Wednesday, August 31, 2016

வீழ்த்தியது... கனிமவள கணக்கு! விசுவாசத்தால் பலிகடா ஆன ஐ.ஏ.எஸ்.!


vikatan.com

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் ‘டிட்கோ’ தலைவர் - நிர்வாக இயக்குநருமான ஞானதேசிகன் மற்றும் எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், சுரங்கம் - கனிமவளத் துறை ஆணையருமான அதுல் ஆனந்த் ஆகியோரின் திடீர் சஸ்பெண்ட் ஐ.ஏ.எஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளாக இருந்த இவர்களின் சஸ்பெண்ட் குறித்து தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, பிரமிப்பாக அடுக்குகிறார்கள். “இரண்டு ஐ.ஏ.எஸ்-கள் சஸ்பெண்ட் என்பதோடு நின்றுபோகிற விஷயமாக இது தெரியவில்லை. அடுத்தடுத்து சில அதிரடி நடவடிக்கைகளும் இனி இருக்கலாம்” என்றனர்.

“அரசியல் சிக்கலில் இருக்கும் ஒரு தொழிலதிபரின் கனிமவளங்கள் குறித்த ‘முக்கிய’ ஆவணங்களை அரசின் விஜிலென்ஸ் விங் சில நாட்களுக்கு முன்னர் கைப்பற்றியது. சுரங்கம் மற்றும் கனிமவளங்கள் துறை ஆணையரான அதுல் ஆனந்திடம், அதே விவரங்கள், ஆவணங்கள் குறித்து கடந்த ஒரு மாதகாலமாக விவரம் கேட்டு அரசு நெருக்கியும் அவரிடமிருந்து இதுபற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதுல் ஆனந்த், அரசுக்கு அளித்த ரிப்ளையைவைத்து அந்தத் தொழிலதிபரின் மீது, சிறு சண்டை வழக்கைக்கூடப் பதிய முடியாது. அவ்வளவு ‘வீக்’கான விவரங்கள்தான் அதுல் ஆனந்திடமிருந்து வந்திருந்தது.

அவரிடம் இதுகுறித்து இறுதியாக, (திங்கட்கிழமை 29.8.2016 - மாலை ) தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், நேரில் அழைத்து விவரம் கேட்டிருக்கிறார். அப்போதும், போதிய விவரங்கள் அதுல் ஆனந்திடம் இல்லை. இதுகுறித்து முதல்வருக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். அதுல் ஆனந்த் கொடுக்காத தகவல்களைவிடக் கூடுதல் தகவல்கள், ஆவணங்கள் ஆளும் கட்சியின் சமீபத்திய எதிரியான சசிகலா புஷ்பா எம்.பி-யிடம் இருப்பதாக ஒரு தகவல் வரவே, அதிகார மையம் சூடாகிவிட்டது. பல ஆண்டுகளாகவே எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும், சுரங்கம் - கனிமவளத் துறை ஆணையாளர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்தவரிடம் இருக்க வேண்டிய விரல்நுனி விவரங்கள், இப்படி இடம் மாறி இருந்தது.

பிரபல கனிம தொழிலதிபரிடம் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பலர் தஞ்சம் புகுந்துள்ளதாக வெளியான தகவல்களும் இதனுடன் சேர்ந்துகொள்ள, அது ஆட்சி மையத்தின் கோபத்தை பன்மடங்கு எகிறவைத்தது.
இன்னொரு புறம், தென்மாவட்ட நாடார் இன மக்களைத் தன் பக்கம் இழுப்பதுபோல் சசிகலா புஷ்பா காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பது, அவர் தொடர்புடைய விழாக்களில் பங்கேற்பது என்று துணிச்சலாக வலம் வந்ததும் இந்தக் காரணத்தால்தான் என்றும் தகவல்கள் தீயாய்ப் பரவியது.



அ.தி.மு.க-வைவிட்டு சசிகலா புஷ்பா நீக்கத்தின் பின்னர், நாடார் சமூக மக்கள் அ.தி.மு.க மீது மாற்றுக் கருத்தைக் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதால்தான் அதுல் ஆனந்த் சஸ்பெண்ட் ஆன கையோடு, அதே தென் மாவட்ட நாடார் இனத்தைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜனை மந்திரி பதவிக்குக் கொண்டு வரவைத்ததும்” என்கின்றனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பொறுப்பில் இருந்த ஞானதேசிகன், கூடுதல் தலைமைச் செயலாளராகி, அதன்பின் தலைமைச் செயலாளராகவும் பதவி வகித்தவர். தலைமைச் செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் பணி ஓய்வுபெற்று, அரசு ஆலோசகரானதும் தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு வந்தவர் மோகன்வர்கீஸ் சுங்கத். அவர் பொறுப்புக்கு வந்து சரியாக 9 மாதங்கள்கூட ஆகாத நிலையில், மின்வாரியத் தலைவராக பொறுப்பில் இருந்த பி.எஸ்.ஞானதேசிகனை அ.தி.மு.க அரசு தலைமைச் செயலாளர் பதவியில் அமரவைத்தது.

கடந்த ஜூன் 8-ம் தேதி திடீரென ஞானதேசிகன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக சேர்மனாக போஸ்டிங் செய்யப்பட்டார். முதல்வரின் செயலாளராக அப்போது இருந்த ராம் மோகன ராவ், தலைமைச் செயலாளராகக் கொண்டு வரப்பட்டார். அதே ராம் மோகன ராவ் ஆணைப்படி பி.எஸ்.ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ‘அதுல் ஆனந்த், ஞானதேசிகன் ஒன்றேபோல் சஸ்பெண்ட் ஆனதற்கு என்ன காரணம்?’

அரசு வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஞானதேசிகன், தலைமைச் செயலாளர் என்ற உச்சத்தில் இருந்தபோது அவர் சொல்வதைத் தட்டாமல் செய்யும் அன்புக்குரியவராக இருந்தவர் அதுல் ஆனந்த். அதனால்தான் அவரிடம் சில, பல விஷயங்கள் அரசு சார்பில் கேட்கப்பட்டன. குறிப்பாக கனிமவளம் சார்ந்த விஷயங்கள்... கனிம தொழில் சார்ந்த பிரபலம் குறித்தும் அப்போது அவரிடம் கேட்கப்பட்டது. எதற்கும் அதுல் ஆனந்த் அசைந்து கொடுக்கவில்லை. முன்னதாக ஞானதேசிகனிடம், சில விஷயங்களை முக்கியமான நபர்கள் மூலம், அதிகாரமையம் கேட்டு வாங்கிவிட்ட நிலையில், அதுல் ஆனந்த், அதில் கால்பங்கு அளவுக்குக்கூடச் சொல்லாமல் அநியாயத்துக்கு விசுவாசத்தைக் காட்டிவிட்டார். அவர் தரப்பில் இருந்து சிறிதளவுகூட விஷயம் வரவில்லை. அதன் விளைவே இந்த சஸ்பெண்ட்... இது முடிவல்ல, தொடக்கம்தான்” என்று அதிரவைக்கின்றனர்.

அரசின் தரப்பில் இதுவரையில் சஸ்பெண்டுக்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ஓர் ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்தவர் மீது, அடுத்த ஆட்சியாளர்கள்தான் வழக்குப் பதிவர். சஸ்பெண்ட் செய்யும் அளவுக்குப் போவர்... ஆனால், முதல் முறையாக அதே ஆட்சியாளர்களால், அதே தலைமைச் செயலாளர் (மாஜி) காலி செய்யப்பட்டிருக்கிறார்

அறிவியல் அறிவோம்: ஒரே மூச்சில் 400 கி.மீ. தூரம்!


பறவைகள் பறப்பதே ஓர் அதிசயம். அப்படி என்றால், சிறகடித்துக்கொள்ளாமல் கடல்களையே கடக்கிற ‘கப்பல் பறவை’ (frigate birds) அதிசயமே அசந்து போகும் அதிசயம் அல்லவா? ‘கப்பல் கூழைக்கடா’, ‘கடற்கொள்ளைப் பறவை’ போன்ற பெயர்களிலும் அழைக்கப்படும் பறவையைப் பற்றிய வியக்க வைக்கும் புதிய தகவல்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

உணவின்றி, தண்ணீரின்றி, ஓய்வு உறக்கமின்றி, தரையிறங்காமல் தொடர்ந்து 400 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் பயணிக்கக்கூடியவை என்று உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள். காரணம், இதன் இறகுகள் நீர் ஒட்டும் தன்மையைக் கொண்டவை. எனவே, வாத்துபோலத் தண்ணீரில் மிதந்து ஓய்வெடுக்கவோ, முக்குளிப்பான் போலத் தண்ணீரில் மூழ்கி மீனைப் பிடிக்கவோ இதனால் முடியாது.

சாப்பிடாமல் கொள்ளாமல் எப்படி இவ்வளவு தூரம் பறக்கிறது என்கிறீர்களா? அது எங்கே பறக்கிறது? காற்றில் மிதக்கிறது! பெரும்பாலும் இறகை அசைப்பதே இல்லை. அந்த விஷயத்தில் இவர் நம்மூர் பருந்துக்கெல்லாம் அண்ணன்.

மடகாஸ்கர் பகுதியில் வாழும் கப்பல் பறவைகள் சிலவற்றைப் பிடித்து, அதில் உணர்வுக் கருவிகளைப் பொருத்தினார்கள் வெய்மர்ஸ்க்ரிச் தலைமையிலான ஆய்வாளர்கள். இப்பறவை எப்படி இரை எடுக்கிறது, எவ்வளவு வேகத்தில் பறக்கிறது, எத்தனை முறை இறகை அசைக்கிறது, எவ்வளவு தூரம் செல்கிறது போன்ற விஷயங்கள் மட்டுமின்றி, இதயத்துடிப்பு, இறக்கை அசைப்பு உள்ளிட்டவற்றையும் நுட்பமாக ஆராய்ந்தார்கள்.

வானில் சுமார் 400 முதல் 1,000 மீட்டர் உயரத்தில் உள்ள, மிகமிக அடர்த்தியான மேகக் கூட்டத்துக்குப் பெயர்தான் ‘குமுலஸ்’. விமான ஓட்டிகளுக்கே சவால் தருபவை. பார்ப்பதற்குப் பஞ்சு போலத் தெரிந்தாலும் இந்த வகை மேகத்துக்குள் காற்று மேல் நோக்கிச் சென்றபடி அமளிதுமளியாக இருக்கும். இதற்குள் விமானம் சென்றுவிட்டால், விமானம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து ஜிவ்வென்று மேல் நோக்கிச் செல்லும். அடுத்த நொடியே திடுமெனக் கீழே இறங்கும். நான்குவழிச் சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் வாகனம், திடீரென மாட்டுவண்டிப் பாதைக்கு மாறியது போலக் குலுங்கும். இதனால் பொதுவாக ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், விமானத்தில் பயணம் செய்யும் பாதிப் பேருக்கு வாந்தி மயக்கம்கூட ஏற்படும். பல ஆயிரம் கிலோ எடையுள்ள விமானத்தையே அதிர வைக்கிற இந்த மேகத்துக்குள் புகுந்து நம்மாள் சடுகுடு ஆடுகிறான்.

மேகத்துக்குள் புகுந்து, அங்கே வீசுகிற மேல் நோக்கிய காற்றின் உதவியால் காகிதம் போல மேலெழுந்து செல்கிறது கப்பல் பறவை. பிறகு, கிளைடர் போல லாகவமாக காற்றில் மிதந்தபடி கீழ்நோக்கிவரும். நிலத்துக்கு அருகே வந்த பிறகுதான் சிறகை அசைத்துப் பறக்கும். ஆக, உயரே செல்லவும் நெடுந்தூரம் செல்லவும் எந்தவித ஆற்றலையும் பயன்படுத்தாமல், ஆற்றலைச் சிக்கனப்படுத்துகிறது இந்தப் பறவை.

அதெல்லாம் இருக்கட்டும்… சோறு தண்ணி இல்லாமல் எப்படி உயிர் வாழ முடியும் என்று நுட்பமாக ஆராய்ந்தார்கள். அப்போது, கடலுக்கு மேலே தாழ்வாகப் பறந்தபடி லாகவமாக மீனைப் பிடித்து உண்பது தெரியவந்தது. வழியில் கடற்பாறை கிடைத்தால் ஓய்வெடுக்கவும் செய்கின்றன. வழியில் உணவோ, ஓய்விடமோ கிடைக்காவிட்டாலும்கூட இவை கவலைப்படுவதில்லை. இருந்தாலும், கப்பல் பறவை எப்படித் தூங்குகிறது என்பதுதான் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

- த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com

உத்தரப் பிரதேச அமைச்சர்களின் சமோசா, தேநீருக்கான செலவு ரூ.9 கோடி

Return to frontpage

உத்தரப் பிரதேச அமைச்சர்கள் கடந்த 4 ஆண்டுகளில் சமோசா, தேநீர் மற்றும் இதர சிற்றுண்டிக்கு ரூ.8.78 கோடி செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டங்களில் தேநீர் மற்றும் சிற்றுண்டி பரிமாறப்படுவது உண்டு. இதில் இதுவரை எந்த மாநில அரசும் செலவிடாத அளவில் உ.பி. அமைச்சர்களின் செலவுப் பட்டியல் உள்ளது. இம் மாநிலத்தின் சமூகநலத் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சரான அருண்குமார் கோரி, தேநீர், சமோசா மற்றும் குலாப்ஜாமூனுக்காக அதிகபட்சமாக ரூ.22,93,800 செல விட்டுள்ளார். இவரை அடுத்து தொடக்கக் கல்வித் துறை அமைச்சர் கைலாஷ் சவுரசியா ரூ.22,85,900 செலவிட்டுள்ளார். இந்தப் பட்டிய லின் மூன்றாவது இடம் பெற்றிருப் பவர் தனது கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் மூத்த அமைச்சரான ஆசம்கான். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரான இவர் தேநீர், சமோசாவுக்காக ரூ.22,86,620 செலவு செய்துள்ளார். இவ்வாறு சிற்றுண்டிக்காக பல அமைச்சர்கள் ரூ.21 லட்சத்துக்கு மேல் செலவிட்டுள்ளனர்.

இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ராம் கரண் ஆர்டா, நீர்வள மற்றும் நிலவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜக்தீஷ் சோன்கர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

உ.பி. சட்டப்பேரவையில் கடந்த வாரம் இது தொடர்பாக பாரதிய ஜனதா உறுப்பினர் சுரேஷ் குமார் கண்ணா எழுப்பிய கேள்விக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் எழுத்துமூலம் பதில் அளித்தார்.

அப்போது அகிலேஷ், “கடந்த 2012, மார்ச் 15-ம் தேதி எனது அரசு பதவியேற்றதில் இருந்து 2016, மார்ச் 15 வரை 4 ஆண்டுகள் பூர்த்தி அடைந்துள்ளது. இந்த 4 ஆண்டு களில் அமைச்சகங்களின் தேநீர், சமோசா மற்றும் இதர சிற்றுண்டி செலவு ரூ.8.78 கோடி” என்றார்.

உபி அரசின் நிர்வாக விதிகளின்படி ஓர் அமைச்சர் நாள் ஒன்றுக்கு மாநிலத்துக்கு உள்ளே ரூ.2500 வரையும் மாநிலத்துக்கு வெளியே ரூ.3000 வரையும் தனது பணிக்காலத்தில் செலவிடலாம் எனவும் தனது பதிலில் அகிலேஷ் சுட்டிக்காட்டினார்.

இதில், கடந்த 2015, அக்டோப ரில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட சிவகுமார் பேரியா ரூ.21,93,900 செலவு செய்திருப்ப தாகவும் அகிலேஷ் தெரிவித்தார்.

அமைச்சர்களின் சிற்றுண்டி செலவில் குறைந்தபட்ச தொகை யாக ரூ.72,500 காட்டப்பட்டுள்ளது. இத் தொகையை மகளிர் மேம் பாட்டுத் துறை (தனிப்பொறுப்பு) அமைச்சராக ஓராண்டு பதவி வகித்த சாதாப் பாத்திமா செல விட்டுள்ளார்.

இது குறித்து ஆளும் சமாஜ்வாதி கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ராஜேந்தர் சவுத்ரி ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்த செலவுகள் பார்ப்பதற்கு மிகவும் அதிகமாகத் தெரியலாம், ஆனால் இவை அனைத்தும் அமைச்சர்கள் தங்களுக்காக மட்டுமே செலவிட்டது அல்ல. அமைச்சர்கள் கூட்டும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொகுதிகளில் இருந்து வரும் மக்களுக்காகவும் செலவிடப்பட்டது. இது வழக்கமான ஒன்றுதான்” என்றார்.

TNPSC GROUP IV

டிஎன்பிஎஸ்சி | குரூப்- IV | மாதிரி வினா- விடை 1: 10 லட்சம் பேர் போட்டிபோடும் தேர்வில் வெல்ல வேண்டுமா?


அரசுப் பணியில் சேர வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின் கனவு. சமூக அந்தஸ்து, பணி பாதுகாப்பு, நல்ல சம்பளம் போன்ற காரணங்கள் இளைஞர்களை அரசு வேலை நோக்கி ஈர்க்கின்றன. தமிழக அரசுப் பணிக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தற்போது காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் வரித்தண்டலர் ஆகிய பல்வேறு விதமான பதவிகளில் 5,451 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் வரும் நவம்பர் 6-ல் நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளி யிட்டுள்ளது.

குரூப்-4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து தட் டச்சர் பணிகளுக்கு மட்டும் கூடுதலாக தொழில்நுட்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். அதிகபட்சமாக பொதுப் பிரிவினருக்கு 30, பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்-2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்றாலும் கூட பெரும்பாலும் பிளஸ்-2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து கல்வித் தகுதி உடையவர்களும் குரூப்-4 தேர் வுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

இவ்வாண்டு 12 லட்சம் பேர்

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற் பட்டோர் விண்ணப்பித்தனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு ஏறத்தாழ 12 லட்சம் பேர் விண்ணப் பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. காரணம், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்பேரில் சம்பளம் உயர்த் தப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் திருத்தியமைக்கப்பட இருக்கிறது. குரூப்-4 தேர்வுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே அரசு வேலை உறுதி. எனவேதான், குரூப்-4 தேர்வுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் முட்டி மோதுகிறார்கள்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஏராளமான மையங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கு செப்டம்பர் 8-ம் தேதிக்குள் டிஎன் பிஎஸ்சி இணையதளத்தின் (www.tnpsc.gov.in) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண். அப்ஜெக்டிவ் (கொள்குறி வகை) முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இருக்கும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்.

பொது அறிவு பகுதியானது அனை வருக்கும் பொதுவானது. பொது தமிழ், பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்து கொள்ளலாம். பெரும்பாலான விண்ணப்ப தாரர்கள் குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பொது தமிழ் பாடத்தைத்தான் விருப்பமாக தேர்வுசெய்கிறார்கள்.

போட்டித் தேர்வின் உத்திகள்

12 லட்சம் பேர் விண்ணப்பிப்பதால் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், இதில் 12 லட்சம் பேருமே உண்மையான போட்டியாளர்களாக இருக்க முடியாது. அரசு வேலை என்ற ஆசையில் நாமும் எழுதிப் பார்ப்போமே என விண்ணப்பிப்ப வர்களும், தேர்வுக்கான தயாரிப்பே இல்லாமல் எழுதுபவர்களும் இதில் பெரும்பான்மையினராக இருப்பர்.

டிஎன்பிஎஸ்சி நடத்தி வரும் போட்டித் தேர்வுகளுக்காக முழுமை யான தயாரிப்பில் உள்ளவர்கள் மத்தியில் தான் உண்மையான போட்டி இருக்கும். எனவே, எண்ணிக்கையை கண்டு அஞ்ச வேண்டியதில்லை. இன்று முதல், இருக்கும் காலத்தை துல்லியமாக திட்டமிட்டு பயன் படுத்தி தயாரிப்பில் ஈடுபட்டாலே வெற்றி வசப்படும். முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான தமிழ் அல்லது ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை முழுமையாக படிக்க வேண்டும். 10-ம் வகுப்பு தரத்தில்தான் தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், வெற்றிக்கான மதிப்பெண்ணை தரும் கேள்விகள் சில நேரங்களில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களில் இருந்தும் கேட்கப்படலாம் என்பதால் அடுத்த கட்டமாக மேல்நிலைப் பள்ளி பாடங்களை படிப்பது கூடுதல் சிறப்பு.

நாட்டு நடப்புகள், கணிதம், திறனறிவு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை இனிவரும் காலங்களில் துறைசார் வல்லுநர்கள் விளக்குவார்கள். அவர் களின் வழிகாட்டுதலின்படி தயாரிப்பில் ஈடுபட்டாலே போதும். எனினும், தயாரிப் பின் தொடக்கம் என்பது மாநில கல்வி வாரியத்தின் பாடத்திட்டங்களை படிப் பதில் இருந்து தொடங்குவதே நலம்.

மாநில நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் தலங்கள், முக்கிய இடங்கள் என தமிழ்நாட்டை மையமாக வைத்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்ப தால் தமிழகம் குறித்த பொது அறிவு புத்தகத்தை வாங்கி படிப்பது அவசியம். கணிதம் மற்றும் திறனறிவு பகுதியில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் வெளியாகும் கணித மாதிரி வினா - விடைகளை தொடர்ச்சியாக முயன்று பார்ப்பது நேர மேலாண்மைக்கு உதவும்.

வெற்றிக் கொடி கட்டலாம்

‘வெற்றிக்கொடி’ பகுதி மூலம் உயர் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக எண்ணற்ற தகவல்களை மாணவ சமுதாயத்துக்கு வாரி வழங்கிக் கொண் டிருக்கும் ‘தி இந்து’ நாளிதழ், குரூப்-4 தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவ - மாணவிகளுக்கு உதவும் வகையில் கடந்த ஆண்டு மாதிரி வினா - விடைகளை வெளியிட்டது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மாதிரி வினா - விடைகளுடன் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர். இதற்கு இளைஞர்களிடம் இருந்து ஏகோபித்த ஆதரவும் கிடைத்தது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் குரூப்-4 தேர்வுக்கு தயாராகும் இளை ஞர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி வினா-விடைகளையும், அரிய ஆலோ சனைகளையும் வழங்க இருக்கிறோம்.

வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 4 நாட்கள் இப்பகுதி வெளியாகும். அனுபவம் பெற்ற நிபுணர் கள், துறை வல்லுநர்கள் வினா-விடை களை தொகுத்து வழங்க உள்ளனர். வெறும் வினா - விடைகள் மட்டுமல்லாமல் தேர்வுக்கு தயாரா வோருக்குப் பெரிதும் பயன்தரக் கூடிய தயாரிப்பு உத்திகளும், விளக் கங்களும் வழங்கப்பட உள்ளன.

கரூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் வகுப்பறைக்குள் புகுந்து மாணவி படுகொலை: முன்னாள் மாணவர் கைது



கரூர் அருகே உள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் வகுப்பறைக் குள் புகுந்து மாணவியை கட்டை யால் அடித்துக் கொன்ற முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், மானா மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் சோனாலி(19). கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சோனாலி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக் குடி அருகே உள்ள வெங்க ளூரைச் சேர்ந்தவர் உதயகுமார்(21). இதே கல்லூரியில், கடந்த கல்வி ஆண்டில் 3-ம் ஆண்டு படித்த வந்த இவர், சோனாலியை ஒரு தலையாகக் காதலித்ததாகக் கூறப் படுகிறது. ஆனால், சோனாலி அவரது காதலை ஏற்கவில்லை. இதற்கிடையே, கடந்த நவம்பர் முதல் உதயகுமார் கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கல்லூ ரிக்கு வந்த உதயகுமார், வகுப் பறையில் இருந்த சோனாலியைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், அங்கு கிடந்த கட்டையால் சோனாலியின் தலை யில் உதயகுமார் தாக்கியுள்ளார். தடுக்க வந்த சக மாணவர்களையும் தாக்கிவிட்டு, அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.

இதில், பலத்த காயமடைந்த சோனாலியை அங்கு இருந்தவர் கள் மீட்டு, கரூர் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோனாலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈவ்-டீசிங் செய்த ஆசிரியரை அடித்து உதைத்த மாணவிகள்


ஈவ்-டீசிங் செய்த ஆசிரியரை அடித்து உதைத்து மண்டியிடச் செய்த மாணவிகள்.
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரத் தில் ஈவ்-டீசிங் செய்த ஆசிரியரை மாணவிகள் ஒன்று சேர்ந்து அடித்து உதைத்து மண்டியிடச் செய்தனர்.

புவனேஸ்வரத்தில் உட்கல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக மாணவிகள் நேற்று முன்தினம் மாலை வகுப்பு கள் முடிந்து விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் வினோத் குமார் என்பவர் மாணவிகளைப் பார்த்து அநாகரிகமாக கேலி, கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் சக மாணவிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத் துக்குள் சில மாணவிகள் பிரம்பு கம்புகளுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியரை அடித்து உதைத்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்கச் செய்தனர். உள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

குடிப்பதற்கும், சமையலுக்கும் மழைநீர் மட்டுமே உபயோகம்: 28 ஆண்டுகளாக பின்பற்றும் முதியவர்

Return to frontpage

மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஒருவர் தனது குடும்பத் தேவைகளுக்காக குடிப் பதற்கும், சமைப்பதற்கும் மழை நீரை மட்டுமே சேகரித்து 28 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்.

மழை பொழியும் காலங்களில் குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளில் மழைநீரை சேகரித்து வைத்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மழையில்லாத காலங்களிலும் நமக்கு தண்ணீர் கிடைக்கும். இதற்காக கொண்டு வரப்பட்ட அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டம் தற்போது பெரும்பாலும் வீடுகள், அலுவலகங்களில் பயன்பாட்டில் இல்லை. மேலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை போன்ற காரணங்களாலும் மழை நீரைச் சேகரிக்க முடியாமல் வீணாகக் கடலில் கலந்து வருகிறது. இதனால் மழைக்காலம் முடிந்த சில நாட்களிலேயே, மீண்டும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. குடிப்பதற்குகூட தண்ணீர் கிடைக் காததால் அதிருப்தி அடைந்த மக்கள் அவ்வப்போது சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.

மதுரை வில்லாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்த விமானப் படை மற்றும் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற சேகர் (70) என்பவர், தனது வீட்டிலேயே மழைநீரைச் சேகரித்து கடந்த 28 ஆண்டுகளாக குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார். மாடியிலிருந்து விழும் மழைநீரைச் சேகரித்து வைப்பதற்காக பிரத்யேகமாக தொட்டி ஒன்றை அமைத்துள்ளார்.

இதுகுறித்து சேகர் கூறியதாவது: வங்கியில் பணியாற்றியபோது ஒருநாள் பணி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும், லாரியில் கொண்டு வரப்பட்ட தண்ணீரைப் பிடிப்பதற்காக மக்கள் சாலையில் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து, வீட்டிலேயே மழைநீரை சேகரிக்க முடிவு செய் தேன். அதன்படி, மாடியிலிருந்து விழும் மழைநீரை பாத்திரங்கள் மற்றும் தொட்டியில் சேகரித்தோம். முதலில் வரும் மழை தண்ணீரில் தூசி கலந்திருக்கும். எனவே, முதல் 10 நிமிடங்களுக்கு வரும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பிறகு கிடைக்கும் தண் ணீரை மட்டுமே சேகரிக்க வேண்டும்.



பிளாஸ்டிக் தொட்டிகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள மழைநீர்.

இதற்காக தனியாகத் தொட்டி கட்டி உள்ளோம். மாடியிலிருந்து வரும் மழைநீர் குழாய் வழியாக நேரடியாக தொட்டிக்குச் சென்றுவிடும். அதேபோல, மழைக்காலங்களில் பிளாஸ்டிக் தொட்டி, பாத்திரங்களில் சேகரித்தோம். சுத்தமான துணியால் தண்ணீர் சேகரித்துள்ள பாத்திரங்களை மூடிவிட வேண்டும். இந்தத் தண் ணீரை கொதிக்க வைத்தே குடித்து வருகிறோம். சமையலுக்கும் இந்த தண்ணீரையே பயன்படுத்து கிறோம். வெளியூர் சென்றாலும், பாட்டிலில் தண்ணீரைக் கொண்டு செல்வேன். நாளொன்றுக்கு ஒரு குடம் தண்ணீர் செலவாகிறது. இதுவரை, ஒருமுறை கூட தண் ணீருக்குப் பற்றாக்குறை வந்தது கிடையாது. மினரல் வாட்டரைவிட மழை நீர் தூய்மையாக இருப்பதால் வெளியிலும் விலைக்கு வாங்கியது கிடையாது.

எப்படியானாலும் தண்ணீர் தீர்வதற்குள் மழை பெய்துவிடும். வெளியூர் செல்லாத நாட்களில் எங்கிருந்தாலும் மழை பெய்தால் வீட்டுக்கு வந்து விடுவேன். பாத்திரம் கழுவிய தண்ணீரைத் தோட்டத்தில் வளர்க்கும் துளசி, செம்பருத்தி, தூதுவளை, தென்னை, வாழை உள்ளிட்ட தாவரங்களுக்கு ஊற்றுகிறோம். சொந்த வீடு வைத்துள்ள ஒவ்வொரு வரும் மழையை நம்பி நமக்கு நாமே என இத் திட்டத்தைச் செயல்படுத்தினால் குடிநீர் பிரச்சினையை சுலபமாக தீர்த்து விடலாம் என்றார்.

NEWS TODAY 23.12.2025