து இருக்கிறார்கள். அதாவது, மருந்து நிறுவனங்கள்,  சில மருத்துவர்கள் மூலம், நோயாளிகளுக்கே தெரியாமல், அவர்கள் மீது மருத்துவ பரிசோதனையை மேற்கொள்கிறது.

ஒரு பெரு நகரத்தை சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணர், “மருந்து நிறுவனங்கள், தங்களது மருந்துகளை நோயாளிகள்  மீது பரிசோதித்து பார்க்க, மருத்துவர்களுக்கு பணம் தருகிறது. ஒரு மருத்துவர் தன் நோயாளியிடம், ‘இந்த மருந்து வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கிறது. மிகவும் சிறப்பான மருந்து. இதை நான் உங்களுக்கு இலவசமாக தருகிறேன். இந்த படிவத்தில் கையெழுத்து மட்டும் போட்டு மருந்தை பெற்றுக் கொள்ளுங்கள்’ என்கிறார். எந்த விளைவுகளும் தெரியாமல் அந்த நோயாளியும் மருந்தை பெற்று செல்கிறார். இந்த மருத்துவர் அந்த படிவங்களை காண்பித்து மருத்துவ நிறுவனங்களிலிருந்து பணம் பெற்றுக் கொள்கிறார்..”

இது, நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இழைக்கும் துரோகம் என்பதையெல்லாம் கடந்து,  எவ்வளவு தூரம் அபாயகரமானது...?

ஆட்டோக்காரர்கள் வரை நீளும் கமிஷன்:

இந்த புத்தகத்தில் பல மருத்துவர்கள் பதிந்திருக்கும் இன்னொரு முக்கியமான விஷயம், கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வருகை தொடர்பானது. பெரும்பாலான மருத்துவர்கள், “கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வருகைக்கு பின்புதான், மருத்துவ தொழிலின் அறம் செத்துவிட்டது.” என்று பதிவு செய்து இருக்கிறாகள்.

இந்த பெரும் மருத்துவமனைகள்,  தங்கள் மருத்துவமனையை பரிந்துரைக்க மருத்துவர்கள் மற்றும் ஆய்வகங்களுக்கு பணம் தருகிறது.  இவர்களுக்கு மட்டுமல்ல, தங்களது மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டுமென, ஆட்டோ டிரைவர்களுக்கு கூட இந்த மருத்துவமனைகள் பணம் தருவதாக சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

சென்னையை சேர்ந்த மருத்துவர் அர்ஜூன் ராஜகோபலன், “கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வருகைக்கு பின், பாவப்பட்ட நோயாளிகளின் நலனை விட, அந்த மருத்துவமனையின் பங்குதாரர்கள் நலம் பிரதானமாகிவிட்டது.” என்று இந்த புத்தகத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

இன்னும் அறத்தை நம்பும் மருத்துவர்கள் கவலையுடன்,  “நோயாளி, உண்மையாக அக்கறை உள்ள நேர்மையான மருத்துவரின் கையில் இருக்கிறாரா அல்லது ஒரு வணிகரின் கையில் இருக்கிறாரா  என்பதை அந்த நோயாளியின் விதிதான் தீர்மானிக்கிறது..,” என்கிறார்கள் தங்கள் துறையில் நடக்கும் அவலங்களுடன் போராடிக் கொண்டு.

உரையாடல்களை வளர்த்தெடுங்கள்:

மருத்துவத்துறை சீரழிந்து போனதற்கு, மருத்துவர்கள், மருந்து நிறுவனங்கள் மட்டும் காரணம் அல்ல. பிழை, ஒவ்வொரு தனி மனிதன் மீதும் இருக்கிறது. ஆம், இப்போது யார் வெற்றிகரமான மருத்துவர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்றால், ஆடம்பர பங்களா, விலை உயர்ந்த கார் வைத்திருப்பவர்கள்தான். இது உண்மையில் சரியானதா...? 'நேர்மையாக ஒரு மருத்துவர்,  தன் தொழிலை பார்த்தால் அவரை பொது சமூகமே கண்டுகொள்வது இல்லை' என்று, இந்த புத்தகத்தில் பல மருத்துவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவர்கள் யாரும் தேவ தூதர்கள் அல்ல... அவர்களும் நம்மைப் போல் ரத்தமும், சதையுமான சக மனிதர்கள்தான். அவர்களுக்கு நாம்தான் ஆசைகளை வளர்க்கிறோம்... பின் அவர்களை தூற்றுகிறோம்... இது எப்படி சரியாக இருக்க முடியும்...?

ஒரு மருத்துவர், 'நான் நேர்மையாகதான் மருத்துவ தொழிலை பார்ப்பேன்' என்று இருந்து இருக்கிறார். அதனால், அவர் மருந்து நிறுவனங்கள் தரும் பரிசு பொருட்களை புறக்கணித்து இருக்கிறார். ஆய்வகங்களுக்கு கமிஷன் தராமல் இருந்து இருக்கிறார். ஆனால், அவருக்கு மக்கள் ஆதரவும் இல்லாமல் போய் இருக்கிறது. பின் அனைத்தையும் விட்டு விட்டு, கனடாவிற்கு சென்று விட்டார்.  அவர் குறித்த குறிப்பு இந்த புத்தகத்தில் இருக்கிறது. இவர் விஷயத்தில் யார் மீது பிழை...?

சமூகத்தில் அறம் சார்ந்த மதிப்பீடுகள் எல்லாம் மாறிவிட்டன. பணம்தான் பிரதானம் என்று ஆகிவிட்டது.  இந்த சமூகத்தின் அங்கம்தான், நீங்களும், நானும், பின் மருத்துவர்களும்...  நாம் மாறமாட்டோம்... ஆனால், மருத்துவர்கள் மீது மட்டும் குற்றம் சுமத்துவோம் என்பது நியாயமாகாது...

முதலில் நாம் மாறுவோம்.... பின் நியாயமான மருத்துவர்களுடன் உரையாடல்களை வளர்த்தெடுப்போம். அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம். நமக்குள் ஒரு உணர்வுபூர்வமான பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வோம்.  இதுதான் உன்னதமான வழி... இதை நாம் மறுத்தலித்தால்,  கையில் இருக்கும் ஒரே தீப்பந்தத்தையும் அணைத்துவிட்டு, தெரிந்தே அடர் இருட்டில் கால் எடுத்து வைப்பதற்கு ஒப்பானதாகும்.


- மு. நியாஸ் அகமது

பழம்பெரும் திரை ஆளுமை பஞ்சு அருணாசலம் காலமானார்

பஞ்சு அருணாச்சலம் | கோப்புப் படம்.

இயக்குநரும், பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலம் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.

கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றிய பஞ்சு அருணாசலம், பின்னாளில் பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் வளர்ந்தார்.

'அன்னக்கிளி' படத்தின் மூலம் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர். 'அன்னக்கிளி', 'உல்லாசப் பறவைகள்', 'முரட்டுக்காளை', 'அன்புக்கு நான் அடிமை' உட்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

'ஆறிலிருந்து அறுபது வரை', 'எங்கேயோ கேட்ட குரல்', 'பிரியா', 'வீரா', 'குரு சிஷ்யன்', 'கல்யாணராமன்', 'ஜப்பானில் கல்யாணராமன்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'ராசுக்குட்டி', 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'சொல்லமறந்த கதை', 'மாயக் கண்ணாடி' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் பஞ்சு அருணாசலம்.

'இளைய தலைமுறை', 'என்ன தவம் செய்தேன்' 'சொன்னதை செய்வேன்', 'நாடகமே உலகம்', 'மணமகளே வா' ,'புதுப்பாட்டு', 'கலிகாலம்', 'தம்பி பொண்டாட்டி' ஆகிய படங்களை இயக்கியவர்.

சென்னை தி.நகரில் வசித்து வந்த பஞ்சு அருணாசலம், உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

பட்டறிவுப் பாவலன் By கவிஞர் வைரமுத்து



கவியரசு கண்ணதாசனை முற்றும் புரிதல் என்பது சற்றே கடிது. ஏனெனில், தன் மடித்த உள்ளங்கையில் அவரைப் பூட்டி வைத்திருக்கிறது காலம். அதன் அத்தனை விரல்களையும் விலக்கினால்தான் மொத்தம் விளங்கும். இந்தக் கட்டுரை அதன் ஒரு விரலையேனும் பிரிக்குமா பார்ப்போம்.
கண்ணதாசன் ஓர் ஆச்சரியம்!


அவர் நிலைத்த அரசியல் நிலைப்பாடு கொண்டிருந்தவர் அல்லர். ஆனால், அத்தனை அரசியல் கட்சிகளும் அவரை வழிய வழிய வாசித்தன.
தனிமனித வாழ்வில் அறம் சார்ந்த சட்டங்களுக்குள் தன்னை அவர் ஆணியடித்துக்கொண்டவர் அல்லர். ஆனால், அவரது சமகாலச் சமூகம் விழுமியம் கடந்தும் அவரை விரும்பியது.
எட்டாம் வகுப்பை எட்டத்தான் என் பெற்றோர் இட்டார் என்ற கவிதை வாக்குமூலப்படி அவர் பள்ளி இறுதியைத் தாண்டாதவரே. ஆனால், கல்லூரிகளெல்லாம் அவரை ஓடிஓடி உரையாற்ற அழைத்தன.
இந்தியாவின் சராசரி ஆயுளைவிடக் குறைவாக வாழ்ந்து ஐம்பத்து நான்கு வயதில் உடல் மரணம் உற்றவர்தான். ஆனால், ஐம்பது ஆண்டுகள் எழுத்துலகை ஆண்டவர் போன்ற பெரும்பிம்பம் அவருக்கு வாய்த்தது.
எப்படி இது இயன்றது... ஏது செய்த மாயமிது?
தன் எழுத்துக்கு அவர் படைத்துக்கொண்ட மொழியே முதற்காரணம்.
ஈராயிரம் ஆண்டு நீண்டு கிடந்த தமிழின் தொல்லழகையும் வாய்மொழி வந்த நாட்டுப்புறப் பாடல்களின் சொல்லழகையும் குழைத்துக் கூட்டிச் செய்த தனிமொழி கண்ணதாசனின் மொழி.
முன்னோர் செய்த முதுமொழி மரபு அவரது கவிதைக்கு வலிமை சேர்த்தது, பாட்டுக்கு எளிமை சேர்த்தது.
காலம் தூரம் இரண்டையும் சொற்களால் கடப்பது கவிஞனுக்குரிய கலைச்சலுகை. தமிழின் இடையறாத மரபெங்கிலும் அது இழையோடிக் கிடக்கிறது. மலையிலே பிறக்கும் காவிரி கடல் சென்று கலக்க 800 கி.மீ. கடக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பட்டினப் பாலையில் மலைத்தலைய கடற்காவிரி என்றெழுதி 800 கி.மீட்டரைக் கடியலூர் உருத்திரங் கண்ணன் நான்கு சொற்களில் கடக்கிறான்.
இதே உத்தியைக் கண்ணதாசன் தன் பாசமலர் பாடலுக்குள் கையாள்கிறார். தன் தங்கை திருமணம் கொண்டு, இல்லறம் கண்டு, இன்பம் துய்த்து, கருவுற்று, திருவுற்று, உருவுற்று, வளைகாப்புற்று, பிள்ளைபெற்று நிற்கும் காலத்தை, பூ மணம் கொண்டவள் பால் மணம் கண்டாள் என்றெழுதிப் பத்துமாதங்களை ஆறு சொற்களில் கடக்கிறார்.
சூரியனின் முதற்கீற்று விண்வெளியைக் கடந்து பூமியைத் தொடுவதற்கு 8 நிமிடங்களும் 20 நொடிகளும் பயணப்படுகின்றது. ஒளியினும் விரைந்து பயணிப்பது சொல். அந்தச் சொல்லின் சகல சாத்தியங்களையும் பாடல்களில் கையாண்டு வென்றவர் கண்ணதாசன்.
இந்தப் பாடல் வெளிவந்த 1960களில் தமிழ்நாட்டுக் கல்வியறிவு 21 விழுக்காடு மட்டுமே. அதனால் இந்த வரி பண்டித உயரத்தில் இருக்கிறதே பாமரர்க்குப் புரியுமோ என்று அய்யமுற்ற பாவலன் அடுத்த வரியில் பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள் என்று உரையெழுதி விடுகிறான்.
இரண்டாம் வரியில் விளக்கம் தந்தது கல்வியறிவில்லா சமூகத்தின் மீது கவிஞன் கொண்ட கருணையாகும்.
தமிழ்த் திரைப்பாட்டுத் துறையின் நெடுங்கணக்கில் ஒரு பெருங்கவிஞனே பாடலாசிரியனாய்த் திகழ்ந்தது பாரதிதாசனுக்குப் பிறகு கண்ணதாசன்தான். பாட்டெழுதும் பணியில் கவிஞனுக்கும் பாடலாசிரியனுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு என்பதை அறிவு ஜீவிகள் மட்டுமே அறிவார்கள்.
கவிதையின் செம்பொருள் அறிந்தவனும் சொல்லாட்சியின் சூத்திரம் புரிந்தவனும் யாப்பின் ஒலி விஞ்ஞானம் தெரிந்தவனுமாகிய கவிஞன் மொழியை வேலை வாங்குகிறான். கேள்வி ஞானத்தால் வந்த பாடலாசிரியனோ மொழியின் வேலைக்காரனாய் மட்டுமே விளங்குகிறான்.
தான் கவிதையில் செய்த பெரும் பொருளைப் பாடலுக்கு மடைமாற்றம் செய்தவர் கண்ணதாசன்.
வானம் அழுவது மழையெனும்போது
வையம் அழுவது பனியெனும்போது
கானம் அழுவது கலை யெனும்போது
கவிஞன் அழுவது கவிதையாகாதோ
-என்ற கவிதையின் சாறுபிழிந்த சாரத்தை -
இரவின் கண்ணீர் பனித்துளி யென்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச்
சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
-என்று கவலையில்லாத மனிதன் என்ற தன் சொந்தப் படத்தில் சந்தப்படுத்தியவர் கண்ணதாசன்.
இப்படி... கவிதைச் சத்துக்கள் பாட்டுக்குள் பரிமாறப்பட்டதால்தான் கண்ணதாசனின் அய்யாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களிலும் இலக்கியத்தின் தங்க ரேகைகள் ஊடும் பாவுமாய் ஓடிக்கிடக்கின்றன.
பாடல்களில் ஒரு புனைவுக்கலாசாரம் கண்ணதாசனில்தான் பூரணமாகிறது.
முற்றாத இரவு (குங்குமம்), பரம்பரை நாணம் (பாலும் பழமும்), வளர்கின்ற தங்கம் (மாலையிட்ட மங்கை), உயிரெலாம் பாசம் (புதிய பறவை), செந்தமிழர் நிலவு(பணத்தோட்டம்), மோக வண்ணம் (நிச்சயதாம்பூலம்), கடவுளில் பாதி (திருவருட்செல்வர்), விழித்திருக்கும் இரவு (ஆயிரத்தில் ஒருவன்), பேசத் தெரிந்த மிருகம் (ஆண்டவன் கட்டளை), புலம்பும் சிலம்பு (கைராசி) போன்ற படிமங்கள் பாட்டுக்குள் ஒரு கவிஞன் இட்டுச்சென்ற கையொப்பங்களாகும்.
தான் வாழும் காலத்திலேயே அதிகம் அறியப்பட்டவரும் எப்போதும் ஒரு சமூகச் சலசலப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தவருமான கவிஞர் அவர்.
அதன் காரணங்கள் இரண்டு. கவிஞன் தன் அக வாழ்க்கையைத் தானே காட்டிக்கொடுத்த கலாசார அதிர்ச்சி. மற்றும் அவரது அரசியல் பிறழ்ச்சி. அவரை மயங்க வைத்த காரணங்களும் இவையே, இயங்க வைத்த சக்திகளும் இவையே.
கட்சி அரசியல் பெரும்பாலும் வெற்றி தருவதில்லை கவிஞர்களுக்கு. காரணம் கலையின் தேவைகள் வேறு அரசியலின் தேவைகள் வேறு. கலை என்பது புலப்படுத்துவது; அரசியல் என்பது மறைப்பது. வட்ட நிலாவையும் வானத்தையும் கடக்க முடிந்த ஒரு கவிஞன், வட்டச் செயலாளரைக் கடப்பது கடிது.
கலையென்பது மர்மங்களின் விஸ்வரூபம்; அரசியலென்பது விஸ்வரூபங்களின் மர்மம்.
""நெஞ்சத்தால் ஒரு மனிதன் - சொல்லால் ஒரு மனிதன் - செயலால் ஒரு மனிதன் என்று ஒவ்வொரு மனிதனும் மூன்று வடிவெடுக்கும் உலகத்தில் அவன் மட்டும் ஒரே மனிதனாக வாழ்ந்துவிட்டான்'' என்று வனவாசத்தில் எழுதிக் காட்டும் அவரது சுயவிமர்சனம், அரசியல் லாயத்திற்கு லாயக்கில்லாத குதிரை என்று அவரைக் கோடிகாட்டுகிறது.
அவர் கட்சிமாறினார் கட்சிமாறினார் என்று கறைச்சேறு பூசுகிற சமூகம், ஏற்றுக்கொண்ட எந்தத் தலைவனுக்கும் அவர் கற்போடிருந்தார் என்பதை மறந்து பேசுகிறது. கற்பு என்ற சொல்லாட்சியை நான் அறிந்தே பிரயோகிக்கிறேன். காலங்காலமாய்க் கல்முடிச்சுப் பட்டு இறுகிக் கிடந்த கற்புக் கோட்பாடு மெல்லத் தளர்ந்து தளர்ந்து இன்று உருவாஞ்சுருக்கு நிலைக்கு நெகிழ்ந்திருக்கிறது.
ஒருவனுக்கு ஒருத்தி என்றிருந்த கற்புநிலை, ஒருவனோ ஒருத்தியோ யாரோடு வாழ நேர்கிறதோ அவரோடு வாழும் காலம்வரை தன் இணைக்கு உண்மையாயிருத்தல் என்று நெகிழ்ந்திருக்கிறது. கண்ணதாசனின் அரசியலுக்கும் இது பொருந்தும். எந்தக் கட்சியிலிருந்தாலும் தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவே இயங்கியிருக்கிறார். காமராசர், நேரு இருவரையும் கண்ணதாசனைப்போல் நேசித்த தொண்டனில்லை. ஆனால், கட்சியிலிருக்கும்போது ஒரு தலைவனை மலையளவு தூக்குவதும் வெளியேறிய பிறகு வலிக்கும்வரை தாக்குவதும் என் வாடிக்கையான பதிகம் என்று சொல்லிக்கொள்வதில் அவர் சுகம் கண்டார்.
ஆண்டுக்கொரு புதுமை தரும்
அறிவுத்திரு மாறன்
ஆட்சிக்கொரு வழி கூறிடும்
அரசுக்கலை வாணன்
மீண்டும் தமிழ் முடிசூடிட
விரையும்படை வீரன்
மீட்சிக்கென வேல் தாங்கிய
வெற்றித்தமிழ் வேந்தன்
-என்று அண்ணாவைப் புகழ்ந்து பூமாலை சூடியவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட்டுப் புழுக்கத்தோடு வெளியேறினார். தீராத காயங்களுக்காக வெளியேறுகிறேன் என்று சொல்ல முடியாதவர் திராவிடநாடு உடன்பாடில்லை அதனால் போய்வருகிறேன் என்று 1961-இல் அவர் கட்சியைத் துறக்கிறார். 1964-இல் திராவிட நாடு கொள்கை அதிகாரபூர்வமாகக் கைவிடப்படுகிறது. திராவிட நாட்டுக்கு இரங்கல் கவியரங்கம் ஏற்பாடு செய்து பாடுகிறார் கண்ணதாசன்.
ஈரோட்டிலே பிறந்து
இருவீட்டிலே வளர்ந்து
காஞ்சியிலே நோயாகிக்
கன்னியிலே தாயாகிச்
சென்னையிலே மாண்டாயே
செல்வத் திருவிடமே
என்னருமைத் தோழர்களே
எழுந்து சில நிமிடம்
தன்னமைதி கொண்டு
தலைதாழ்ந்து நின்றிருப்பீர்
பாவிமகள் போனாள்
பச்சையிளம் பூங்கொடியாள்
ஆவி அமைதி கொள்க
அநியாயம் வாழியவே
-என்று அழுது எழுகிறார்.
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது என்றெழுதியவரும் அவரே. எங்கள் திராவிடப் பொன்னோடே கலை வாழும் தென்னாடே - என்று எழுதியவரும் அவரே.
திராவிட நாடு என்ற கருதுகோளுக்கு எழுச்சிப்பாடலும் இரங்கற்பாடலும் எழுதிய ஒரே திராவிட இயக்கக் கவிஞன் கண்ணதாசன் மட்டும்தான். இது கண்ணதாசனின் காட்சிப்பிழையா காலத்தின் தோற்றப்பிழையா என்பதை அவரது சமகாலத்தவரெல்லாம் முடிந்த பிறகுதான் முடிவுசெய்ய முடியும்.
திரையுலகில் கண்ணதாசனின் நிலைபேறு ஓர் ஆச்சரியத்துக்குரிய வரலாறு. கலைஞரும் (மு.கருணாநிதி), எம்.ஜி.ஆரும் தி.மு.கவின் பெரும்பிம்பங்களாய் உருவெடுத்து உச்சத்தில் நின்றபோது, திரையுலகத்தின் பெரும்பகுதி தி.மு.க.வின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது அவர் தி.மு.க.வை விட்டு வெளியேறுகிறார். தெனாலிராமன் படத்தில் வந்த சண்டையால் சீறிச் சினமுற்று சிவாஜியும் கண்ணதாசனை வெறுத்து விலகி நிற்கிறார். இப்படித் தோழமைகளையெல்லாம் துண்டித்துக்கொண்ட பிறகு ஒரு சராசரிக் கவிஞனென்றால் காணாமல்தான் போயிருப்பான். ஆனால், கட்சியைவிட்டு விலகிய 1961க்குப் பிறகுதான் கண்ணதாசனின் கலை உச்சம் தொடுகிறது. பாசமலர் முதல் உரிமைக் குரல் வரை அவர் சிகரம் நோக்கியே சிறகடிக்கிறார்.
அரசியல் எதிர்ப்புகளோ ஏகடியங்களோ கண்ணதாசனின் கலையுலகப் பயணத்தைக் கடுகளவும் தடுக்கவில்லை. முன்னே முட்டவரும் பசுவைப் பின்னே நின்று பால் கறந்துகொள்வதுபோல், அவரது அரசியலை நேசிக்க முடியாதவர்களும் அவர் தமிழை வாங்கி வைத்துக்கொள்ள வரிசையிலே நின்றார்கள். விரக்தியினால் சில புதிய பாடலாசிரியர்களை அறிமுகம் செய்தார்கள் சிலர். வியர்வையிலே உற்பத்தியாகும் பேன்கள் மாதிரி அப்படி வந்தவர்கள் காண்பதற்குள் காணாமற் போனார்கள்.
மாறாதிருக்க நான் மரமா கல்லா
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
-என்று தன் மாறுதல்களுக்குக் கவிதை நியாயம் கண்ட கண்ணதாசன் கடவுள் மறுப்பிலும் இரண்டு நிலை கண்டிருந்தார். அவரது அவசரமான கடவுள் மறுப்பு காட்டோடை வெள்ளம்போல் வந்த வேகத்தில் வற்றிவிட்டது. ஆன்மிகம் போல் நாத்திகமும் ஒரு சந்தையாகும் என்று நம்பியதன் விளவு அது.
""நான் ஒரு சுயமரியாதைக்காரன் என்று பகிரங்கமாகவே சொல்லிக் கொண்டான். கறுப்பு புஷ் கோட்டுகள் ஆறு தைத்துக்கொண்டான். எந்த ஆண்டவனிடம் இடையறாது பக்தி கொண்டிருந்தானோ அந்த ஆண்டவனையே கேலிசெய்ய ஆரம்பித்தான்'' என்று வனவாசத்தில் எழுதியிருக்கிறார். நம்பாத நாத்திகத்தை ஒரு கள்ளக் காதலைப்போல் காப்பாற்றியும் வந்திருக்கிறார்.
உல்லாசம் தேடும்
எல்லோரும் ஓர்நாள்
சொல்லாமல் போவார்
அல்லாவிடம்
-என்று தெனாலிராமனில் பாட்டெழுதிவிட்டு எங்கே இது சக நாத்திகர்களால் சர்ச்சைக்குள்ளாகுமோ என்றஞ்சி இந்தப் பாடலுக்கு மட்டும் தன் பெயரை மறைத்துத் தமிழ் மன்னன் என்று எழுத்தில் இடம்பெறச் செய்தார்.
எளிமையாக நுழைகிற எதுவும் எளிமையாக வெளியேறிவிடும். ஆண்டவன் மீது நம்பிக்கை மிகுந்தபோதோ, நாத்திகர்கள்மீது நம்பிக்கை தளர்ந்தபோதோ அவர் கடவுள் மறுப்பிலிருந்து வெளியேறிவிட்டார்.
பக்தியும் பாலுணர்வும் மனிதகுலத்தின் மூளைச் சாராயங்கள். சாராய வகைப்பட்ட எதையும் உலகம் இதுவரை முற்றிலும் ஒழித்ததில்லை. திராவிட இயக்கம் கட்டியெழுப்பிய கடவுள் மறுப்பு வென்றது எவ்விடம், தோற்றது எவ்விடம் என்று ஒரு மீள்பார்வை செய்வது நல்லது.
கடவுள் மறுப்பு என்பது ஒரு சமூக விஞ்ஞானம். அது அறிவியல் என்ற ஆழத்திலிருந்து கட்டியெழுப்பப்படாமல் பிராமண எதிர்ப்பு என்ற பீடத்திலிருந்து கட்டமைக்கப்பட்டு விட்டதாகக் கருதப்பட்டு விட்டதோ என்று கவலையோடு நினைக்கத் தோன்றுகிறது.
புதிதாகப் பிறந்ததுதான் பூமியை ஆட்சி செய்யும். 450 கோடி வயதுகொண்ட பூமியில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த மனிதன்தான் புதிய உயிர். ஆகவே, அவனே ஆட்சி செய்தான்.
மனிதனுக்குப் பிறகு பிறந்தது கடவுள். 5,000 முதல் 7,000 ஆண்டுகள்தாம் கடவுளின் வயது. புதிதாகப் பிறந்த கடவுள் மனிதனையே ஆட்சி செய்யுமாறு அவதரிக்கப்பட்டார்.
வழிவழியாக உடம்பிலும் மனதிலும் ஊறிப்போன கடவுள் என்ற கருத்தியலைவிட்டுக் கண்ணதாசன் போன்றவர்களால் நிரந்தரமாக வெளியேற முடியவில்லை. அந்த வகையில் மதங்களுக்கும் கடவுள்களுக்கும் வேண்டிய பெருங்கூட்டத்தின் பேராசைக்குரிய கவிஞராகக் கண்ணதாசன் கருதப்படுகிறார். ஆகவே, கண்ணதாசனை பாரதிதாசனின் நீட்சி என்று கொள்ளாமல் சமய வகையில் பாரதியின் எச்சம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு கவிஞனாக பாடலாசிரியனாக அறியப்பட்ட அளவுக்குக் கண்ணதாசன் ஒரு தேர்ந்த வசனகர்த்தா என்பது போதுமான அளவுக்குப் புலப்படாமலே போய்விட்டது. பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைப் பாடல்களால் கட்டியெழுப்பிய கண்ணதாசன் 1950-களில் தன் வலிமையான வசன வரிகளால் நாற்காலியிலிருந்து எம்.ஜி.ஆரை சிம்மாசனத்திற்கு இடம் மாற்றினார்.
மதுரை வீரன் (1956), மகாதேவி (1957), நாடோடி மன்னன் (1958) என்று கண்ணதாசன் வசனமெழுதி அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிவந்த இந்த மூன்று பெரும் படங்களும் மூட்டை தூக்கி விறகு சுமக்கும் உழைக்கும் மக்களிடத்தில் எம்.ஜி.ஆரை ஒரு தேவதூதனாய்க் கொண்டு சேர்த்தன.
வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயகமே ஆராய்ச்சி மணிகட்டி ஆண்டிருந்த தென்னகமே - இது மதுரை வீரன்.
அத்தான்... அந்தச் சத்தான வார்த்தையில் கருணாகரன் செத்தான்- இது மகாதேவி.
சொன்னாலும் புரியாது - மண்ணாளும் வித்தைகள் - இது நாடோடி மன்னன்.
எதுகை மோனைகளின் இயல்பான ஆட்சியும் தாளத்தில் வந்து விழுகிற சொல்லமைதிகளும் வசனமெழுதியவன் கவிஞன் என்பதைக் கண்ணடித்துக் கண்ணடித்துக் காட்டிக்கொடுக்கின்றன. அப்படி ஒரு தமிழுக்கு அப்போது இடமிருந்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட்டு வெளியேறியவர்களில் வென்று நின்று காட்டியவர்கள் மூவர் மட்டுமே. கலை, அரசியல் இரண்டிலும் வென்றவர் எம்.ஜி.ஆர். கலையில் மட்டும் வென்று நின்று நிலைத்தவர்கள் சிவாஜியும், கண்ணதாசனும்.
என்னதான் கலைச்சிகரம் தொட்டிருந்தாலும் அரசியல் என்ற அடர்காடு அவர் கண்களைவிட்டு அகலவேயில்லை. தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் நிகழ்வுகளில் அவர் பக்கபலமாய் இருந்திருக்கிறார். அல்லது பக்கத்தில் இருந்திருக்கிறார்.
1972-இல் ஒரு முன்னிரவில் வீட்டுத் தொலைபேசி அடிக்கிறது கண்ணதாசன் எடுக்கிறார். அதன் பிறகான உரையாடலின் சாரத்தை நான் பதிவு செய்கிறேன்.
"கண்ணதாசன் பேசறேன்'. "யாரு?'
"நான் கருணாநிதி பேசறேன்யா'
"என்னய்யா இந்த நேரத்துல?'
"வேறொண்ணுமில்லய்யா...எம்.ஜி.ஆரைக் கட்சியவிட்டு எடுத்துடலாம்னு எல்லாரும் சொல்றா?' "நீ என்ன சொல்ற? '
"வேணாய்யா'. "எம்.ஜி.ஆரை வெளியே விடாத. உள்ள வச்சே அடி,' "பாப்போம்' - இது கண்ணதாசன் மேடையில் சொன்னது. கேட்டவன் நான். ஆனால், காலத்தின் கணக்கு வேறாக இருந்தது. எம்.ஜி.ஆரை உள்ளே வைத்து அடிக்கச் சொன்னவர் கண்ணதாசன். ஆனால், அரசவைக் கவிஞராக்கிக் கண்ணதாசனையே உள்ளே வைத்து அடித்தவர் எம்.ஜி.ஆர். காலத்தின் நகர்வுகள் எதிர்பாராதவை.
தமிழ்ப் புலவர் நெடுங்கணக்கில் கண்ணதாசனையொத்த அனுபவச் செழுமை முன்னெவருக்கும் வாய்த்ததில்லை அல்லது கண்ணதாசனைப் போல் முன்னவர் யாரும் பதிவு செய்ததில்லை.
வாழ்வு கல்வியால் அறியப்படுகிறது அனுபவத்தால்தான் உணரப்படுகிறது. சில அனுபவங்கள் அவரைத் தேடி வந்தவை. பல அவர் தேடிச் சென்றவை. எதையாவது தின்னத் துடிக்கும் தீயின் நாவுகளைப்போல அனுபவங்களை அவர் குடைந்து குடைந்து அடைந்திருக்கிறார்.
அந்த அனுபவங்களையெல்லாம் கண்ணதாசன் இலக்கியம் செய்தது தமிழ் செய்த தவம்.
கண்ணதாசனின் அனுபவங்கள் இரு துருவப்பட்டவை.
காமமில்லாத காதல் காதலில்லாத காமம்
கண்ணீரின் சாராயம் சாராயத்தின்
கண்ணீர்
அரசியலின் துரோகம் துரோகத்தின்
அரசியல்
கவியரசு பட்டம் கடன்கார வட்டம்
சாகித்ய அகாடமி - ஜப்தி
ஒதுக்க முடியாத வறுமை
பதுக்க முடியாத பணம்
தோளில் தூக்கிய ரசிகர்கள்
தோற்கடித்த வாக்காளர்கள்
புகழ்ச்சியின் சிகரம் இகழ்ச்சியின் பள்ளம்
-என்று ஒரே உடம்பில் பல்வேறு வாழ்க்கையை வாழ்ந்து களித்த - வாழ்ந்து கழித்த ஒரு கவிஞன் எந்தச் சித்தாந்தத்துக்கும் சிக்காமல் தன்னை வேதாந்தியாக்கிக் கொள்ளத் துடித்த கதைதான் கண்ணதாசன் கதை. அது திராவிடத்தில் தொடங்கி தேசியத்தில் அடங்கி தெய்வீகத்தில் முடிந்தது.
தமிழ்க் கவிதைச் சமூகத்தில் யாரோடும் ஒப்பிட முடியாத தனியொரு தமிழ்க் கவிஞன் கண்ணதாசன். இலக்கிய வரலாற்றில் வேறெப்போதும் காணாத வித்தியாசம் அவர். அந்த வித்தியாசம்தான் அழகு.
என்னைப் பொறுத்த வரையில் திரையுலகின் என் வீரிய விளைச்சலுக்குப் பலர் பொறுப்பு. என் விதைநெல்லுக்குக் கண்ணதாசனே பொறுப்பு.

இன்று கவியரசு கண்ணதாசனின்
90-ஆவது பிறந்தநாள்.
கவிஞர் வைரமுத்து

நடிகை ஜோதிலட்சுமி திடீர் மரணம்:திரையுலகினர் அஞ்சலி


vikatan.com

சென்னை: பிரபல தமிழ்த்திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி உடல்நலக்குறைவால் தனது 68வது வயதில் சென்னையில் காலமானார்.

தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பல மொழிகளில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை ஜோதிலட்சுமி. 1963ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த 'பெரிய இடத்துப் பெண்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் இவர். ' பூவும் பொட்டும்' என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.தொடர்ந்து எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' படம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஒரு மாதம் முன்பு ஜோதிலட்சுமி திடீர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்த புற்று நோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று(செவ்வாய்) இரவு 12 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

மறைந்த ஜோதிலட்சுமிக்கு, ஜோதிமீனா என்ற மகள் உள்ளார். ஜோதி லட்சுமியின் உடல் சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள அவரின் வீட்டில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவருக்கு இறுதிச் சடங்கு இன்று(புதன்) மாலை சென்னையில் கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் நடக்கவுள்ளது.

உங்கள் பாஸ் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்? #DailyMotivation

VIKATAN

பாஸ் மற்றும் பணியாளர் உறவு என்பது சரியாக தயாரிக்கப்பட்ட காபியை போன்றது. சரியான கலவையில் இருந்தால்தான் அதன் சுவை மேம்படும்; புத்துணர்ச்சி கிடைக்கும். நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை தன் பணியாளர்களிடம் பகிர்ந்து அதற்கான திறனை முழுமையாக வெளிக்கொணர வைக்கும் பாஸ்தான் சரியான தலைவனாக பார்க்கப்படுகிறார். அப்படி நிறுவனத்தின் தலைவர் ஒருவர், தன் பணியாளரிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் இவைதான்...

இலக்குகளை புரிந்து கொள்ளுங்கள்!

இலக்குகள் என்பது நிர்வாகம் பாஸுக்கு நிர்ணயிப்பது. அதனை ஏன் பணியாளர்கள் மீது திணிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம். அவருக்கு நிர்ணயிக்கப்படும் இலக்குகள் அனைத்தும் அவருக்கு மட்டும் நிர்ணயிக்கப்படுவது அல்ல; பணியாளர்களின் கூட்டு செயல்திறனுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுபவையே. முதலில் உங்கள் அணியின் இலக்குகளை புரிந்து கொள்ளுங்கள். அதனை அடைய வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் வேலையை தாண்டி உங்கள் பாஸ் உங்களிடம் எதிர்பார்க்கும் மிக முக்கியமான விஷயம் இதுதான். இதனை புரிந்து கொண்டால் உங்கள் இலக்குகளை எளிதில் அடைந்துவிட முடியும்.

ஃபேஸ்புக் அலுவலகத்தில் மார்க் ஸக்கர்பெர்க் துவங்கி ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் இலக்குகள் என்ன என்பது அவர்களது அலுவலக அமைப்பில் தெளிவாக இருக்குமாம். பணியாளர்கள் அனைவரும் தங்களது தனிப்பட்ட இலக்குகளை அதிகரிப்பதன் மூலம் ஃபேஸ்புக்கின் வருடாந்திர இலக்குகள் அதிகரிப்பது அவர்களது ப்ளஸ்.

தவறுகளை மறைக்காதீர்கள்!

வேலையின் செயல்முறையில் ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்தால் முதலில் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்கான தீர்வோடு பாஸை அணுகுங்கள். அதேசமயம் தவறான புரிதலில் ஒருவர் தவறு செய்ததாக கூறப்பட்டால் அதற்கான விளக்கத்தோடு அணுகுங்கள். அதோடு இனிமேல் அந்த தவறான புரிதல் கூட இடம்பெறாத அளவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். உங்களை நிரூபிக்கவேண்டும் என்று வேலை பார்ப்பதை பாஸ்கள் விரும்புவதில்லை. ஒரு அணியாக நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதை தான் உங்கள் பாஸ் உங்களிடம் எதிர்பார்க்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி இதற்கு மிகப்பெரிய உதாரணம், செய்யும் தவறுகளை ஓப்பனாக பிரஸ்மீட்டில் ஏற்றுக் கொண்டு அதனை திரும்ப செய்யாமல் செயல்பட்டதில் தோனி பாராட்டத்தக்கவர். ஷார்ட் பிட்ச் பந்துகளைக் கண்டு திணறிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் ஷார்ட் பிட்ச் பந்துகளை விளாசித் தள்ளியது ஒரு எடுத்துக்காட்டு.






திட்டம் எப்படி இருக்கிறது?

அணியில் ஒரு சிலர் மிகவும் சிற‌ப்பான திட்டத்தை வகுக்கக் கூடியவராக இருப்பர். அவர்கள் சொல்வது கேட்க சரியாக இருப்பது போன்றே தோன்றும், ஆனால் பாஸ் எதிர்பார்ப்பது, சிறப்பான திட்டம் என்பதை தாண்டி, செயல்பாட்டுக்கு எளிதில் வந்து இலக்குகளை அடைய உதவும் திட்டத்தைத்தான். வெறும் பேச்சளவிலான திட்டங்கள் 73% தோல்வியில் முடிவடைகின்றன. திட்டத்தின் முதல் 30 நாட்கள் இப்படித் தான் இருக்கும் என்று தயாரிக்கப்பட்ட திட்டங்களின் வெற்றி விகிதம் 64%. அதனால் சிறப்பான திட்டங்களுக்கான முழு செயல்முறையோடு அணி இருக்க வேண்டும் என்பதை தான் உங்கள் பாஸும், நிர்வாகமும் எதிர்பார்க்கிறது.

இந்த மூன்று விஷயங்களும் சரியாக அமைந்தாலே உங்களுக்கு பாஸுக்குமான அலுவலக உறவு சரியாக அமையும், இதைத் தாண்டி வீக் எண்ட் பார்ட்டி, பர்த்டே ட்ரீட் என அனைத்து விஷயங்களிலும் உங்களுடன் ஃப்ரெண்ட்லியாக உங்கள் பாஸை அணுகுங்கள். அது அணியின் செயல்திறனை அதிகப்படுத்தும்.

- ச.ஸ்ரீராம்

NEWS TODAY 21.12.2025