Tuesday, November 15, 2016

ரூ.6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்த தொழிலதிபர்

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி தன்னிடம் இருந்த ரூ.6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்துள்ளார். இந்தத் தொகையில் ரூ.5,400 கோடி வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது.

நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் தன்னிடம் இருந்த ரூ.6000 கோடியை அரசிடம் அப்படியே ஒப்படைத்துள்ளார். இந்தத் தொகைக்கான வட்டி ரூ.1800 கோடி. வரியின் மீது 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்பதால் மேலும் ரூ.3600 கோடி வரி செலுத்த வேண்டும். அதன்படி ஒட்டுமொத்தமாக ரூ.5400 கோடி வரிபிடித்தம் செய்யப்பட உள்ளது. லால்ஜிபாய்க்கு ரூ.600 கோடி மட்டுமே மிஞ்சும்.

பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட், சூட்டை ஏற்கெனவே லால்ஜிபாய் ரூ.4.31 கோடிக்கு ஏலம் எடுத்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர். மேலும் அரசின் பெண் குழந்தை களின் கல்விக்காக ரூ.200 கோடியை அவர் நன்கொடையாக அளித்துள்ளார். தன்னிடம் பணிபுரி யும் ஊழியர்களுக்கு தீபாவளி தோறும் கார், வீடுகளையும் பரிசளித்து வருகிறார்.

அவர் தாமாக முன்வந்து ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

பருவத்தே பணம் செய்: நகைச் சீட்டு சேரலாமா?


சேமிப்பு என்பது நம்மில் பலருக்கு வாழ்வாதாரம். அதனால்தான் அதில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். நம் சராசரி வயது அறுபத்தைந்து என்று வைத்துக்கொள்வோம். அதில் முதல் இருபது ஆண்டுகள் படிப்புக்காகச் செலவாகிவிடும். அடுத்த முப்பது ஆண்டுகள் நாம் முழு மூச்சோடு உழைக்கும் காலகட்டம். அந்தக் காலகட்டத்தில்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். பெற்றோருக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும். நமக்குப் பிறக்கும் குழந்தைகளின் கல்விக்காகத் திட்டமிட வேண்டும்.

மீதமுள்ள பதினைந்து ஆண்டுகள் நம் ஓய்வு காலம். இளமைக் காலத்தை எண்ணி ரசித்தபடி, நம் குடும்ப வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை அசைபோட்டபடி, பிள்ளைகளின் வெற்றிகளைக் கண்டு பெருமிதப்பட்டபடி கழிக்க வேண்டிய காலகட்டம். ஆனால், அந்த ஓய்வு காலத்திலும் பசிக்கும். உடல் நலத் தேவைகளுக்காகப் பணம் செலவிட வேண்டியிருக்கும்.

இந்தத் தேவைகளுக்கு எங்கே போவது? நாம் நம் பெற்றோருக்குச் செய்தது போல, நமக்குப் பிள்ளைகள் செய்வார்கள் என்று அவர்களை நம்பி இருக்கலாமா? இருக்கலாம், ஆனால் நாம் சுமையாகத் தோன்றும் நிலை வந்துவிடக் கூடாது. அதனால், ஓடியாடி உழைக்கும் காலத்திலேயே எல்லாத் தேவைகளுக்கும் போக மீதம் ஒரு தொகையைச் சேமித்து வந்தால், ஓய்வு காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

அதனால்தான் சேமிப்பு முக்கியம் என்று கூவ வேண்டியிருக்கிறது. சரி, சேமிக்கவில்லை என்றால் என்ன? இப்போதைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ நினைப்பவர்கள், தள்ளாத வயதிலும் பத்து மணி நேரம் வேலை செய்யும் முதியோர்களைக் கொஞ்சம் பாருங்கள். உங்கள் எண்ணம் தானாகவே மாறும்.

சீட்டு வளையம்

சீட்டு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது ஒரு விஷயத்தை விட்டுவிட்டேன். அது நகைச் சீட்டு. மத்தியத்தர மக்களை மிகவும் கவரக்கூடிய விஷயம் இந்த நகைச் சீட்டு. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டிக்கொண்டே வந்து, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கட்டிய தொகைக்கு ஏற்பத் தங்க நகையாக வாங்கிக்கொள்ளும் திட்டம் இது.

பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும் விளம்பரங்களைக் கொட்டும் பெரிய நகை விற்பனை நிறுவனங்கள்கூடத் தங்கள் வாடிக்கையாளர்களை இந்தச் சீட்டு வளையத்துக்குள் சிக்கவைக்கப் பிரயத்தனப்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது சின்னச் சின்ன நகைக் கடைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

கார், கம்ப்யூட்டர், பைக் போன்ற பரிசுகள், சேமிப்பில் பல சலுகைகள் என்று எல்லா வித்தைகளையும் காட்டி வாடிக்கையாளர்களை மடக்கப் பாடுபடும் இந்த நகைச் சீட்டு விஷயத்தில், நாம் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தெளிவு தேவை

முன்பு இரண்டு, மூன்று ஆண்டுகள் என்று நீண்ட கால அளவில் சீட்டுகள் சேர்க்கப்பட்டன. ஆனால், சீட்டு என்பதும் பணப் பரிவர்த்தனைதான். அதை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரத்தான் வேண்டும். பதினோரு மாதங்களைத் தாண்டிய எந்தச் சேமிப்புக்குமே கணக்கு சொல்ல வேண்டிய நிலை இருப்பதால், இப்போதெல்லாம் நகைச் சீட்டாகவே இருந்தாலும் பதினோரு மாதங்கள்தான் பரவலாகக் கணக்கிடப்படுகின்றன. அதைத்

தாண்டிய கால அளவைச் சொல்லும் நகை விற்பனை நிறுவனங்களிடம் ஒரு முறைக்கு இரண்டு முறை தெளிவாகக் கேட்டுக்கொண்டு சீட்டில் சேருவது நல்லது.

கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள்

“எங்கள் நிறுவனச் சீட்டில் சேர்ந்தால் ஐந்து கிராம் தங்கம் போனஸாகக் கிடைக்கும். எங்கள் சீட்டில் பத்து மாதங்களுக்கு மட்டும் தொகையைச் செலுத்திவிட்டு பதினோரு மாதங்களுக்குரிய பலனை அடையலாம். எங்கள் நிறுவனச் சீட்டில் சேர்ந்தால் கார் பரிசு கிடைக்கும்” என்றெல்லாம் விளம்பரம் செய்வார்கள். நாம் கொடுக்கும் பணத்துக்கு ஈடாகத் தங்கம் தருவதாகச் சொல்லும் இவர்களால் எப்படி இந்தக் கூடுதல் பரிசுகளை நமக்குத் தர முடியும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

தரம் முக்கியம்

சீட்டு கட்டும் மக்களுக்கு நகை விற்பனை நிறுவனங்கள் போலியான, தரமில்லாத தங்க நகைகளைக் கொடுக்கிறார்கள் என்று சொல்லவில்லை. நமக்குப் பழக்கமான 22 கேரட் நகையை நினைத்துக்கொண்டு சீட்டு கட்டுவோம். கடைசியில் அவர்கள் 18 கேரட் நகையைக் கொடுத்தால் என்னாவது? அதனால், சீட்டில் சேருவதற்கு முன்பே இதைத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.

நீங்கள் சீட்டு கட்டிச் சேமிக்கும் பணத்துக்கு ஈடான நகைகளை, செய்கூலி சேதாரம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்வார்கள். கடைக்குப் போய்ப் பார்த்தால் கண்ணுக்கே தெரியாத பொடி எழுத்தில் குறிப்பிட்ட மாடல்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என்று போட்டிருப்பார்கள். நாம் நகை வாங்குவதே ஆண்டுக்கு ஒருமுறை. அதில் நவீன மாடல்களை வாங்க முடியாமல் முட்டுக்கட்டை போடும் விஷயமாக இந்த நகைச் சீட்டு அமைந்துவிடக் கூடாது.

அதேபோல கல் பதித்த நகைகள் கணக்கில் வராது, வைர நகைகளை நாங்கள் சீட்டுப் பணத்துக்கு ஈடாகத் தர மாட்டோம், நாணயங்களாகவோ, பிஸ்கெட்டுகளாகவோ தர மாட்டோம் என்றெல்லாம் நிபந்தனைகள் போட்டிருப்பார்கள். அதையும் கவனமாகத் தெரிந்துகொண்ட பிறகு சீட்டுச் சேரும் முடிவை எடுப்பது நல்லது. ஆனால், எல்லா நிபந்தனைகளையும் தடைகளையும் தாண்டி ஏதோ ஒரு வகையில் நாம் சேமிக்க வேண்டும். அது முக்கியம்.

சரி, தங்கத்தில் செய்யும் சேமிப்பு நல்லதா, கெட்டதா? அடுத்து அதைத்தான் பார்க்கப் போகிறோம்.

(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

ரூபாய் நோட்டு அனுபவம்: முழு திருப்தி தந்த வங்கி சேவை


500 - 1000 நோட்டு மாற்றுவதில் ஆளாளுக்கு ஒரு பதிவினைப் போட்டுக் கொண்டிருக்க, என் பங்குக்கு நானும் ஒரு பதிவு போட வேண்டும் என நினைக்கிறேன். கவலை வேண்டாம், இது யார் மீதும் வெறுப்பை வளர்த்து, பழி போட்டு, புகார் சொல்லி, வஞ்சனை செய்யும் பதிவல்ல. புதிய நோட்டு / சில்லறை மாற்ற முயற்சித்த போது எனக்கு கிடைத்த நல்ல அனுபவம் இது.

குறிப்பிட்ட நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்த நாளன்று என் கையிலிருந்தது 500 ரூபாய் தாள் ஒன்று மட்டுமே. அடுத்த சில நாட்களுக்கு அதை மாற்ற தேவை வரவில்லை. எப்படியும் தேவைப்படும், அடுத்த சில நாட்களில் ஏடிஎம், வங்கிகளில் கூட்டம் குறைந்த பின் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.

ஆனால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமானதே தவிர குறையவில்லை. எப்படியும் மாற்றித்தானே ஆக வேண்டும் என முடிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை, கொட்டிவாக்கத்தில் நான் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கிக்கு விரைந்தேன்.

தனியார் வங்கிகளும் சரியில்லை, வாடிக்கையாளர்களை சரியாகக் கவனிப்பதில்லை போன்ற புகார்களை நானும் கடந்து வந்திருக்கிறேன். எனக்கும் சில தனிப்பட்ட அனுபவங்கள் அப்படி இருக்கிறது. ஆனால் அன்று நடந்த விஷயங்கள் அந்த அபிப்பிராயத்தை மாற்றியது.

ஏற்கெனவே அங்கு பெரிய வரிசை இருந்ததை கடந்த சில நாட்களாக பார்த்த எனக்கு அன்று கூட்டம் சற்று குறைவாக இருந்ததாகவே பட்டது. அரைக் கம்பத்தில் கொடி பறப்பது போல, ஷட்டரை பாதி திறந்து வைத்திருந்தனர். வங்கி வாசலிலேயே வங்கி அதிகாரிகள் இருவர் நின்று கொண்டு, விசாரிக்க வருபவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தனர்.

நான் சென்றதும், சார் உங்கள் கணக்கில் காசு இருந்தால் ஒரு காசோலை போட்டு பணத்தை எடுக்கலாம். புது நோட்டு, சில்லறை அதற்கேற்றார் போலத் தருவோம். அதே போல பழைய நோட்டுகள் உங்களிடம் இருந்தால் அதை கணக்கில் போட்டு வைக்கலாம். ஆனால் இப்போது பழைய நோட்டுகளை மாற்ற மட்டும் (exchange) இயலாது என்றனர்.

இதை அவர்கள் சொன்ன தொனி மிகவும் பணிவாகவும், தோழமையுடனும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை வேளை, ரோட்டில் நின்று கொண்டு, ஒரே கேள்விக்கு மீண்டும் மீண்டும் பதிலளிக்கும் நிலையிலும் அவர்களது அந்த தொனி மாறவில்லை என்பது ஆச்சரியமும், ஆறுதலும் தந்தது.

வீட்டுக்குச் சென்று ஒரு காசோலையைப் பூர்த்தி செய்து, கணக்கில் போட வேண்டிய பழைய 500-1000 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு, எனது அடையாள அட்டை நகல் ஒன்றை பிரதி எடுத்து மீண்டும் வங்கிக்கு சென்றேன். இம்முறை வாசலில், பிளாட்பாரத்தில் ஒருவர் மேஜை போட்டு உட்கார்ந்து பதிலளித்துக் கொண்டிருந்தார். நான் சென்று கேட்டதும் பொறுமையாக என்ன செய்ய வேண்டும் என விளக்கி, பணத்தைப் போடுவதற்கான சீட்டையும் புது நோட்டுகளைப் பெறத் தேவையான படிவத்தையும் தந்தார்.

உள்ளே சென்று, இருந்த சின்ன வரிசையில் நின்று வேண்டிய பணத்தை முதலில் பெற்றுக் கொண்டேன். எனக்குத் தேவையான நூறு ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு, மீதியிருந்த 2000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் செலுத்தி விடலாம் என சீட்டை நிரப்பி வரிசையில் நின்றேன்.

அப்போது என்னை கவனித்த வங்கி ஊழியர் ஒருவர், சார், 2000 ரூபாய் புழக்கத்தில் வரவேண்டும் என்று தான் அதை வெளியே தருகிறோம், நீங்கள் மீண்டும் அதை கணக்கில் போட்டால் எங்கள் நோக்கம் நிறைவேறாது, நீங்கள் வேண்டுமென்றால் அந்த 2000க்கான 1000 ரூபாய் நோட்டுகள் என்னிடம் உள்ளன, இதை கணக்கில் போடுங்கள், உங்கள் 2000 நோட்டுகளை நாங்கள் புழக்கத்தில் விடுவோம் எனப் பொறுமையாக எடுத்துக் கூறினார். அவர் கூறியதில் இருந்த நியாயம் புரிந்தது. அவர் கையிலிருந்த 1000 ரூபாய் தாள்கள் என்னிடம் வந்தது. எனது 2000 நோட்டுகள் அவரிடம் சென்றது.

இவ்வளவு சிக்கலிலும், முகம் சுளிக்காமல், பொறுமையாக எடுத்துச் சொல்லி, சந்தேகங்களை தீர்த்து வைத்து, இன்முகத்துடன் அனுப்பி வைத்த வங்கி ஊழியர்களை நினைத்தால் நிறைவாக இருந்தது.

நம்மைச் சுற்றி ஆயிரம் எதிர்மறை செய்திகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. உண்மையா, புரளியா எனத் தெரியாமல் பல்லாயிரம் தகவல்கள் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் பரவி வருகின்றன. ஏராளமானோர் தங்களுக்கு அடிப்படை கூட சுத்தமாக தெரியாத விஷயங்கள் குறித்து விமர்சனம் செய்து ஆராய்ந்து வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் சுற்றியிருப்பவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாதவர்கள் எல்லாம், தங்களுக்கு பிரச்சினை என வரும்போது மனிதாபிமானி ஆகி நீலிக் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

இவ்வளவுக்கும் நடுவில் நாமும் ஏன் நமக்கு வந்த கஷ்டத்தை, சில்லறை இன்றி படும் அவஸ்தையை மட்டுமே பெரிதாக்கி எழுத வேண்டும்? இப்படிப்பட்ட நல்ல அனுபவங்களும் அதிகமாக அறியப் படவேண்டும் தானே என்ற நோக்கிலேயே இதை எழுதுகிறேன்.

குறிப்பு: வங்கிக்கு விளம்பரம் போல இருக்க வேண்டாம் என்ற நோக்கிலேயே வங்கியின் பெயரைக் குறிப்பிடவில்லை.
ஆண்களின் கவனத்துக்கு-நலம் நல்லது 7 #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்

குடும்பக் கட்டுப்பாட்டுக்கு அவசியமே இல்லாமல், இயல்பாகவே மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை பல மடங்கு குறைந்து வருகிறது' என்கின்றன சில மருத்துவ ஆய்வுகள்.

ஒரு மில்லி விந்து திரவத்தில் 60-120 மில்லியன் விந்து அணுக்கள் இருந்த காலம் இப்போது இல்லை. `15 மில்லியன் இருந்தாலே பரவாயில்லை' என மருத்துவம் இறங்கி வந்து ஆறுதல் சொல்கிறது. அதிலும் பெரும்பாலானவர்களுக்கு வெளியாகும் விந்தணுக்களில் 10 சதவிகிதம் மட்டுமே கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறதாம். `31 - 40 வயதுள்ள தம்பதிகளில் 46 சதவிகிதம் பேருக்குக் கருத்தரிப்புக்கான மருத்துவ உதவி தேவை' என்கிறது இந்திய ஆய்வு ஒன்று. அதன் விளைவுதான் செயற்கைக் கருவாக்க மையங்கள் பெருகி வருவது.
வாகனம் கக்கும் புகை, பிளாஸ்டிக் பொசுங்குவதால் பிறக்கும் டையாக்சின் மற்றும் வேறு பல காற்று மாசுக்களை கருத்தரித்த பெண் சுவாசிப்பது, அந்தப் பெண்ணின் கருவிலிருக்கும் ஆண் குழந்தையின் செர்டோலி செல்களை (பின்னாளில் அதுதான் விந்து அணுக்களை உற்பத்தி செய்யும்) கருவில் இருக்கும்போதே சிதைக்கிறதாம். மண்ணில் நாம் தூவிய ரசாயன உர நச்சுக்களின் படிமங்கள், இப்போது நம் உயிர் அணுக்களுக்கு உலை வைக்கின்றன. இப்படி ஆண்மைக் குறைவுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. தங்க பஸ்பம், சிட்டுக்குருவி லேகியம், காண்டாமிருகக் கொம்பு என கண்டதையும் தேடிப் போகாமல் கீரை, காய்கறி சாப்பிட்டாலே போதும், உயிர் அணு செம்மையாகச் சுரக்கும்.

ஆண்மையைப் பெருக்க வழிகள்..!

* சித்த மருத்துவம் பல தாவர விதைகளை, மொட்டுக்களை, வேர்களை ஆண்மை அபிவிருத்திக்கான மருந்துகளில் அதிகம் சேர்க்கிறது. சப்ஜா விதை, வெட்பாலை விதை, பூனைக்காலி விதை, மராட்டி மொக்கு, மதன காமேஸ்வரப் பூ, அமுக்குராங்கிழங்கு, சாலாமிசிரி வேர், நிலப்பனைக் கிழங்கு என பெரிய பட்டியல் இருக்கிறது. நெருஞ்சி முள்ளின் சப்போனின்கள், விந்தணுக்களை உற்பத்தி செய்யும் செர்டோலி செல் பாதிப்பைச் சீராக்கும் என்கிறது மருத்துவத் தாவரவியல். பூனைக்காலி விதையும், சாலாமிசிரியும், அமுக்குராங்கிழங்கும் அணுக்களைப் பெருக்க டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்களைச் சீராக்க எனப் பல பணிகள் செய்கின்றன. உடனே இவற்றைத் தேடி ஓடக் கூடாது. ஆண்மைக் குறைவு பிரச்னைக்கு காரணம் விந்தணு உற்பத்தியிலா, அது செல்லும் பாதையிலா அல்லது மனத்திலா என்பதை மருத்துவரிடம் சென்று ஆலோசனை செய்த பிறகே முடிவு செய்ய வேண்டும்.
* வெல்கம் டிரிங்காக மாதுளை ஜூஸ், அதன்பிறகு, முருங்கைக் கீரை சூப், மாப்பிள்ளை சம்பா சோற்றுடன் முருங்கைக்காய் பாசிப்பயறு சாம்பார், நாட்டு வெண்டைக்காய் பொரியல், தூதுவளை ரசம், குதிரைவாலி மோர் சோறு... முடிவில் தாம்பூலம். இவை புது மாப்பிள்ளைகளுக்கான அவசிய மெனு.
* நாட்டுக்கோழி இறைச்சி காமம் பெருக்கும்.
* உயிர் அணு உற்பத்தியில் துத்தநாகச் சத்தின் (Zinc) பங்கு அதிகம். அதை பாதாம் பால்தான் தரும் என்பது இல்லை. திணையும் கம்பும் அரிசியைவிட அதிக துத்தநாகச் சத்துள்ளவை.
* `காமம் பெருக்கிக் கீரைகள்' எனப்படும் முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகியவற்றில் ஒன்றை பருப்பும் தேங்காய்த் துருவலும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவது விந்து அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும்.
* 5-6 முருங்கைப் பூக்களுடன் பாதாம் பிசின், பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு சேர்த்து அரைத்து, அரை டம்ளர் பாலில் கலந்து சாப்பிட்டால் உயிர் அணுக்களின் உற்பத்தியும் இயக்கமும் பெருகும்.
* செரட்டோனின் சுரக்கும் வாழைப்பழம், ஃபோலிக் அமிலம் கொண்ட ஸ்ட்ராபெர்ரி, ஃபீனால்கள் நிறைந்த மாதுளை தாம்பத்தியத்துக்கு பேருதவி செய்யும் கனிகள்.
* உடல் எடை அதிகரிப்பதால் புதைந்துபோகும் ஆண் உறுப்பும் (Buried Penis), கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயில் ஏற்படும் ஆண்மைக்குறைவும் (Erectile Dysfunction) ஆண்களுக்கான முக்கிய சிக்கல்கள். இரண்டையும் முறையான சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம்.
* நல்லெண்ணெய்க் குளியல், பித்தத்தைச் சீராக்கி விந்து அணுக்களைப் பெருக்கும்.
* நீச்சல் பயிற்சி, ஆண்மையைப் பெருக்கும் உடற்பயிற்சி.
* குடி, குடியைக் கெடுக்கும்; குழந்தையின்மையைக் கொடுக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக கருத்தரிப்பை, அழகான தாம்பத்திய உறவை சாத்தியப்படுத்த ஆணுக்கு அவசியத் தேவை உடல் உறுதி மட்டும் அல்ல, மன உறுதியும்தான்!
தொகுப்பு: பாலு சத்யா
Dailyhunt

ஆடாத விளையாட்டுகள்

By மன். முருகன்  |   Published on : 15th November 2016 02:27 AM

ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்ற பாரதி, "மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ள' சொல்கிறார்.
இன்று இந்த வழக்கம் எல்லாம் கிடையாது. விளையாட்டு என்பதே இன்றைய பெற்றோர்களுக்கு எட்டிக் காய் கசப்புதான். அவர்களுக்கு காலை 6 மணி தனி வகுப்பில் ஆரம்பித்து 9 மணிக்கு பள்ளிப் படிப்பு தொடங்கி, மீண்டும் மாலை 5 மணிக்குத் தனி வகுப்பு, வேறு ஏதாவது மூளை வளர்க்கும் (?) திறன் இருந்தால் முடித்துவிட்டு அப்படியே மறுநாள் தனி வகுப்புச் சென்றால் பரவாயில்லை என்பார்கள்.
விளையாட்டை மறந்த குழந்தைகள் ஒரு தலைமுறையைத் தாண்டிவிட்டனர். விளையாட முடியாமைக்குப் பல்வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. அடுக்ககங்களில் வாழ்கின்றனர். நகரத்தில் எங்கே போய் விளையாடுவது? இன்றைக்குப் பள்ளிகளில் விளையாட்டுத் திடல் எங்கே இருக்கிறது? இப்படி நிறைய.
ஆனால் இவை மேம்போக்கான காரணங்கள்தான். உண்மையில் ஆசையுடன் தம் குழந்தைகளை விளையாட அனுமதிக்கும் பெற்றோர் இருக்கின்றனரா? அவர்களுக்கு ஆயிரம் கனவுகள்; அந்தக் கனவுகளில் எல்லாம் அந்நிய தேசங்கள். களியாட்டங்கள்; கைநிறைய சம்பளங்கள்.
நாம் நம் குழந்தைகளுக்கு சொல்ல மறந்த விளையாட்டுகள் என 201-ஜ தேடித் தொகுத்து பதிவு செய்துள்ளார் முனைவர் செங்கை பொதுவன். இவை அத்தனையும் தமிழகத்தில் மறைந்து வரும் விளையாட்டுகள். விளையாட்டையும் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறோம்.
15, 20 ஆண்டுகளுக்கு முன்னர், கிராமங்களில் அரசுப் பள்ளியில் படித்தவர்களின் மாலை நேரம்தான் எத்தனை இனிமையானது? மாலை 3.10-க்கு பள்ளிக் கூடம் முடிந்தால் 4 மணி வரை பள்ளியில் மாலை வகுப்பே விளையாட்டுதான். அது முடிந்து வீட்டுக்கு வந்தால் இரவு 8, 9 மணி வரையும் விளையாட்டுதான்.
6-ஆம் வகுப்பு மேல் படிக்கும் மாணவர்கள்தான் ஏதாவது வீட்டுப் பாடம் செய்வார்கள். அவர்களும் ஒன்றிரண்டு மணி நேரத்தில் முடித்துவிட்டு விளையாடத் தொடங்கிவிடுவர்.
கிராமத்து அரசுப் பள்ளிகளை அழிக்கத் தொடங்கியதில் இருந்து முடிவுக்கு வரத் தொடங்கியது சிறுவர்களின் விளையாட்டு உலகம்.
இன்றைக்குத் தனியார் பள்ளிகள் பெருகின. கட்டணக் கல்வி கடிவாளங்களைப் பரப்பியது. அவை முதலில் காலி செய்தது விளையாட்டைத்தான். அது ஏதோ வேண்டாத விபரீதமாகவே பாவிக்கப்படுகிறது. "மாலை முழுதும் விளையாட்டா?' அவ்வளவுதான் அமெரிக்க கனவு என்னாவது பாரதி?
மேலும், நவீன தொழில்நுட்ப உலகம் விளையாட்டுகளை கேம்களாக சுருக்கி குழந்தைகளின் விளையாட்டுத் திடலை, அங்கு விளையாட வேண்டிய உடலையும் சுருக்கி, சுறுசுறுப்பை குலைத்துவிட்டது.
தமிழ்நாட்டில்தான் குழந்தைகளுக்கு எத்தனை எத்தனை விளையாட்டுகள்... அம்மானை, குலைகுலையா முந்திரிக்கா, பம்பரம், கிட்டிபுள், திருடன்-போலீஸ், பச்சைக் குதிரை, கபடி, கோலி, உப்பு எடுத்தல், செதுக்கு முத்து, கிளித்தட்டு, ஒற்றையா இரட்டையா, காற்றாடி, நொட்டி, தட்டாங்கல், தாயம், பரமபதம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, பூப்பறிக்க வருகிறோம், கரகரவண்டி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அதேபோல் வீர விளையாட்டுகளான சிலம்பம், சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்), இளவட்டக்கல், மற்போர் போன்றவை இளைஞர்களுக்கான விளையாட்டுகள்.
ஒவ்வொரு விளையாட்டிலும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள். கபடி: தன் மண்ணை கவர நினைப்பவனை மண்ணைக் கவ்வ வைக்கும். நாட்டுப்பற்றை வளர்க்கும். பல்லாங்குழி: இருக்கும் இடத்தில் இருந்து இல்லாத இடத்தில் கொடுக்கும் குணம் வளரச் செய்யும். பரமபதம்: ஏற்றம் இறக்கம் இரண்டும் கலந்து இருப்பதே வாழ்க்கை என்பதை உணர்த்தும்.
கில்லி: கூட்டல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை களிப்புடன் மகிழ்ந்து கற்கச் செய்யும். தாயம்: வெட்டி வெளியே எறிந்தாலும் மீண்டும் மீண்டும் முயன்று வெற்றி அடைவேன் என்ற தன்னம்பிக்கை வளர்க்கும். சதுரங்கம்: எவ்வழியும் இல்லாதபோதும் இறுதி வரை போராடும் உறுதி மிக்க மனம் பெற உதவும்.
நொண்டி: சமமாக இல்லாத போதும் சாதிக்கத் தூண்டும் சக்தி உண்டாக வழிவகுக்கும். கண்ணாமூச்சி: ஒளிந்து இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான பொறுமையையும், தானே ஒளிந்து மகிழ்ந்திருக்கும் பெருமையும் உண்டாகச் செய்யும்.
தமிழ்நாட்டில் ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு என அழைக்கப்படும் காளைகளை அடக்கும் வீர விளையாட்டு, முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பண்களை மணப்பதற்கு காளையை அடக்குவது இன்றியமையாததாகியது. அதற்கும் காரணம் உண்டு.
பெரும்பான்மை மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டிருந்தனர். விவசாயத் தொழிலுக்கு உடல் வலிமை தேவை. உடல் வலிமை உள்ள ஆண்மகனே பெண்டிருக்கு நற்கணவான இருக்க முடியும்.
எனவேதான் காளையை வணங்குதல் (நந்தி வழிபாடு), காளையை அடக்குதல் என்ற வீர விளையாட்டாகவும் அமைத்துக் கொண்டார்கள்.
விளையாட்டினால் ஒற்றுமை, படிப்பு, சுறுசுறுப்பு, போட்டியிடும் மனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் பண்பு, வெற்றி - தோல்விகளைச் சமமாகப் பாவிக்கும் குணம் குழந்தைகளுக்கு ஏற்படும். உள்ளத்தையும் உடலையும் ஆற்றல் படுத்தும். சமயோஜித புத்தியை வளர்க்கும்.
மண்ணில் விளையாடுவதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி பெருகுவதாக ஆராய்ச்சிகள் உறுதிபடக் கூறுகின்றன. இளம்வயதில் கண் பார்வைக் குறைபாடு, சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கிறது.
மேலும், விளையாடுவதன் மூலமே சிறப்பாக கல்வியைப் பயில முடியும் என்பதை உலகம் ஏற்றுக் கொள்கிறது. குழந்தைகள் விளையாட களம் அமைத்து, விளையாட்டை ஊக்குவிப்போம்.விளையாட்டுகள் மண்ணின் அடையாளம், மரபின் தொடர்ச்சி.

Monday, November 14, 2016

நாடு முழுவதும் ரூ.1.5 லட்சம் கோடி டெபாசிட்: இயல்பு நிலைக்கு திரும்பும் ஏடிஎம்கள்


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை நாடு முழுவதும் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கிகளில் மட்டும் ரூ.75,945 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும், ரூ.3,753 கோடி அளவுக்கு பழைய பணத்தைக் கொடுத்து புதிய பணமாக பொதுமக்கள் மாற்றிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் எஸ்பிஐ வங்கியில் ரூ.100 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் என ரூ.7,705 கோடி அளவுக்கு பணம் பொது மக்களால் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதை அடுத்து, விரைவில் அனைத்து ஏடிஎம்களும் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருப்புப் பணத்தை மாற்றுவது எப்படி? கூகுளில் தேடியதில் குஜராத் முதலிடமாம்; மோடி சார் பார்த்துக்கோங்க...

By DIN  |   Published on : 14th November 2016 12:23 PM
புது தில்லி: கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவது எப்படி என்று கூகுளில் தேடியவர்களில் குஜராத் மாநிலம் முதலிடம் பிடித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து வங்கிகள் ஒரு நாளும், ஏடிஎம்களுக்கு இரண்டு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், தங்கள் கைவசம் உள்ள கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவது எப்படி என்று ஏராளமான வெள்ளந்தி மக்கள் கூகுள் சேர்ச்சில் போட்டுத் தேடியுள்ளனர்.
இதில் குஜராத் மக்கள் தான் முதலிடத்தில் இருப்பதாகவும், ஜார்க்கண்ட், அரியானா மாநிலங்களில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆனால், நம் தமிழ்நாட்டு மக்களோ கூகுளில் குறைந்த அளவில் தேடி 22வது இடத்தைப் பிடித்து தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.

NEWS TODAY 24.05.2026