Tuesday, September 27, 2016

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எப்போது தெரியுமா?


டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சுமார் 18 வருடங்கள் நடைபெற்று வந்த நிலையில், 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக அவர்கள் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து கர்நாடக ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்த ஜெயலலிதாவுக்கு, வழக்கில் இருந்து விடுதலை கிடைத்தது. விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக தாக்கல் செய்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற தமிழக அரசியலில் பரபரப்பு நிலவிவரும் நிலையில், அதுகுறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது சுயசரிதையை ஆல் ஃபிரம் மெமரி என்ற தலைப்பில் எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தில் ‘சொத்துக் குவிப்பு வழக்கில் எனக்குப் பல்வேறு தரப்பில் இருந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன' என சொல்லியிருந்தார்.

இதை சுட்டிக்காட்டி தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ரத்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் ‘சொத்துக் குவிப்பு வழக்கில் நெருக்கடி இருந்ததாகக் ஆச்சார்யா சொல்லியிருப்பதால் அவரிடம் விசாரணைக்கு நடத்த வேண்டும்' என கூறியுள்ளார்.

இந்த வழக்கு கடந்த 8ம் தேதி விசாரணை வந்தபோது நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. ‘வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த நீதிபதிகள்தான் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்தவர்கள்.

‘இத்தனை நாட்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் காரணம் என்ன என ரத்தினத்தின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் ‘ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த 4 வாரத்தில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப் படும்' என தெரிவித்தனர். செப்டம்பர் 8ம் தேதி இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டனர். எனவே அக்டோபர் 7ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

அப்போது தசரா திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். எனவே, விஜயதசமி, ஜெயலலிதாவுக்கு வெற்றியை தருமா அல்லது கர்நாடக அரசு தரப்புக்கு வெற்றியை தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த வழக்கின் தீர்ப்பு 17 மற்றும் 19ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்பதால் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள் கடைசியாகப் பார்த்தது அண்ணா, கக்கனைத்தான்!



சென்னை: அது அந்தக் காலம்.. தலைவர்கள் எல்லாம் மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார்கள். மக்களும் தலைவர்களின் பாதையை பின்பற்றி நடந்தார்கள். மக்கள் நம்மைப் பார்த்து நடக்கிறார்களே என்ற விழிப்புணர்வுடன் தலைவர்களும் இருந்தார்கள்.. ஆனால் இன்று அப்படியா இருக்கிறது நிலைமை?

ஜெயலலிதா முதல் வார்டு கவுன்சிலர் வரை அரசு மருத்துவமனைகள் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. உடம்புக்கு முடியாவிட்டால் அப்பல்லோ முதல் ராமச்சந்திரா வரை போகிறார்களே தவிர மறந்தும் கூட அரசு மருத்துவமனைகளுக்குப் போவதில்லை.

இங்குள்ள தனியார் மருத்துவமனைகள் போதாது என்று வெளிநாடுகளுக்குப் பறந்து அங்குள்ள ஸ்டார் மருத்துவமனைகளில் உடம்பைப் பார்த்துக் கொள்கிறார்களே தவிர மருந்துக்குக் கூட அரசு மருத்துவமனைக்குப் போவதில்லை.


சூப்பர் ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனைகள்தான் இன்று அரசியல் தலைவர்களின் இன்னொரு புகலிடமாக உள்ளது. ஜெயலலிதாவாகட்டும், கருணாநிதியாகட்டும், ஸ்டாலினாகட்டும்.. யாராக இருந்தாலும் இதுபோன்ற ஆடம்பர தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் சிகிச்சைக்காக போகின்றனர்.

அதேசமயம், கையில் காசு இல்லாத சாதாரண ஜனங்களுக்கு இருக்கவே இருக்கிறது கூவத்தை ஒட்டியுள்ள அரசு பொது மருத்துவமனையும் ஆங்காங்கு உள்ள அரசு மருத்துவனைகளும். அங்கு கொசுக்கடியிலும், இருக்கிற வசதிகளையும் மட்டுமே ஏழை பாழைகள், பொது ஜனங்கள் பயன்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றாக வேண்டும்.

ஜெயலலிதாவும் சரி, கருணாநிதியும் இதுவரை எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றதாக வரலாறு இல்லை. சென்னை அரசு பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றதாக நினைவில்லை. ஜெயலலிதா இப்போதுதான் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதி முன்பு அப்பல்லோவிலும், பின்னர் போரூர் ராமச்சந்திராவிலும்தான் சிகிச்சை பெற்றுள்ளாரே தவிர அரசு மருத்துவமனைக்கு அவர் போனதாக வரலாறே இல்லை.

அண்ணா சாலையில் திமுக ஆட்சிக்காலத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்ட சட்டசபைக் கட்டடத்தை அப்படியே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றினார் ஜெயலலிதா. இங்கு இல்லாத வசதிகளே கிடையாது என்றார். ஆனால் அவரே இன்று இந்த மருத்துவமனையைப் புறக்கணித்து விட்டார். அப்பல்லோ என்ற தனியார் மருத்துவமனையில்தான் தங்கியுள்ளார்.

இப்படி அரசு மருத்துவமனகளை உருவாக்கும் தலைவர்களே அரசு மருத்துவமனைகளைப் புறக்கணித்தால் மக்கள் எப்படி அதை நம்பிப் போக முடியும் என்ற கேள்விதான் எழுகிறது. மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இவர்களே இப்படித் தனியார் மருத்துவமனைகளை ஆதரித்தால் அரசு மருத்துவமனைகள் எப்படி தேறும்.. எப்படி மக்களிடம் மதிப்பு பெறும்.

அண்ணா, கக்கன், காமராஜர் போன்ற தலைவர்கள் எல்லாம் அரசு மருத்துவமனைகளைத்தான் அதிகம் பயன்படுத்தினர். அதிலும் கக்கன் கடைசி வரை தனியார் மருத்துவமனை பக்கமே திரும்பிப் பார்க்காத உன்னத தலைவர். அவரது இறுதிக் காலம் கூட சந்தடியே இல்லாமல் அரசு மருத்துவமனையில்தான் முடிந்தது. அந்தத் தலைவர்களுக்குப் பிறகு எந்தத் தலைவரும் அரசு மருத்துவமனைக்கு வந்ததாக வரலாறே இல்லை என்கிறார்கள்.

கக்கன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆதரவற்ற நிலையில் உள்ளார் என்று அறிந்ததும் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். ஓடிச் சென்று நல்ல சிகிச்சை பெறலாம் வாருங்கள் என்று காலில் விழாத குறையாக கூப்பிட்டாராம். ஆனால் கக்கன் சிரித்தபடி மறுத்து விட்டாராம். எல்லோரும் இங்கு நம்ம மக்கள்தான். அவர்களுக்குக் கிடைக்கும் சிகிச்சையே எனக்கும் கிடைக்கட்டும் என்று கூறி விட்டாராம். அவர் எப்படிப்பட்ட தலைவர்?

நல்ல வசதிகளுடன் கூடிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது என்பது முக்கியம்தான். அவசியமும் கூட. உயிர் விஷயத்தில் யாரும் ரிஸ்க் எடுக்க முடியாதுதான். ஆனால் அரசாங்கமே அதி நவீன மருத்துவமனை, எல்லா வசதியும் உண்டு என்று கூறிய ஒரு மருத்துவமனையை அந்த அரசே புறக்கணிப்பது மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கத் தவறி விடும் என்பதை உணர வேண்டாமா.

அரசியல் தலைவர்கள் வெறும் வாய்ப்பேச்சாக இல்லாமல் அவர்கள் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்ல தலைவர்களாகவும் திகழ வேண்டியது நிச்சயம் முக்கியானது, சமூகத்திற்கு ஆரோக்கியமானது.



வெள்ளிக்கு 50 கோடி டீல்... தங்கத்துக்கு தகரடப்பா!


ரியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றது 6 வீரர்கள். அவர்களால் எந்த பதக்கமும் வெல்ல முடியவில்லை. ஆனால், பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன். ஆங்கில ஊடகங்கள் முதற் கொண்டு அந்த நேரத்தில் மாரியப்பன் மாரியப்பன் என ஓயாமல் நீட்டி முழங்கிக் கொண்டிருந்தன. ரியோ ஒலிம்பிக்கில் குட்டி குட்டி நாடுகள் கூட பீல்டு அண்டு டிராக் ஈவன்ட்டுகளில் அதாவது உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம் போன்றவற்றில் தங்கப் பதக்கம் வெல்வதை காண முடிந்தது. குட்டி நாடு பிஜீ, காலம் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த பிரிட்டனைச் சாத்து சாத்தென்று சாத்தி ரக்பி செவன்சில் தங்கத்தைக் கைப்பற்றி ஆர்ப்பரித்தது.

இந்த ஒலிம்பிக் சீசனை பொறுத்தவரை மாரியப்பன் அடைந்த வெற்றி ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதற்கு சமமான ஒன்றுதான். பாராலிம்பிக்கர் என்ற வகையில் மாரியப்பனுக்கு கிடைத்தது வெறும் இரண்டே முக்கால் கோடிதான். சிந்துவைப் பொறுத்த வரை, இரு மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டு கோடிக் கணக்கில் பரிசுகளை அள்ளி வழங்கின. தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பரிசுகளை கொடுத்தன. சச்சின் தலைமையில் சிந்து, சாக் ஷி, தீபா, சிந்துவின் பயிற்சியாளர் கோபிச்சந்த் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக வழங்கபப்பட்டது. இதில் எதுவும் தவறில்லை.

இதுவெல்லாம் ஒரு பக்கம் என்றால், இப்போது சிந்துவுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் விளம்பர ஒப்பந்தங்கள் குவிந்துள்ளன. இதனால், சிந்துவின் விளம்பர விவகாரங்களை பேஸ்லைன் வென்ச்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் கவனிக்க உள்ளது. சிந்துவின் புகைப்படங்கள் உரிமம் முதற்கொண்டு , இந்த நிறுவனத்திடம்தான் 3 ஆண்டுகளுக்கு இருக்கும். முதற்கட்டமாக 9 நிறுவனங்கள் சிந்துவை ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும், 7 நிறுவனங்கள் சிந்துவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. முதன்முறையாக இந்தியாவில் கிரிக்கெட் சாராத ஒரு விளையாட்டு வீராங்கனை இவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது இப்போதுதான். சிந்துவின் திறமைக்கு கொடுக்கப்பட வேண்டியதுதான் மறுக்கவில்லை. அதே வேளையில், கிட்டத்தட்ட அதற்கு ஈடான முயற்சிகள் செய்துதானே மாரியப்பன் போன்றவர்கள் தங்கம் வென்றிருக்கின்றனர்.



மாரியப்பன் பின்னணி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கே தெரியும். மாரியப்பனை விடுங்கள். அழகிகளை ஒப்பந்தம் செய்ய வாரி வழங்கும் இந்திய நிறுவனங்களுக்கு பெரும்பாலான தடகள வீராங்கனைகளின் வாழ்க்கைப் பற்றித் தெரியுமா?. தீவிர பயிற்சி காரணமாக தடகள வீராங்கனைகள் பெண்மைக்குரிய அடையாளங்களையே இழக்கிறார்கள். அவர்களது முகத்தைப் பார்த்தால் தெரியும். உடலைப் பார்த்தால் தெரியும். நரம்பு முறுக்கேறிய கைகளைப் பார்த்தாலும் புரியும். சில சமயங்களில் குழந்தை பெற்றுக் கொள்வது கூட சிரமம்தான்.ஜெயிக்கிறார்களோ தோற்கிறார்களோ அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை ஈடு செய்ய முடியாத விஷயம்.

இந்த ஒலிம்பிக்கில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் லலிதா பாபர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அவருக்கு 10 லட்சம் கூட கொடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. தண்ணீர் கூட தரவில்லை என்று ஜெய்சா கதறினார். இப்போது எப்படி இருக்கிறார் என்ற நினைப்பே இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் கணபதி. ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மொத்தச் சம்பளமே 20 ஆயிரம் ரூபாய்தான். அதில்தான் தனது குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு தனது பயிற்சிக்கான செலவுகளையும் பார்த்துக் கொண்டார். பயிற்சிக்காக இவர் வாங்கிய வங்கிக்கடன் 3 லட்சம். இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. இவரும் ஒரு ஒலிம்பியன்தான். ஒலிம்பியன் என்ற பெயரோடு ஒளிந்து கிடக்கிறார். அடுத்த ஒலிம்பிக்கிற்கு இன்னும் கடன் வாங்குவார். கடைசியில் வட்டி கட்ட முடியாமல் போகும்.

இந்தியாவின் சமச்சீரற்ற பொருளாதாரம் போலத்தான் சமச்சீரற்ற விளையாட்டுத்துறையும். ஒரே பக்கம் பணம் சேர்வது போல... ஜெயித்தால் ஒரே அடியாக அவர்கள் கால்களில் பணத்தைக் கொண்டு கொட்டுவார்கள். விளம்பரம் விளம்பரம் என்று பின்னாலேயே அலைவது. ஜெயிப்பவர்கள் மட்டும் கண்ணுக்கு தெரிவதால், தோற்பவர்கள் காணாமலேயே போய் விடுகிறார்கள். அந்த வீராங்கனையை வைத்து அடுத்த தலைமுறையும் அந்த விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தும். அதில் மட்டும் கொஞ்சம் வீரர்- வீராங்கனைகள் உருவாகி வருவார்கள். மற்ற விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துப் போய்க் கொண்டிருக்கும். கிரிக்கெட்டுக்கு அள்ளிக் கொடுத்தார்கள் இந்தியாவில் கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து போன்ற விளையாட்டுகள் காணாமலேயே போய் விட்டன.

இதனால்தான் குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங், ''நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் சமயத்துலத்தான் எங்களையெல்லாம் உங்களுக்கு நினைவுக்கு வருமோ? மத்த சமயத்துல நாங்க இருக்கோமா செத்தோமானுகூட பார்க்க மாட்டீங்கனு.'' காட்டமாகக் கேட்டார். ஆப்ரிக்காவில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதால், தனது கிராமத்துக்கே மின்சாரம் பெற்றுத் தந்தார் ஒரு தடகள வீராங்கனை. அந்த நாட்டை விட பல மடங்கு பொருளாதார பலமும் வசதியும் திறமையும் உள்ள நாடு இது. ஆனால், இங்கே என்ன நடக்கிறது. ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல். விளையாட்டுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத விளையாட்டு அமைப்புத் தலைவர்கள். இதையெல்லாம் விட ஜெயித்தால் ஸ்பான்சர்ஷிப் என்ற பெயரில் பணத்தைக் கொட்டிக் கொடுப்பது. இதனால், சில பேட்மின்டன் வீரர்கள் உருவாகி வரலாம். சிந்துவும் பணத்தில் கொழித்து விடலாம். ஆனால், லலிதா பாபர் போன்ற தடகள வீராங்கனைகள்?

எல்லாரையும் சமமாக நடத்துங்கள். வெற்றியோ தோல்வியோ... பங்குபெற்றவர்களைக் கொண்டாடுங்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை.. மதிப்பிடமுடியாதது என உணருங்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச தடகள வீரர் -வீராங்கனைகளை அடையாளம் தெரியாமலேயே செய்து விடாதீர்கள்!

-எம். குமரேசன்

விமானத்தில் வைஃபை?


THE HINDU

முன்பெல்லாம் விமான போக்குவரத்துதுறை பற்றி யாரும் பெரியதாக கண்டு கொண்டதில்லை. அந்த துறையைப்பற்றி பேசுவதற்கு காரணம் இல்லை, கைக்கு எட்டாத தூரத்தில் இருந்தது தவிர இந்த துறையில் பெரிய போட்டியும் இல்லை. ஆனால் இப்போதைய நிலைமை வேறு. இந்த துறையில் போட்டி அதிகரித்துள்ளது. அதன் காரணமாக சலுகை விலையில் டிக்கெட் கிடைக்கிறது என்பதால் நடுத்தர மக்களும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சர்வதேச அளவில் விமான போக்குவரத்து வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது.

விமானத்தில் செல்வது ஆடம்பரமாகத் தெரிந்தாலும், அடிக்கடி செல்பவர்களிடம் கேட்டால்தான் தெரியும் அவர்களின் அவஸ்தையை. மூன்று மணிநேரம் போன் பயன்படுத்த முடியாது. பக்கத்தில் இருப்பவர்களிடம் பேச முடியாது. படிக்கிற பழக்கம் இருப்பவர்கள் படிக்கலாம். அந்த பழக்கமும் இல்லை என்றால் அந்த பயணம் போர்தான்.

வாடிக்கையாளர்களைத் தக்கவைத் துக் கொள்வதற்கும், அவர்களுக்கு கூடுதல் வசதி வழங்குவதற்கும் விமான நிறுவனங்களிடையே போட்டி நடக்கிறது. இப்போது வைஃபை வசதியை அறிமுகப்படுத்துவது குறித்த பேச்சு எழுந்திருக்கிறது. சர்வதேச அளவில் 2009-ம் ஆண்டே இந்த வசதி இருந்தாலும் இந்திய நிறுவனங்கள் இப்போதுதான் இது குறித்து பேச ஆரம்பித்திருக்கின்றன.

விமானங்களில் வைஃபை வசதி அளிப்பதற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் இன்னும் அனுமதிக்கவில்லை. விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆர்.என்.சௌபே இம்மாத தொடக்கத்தில் கூறும்போது இன்னும் சில நாட்களில் இது குறித்து நல்ல செய்தி வரும் என்று கூறியிருந்தார். ஆனால் இதுவரை இது குறித்த விதிமுறைகள் வெளியிடப்படவில்லை.

விமானங்களில் வைஃபை வசதி குறித்து விமான நிறுவனங்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வைஃபை வசதிக்கு அரசு அனுமதிக்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலனை செய்வோம் என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக 220 மணி நேரத்துக்கு பொழுதுபோக்காக இலவச செயலியை வெளியிட்டிருக்கிறது. வரும் மார்ச் 2017 முதல் இந்த செயலியை பயன்படுத்த முடியும். இது வைஃபை வசதி இல்லை என்றாலும் விளையாட்டு, திரைப்படங்களை வாடிக்கையார்கள் பார்த்து ரசிக்க முடியும்.

இண்டிகோ நிறுவனம் கூறும்போது இந்தியாவில் அதிகபட்ச பயண நேரம் சுமார் மூன்று மணிநேரம். இதற்கு ஏன் அதிக செலவு பிடிக்கும் வைஃபை வசதியைச் செய்ய வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தது. பட்ஜெட் விமான நிறுவனங்கள் இந்த வசதியை செய்யும் போது டிக்கெட் கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டி இருக்கும் என்று ஸ்பைஸ்ஜெட் கூறியிருக்கிறது.

ஆனால் விஸ்தாரா நிறுவனம், இது ஒரு சாதகமான மாற்றம். அரசு கொள்கை முடிவுகளை அறிவிக்கும் பட்சத்தில் இந்த திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியும் என்று கூறியிருக்கிறது. இது செலவு பிடிக்கும் விஷயம், அதனால் உள்நாட்டு விமானங்களில் இது தேவையா என்னும் முடிவை எடுக்கவில்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் இது தேவை என்று கூறியிருக்கிறது.

புதிதாக வரும் மாற்றத்தை எதிர்கொள்ள தயாராக ஏர் ஏசியா இந்தியா இருக்கிறது. இதன் தாய் நிறுவனமான ஏர் ஏசியா மலேசியா சில குறிப்பிட்ட வழித்தடங்களில் வைஃபை வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

செயற்கைக்கோளுடன் சர்வர்களை இணைக்கும்பட்சத்தில்தான் விமானங் களில் வைஃபை வசதி கொடுக்க முடியும். விமானங்களில் வைஃபை வசதி செய்து தரக்கூடிய முக்கியமான நிறுவனம் கோகோ. மத்திய அரசு அனுமதி அளித்தாலும் அதிக செலவாகும் விஷயம் என்பதால் இந்திய நிறுவனங்கள் இந்த சேவையை இலவசமாக வழங்குமா அல்லது கட்டணம் வசூலிக்குமா? எவ்வளவு என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

சர்வதேச அளவில் சில விமான நிறுவனங்கள் இலவச வைஃபை சேவை வழங்குகின்றன. சில விமான நிறுவனங்கள் ஒரு மணி நேரத்துக்கு என கட்டணம் வசூலிக்கின்றன. உதாரண மாக இங்கிலாந்தில் சராசரியாக 6 மணி நேரத்துக்கு 30 பவுண்ட் வசூலிக்கிறார்கள். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் தினசரி மாதாந்திர பாஸ்களும் வழங்கப்படுகின்றன. சில விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட ஜிபி வரை இலவசமாக வழங்குகின்றன.

இன்னும் சில மாதங்களில் வாடிக்கை யாளர்களை கவரும் உத்திகளில் ஒன்றாக வைஃபை இருக்கப்போகிறது.

மது போதையால் தொடரும் கார் விபத்துகள்: குற்றவாளிகளை உடனே தண்டிக்க சட்டத்திருத்தம் வருமா?


சாலை விபத்துகளுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் போதையில் கார் ஓட்டுவது முக்கிய காரணமாக உள்ளது. தமிழகத்தில் 2014-ல் 67,250 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 15,190 பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு 69,059 விபத்துகளில் 15,642 பேர் உயிர் இழந்துள்ளனர். ஆயிரக் கணக்கானோர் காய மடைந்து முடங்கியுள்ளனர். எதிர்பாராமல் நடக்கும் விபத்துகள் ஒருபுறம் இருக்க, தற்போது சென்னையில் குடிபோதையில் கார் ஓட்டி நடக்கும் விபத்துகள் அதிகரித்துள்ளன.

மெரினாவில் நின்றிருந்த போலீஸ்காரர் சேகர், மீன் வியாபாரி திலகவதி மற்றும் அர்ஜுனன் ஆகியோர் மீது 3 ஆண்டுகளுக்கு முன்னர் கார் மோதியது. இதில், அனைவரும் பலியாகினர். போதையில் கார் ஓட்டிய அன்பு சூரியன் கைதானார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல தொழில் அதிபரின் மகன் ஷாஜி என்பவரது சொகுசு கார் மோதியதில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த முனிராஜ் (12) என்ற சிறுவன் உயிரிழந்தான்.

கடந்த பிப்ரவரியில் ஈரோட்டை சேர்ந்த தொழில் அதிபர் முகமது சபீக் அண்ணாசாலையில் போதை யில் ஓட்டிய கார் மோதி ராயபுரம் கெவின்ராஜ் (25) பலியானார். திருவான்மியூர், பழைய மகாபலிபுரம் சாலையில் கடந்த ஜூலை 2-ம் தேதி வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் முனுசாமி என்பவர் பலியானார். போதையில் கார் ஓட்டிய தொழில் அதிபர் மகள் ஐஸ்வர்யா கைதானார்.

ஆழ்வார்பேட்டையில் சில தினங்களுக்கு முன்னர் கார் பந்தய வீரர் விகாஷ் போதையில் ஓட்டிய சொகுசு கார் மோதி திருத்தணியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் மரணமடைந்தார். சில தினங்களுக்கு முன்னர் திரைப்பட நடிகர் அருண் விஜய் போதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இப்படி சென்னையில் போதையில் கார் ஓட்டி விபத்துகள் நடப்பது அதிகமாகி வருகிறது.

இந்த சாலை விபத்துகளில் பலியானோரின் குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள் ளன. ஆனால், விபத்தை ஏற்படுத்தி யவர்கள் நீதிமன்றம் வாயிலாக ஜாமீன் பெற்று சுதந்திரமாக வெளியே உலவுகின்றனர். எனவே, குற்றவாளிகளை உடனே தண்டிக் கும் வகையில் உடனடி சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.எஸ் ராஜூ கூறியதாவது:

விபத்து ஏற்படுத்தி உயிர் இழப்பை ஏற்படுத்தினால், இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏ (அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்துதல்) என்ற பிரிவில் வழக்கு பதியப்படுகிறது. இதற்கு அதிகபட்சம் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுகிறது. மேலும் சில பிரிவுகளும் கூடுதலாக இணைக்கப்படுகின்றன. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீனில் உடனே வெளியே வந்து விடுகிறார்.

இந்த விபத்துகளில் பாதிக்கப் பட்டவரின் குடும்ப பின்னணி பரிதாபமாக இருக்கும். அவர் களுக்கான இழப்பீடும் உடனடி யாக அல்லது போதுமானதாக இருப்பதில்லை. எனவே, குற்ற வாளிகளை உடனே தண்டிக்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பத்துக்கு அதிக இழப்பீடு கிடைக்கும் வகையிலும் உடனடி சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னை போக்கு வரத்து இணை ஆணையர் பவானீஸ்வரி கூறும்போது, “போதையில் வாகனம் ஓட்ட கூடாது என்பதை வலியுறுத்தி தற்போது விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப் படுத்தியுள்ளோம். துண்டு பிரசுரங் கள் விநியோகிக்கப்பட்டு வருகின் றன. போதையில் வாகனம் ஓட்டு பவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க போக்குவரத்து போலீ ஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

Monday, September 26, 2016

மனமே நலமா? - எங்கே போனது அந்தக் குழந்தையின் கரிசனம்?

டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா
வெப்பத்தோடும் புழுக்கத்தோடும் பேருந்து ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தேன். ஒரு குழந்தை முகத்தைச் சுழித்து, கண்களை இறுக மூடிக்கொண்டு, உச்ச ஸ்தாயியில் 'வீர் வீர்'ரென்று கத்த ஆரம்பித்தது. குழந்தையின் அம்மாவும் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தார். குழந்தையின் அழுகை குறைந்தபாடில்லை. சுற்றி இருந்தவர்கள் செய்வதறியாது வெறுமனே திகைத்து நின்றனர். அந்த அம்மாவின் முகம் அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் தோரணையில் வாடிக் கிடந்தது.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. பக்கத்தில் தன் தாயின் இடுப்பில் உட்கார்ந்திருந்த இன்னொரு குழந்தை, தன் வாயில் இருந்த ரப்பர் உறிஞ்சியை எடுத்து, அழுதுகொண்டிருந்த குழந்தையிடம் நீட்டியது. அழுத குழந்தை ஒரு கணம் அழுகையை நிறுத்தி, தனக்கு உதவி செய்யவந்த குழந்தையை ஆச்சரியத்துடன் பார்த்தது. இந்த மகத்தான தயாள குணத்தைக் கண்ட நான், அந்தக் குழந்தையின் தாயிடம் குழந்தைக்கு எத்தனை வயது என்று கேட்டேன். இரண்டு வயது என்றார் அவர்!

மற்றொருவரின் மனநிலையை உணர்ந்துகொள்ளும் இந்த மானுடப் பண்பு, உளவியலில் ஒத்துணர்வு (empathy) எனப்படுகிறது. இது இரண்டாவது வயதிலேயே தோன்றிவிடுவது எத்தனை ஆச்சரியம்?

வளர்ச்சிக் கோலங்கள்

குழந்தைகளின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் புலன் சார்ந்த உடல், உளவியல் மாற்றங்கள் குறித்துப் பல ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் தரும் வியப்புகள் குறைவதேயில்லை. கருவில் உள்ள சிசுவுக்கு, ஆச்சரியப்படும் பல திறன்கள் உள்ளதாக ஆராய்ச்சிகள் நிறுவியுள்ளன. பார்வையைத் தவிர மற்ற புலன் உணர்ச்சிகள் யாவும், கருவில் இருக்கும்போதே வளர்ச்சி பெற்றுவிடுகின்றன.

வெளிக்காற்றை சுவாசித்த நாள் முதல், தன் தாயின் குரலைக் குழந்தையால் இனம் கண்டுகொள்ள முடிகிறது. மற்ற பெண்களின் குரலைவிட தன் தாயின் குரலை நீண்ட நேரம் கவனிப்பதிலிருந்து, இது தெரியவருகிறது. கருப்பையில் இருக்கும்போது தன் தாயின் குரலைக் கேட்பதால், அதைப் பின்னாளில் சரியாக அடையாளம் காணவும் முடிகிறது. இப்போதெல்லாம் கர்ப்பத்தின்போது, புத்திசாலித் தாய்-தந்தைகள் கருப்பையில் இருக்கும் குழந்தையுடன் பேசுவதும் தாலாட்டுப் பாடுவதும் வழக்கத்துக்கு வந்துவிட்டன.

இதேபோல, புதிதாகப் பிறந்த குழந்தை தாயின் வாசனையை வைத்து, தன் தாயை அடையாளம் கண்டுகொள்கிறது. கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்குச் சுவையை உணரும் திறனும் உண்டு. இதனால் கர்ப்பக் காலத்தில் தாய் உண்ணும் உணவு வகைகளில், குழந்தைகளுக்குப் பின்னாளில் அதிக நாட்டம் ஏற்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

பிறந்த முதல் சில ஆண்டுகளில் குழந்தைகளிடம் காணப்படும் உளவியல் வளர்ச்சியும் பிரமிக்கத்தக்கதாகவே உள்ளது. மழலைக் குழந்தைகள் சுமார் 12 மாதங்களில் (‘அம்மா', ‘அப்பா' என்ற சொற்களைத் தவிர்த்து) கூடுதல் சொல்லைப் பேசும் ஆற்றலைப் பெறுகிறார்கள். ஐந்து வயதில் அதே குழந்தையால் கிட்டத்தட்ட வயது வந்தவர்களைப் போலவே தெளிவாகப் பேச முடிகிறது. அதாவது, நான்கே ஆண்டுகளில் எவரும் முறைப்படியாகக் கற்றுக்கொடுக்காமலே, இந்தப் பேச்சுத் திறன் வளர்ச்சி பெற்றுவிடுகிறது. இது குழந்தைப் பருவத்தின் மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

கேளா ஒலிகள்

பிறந்த சில மாதங்கள்வரை, உலகின் எல்லா மொழிகளில் உள்ள பேச்சு ஒலிகளையும் கற்றுக்கொள்ளும் ஆற்றல் எல்லாக் குழந்தைகளுக்கும் உண்டு. ஆனால், நாள் போகப்போக இந்த ஆற்றல் குறைந்துவிடுகிறது. பத்து மாதங்களில் தாங்கள் கேட்கும் மொழியை, அதாவது தனது தாய்மொழியில் உள்ள ஒலிகளை மட்டுமே, அவர்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது. முதல் 10 மாதங்களில் கேட்காத ஒலிகளை, திரும்ப ஒலிக்கும் திறனைக் குழந்தைகள் இழந்துவிடுகின்றன.

இதனால்தான் ஜப்பானியர்களால் ‘ர' என்ற ஒலியை உச்சரிக்க முடிவதில்லை; அவர்கள் ‘ர' என்ற ஒலியை, ‘ல' என்றே உச்சரிக்கிறார்கள். உதாரணமாக, ராதா என்ற பெயரை லாதா என்கிறார்கள். வங்க மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ‘வங்கம்' என்பதை ‘பங்கா' என்று சொல்வதும் இப்படித்தான். அவர்கள் ‘வ' ஒலிக்குப் பழக்கப்படவில்லை. வயது வந்த பின் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பவர்களின் ஆங்கில உச்சரிப்பு, பிரிட்டன் ஆங்கிலேயர்களின் உச்சரிப்புபோல ஏன் இருப்பதில்லை என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்!

மனிதருக்குப் பேச்சுத் திறன் உடன்பிறந்த ஒன்று. ஆனால், வாசிப்புத் திறன் (படிப்பு என்பதும் வாசிப்பு என்பதும் வித்தியாசமானவை என்பதில் சந்தேகம் தேவையில்லை) அப்படி அல்ல; அது பெற்றுக்கொள்ளப்படும் பண்பு (வாசிக்கத் தெரியாதவர்கள் எத்தனையோ பேர் உலகத்தில் இருக்கிறார்கள்). எனவே, முறைசார்ந்த கல்வி வழியாகவே, வாசிப்பைக் கற்றுக்கொள்கிறோம்.

இரண்டாம் வயதிலேயே குழந்தைகளிடம் ஒத்துணர்வு உணர்ச்சி தோன்றிவிடுகிறது என்பதைத் தொடக்கத்தில் கூறியிருந்தேன். ஒத்துணர்வு என்பது ‘ஐயோ பாவம்' என்று அனுதாபப்படுவதில் இருந்து வித்தியாசமானது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒத்துணர்வு என்பது வேறு, பரிவு அல்லது இரக்கம் (sympathy) என்பது வேறு. மற்றவர் இடத்தில் தன்னை நிறுத்திப் பார்த்து, அவர்கள் படும் வேதனையைத் தான் அனுபவிப்பதாக உணர்வதுதான் ஒத்துணர்வு. இதன் அடுத்த கட்டம்தான், அதைத் தீர்க்கத் தானாக உதவ முன்வருவது; இது பொதுநலப் பண்பு (altruism) எனப்படுகிறது.

இந்த இரண்டு மாபெரும் மானுட குணங்களும் நம்மோடு உடன்பிறந்தவை என்பதை, பேருந்தில் நான் கண்ட அந்தக் குட்டியூண்டு இரண்டு வயதுக் குழந்தை எனக்கு உணர்த்தியது. அதேநேரம், எந்தப் புள்ளியில் இந்த உணர்வை நாம் இழந்துவிடுகிறோம் என்பது தீவிரச் சிந்தனைக்குரியது.

- டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com

Sunday, September 25, 2016

காதல் வழிச் சாலை 02: பார்த்ததுமே பற்றிக்கொள்ளுமா?


தன்னுடன் படிக்கும் மாணவன் மீது நதியாவுக்கு ஏற்பட்டிருப்பது என்ன? நதியாவுக்கு மட்டுமல்ல, நதியாவின் வயதில் உள்ள இளைய சமூகத்தினருக்கு எதிர்பாலினத்தவர் மீது ஏற்படும் உணர்வுக்கு என்ன பெயர்? ஈர்ப்பு. ஆணிடம் பெண்ணுக்கும், பெண்ணிடம் ஆணுக்கும் பார்த்ததுமே ஏற்படுகிற அழகான உணர்வே இந்த ஈர்ப்பு. ஆங்கிலத்தில் இதை ‘இன்ஃபாச்சுவேஷன்’ என்று சொல்வோம்.

தயக்கமும் வெட்கமும் கலந்த ஒரு குறும்புப் புன்னகை முகத்தில் குடிகொள்ளும். அவர்களை நினைக்கும்போதே உடல் முழுக்கச் சிலிர்ப்பு பரவும். பசி மறந்துபோகும், தூக்கம் தொலைந்துபோகும். அவர்கள் வந்துபோகிற ஒவ்வொரு காலைப் பொழுதும் மிகவும் ரம்மியமாகக் காட்சிதரும். அவர்களைத் தவிர இந்த உலகில் வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அதனாலேயே வேறு எதையும் பார்க்கத் தோன்றாது. அவர்களது நடை, உடை, சின்னத் தவறு, செல்லக் கோபம் என்று எல்லாமே பிடித்துப்போகும்.

கண்டதுமே காதலா?

தன்னையே மறக்கிற அளவுக்கு ஒருவரைப் பிடிக்கிறதே, இது காதலா என்றால் நிச்சயம் இல்லை. கண்டதுமே காதல் சத்தியமாக வராது. திரைப்படங்களில் வரலாம், தொலைக்காட்சித் தொடர்களில் வரலாம். ஆனால் வாழ்க்கை என்னும் முழுநீளப் படத்தில் கண்டதுமே காதல் பெரும்பாலும் சாத்தியமில்லை. இங்கே ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ இல்லை. கண்டதுமே ஈர்ப்பு மட்டும்தான் ஏற்படும்.

காதலுக்கும் ஈர்ப்புக்கும் நிறைய வேறுபாடு உண்டு. காதல் ஆழமானது. ஈர்ப்பு மேலோட்டமானது. காதல் புற அழகைத் தாண்டியும் ஆழமான நேசம் கொண்டது. பிடித்தவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பு வைப்பதும், அவர்களின் சுக துக்கங்களில் சரிபாதி பங்கெடுத்துக் கொள்வதும், அவர்களுக்காக விட்டுக்கொடுக்கத் தயங்காமல் இருப்பதுமே காதலாக அறியப்படுகிறது. ஆனால் ஈர்ப்பு புற அழகை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அகம் எப்படி இருக்கும் என்ற தேடலோ அக்கறையோ இல்லாதது.

ஈர்ப்பு என்பது கண நேரப் பரவசமும் மகிழ்ச்சியும் தருவது. அதைக் காதலுடன் போட்டுக் குழப்பிக்கொள்கிறவர்கள் இங்கே அதிகம். அப்படியொரு குழப்பம்தான் நதியாவுக்கும். அதனால்தான் சக மாணவர்மீது அவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பை என்னவென்றே இனம் காணமுடியாமல் குழம்பினார். பருவ வயதின் இனிய இம்சைகளில் இந்த ஈர்ப்பு முதன்மையானது.

தீபாவளியின்போது நாம் கொளுத்தும் புஸ்வாணம் போன்றது ஈர்ப்பு. நெருப்புப் பற்றியதுமே சடசடவென தீப்பூக்கள் உயர்ந்து சிதறும். அடுத்த நொடியே அடங்கிப் போகும். அப்படித்தான் ஈர்ப்பும். அந்த வயதில் பட்டென்று பற்றிக்கொண்டு உடல் முழுக்கப் பரவசத்தைத் தரும். ஆனால் அதற்கு நீடித்த ஆயுள் கிடையாது. இதைப் புரிந்துகொள்ளாமல் பலரும் அது மிகப் பெரிய உன்னத உணர்வு என்று நினைத்துப் புலம்புவார்கள்.

பொய்களும் அழகே

இன்னொரு விஷயம் தெரியுமா? காதல் உண்மையானது. அதற்குப் போலித்தனம் எதுவும் தேவையில்லை. ஆனால் ஈர்ப்புக்குச் சின்னச் சின்னப் பொய்களும் நடிப்பும் தேவைப்படும். எதிர்பாலினத்தவரைக் கவர வேண்டும், அவர்கள் முன்னால் ஹீரோ அல்லது ஹீரோயின் போலத் தெரிய வேண்டும் என்பதற்காக இல்லாத வித்தையை எல்லாம் செய்யச் சொல்லும். நம்முடைய இயல்பைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டு நடிக்கச் சொல்லும். நம் சுயத்தை இழந்து அல்லது மறைத்து நடிக்கிறோம் என்ற குற்றவுணர்வு அங்கே தோன்றாது. காரணம் ஈர்ப்பு என்பது மேலோட்டமானது. அந்த நேரத்து மகிழ்ச்சியை மட்டுமே வேண்டுவது.

ஈர்ப்பில் எல்லாமே உடனுக்குடன் தேவைப்படும். ஒரு நாள் பார்க்கவில்லை என்றால், பேசிக்கொள்ளவில்லை என்றால் அந்த நாளே நரகமாகத் தெரியும். பெரிதாக ஏதோவொன்றை இழந்தது போல சோகம் சூழும். பிரியும்போது பதற்றம் ஏற்படும். மீண்டும் எப்போது சந்திப்போம் என்ற பரிதவிப்பு தொடரும். இதெல்லாம் ஈர்ப்பின் விளைவுகள். ஆனால் காதல் அப்படியல்ல. விலகிச் சென்றாலும் நெருங்கி வருவதே காதல்.

எதிர்பாலினக் கவர்ச்சிதான் காதலுக்கும் ஆரம்பப் புள்ளி என்றாலும் அது பயணிக்கும் பாதை வேறு.

ஈர்ப்பில் எதற்கெடுத்தாலும் சந்தேகமும் பயமும் இருக்கும். அவன்/அவள் நம்முடையவராக நீடிப்பாரோ என்ற கவலை இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இதையெல்லாம் கடந்த நிலையே காதல்.

மலர்வதும் உதிர்வதும்

ஈர்ப்பு மேலோட்டமானது என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன். வாசுவும் கீதாவும் கல்லூரி நண்பர்கள். இருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்தார்கள் அல்லது அப்படி நம்பினார்கள். கீதா அணிந்துவரும் ஆடைகள் வாசுவுக்கு மிகப் பிடிக்கும். வாசுவின் தெளிவான பேச்சுக்கு கீதா ரசிகை.

கீதா அணிந்துவரும் ஆடைகளில் மயங்கிய வாசுவுக்கு, கீதா ஒரு முன்கோபக்காரி என்பதும் அலட்சிய மனோபாவம் கொண்டவள் என்பதும் தெரியாது. வாசுவின் பேச்சில் மயங்கிய கீதா, அவன் தன் நண்பர்களுடன் இருக்கும்போது உதிர்க்கிற மட்டரகமான வார்த்தைகளை அறிந்துகொள்ளவில்லை. இருவருமே இருவரின் பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே அறிந்துவைத்திருந்தார்கள். காரணம் ஈர்ப்புக்கு அது மட்டும் போதும். நெகட்டிவ் சங்கதிகளைத் தெரிந்துகொள்ள விரும்பாதது பெரிய குற்றமல்ல. அதைத் தெரிந்துகொள்ளாமலேயே காலத்தை ஓட்டிவிடலாம். காரணம் ஈர்ப்புக்கு ஆயுள் குறைவு. இருவரின் நெகட்டிவ் குணங்கள் தெரிந்த பிறகும் இருவருக்குள்ளும் புரிதல் தொடர்ந்தால்தான் அந்த ஈர்ப்பு காதலின் சாலையில் பயணிக்கும்.

அதனால் காதலையும் ஈர்ப்பையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஈர்ப்பு வருவது ஒரு பூ மலர்வதுபோல மிக இயல்பானது. சில நாட்களில் அந்தப் பூ வாடிப்போய், புல்வெளியில் அழகாக உதிர்ந்தும் போகலாம். அதுவும் இயல்புதான். அதைப் புரிந்துகொண்டால் ஈர்ப்பு நல்லது!

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

NEWS TODAY 18.12.2025