Saturday, November 19, 2016

இது இல்லாததால்தான்... இவை அரங்கேறின

'கோயில்களைக் கட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட நாட்டில், கழிவறை வசதியை ஏற்படுத்துவற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது கூறியிருந்தார். பிரதமர் ஆனபிறகு 'தூய்மை இந்தியா' திட்டத்தைக் கொண்டுவந்தார். பிரதமராகப் பதவியேற்று, இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் காண நினைத்த, 'தூய்மை இந்தியா' இன்னும் நனவாகாத நிலையில், தற்போது கறுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிக்க 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
உலக கழிப்பறை தினமாக கடைப்பிடிக்கப்படும் இன்றைய நாளில் (நவம்பர்-19), 21-ம் நூற்றாண்டிலும் இந்தியாவின் பல பகுதிகளில்... கழிப்பறை வசதி இல்லாமல் ஆற்றங்கரைகளையும், ஏரிக்கரைகளையும் தேடிச்செல்வோர் அதிகமிருக்கிறார்கள் என்பது அவரது கவனத்துக்குச் சென்றிருக்குமா எனத் தெரியவில்லை. அதிலும் குறிப்பாகப் பெண்களின் நிலைமையைச் சொல்லவே வேண்டாம்.

இருட்டிய பின்பு... இல்லையேல் விடியலுக்கு முன்பு. இப்படித்தான் பல கிராமப்புறப் பெண்களின் நிலை இருக்கிறது. 'அருகில், பொதுக் கழிப்பிடம் எங்கே இருக்கிறது' எனத் தெரியாமலேயே (அது நிறைய இடங்களில் இல்லாததால்) அவசரத்துக்குக்கூட இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் நகரப் பெண்களின் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு எல்லையே இல்லை. பாலியல் துன்புறுத்தல், கல்வி பாதிப்பு, விஷப் பூச்சிகளால் உயிரிழப்பு, மாதவிலக்கால் ஏற்படும் நோய்த்தொற்று... இன்னும் எத்தனையோ? இவை ஒருபுறமிருக்க, 'கழிப்பறை' என்கிற ஒரே ஒரு வசதியில்லாமல் கீழ்க்கண்ட பெண்கள் அடைந்த நிலையை நீங்களும் கொஞ்சம் படியுங்களேன்...

தற்கொலை செய்துகொண்டனர்!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், குண்டலா கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. கல்லூரி மாணவியான இவர், தொடர்ந்து தன் பெற்றோரிடம் வீட்டில் கழிப்பறை கட்டித் தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அவர்களுக்கோ வறுமை காரணமாக கழிப்பறை கட்டித் தர முடியாத நிலை. இதனால் மனமுடைந்த ரேகா, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன்பு அவர் எழுதிய கடிதத்தில், ''அப்பா எனக்கு வெட்கமாக இருக்கிறது... நான், ஒரு கல்லூரி மாணவி. எனது உணர்வுகளை புரிந்துகொள்ளுங்களேன்'' என்று உருக்கமாக அதில் எழுதியிருந்தார்.





ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா பகுதியைச் சேர்ந்தவர் குஷ்பு குமாரி. கல்லூரி மாணவியான இவர், தன் வீட்டில் கழிப்பறை அமைத்துத் தருமாறு பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளார். இதை அவர்கள் பொருட்படுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த குஷ்பு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ''தன் மகளின் திருமணத்துக்காகப் பணம் சேர்த்து வந்ததாகவும், கழிப்பறை கட்டினால் பணம் செலவாகிவிடும் என்ற காரணத்தால் குஷ்புவின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை'' என்று அவரின் தந்தை ஸ்ரீபதி கூறியிருந்தார்.

பாலியலுக்கு இரையாகி கொலை செய்யப்பட்டார்!

தஞ்சை மாவட்டம் சாலியமங்கத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர், இரவு நேரத்தில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக, வீட்டுக்குப் பின்புறமுள்ள கருவேலங்காட்டுக்குச் சென்றார். அப்போது, அங்கு மறைந்திருந்த வாலிபர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் பிணமாகக் கிடந்தார். ''எங்கள் குடியிருப்பில் டாய்லெட் வசதி கிடையாது. இருந்திருந்தால் என் பொண்ணு செத்திருக்க மாட்டாள்'' என்று அப்போது அழுது புலம்பினார் அவரது தந்தை ராஜேந்திரன்.

திருமணத்தை நிறுத்தி மற்றொருவரை மணந்தார்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் நேகா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவீட்டாரும் திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்து வந்தனர். இந்தநிலையில், மணமகன் வீட்டில் கழிவறை கட்டவேண்டும் என்று மணமகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.





உலக கழிப்பறை தினத்தின் சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண இங்கே க்ளிக் செய்யவும்..

ஆனால், திருமண தேதி நெருங்கிய நிலையிலும் மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்படவில்லை. இதனால் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை உடனடியாக நிறுத்திய நேகா, பலதரப்பட்டவர்களால் பாராட்டப்பட்டார். அத்துடன், கழிப்பறை வசதிகொண்ட வேறொரு மணமகனைத் திருமணம் செய்து கொண்டார்.

கணவரைப் பிரிந்த பெண்!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனிதா தேவி. இவர், தன் கணவரிடம் கழிப்பறை கட்டித் தருமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவர் சொன்னதைப் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார் அவரது கணவர். இதனால் பொறுமையிழந்த சுனிதா தேவி, தன் கணவரை விட்டுப் பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

நாட்டில் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்குக் காரணம், 'கழிப்பறை' என்கிற அத்தியாவசியத் தேவை ஒன்று இல்லாததுதான்.

கழிப்பறை இல்லாத அனைத்து வீடுகளிலும் கழிவறைகளை அமைப்போம்... களிப்புடன் வாழ்வோம்!

- ஜெ.பிரகாஷ்
Dailyhunt

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...