Tuesday, November 15, 2016

ஆண்களின் கவனத்துக்கு-நலம் நல்லது 7 #DailyHealthDose - மருத்துவர் கு.சிவராமன்

குடும்பக் கட்டுப்பாட்டுக்கு அவசியமே இல்லாமல், இயல்பாகவே மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை பல மடங்கு குறைந்து வருகிறது' என்கின்றன சில மருத்துவ ஆய்வுகள்.

ஒரு மில்லி விந்து திரவத்தில் 60-120 மில்லியன் விந்து அணுக்கள் இருந்த காலம் இப்போது இல்லை. `15 மில்லியன் இருந்தாலே பரவாயில்லை' என மருத்துவம் இறங்கி வந்து ஆறுதல் சொல்கிறது. அதிலும் பெரும்பாலானவர்களுக்கு வெளியாகும் விந்தணுக்களில் 10 சதவிகிதம் மட்டுமே கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறதாம். `31 - 40 வயதுள்ள தம்பதிகளில் 46 சதவிகிதம் பேருக்குக் கருத்தரிப்புக்கான மருத்துவ உதவி தேவை' என்கிறது இந்திய ஆய்வு ஒன்று. அதன் விளைவுதான் செயற்கைக் கருவாக்க மையங்கள் பெருகி வருவது.
வாகனம் கக்கும் புகை, பிளாஸ்டிக் பொசுங்குவதால் பிறக்கும் டையாக்சின் மற்றும் வேறு பல காற்று மாசுக்களை கருத்தரித்த பெண் சுவாசிப்பது, அந்தப் பெண்ணின் கருவிலிருக்கும் ஆண் குழந்தையின் செர்டோலி செல்களை (பின்னாளில் அதுதான் விந்து அணுக்களை உற்பத்தி செய்யும்) கருவில் இருக்கும்போதே சிதைக்கிறதாம். மண்ணில் நாம் தூவிய ரசாயன உர நச்சுக்களின் படிமங்கள், இப்போது நம் உயிர் அணுக்களுக்கு உலை வைக்கின்றன. இப்படி ஆண்மைக் குறைவுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. தங்க பஸ்பம், சிட்டுக்குருவி லேகியம், காண்டாமிருகக் கொம்பு என கண்டதையும் தேடிப் போகாமல் கீரை, காய்கறி சாப்பிட்டாலே போதும், உயிர் அணு செம்மையாகச் சுரக்கும்.

ஆண்மையைப் பெருக்க வழிகள்..!

* சித்த மருத்துவம் பல தாவர விதைகளை, மொட்டுக்களை, வேர்களை ஆண்மை அபிவிருத்திக்கான மருந்துகளில் அதிகம் சேர்க்கிறது. சப்ஜா விதை, வெட்பாலை விதை, பூனைக்காலி விதை, மராட்டி மொக்கு, மதன காமேஸ்வரப் பூ, அமுக்குராங்கிழங்கு, சாலாமிசிரி வேர், நிலப்பனைக் கிழங்கு என பெரிய பட்டியல் இருக்கிறது. நெருஞ்சி முள்ளின் சப்போனின்கள், விந்தணுக்களை உற்பத்தி செய்யும் செர்டோலி செல் பாதிப்பைச் சீராக்கும் என்கிறது மருத்துவத் தாவரவியல். பூனைக்காலி விதையும், சாலாமிசிரியும், அமுக்குராங்கிழங்கும் அணுக்களைப் பெருக்க டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்களைச் சீராக்க எனப் பல பணிகள் செய்கின்றன. உடனே இவற்றைத் தேடி ஓடக் கூடாது. ஆண்மைக் குறைவு பிரச்னைக்கு காரணம் விந்தணு உற்பத்தியிலா, அது செல்லும் பாதையிலா அல்லது மனத்திலா என்பதை மருத்துவரிடம் சென்று ஆலோசனை செய்த பிறகே முடிவு செய்ய வேண்டும்.
* வெல்கம் டிரிங்காக மாதுளை ஜூஸ், அதன்பிறகு, முருங்கைக் கீரை சூப், மாப்பிள்ளை சம்பா சோற்றுடன் முருங்கைக்காய் பாசிப்பயறு சாம்பார், நாட்டு வெண்டைக்காய் பொரியல், தூதுவளை ரசம், குதிரைவாலி மோர் சோறு... முடிவில் தாம்பூலம். இவை புது மாப்பிள்ளைகளுக்கான அவசிய மெனு.
* நாட்டுக்கோழி இறைச்சி காமம் பெருக்கும்.
* உயிர் அணு உற்பத்தியில் துத்தநாகச் சத்தின் (Zinc) பங்கு அதிகம். அதை பாதாம் பால்தான் தரும் என்பது இல்லை. திணையும் கம்பும் அரிசியைவிட அதிக துத்தநாகச் சத்துள்ளவை.
* `காமம் பெருக்கிக் கீரைகள்' எனப்படும் முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகியவற்றில் ஒன்றை பருப்பும் தேங்காய்த் துருவலும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவது விந்து அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும்.
* 5-6 முருங்கைப் பூக்களுடன் பாதாம் பிசின், பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு சேர்த்து அரைத்து, அரை டம்ளர் பாலில் கலந்து சாப்பிட்டால் உயிர் அணுக்களின் உற்பத்தியும் இயக்கமும் பெருகும்.
* செரட்டோனின் சுரக்கும் வாழைப்பழம், ஃபோலிக் அமிலம் கொண்ட ஸ்ட்ராபெர்ரி, ஃபீனால்கள் நிறைந்த மாதுளை தாம்பத்தியத்துக்கு பேருதவி செய்யும் கனிகள்.
* உடல் எடை அதிகரிப்பதால் புதைந்துபோகும் ஆண் உறுப்பும் (Buried Penis), கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயில் ஏற்படும் ஆண்மைக்குறைவும் (Erectile Dysfunction) ஆண்களுக்கான முக்கிய சிக்கல்கள். இரண்டையும் முறையான சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம்.
* நல்லெண்ணெய்க் குளியல், பித்தத்தைச் சீராக்கி விந்து அணுக்களைப் பெருக்கும்.
* நீச்சல் பயிற்சி, ஆண்மையைப் பெருக்கும் உடற்பயிற்சி.
* குடி, குடியைக் கெடுக்கும்; குழந்தையின்மையைக் கொடுக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக கருத்தரிப்பை, அழகான தாம்பத்திய உறவை சாத்தியப்படுத்த ஆணுக்கு அவசியத் தேவை உடல் உறுதி மட்டும் அல்ல, மன உறுதியும்தான்!
தொகுப்பு: பாலு சத்யா
Dailyhunt

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...