Tuesday, September 27, 2016

அரசு மருத்துவமனைகள் கடைசியாகப் பார்த்தது அண்ணா, கக்கனைத்தான்!



சென்னை: அது அந்தக் காலம்.. தலைவர்கள் எல்லாம் மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார்கள். மக்களும் தலைவர்களின் பாதையை பின்பற்றி நடந்தார்கள். மக்கள் நம்மைப் பார்த்து நடக்கிறார்களே என்ற விழிப்புணர்வுடன் தலைவர்களும் இருந்தார்கள்.. ஆனால் இன்று அப்படியா இருக்கிறது நிலைமை?

ஜெயலலிதா முதல் வார்டு கவுன்சிலர் வரை அரசு மருத்துவமனைகள் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. உடம்புக்கு முடியாவிட்டால் அப்பல்லோ முதல் ராமச்சந்திரா வரை போகிறார்களே தவிர மறந்தும் கூட அரசு மருத்துவமனைகளுக்குப் போவதில்லை.

இங்குள்ள தனியார் மருத்துவமனைகள் போதாது என்று வெளிநாடுகளுக்குப் பறந்து அங்குள்ள ஸ்டார் மருத்துவமனைகளில் உடம்பைப் பார்த்துக் கொள்கிறார்களே தவிர மருந்துக்குக் கூட அரசு மருத்துவமனைக்குப் போவதில்லை.


சூப்பர் ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனைகள்தான் இன்று அரசியல் தலைவர்களின் இன்னொரு புகலிடமாக உள்ளது. ஜெயலலிதாவாகட்டும், கருணாநிதியாகட்டும், ஸ்டாலினாகட்டும்.. யாராக இருந்தாலும் இதுபோன்ற ஆடம்பர தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் சிகிச்சைக்காக போகின்றனர்.

அதேசமயம், கையில் காசு இல்லாத சாதாரண ஜனங்களுக்கு இருக்கவே இருக்கிறது கூவத்தை ஒட்டியுள்ள அரசு பொது மருத்துவமனையும் ஆங்காங்கு உள்ள அரசு மருத்துவனைகளும். அங்கு கொசுக்கடியிலும், இருக்கிற வசதிகளையும் மட்டுமே ஏழை பாழைகள், பொது ஜனங்கள் பயன்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றாக வேண்டும்.

ஜெயலலிதாவும் சரி, கருணாநிதியும் இதுவரை எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றதாக வரலாறு இல்லை. சென்னை அரசு பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றதாக நினைவில்லை. ஜெயலலிதா இப்போதுதான் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதி முன்பு அப்பல்லோவிலும், பின்னர் போரூர் ராமச்சந்திராவிலும்தான் சிகிச்சை பெற்றுள்ளாரே தவிர அரசு மருத்துவமனைக்கு அவர் போனதாக வரலாறே இல்லை.

அண்ணா சாலையில் திமுக ஆட்சிக்காலத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்ட சட்டசபைக் கட்டடத்தை அப்படியே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றினார் ஜெயலலிதா. இங்கு இல்லாத வசதிகளே கிடையாது என்றார். ஆனால் அவரே இன்று இந்த மருத்துவமனையைப் புறக்கணித்து விட்டார். அப்பல்லோ என்ற தனியார் மருத்துவமனையில்தான் தங்கியுள்ளார்.

இப்படி அரசு மருத்துவமனகளை உருவாக்கும் தலைவர்களே அரசு மருத்துவமனைகளைப் புறக்கணித்தால் மக்கள் எப்படி அதை நம்பிப் போக முடியும் என்ற கேள்விதான் எழுகிறது. மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இவர்களே இப்படித் தனியார் மருத்துவமனைகளை ஆதரித்தால் அரசு மருத்துவமனைகள் எப்படி தேறும்.. எப்படி மக்களிடம் மதிப்பு பெறும்.

அண்ணா, கக்கன், காமராஜர் போன்ற தலைவர்கள் எல்லாம் அரசு மருத்துவமனைகளைத்தான் அதிகம் பயன்படுத்தினர். அதிலும் கக்கன் கடைசி வரை தனியார் மருத்துவமனை பக்கமே திரும்பிப் பார்க்காத உன்னத தலைவர். அவரது இறுதிக் காலம் கூட சந்தடியே இல்லாமல் அரசு மருத்துவமனையில்தான் முடிந்தது. அந்தத் தலைவர்களுக்குப் பிறகு எந்தத் தலைவரும் அரசு மருத்துவமனைக்கு வந்ததாக வரலாறே இல்லை என்கிறார்கள்.

கக்கன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆதரவற்ற நிலையில் உள்ளார் என்று அறிந்ததும் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். ஓடிச் சென்று நல்ல சிகிச்சை பெறலாம் வாருங்கள் என்று காலில் விழாத குறையாக கூப்பிட்டாராம். ஆனால் கக்கன் சிரித்தபடி மறுத்து விட்டாராம். எல்லோரும் இங்கு நம்ம மக்கள்தான். அவர்களுக்குக் கிடைக்கும் சிகிச்சையே எனக்கும் கிடைக்கட்டும் என்று கூறி விட்டாராம். அவர் எப்படிப்பட்ட தலைவர்?

நல்ல வசதிகளுடன் கூடிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது என்பது முக்கியம்தான். அவசியமும் கூட. உயிர் விஷயத்தில் யாரும் ரிஸ்க் எடுக்க முடியாதுதான். ஆனால் அரசாங்கமே அதி நவீன மருத்துவமனை, எல்லா வசதியும் உண்டு என்று கூறிய ஒரு மருத்துவமனையை அந்த அரசே புறக்கணிப்பது மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கத் தவறி விடும் என்பதை உணர வேண்டாமா.

அரசியல் தலைவர்கள் வெறும் வாய்ப்பேச்சாக இல்லாமல் அவர்கள் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்ல தலைவர்களாகவும் திகழ வேண்டியது நிச்சயம் முக்கியானது, சமூகத்திற்கு ஆரோக்கியமானது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...