Monday, September 12, 2016

இதிலுமா போலி?

போலி சான்று, போலி ஆசிரியர், போலி டாக்டர், போலி பல்கலைக்கழகம் வரிசையில் இப்போது போலி வங்கி நடத்தியதாக தர்மபுரியில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே கும்பல், நாமக்கல்லிலும் போலி வங்கி நடத்தி ரூ.50 லட்சத்துக்கு மேல் சுருட்டியுள்ளனர்.நல்லவேளை 6 மாதத்திற்குள் பிடிபட்டதால் ஏமாந்தவர்கள் எண்ணிக்கை குறைவு. பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பின்னர் பல பெயர்களில் பன்னாட்டு வங்கிகள் வருகை அதிகரித்தது. தற்போது பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் கிளைகள் 50 ஆயிரத்துக்கு மேல் நாடு முழுவதும் செயல்படுகிறது. தடுக்கி விழுந்தால் ஒரு வங்கி என்ற நிலை உருவாகி விட்டது. போதாக்குறைக்கு கடன் கொடுப்பதாக கூறி, வீட்டு வாசலிலேயே வங்கி ஊழியர்கள் தவம் கிடக்கும் நிலையில் சாதாரண மக்களுக்கு போலி, நிஜத்தை கண்டறிவதில் குழப்பம் இருப்பது இயற்கை. ஆனால் போலி வங்கி நடத்திய விவகாரம் அரசு துறையின் அதிகாரிகளுக்கே தெரியாமல் போனது தான் அதிர்ச்சியளிக்கிறது.

பொதுவாக ஒரு முன்னணி வங்கி நிறுவனம் கூடுதலாக ஒரு கிளையை ஏதாவது ஒரு கிராமத்தில் தொடங்குவதாக இருந்தாலும் அதை முறைப்படி ரிசர்வ் வங்கிக்கு தெரியப்படுத்தி அனுமதி பெறவேண்டும். அதோடு உள்ளூரில் மாவட்ட நிர்வாகம், பஞ்சாயத்து அனுமதி போன்றவையும் கட்டாயம். ஆனால் தர்மபுரியில் கலெக்டர் அலுவலகத்தின் அருகிலேயே 6 மாதங்களாக போலி வங்கி செயல்பட்டது. உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் முதல் அருகிலேயே செயல்பட்ட போட்டி வங்கி நிர்வாகத்தை கூட ஏறெடுத்து பார்க்காதது தான் விந்தையிலும் விந்தை. எல்லா சட்டமும் தெரிந்தவர்களுக்கே போலி வங்கி நடத்தப்பட்ட விவகாரம் தெரியாதபோது, அப்பாவி மக்களை நொந்து கொள்வதில் எந்த பலனும் இருக்கப்போவதில்லை.

போலிகள் விஷயத்தில் பொதுமக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது. மோசடியில் ஈடுபடும் கும்பல் எந்த ரூபத்திலும் வரக்கூடும். சமீபகாலங்களில் அடுத்தவர் வங்கி கணக்குகளில் இருந்து இணையங்களை பயன்படுத்தியும், போலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தியும் திருடும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. அதன் மற்றொரு ரூபம் தான் போலி வங்கி கலாச்சாரம். புற்றீசல் போல் பெருகி வரும் தனியார் வங்கிகள் குறித்த விழிப்புணர்வு அப்பாவி மக்களுக்கு குறைவு என்பது தான் மோசடி கும்பலுக்கு சாதகமான அம்சம். மேலும் அதன் பின்னணி குறித்த விஷயங்களை அறிந்து கொண்டு பணத்தை முதலீடு செய்வது அவசியம். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுவோரும் இருக்கவே செய்வர். ஏமாறாமல் இருப்பது நமக்கு உத்தமம்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...