Friday, September 9, 2016

எல்லிஸ்

மறக்கப்பட்ட நடிகர்கள் 10: டி.எஸ்.துரைராஜ் - நண்பனின் பாதையில் நகைச்சுவை விருந்து!

ஆர்.சி.ஜெயந்தன்

 எல்லிஸ்  ஆர். டங்கன் இயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘சகுந்தலை’ 1940-ல் வெளியானது. சகுந்தலையாக நடித்த எம்.எஸ்.எஸ், துஷ்யந்தனாக நடித்த ஜி.என். பாலசுப்ரமணியம் ஆகிய நட்சத்திரங்களின் வசீகரத்தோடு, விறுவிறுப்பான திரைக்கதை, மேக்கிங், எடிட்டிங், டங்கனின் இயக்கம், கல்கி சதாசிவத்தின் தயாரிப்பு எனப் பல காரணங்கள் இந்தப் படத்தின் வெற்றியின் பின்னால் இருந்தன. இவை தவிர இன்னுமொரு முக்கியக் காரணமும் உண்டு. அது பாமர ரசிகர்களை திரையரங்களுக்கு வரவழைத்த கலைவாணர் என்.எஸ்.கே. டி.எஸ்.துரைராஜ் ஜோடியின் “அடிப்பியோ… ங்கொப்பன் மவனே… சிங்கம்டா…” என்ற எவர்க்ரீன் காமெடி.
கடலையொட்டிய நதியின் முகத்துவாரத்தில் இரண்டு தூண்டில்களைப் போட்டுவிட்டு மீனுக்காகக் காத்திருக்கிறார்கள் மீனவ நண்பர்களான என்.எஸ்.கே.யும் துரைராஜூம். இந்த இடைவெளியில் கடலோடி மக்களின் அன்றாடப் பாடுகளை இருவரும் லாவணியாகப் பாடி முடிக்க, மீன் சிக்கிவிடுகிறது. தூண்டில் மீன் யாருக்குச் சொந்தம் என்பதில் சண்டை. மீனைத் தூக்கிக்கொண்டு துரைராஜ் ஓட, அவரைத் துரத்திப்பிடிக்கும் என்.எஸ்.கே. அடிக்கக் கையை ஓங்குகிறார். அப்போது துரைராஜ் “ அடிப்பியோ… ங்கொப்பன் மவனே சிங்கம்டா” என்று வீரமாக மீசையை முறுக்குவார்.
இப்படிச் சொன்னதும் நிஜமாகவே என்.எஸ்.கே. அவரை அடிக்க, அடியை வாங்கிக்கொண்டு அதே வசனத்தைச் சுருதி குறைத்து முனகியபடியே மீண்டும் கூறி துரைராஜ் மீசையை முறுக்குவார். இப்போது மீண்டும் என்.எஸ்.கே. அடிக்க, ஒரு கட்டத்தில் அழுதுகொண்டே அந்த வசனத்தை மட்டும் விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு துரைராஜ் கெத்து காட்டுவார். இப்படிப் பல படங்களில் தொடர்ந்த இந்த நகைச்சுவை ஜோடியின் அட்டகாசத்தை ரசிகர்கள் அன்று விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார்கள்.
பல தலைமுறைகளுக்குப் பிறகு கவுண்டமணியிடம் செந்தில் வாங்கிய அடி, ‘வின்னர்’ படத்தில் தொடங்கி ‘போக்கிரி’ வரை ‘கைப்புள்ள’ வடிவேலு வாங்கிய அடி என எல்லாவற்றுக்குமே இந்த ஜோடி போட்டுக்கொடுத்த ‘அடி’தான் அஸ்திவாரம். அடிப்பதும் ஆபாச வசனமும்தான் நகைச்சுவை என்று புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் அன்று என்.எஸ்.கே.- துரைராஜ் ஜோடியின் நகைச்சுவையில் யாரையும் பழித்துரைக்காத தூய்மை இருந்தது.
ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே. இல்லாத வெற்றிடத்தில் தனித்து நின்று தனது நகைச்சுவைப் பாதையை டி.எஸ்.துரைராஜ் அமைத்துக்கொண்டாலும் தனது நண்பர் என்.எஸ்.கே.யின் பாதையிலிருந்து விலகிவிடாமல் அவரது பாணியை இறுகப் பிடித்துக்கொண்டார். நடிப்பதிலும் பாடுவதிலும் அள்ளிக் கொடுப்பதிலும் கூட அவர் என்.எஸ்.கே.யின் இன்னொரு பிரதியாகவே சுமார் 20 ஆண்டுகள் தமிழ்த் திரையில் வலம்வந்தார்.
என்.எஸ்.கே.யின் நண்பர்
தஞ்சையை அடுத்த பட்டுக்கோட்டைதான் டி.எஸ். துரைராஜின் சொந்த ஊர். ஒரு பொற்கொல்லர் குடும்பத்தில் ராஜா நாயுடு நாகலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். துரைராஜுக்குப் படிப்பு ஏறவில்லை. இதனால் பள்ளியிலிருந்து நின்றுவிட்டார். திருமணமாகிச் சென்ற அக்காவுக்கு உதவியாக இருக்கட்டும் என்று மதுரைக்கு அனுப்பிவைத்தனர். தமிழ் நாடகக் கலையின் தாய்வீடாக இருந்த மதுரையில் அன்று சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்டு இயங்கிய தமிழ் நாடகக் குழுக்கள் புகழ்பெற்று விளங்கிய காலம்.
சிறுவயது முதலே நக்கலும் நையாண்டியுமாகப் பேசும் துரைராஜுக்கு இட்டுக்கட்டிப் பாட்டுப் பாடும் திறனும் இருந்தது. இதைக் கண்ட அவரது மைத்துனர், எம். கந்தசாமி முதலியார் நடத்திவந்த ’மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’யில் சேர்த்துவிட்டார். 13 வயதில் நாடக கம்பெனியில் சேர்ந்த அவர், அங்கு வந்து சேர்ந்த எம்.ஜி. சக்கரபாணி, எம்.ஜி.ராமச்சந்திரன், காளி. என். ரத்னம், என்.எஸ்.கே. ஆகியோருக்கு நண்பர் ஆனார்.
பிறகு, கலைவாணருடன் நெருங்கி நட்புகொண்டார். அவருடன் அதிக நாடகங்களில் நடித்தார். என்.எஸ்.கே.யுடன் துரைராஜும் சென்னைக்கு வர மாடர்ன் தியேட்டரில் கம்பெனி நடிகர்கள் ஆனார்கள். ஆனால் அடையாளம் பெறும் அளவுக்கு வேடங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ’மேனகா’ படத்தில் கலைவாணருக்கே சினிமாவில் நடிக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது; என்றாலும் நண்பன் துரைராஜுக்காகவும் தொடர்ந்து முயன்றுவந்தார் கலைவாணர். ராஜா சாண்டோ இயக்கத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்துத் தயாரித்த ‘திருநீலகண்டர்’(1939) படத்தில் முதல் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தார் கலைவாணர்.
மிகப் பெரிய வெற்றிபெற்ற அந்தப் படத்தில் என்.எஸ். கிருஷ்ணனும் துரைராஜும் எரிந்த கட்சி எரியாத கட்சியாகப் பங்கு கொண்ட ‘லாவணி’ கச்சேரி மிகப் பெரிய ஹிட்டடித்தது. டி.எஸ். துரைராஜ் லாவணிப் பாடல் மூலம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டுவரும் கலைவாணரிடம் ‘அந்தக் கணபதிக்கு தொந்தி பெருத்த விதத்தைச் சபையிலே எடுத்துக் கூறு, கூறு!’ என்று துரைராஜ் வில்லங்கமான கேள்வியைக் கேட்க, அதற்குப் பதில் தர முடியாமல் திணறுவார் கலைவாணர். கடைசியில் வேறு வழியில்லாமல் ‘கொழுக்கட்டை தின்றதினால் அண்ணே அண்ணே! தொந்தி பெருத்தது அண்ணே அண்ணே’ என்று கூறி சமாளிப்பார்.
இந்தப் படத்துக்கு முன்பே வாசன் வெளியிட்ட 1939-ல் ‘சிரிக்காதே' என்ற முழு நீள நகைச்சுவை படத்திலும் அதே ஆண்டில் வெளியான ‘ரம்பையின் காதல்’ படத்திலும் டி.எஸ். துரைராஜ் நடித்திருந்தாலும் ‘திருநீலகண்டர்’, ‘சகுந்தலை’ படங்களுக்குப் பிறகு என்.எஸ்.கே. துரைராஜ் ஜோடி மிகவும் பிரபலமானது. இந்த நேரத்தில் பட்டுக்கோட்டையிலிருந்து தன்னைத் தேடி வந்த சுந்தரம் என்ற இளம் கவிஞனை ‘சக்தி நாடக சபா’வில் சேர்த்துவிட்டார் துரைராஜ். பிறகு ‘கலியுகம்’ என்ற தனது நாடகத்தில் அவரை நடிகராக்கி அழகுபார்த்தார். அவர்தான் பின்னாட்களில் பாட்டுக் கோட்டையாக உயர்ந்து நின்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
கைதும் தனிமையும்
கலைவாணர் இருந்தால் துரைராஜ் அந்தப் படத்தில் இருப்பார் என்ற நிலையை ‘லட்சுமி காந்தன்’ கொலைவழக்கு மாற்றியது. அந்த வழக்கில் கைதாகி 30 மாதங்கள் பாகவதருடன் கலைவாணர் சிறையில் இருக்க வேறு வழியில்லாமல் தனித்து நடிக்கத் தொடங்கினார் டி.எஸ். துரைராஜ். பாகவதர் சிறை சென்ற பிறகு எம்.ஜி.ஆரும் நாயகனாக எழுந்துவந்தார். எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி கணேசன் என அந்நாளின் முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ்பெற்ற டி.எஸ். துரைராஜ், தனது நண்பரின் வழியில் பலருக்கும் உதவும் உள்ளம் கொண்டவராக விளங்கினார்.
ஒல்லியான உடல்வாகுடன் திரையில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் பருத்த தோற்றத்துக்கு மாறிய துரைராஜ், தனது தோற்றத்துக்கு ஏற்ற நகைச்சுவை நடிப்புடன் குணசித்திர நடிகர், குறும்பு செய்யும் வில்லன் எனப் பல வேடங்களில் நடித்துப் பல பரிமாணங்களில் கவர்ந்தார். நகைச்சுவை நடிகர்களில் அதிகம் பொருளீட்டியவர் என புகழப்படும் துரைராஜ், சென்னையில் ராயப்பேட்டையில் பெசன்ட் சாலையில் மிகப் பெரிய மாளிகையைக் கட்டி வசித்தார். விலை உயர்ந்த கார்களை வைத்திருந்தார். விரல்களில் வைர மோதிரம் அணிந்தும் வலம் வந்தார்.
குதிரையின் வேகம்
புகழின் உச்சியில் இருந்தவருக்குக் குதிரைப் பந்தயம் மீது தீவிர வேட்கை உருவானது. திரை நடிப்பு, நாடக வருவாய் ஆகிவற்றின் மூலம் சம்பாதித்ததில் பெரும் பகுதியைக் குதிரைப் பந்தயங்களில் பணயம் வைத்தார். உயர்தரப் பந்தயக் குதிரைகளை வாங்கிப் பந்தயங்களில் ஓட விட்டார். ஆனால், குதிரைப் பந்தயம் அவரது திரைவாழ்வின் வேகத்தையும் செல்வத்தையும் குறைத்தது. இழந்த பொருளை மீட்க, பட நிறுவனம் தொடங்கிச் சில படங்களைத் தயாரிக்கவும் இயக்கவும் செய்தார். சாவித்திரி தங்கையாகவும் தான் அண்ணாகவும் நடித்து 1958-ல் வெளியான ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’ படத்தைத் தயாரித்து இயக்கினார் துரைராஜ்.
அந்தப் படத்தில் தங்கைக்கு அறிவுரை சொல்லும்விதமாக ‘புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே, தங்கச்சி கண்ணே சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே’ என்று திருச்சி லோகனாதன் குரலில் இவர் பாடுவதுபோல் அமைந்த பாடல் இன்றும் தமிழகத்தில் டி.எஸ். துரைராஜை நினைவுபடுத்தும் விதத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...