Wednesday, September 21, 2016



மீனம்பாக்கம் டூ சின்னமலை..! தொடங்கியது மெட்ரோ ரயில் சேவை


மீனம்பாக்கம் டூ சின்னமலை மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்..! கட்டணம் எவ்வளவு?

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீட்டர் தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கணிசமான ரயில் தடம் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாககோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் மேம்பாலம் பணிகள் முடிந்த நிலையில், கடந்தாண்டு முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து சின்னமலை - விமான நிலையம் மற்றும் செனாய் நகர் - கோயம்பேடு இடையிலான சுரங்கப் பாதைகளை நிறைவு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதில் சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் பாதை பணி கடந்த ஜூலையில் முடிவடைந்த நிலையில், அந்த பாதையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து விமான நிலையம்- சின்னமலை இடையே மெட்ரோ ரயில்களை இயக்கலாம் என்று கடந்த மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஒப்புதல் வழங்கினார். 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு அறிக்கையை ஆய்வு செய்து அவர் இந்த ஒப்புதலை வழங்கினார்.



இந்த நிலையில், விமான நிலையம்- சின்னமலை இடையே முதல் மெட்ரோ ரயில் சேவையை தலைமைச் செயலகத்தில் இருந்த படியே காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். அதோடு விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலையில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். இருமார்க்கத்தில் தொடங்கப்பட்ட ரயிலை அம்சவேணி மற்றும் நளினி ஆகியோர் இயக்கினர்.

நாளை முதல் மெட்ரோ ரெயில் சேவை விமான நிலையம் வரை நீட்டிக்கப்படுவதால் இனி கோயம்பேட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வரை பயணிகள் மிக குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும். தற்போது கோயம்பேடு - ஆலந்தூர் இடையே தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இனி பயணிகள் எண்ணிக்கை தினமும் 15 ஆயிரமாக உய ரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் சேவை தொடங்கும் சின்னமலை - விமான நிலையம் இடையிலான மொத்த தூரம் 8.6 கிலோ மீட்டராகும். இதில் 6 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயிலுக்கான கட்டணம் முதல் 2 கி.மீ்ட்டருக்கு ரூ. 10, 2 முதல் 4 கி.மீட்டருக்கு ரூ.20, 4 முதல் 6 கி.மீட்டருக்கு ரூ.30, 6 முதல் 8 கி.மீட்டருக்கு ரூ.40, 8 முதல் 10 கி.மீட்டருக்கு ரூ.50, 10 முதல் 15 கி.மீட்டருக்கு ரூ.60 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி விமான நிலையத்தில் சின்னமலை வரை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும். விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் அதிக மாக இருப்பதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கட்டணக் குறைப்பு பற்றி இதுவரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மெட்ரோ ரெயில் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்ட்ரல், எழும்பூரில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் போது கட்டணம் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...