Friday, September 9, 2016

விருத்தாசலம் செவிலியர் புஷ்பா தற்கொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: விருத்தாசலம் செவிலியர் புஷ்பா தற்கொலை செய்ததற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

ஒருதலைக் காதல் என்ற பெயரில் சில தறுதலைகள் மேற்கொண்டு வரும் பாலியல் சீண்டலுக்கு மேலும் ஓர் இளம்பெண் பலியாகியிருக்கிறார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பலதா என்ற பெண் பாலியல் சீண்டலால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.தொடர்கதையாகும் இத்தகைய சீண்டல்கள் கண்டிக்கத்தக்கவை.



விருத்தாசலம் பூதாமூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பலதா அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார். அவருக்கு அதேபகுதியிலுள்ள காதல் நாடகக் கும்பலைச் சேர்ந்த தனசேகரன் என்ற மிருகம் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதை ஏற்க புஷ்பலதா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

காதலிக்க மறுப்பு

கடந்த 31-ஆம் தேதி இரவு புஷ்பலதா பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்து வழிமறித்த தனசேகரன் தம்மை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அதை ஏற்க மறுத்த புஷ்பலதாவை தகாத வார்த்தையால் திட்டியதுடன் கடுமையாக தாக்கியதாகவும், கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த புஷ்பலதா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்கொலை

தூக்கில் தொங்கியவரை மீட்ட அவரது குடும்பத்தினர் முதலில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புஷ்பலதா கடந்த 8 நாட்களாக அளிக்கப்பட்ட மருத்துவம் பயனளிக்காமல் நேற்றிரவு உயிரிழந்தார். கொடிய மிருகத்தின் சீண்டலால் ஏற்பட்ட அவமானம் காரணமாக உயிரிழந்த புஷ்பலதாவின் மறைவுக்கு இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தூத்துக்குடி

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பாலியல் சீண்டல்களுக்கு பெண்கள் இரையாவது அதிகரித்து வருகிறது.சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற பொறியாளர் கடந்த ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் இராம்குமார் என்ற இளைஞனால் கொடூரமாக வெட்டிப் கொலை செய்யப்பட்டார். அதன்பின் விழுப்புரத்தையடுத்த வ.பாளையம் கிராமத்தில் நவீனா என்ற சிறுமியை செந்தில் என்ற மிருகம் உயிருடன் எரித்து கொலை செய்தது. தொடர்ந்து கரூர் பொறியியல் கல்லூரியில் சோனாலி என்ற மாணவி வகுப்பறையில் கட்டையால் அடித்தும், தூத்துக்குடியில் பிரான்சினா என்ற ஆசிரியை தேவாலயத்தில் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வினோதி, வித்யா

இவர்களுக்கு முன்பே காரைக்காலில் வினோதினியும், ஆதம்பாக்கத்தில் வித்யாவும் அமிலம் வீசிப் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த மாதம் திருச்சியில் மோனிகா என்ற மாணவியும், புதுச்சேரியில் அன்னாள் தெரசா என்ற மாணவியும் மனித மிருகங்களால் கத்தி குத்துக்கு ஆளாகி சாவின் நுழைவாயில் வரை சென்று திரும்பியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து இப்போது புஷ்பலதா ஒரு மிருகத்தின் பாலியல் சீண்டலால் உயிரிழந்துள்ளார்.

என்ன வகையான கலாசாரம்?

காதல் என்ற பெயரில் தொல்லைக் கொடுப்பதும், அதை தவிர்க்க நினைக்கும் பெண்களை வெட்டிக் கொலை செய்வதும், அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டுவதும் எந்த வகையான கலாச்சாரம் என்பது தெரியவில்லை. காதல் என்பது இருமனம் கனிந்தால் தான் ஏற்படும். இதை உணராமல், ஒப்புக் கொண்டால் காதல்.... இல்லையேல் கொலை என்ற போக்கு மிகவும் ஆபத்தானதாகும். பெண்களின் உணர்வுகளுக்கு மதிக்காமல் இத்தகைய செயலில் ஈடுபடும் மிருகங்களை பெண்ணுரிமை பேசும் அமைப்புகள் கண்டிக்காததும், பெண்களை பாதுகாக்க போராட மறுப்பதும் கவலையளிக்கிறது. இதுபோன்ற செயல்களுக்கு ஆணாதிக்கமும், முதலாளித்துவமும் தான் காரணம் என்று புதிய விளக்கம் அளித்த போலிப் புரட்சியாளர்கள், இத்தகைய கொடிய நிகழ்வுகளை கண்டிக்காததன் மூலம் தங்களின் முகமூடிகளை கிழித்துக் கொண்டிருக்கின்றனர். இளம் தலைமுறைக்கு கல்வியையும், கலாச்சாரத்தையும் போதிப்பதை தவிர்த்து, நாடக காதலையும், பணம் பறிக்கும் திருமணத்தையும் போதித்து வரும் சமூக விரோத கும்பல் தான் இத்தகைய பாலியல் கொடுமைகளுக்கு காரணம் என்பதில் எந்த ஐயமுமில்லை.

75 நாட்களில் 5 பெண்கள்

காதலிக்க மறுத்ததற்காக கடந்த 75 நாட்களில் 5 பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கொலை முயற்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் இவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தறுதலைகள்...

பெண் முதலமைச்சர் ஆட்சி செய்யும் மாநிலத்தில், ஒருதலைக் காதல் தறுதலைகளிடமிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது வெட்கக் கேடான செயல் ஆகும். பெண்களை பின்தொடர்ந்து தொல்லை தருவோரை கைது செய்து தண்டனை வழங்க வசதியாக இந்திய தண்டனைச் சட்டத்தில் 345டி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டும், அதைப் பயன்படுத்த தமிழக அரசு தவறியதன் காரணமாகவே பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து விட்டது.

கடும் நடவடிக்கை

இந்த விஷயத்தில் அரசு இனியும் அலட்சியம் காட்டாமல் ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் சீண்டலுக்கு பலியான புஷ்பலதா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.''

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...