Monday, September 12, 2016

Posted Date : 22:29 (09/09/2016)


#iphone7

: ஆப்பிள் எடுத்த முடிவு சரிதானா?


ஆப்பிளின் புதிய ஐபோன்களோடு, சில சர்ச்சைகளும், சிக்கல்களும் சேர்ந்தே வெளியாகியிருக்கின்றன. அதாவது ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன்களில் “ஹெட்போன் ஜாக்” எனப்படும் பாடல் கேட்பதற்கான வொயரை சொருகும் 3.5 மிமீ போர்ட்டை நீக்கியுள்ளது. இதற்குப் பதிலாக, வயர்லெஸ் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தும் வகையில் “ஏர்பாட்ஸ்” என்னும் வயர்லெஸ் ஹெட்போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், மறுபக்கம் ஆதரவும் இருக்கின்றன. ஆப்பிள் செய்தது சரிதானா?
இதற்கு ஆப்பிள் சொல்லும் காரணம் என்ன?

ஐபோன்களிலிருந்து ஹெட்போன் ஜாக் நீக்கப்படும் தகவலை அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பில் சில்லேர் கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அறிவித்தார். அப்போது “கடைசியாக இருப்பது ஒரே வார்த்தைதான்: நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் மூலம் முன்னேறி, நம்மை முன்னேற்றிடும் புதிய விஷயங்களை செய்வதே அது” என்றார். நூறு வருடங்களுக்கும் மேலான, ஆடியோ ஜாக் எல்லாம் பழசு. இனி எல்லாம் வயர்லஸ்தான். அதற்கு இதுவே முதல்படி எனக் கூறியிருக்கிறது ஆப்பிள். அதற்காக ஆப்பிள் சொல்லும் காரணங்கள் இவைதான்.
1. "ஒவ்வொரு வருடமும் மக்கள் புதுப்புது சிறப்பம்சங்களை எங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். எனவே தான் ஐபோன்களின் வடிவமைப்பு, வாட்டர் ப்ரூப், சிறந்த பேட்டரி போன்றவற்றை பூர்த்தி செய்வதற்காக ஹெட்போன் ஜாக்கை நீக்கியுள்ளோம்"
2. மேலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும்போது இதுபோன்ற கருத்துக்கள் சகஜம்தான் எனக்கூறும் ஆப்பிள், இன்னும் சில வருடங்களில் மக்களிடையே நாம் ஏன் இத்தனை வருடமாக வயர்லெஸ் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுமென்றும் சவால்விடுகிறது.



இனி பழைய “ஹெட் போன்களை” ஐபோனில் பயன்படுத்த வழியே இல்லையா?

உங்களின் பழைய ஹெட்போன்களையும் புதிய ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ்சில் பயன்படுத்தலாம். ஆனால் அதை நேரடியாக இல்லாமல் அதற்குரிய “அடாப்டர்” மூலம் லைட்னிங் போர்ட் எனப்படும் நாம் மொபைலை சார்ஜ் ஏற்றும் பகுதியில் இணைத்து பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் அந்த அடாப்டர், ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் வாங்கும்போது இலவசமாக வழங்கப்படும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஆடியோ ஜாக்கை நீக்கியதால் ஏற்படும் பிரச்சனைகள்:



நமது பழைய ஹெட் போன்களை பயன்படுத்தி பாடல் கேட்க வேண்டுமென்றால் நம்மிடம் எப்போதும் அந்த அடாப்டர் இருக்க வேண்டியது அவசியம். நம்மில் பலபேர் மொபைலை சார்ஜ் ஏற்றிக்கொண்டே பாடல் கேட்பது வழக்கம். ஆனால் அது இனி சாத்தியமில்லை. ஏனெனில் அந்த அடாப்டர் இணைக்கப்பட்டிருப்பது நாம் மொபைலை சார்ஜ் ஏற்றும் “லைட்னிங் போர்ட்” ஆகும். எனவே ஒரே சமயத்தில் பாடல் கேட்டுக்கொண்டே மொபைலை சார்ஜ் ஏற்றுவது சாத்தியமில்லை. ஆடியோ ஜாக்கை நீக்கியதற்காக ஆப்பிள் நிறுவனம் சொல்லும் காரணங்களை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆடியோ ஜாக்கோடும், ஐபோனை விட சிறந்த பேட்டரி திறனும், வாட்டர் ப்ரூப் உள்ள மொபைல்களை மற்ற நிறுவனங்கள் ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் இந்த விளக்கம் போதுமானதாக இல்லை.


மேலும் நாம் பயன்படுத்தும் மொபைல், டேப்லட், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற மின்னணு பொருட்களில் அத்தியாவசமான தேவை என்று நாம் நினைக்கும் வசதிகளை ஆப்பிள் நீக்குவது இது முதல் முறையல்ல. அவ்வாறு ஆப்பிள் நீக்கியவற்றில் முக்கியமான விஷயங்களை கீழே காணலாம்.



பிளாப்பி டிஸ்க்:

1976 முதல் 1998 வரை பிளாப்பி டிஸ்க் என்னும் கணினிகளுக்குக்கிடையே தகவல் பரிமாற உதவும் முக்கியமான வழி. அப்போது பயன்பாடு உச்சத்தில் இருந்தது. அதில் அதிகபட்சம் 1.4 எம்பி தகவல்களை மட்டுமே சேமிக்க முடியும் என்பது வேறு கதை. ஆனால் 1998-ம் ஆண்டு ஆப்பிளின் ஐமேக் ஜி-3 என்னும் கணினி அறிமுகப்படுத்தப்பட்டபோது, பிளாப்பி டிஸ்க் நீக்கப்பட்டு நாம் தற்போது பயன்படுத்தும் யூஎஸ்பி சேர்க்கப்பட்டது. அப்போது பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் இப்போது நாம் பயன்படுத்தும் யூஎஸ்பிக்கு அதுவே தொடக்கம்.

டிவிடி டிரைவ் :

இன்றுவரை நாம் பயன்படுத்தி வரும் டிவிடிக்களை கிட்டத்தட்ட ஆப்பிளின் ஐமேக் கம்ப்யூட்டர்கள் மற்றும் மேக்புக் லேப்டாப்களிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னரே நீக்கிவிட்டனர். குறைந்து வரும் டிவிடி பயன்பாடு, அதிகரித்து வரும் கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்பாடு மற்றும் கணினியின் வடிவமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்களுக்காக டிவிடி டிரைவ் நீக்கப்பட்டதாக அப்போது, கூறப்பட்டது.


இப்போதும் கூட, "ஆப்பிள் எடுக்கும் இதுபோன்ற அதிரடி முடிவுகளால்தான் இன்னும் முன்னணியில் இருக்கிறது. இதுதான் ஆப்பிளின் ஸ்டைலே!" என்கிறது ஒரு க்ரூப். "அப்படி இயர்போன் போர்ட்டை நீக்கும் அளவுக்கு, அப்படி என்ன அதில் குறை இருந்தது?" என்கிறது ஒரு க்ரூப். இது ஆப்பிளின் துணிச்சலா? சறுக்கலா? வழக்கம் போலவே, காலத்தின் கையில்தான் விடை இருக்கிறது!

- ஜெ.சாய்ராம்,
(மாணவப் பத்திரிகையாளர்)

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...