Saturday, November 19, 2016

வங்கிகளில் பணம் மாற்றுபவர்களின் விரல்களில் அழியாத மை வைக்க வேண்டாம்: நிதியமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம்


வங்கிகளில் பணம் மாற்ற வாடிக்கையாளர்களின் விரலில் அழியாத மை வைக்க வேண்டாம் என்று மத்திய நிதியமைச் சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவின்போது வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்குச் செல்லும் வாடிக்கையாளர் களுக்கு அழியாத மை வைக்க நிதியமைச்சகம் உத்தரவிட்டுள் ளது. இதற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நிதியமைச் சகத்துக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 19-ம் தேதி பல்வேறு தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நேரத்தில் பணம் மாற்றச் செல்லும் வாடிக்கை யாளர்களின் விரலில் அழியாத மை வைக்க வேண்டாம். கை விரலில் அழியாத மை வைக்கும் முறை தேர்தலில் மட்டுமே பின்பற்றப்படுகிறது. இந்த முறையை பணம் மாற்றுவதற்கு பயன்படுத்த வேண்டாம்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Thursday, November 17, 2016

இவர்களும்தான் பணத்தை ஒழித்தார்கள்.. ஆனால் கடைசியில் என்னாச்சு தெரியுமா?
oneindia tamil

டெல்லி: பிரதமர் மோடியின் 500, 1000 ரூபாய் ஒழிப்பை பலரும் சிலாகித்துப் பேசுகிறார்கள். ஆனால் சாமானிய பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் அடிப்படைத் தேவைக்காக தெருத் தெருவாக அலைந்து கொண்டுள்ளனர். மோடியைப் போலவே மேலும் பல நாடுகளிலும் கூட பண ஒழிப்பு நடந்தது. ஆனால் எதுவுமே எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதுதான் முக்கியமானது.

உண்மையில் அந்த நாடுகளில் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியவில்லை, அந்த அரசுகளின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கருப்புப் பணத்தை முடக்க அல்லது அழிக்கப் போய் தற்போது பெரும்பான்மையான மக்களின் தவிப்பை வேடிக்கை பார்த்து வருகிறது மத்திய அரசு.

மத்திய அரசின் திட்டமும், நோக்கமும் மிக நல்ல விஷயம்தான் என்றாலும் கூட முறையான திட்டமிடல் இல்லை. குறிப்பாக வங்கிகள் மகா மோசமான திட்டமிடலை மேற்கொண்டதால்தான் இந்தப் பெரும் குழப்பம். இதையெல்லாம் முன்கூட்டியே சரி செய்திருக்க வேண்டியது ரிசர்வ் வங்கியின் கடமை. அதுவும் கூட வாயைப் பொத்திக் கொண்டுதான் உள்ளது.

இதற்கு முன்பு பல நாடுகளிலும் இதுபோல அதிரடியாக பெரிய மதிப்பிலான பணத்தை ஒழித்துப் பார்த்தனர். ஆனால் அங்கு தோல்வியிலேயே அந்த நடவடிக்கைகள் முடிந்துள்ளன. அதுகுறித்த ஒரு ரவுண்டப்...

Source: tamil.oneindia.com

சோவியத் யூனியன்

சோவியத் யூனியன் அப்போது வெடித்துச் சிதறக் காத்திருந்த நேரம். கார்பசேவ் அதிபராக இருந்தார். ஆண்டு 1991. அந்த ஆண்டு ஜனவரி மாதம் உயரிய மதிப்பிலான ரூபிளை திரும்பப் பெறுவதாக திடீரென அறிவித்தார் கார்பசேவ். கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இதை அறிவித்தார் கார்பசேவ். 50 மற்றும் 100 ரூபிள் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் கார்பசேவ்.

நடந்தது என்ன?

ஆனால் இந்த ரூபிள் ஒழிப்பால் எதிர்பார்த்த விளைவு கிடைக்கவில்லை. பணவீக்கம் சற்றும் குறையவில்லை. மாறாக மக்கள்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களிடையே பெரும் கொந்தளிப்பும், போராட்டங்களும் வெடித்தன. பொருளாதாரம் மேலும் சீர்குலைந்தது. இது கார்பசேவின் பதவியை குறி வைத்த புரட்சிக்கும் வித்திட்டது. அடுத்த ஆண்டே சோவியத் யூனியன் சிதறியது.

வட கொரியா

2010ம் ஆண்டு வட கொரியாவின் மறைந்த சர்வாதிகாரி கிம் ஜோங் 2 இதேபோன்ற கரன்சி சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் அது பெரும் விபரீதத்திற்கே விட்டது. நாடே பஞ்சத்தில் மூழ்கியது. சாப்பிடக் கூட எதுவும் இல்லாமல் மக்கள் செத்து விழுந்தனர். மிகப் பெரிய விலை உயர்வையும் நாடு சந்தித்தது. இதை சற்றும் எதிர்பாராத கிம், மக்கள் யாரும் எதிர்பாராத வகையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அசரடித்தார். அதேசமயம், இந்த சீர்திருத்தத்திற்கு யோசனை கூறிய நிதித்துறை அமைச்சரை தலையைத் துண்டித்துக் கொலை செய்து கிம் அதிரவும் வைத்தார்.

ஜயர்

ஜயர் நாடு 1990களில் பெரும் பொருளாதார சீர்குலைவுகளைச் சந்தித்தது. இதையடுத்து சர்வாதிகாரி மொபுடு செசே சீக்கோ கரன்சிகளில் சீர்திருத்தங்களை அறிவித்தார். 1993ம் ஆண்டு சில கரன்சிகளை அவர் புழக்கத்திலிருந்து திரும்பப் பெற உத்தரவிட்டார். அது பெரும் பண வீக்கத்திற்கு இட்டுச் சென்றது. டாலருக்கு எதிரான ஜயர் நாட்டு கரன்சியின் மதிப்பு அதலபாதாளத்தை நோக்கிச் சென்றது. உள்நாட்டுப் போர் வெடித்தது. 1997ல் மொபுடு ஆட்சியை விட்டுத் துரத்தப்பட்டார்.

நைஜீரியா

நைஜீரியாவில் 1984ம் ஆண்டு ராணுவ சர்வாதிகாரி முகம்மது புஹாரி, ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தார். புதிய ரூபாய் நோட்டுக்களை அவர் வெளியிட்டார். புதிய நிறத்துடன் வந்த அந்த ரூபாய் நோட்டுக்களால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தையே அது சீர்குலைத்து விட்டது. பின்னர் வந்த புரட்சியில் புஹாரி வெளியேற்றப்பட்டார்.

மியான்மர்

1987ம் ஆண்டு மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள் புழக்கத்தில் இருந்த பணத்தில் 80 சதவீத மதிப்பை குறைத்து அறிவித்தனர். கருப்புப் பண ஒழிப்பை குறி வைத்தே இந்த நடவடிக்கை. ஆனால் அது அப்பாவி மக்களைத்தான் கடுமையாக பாதித்தது. போராட்டங்கள் வெடித்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

கானா

ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் 1982ம் ஆண்டு 50 செடி கரன்சி ஒழிக்கப்பட்டது. இதனால் வங்கிகள் சீர் குலைந்தன. மக்களுக்கு வங்கிகள் மீது இருந்த நம்பிக்கை தகர்ந்தது. நாடே ஸ்தம்பித்தது. கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பல மைல் தூரம் நடந்து வந்து வங்கிகளில் பணத்தை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்ற முடியாமல் பல கோடிப் பணம் வீணாக மூட்டை மூட்டையாக வீசப்பட்டது.

திட்டமில் இல்லாவிட்டால் தோல்விதான்

சரியான திட்டமிடல் இல்லாததால் வந்த வினைதான் இந்த நாடுகளில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம். இந்தியாவிலும் கூட தற்போது முறையான திட்டமிடல் இல்லாமல்தான் பெரும் குழப்பமாக உள்ளது. எனவே மோடியின் நடவடிக்கை எந்த அளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை. மக்களுக்கு நல்லது செய்யத்தான் இந்த நடவடிக்கை என்று அரசு சொல்லுமேயேனால் இந்தத் திட்டத்தை தோல்வி என்று இப்போதே கூறி விடலாம்.. காரணம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது மக்கள்தான்.. கருப்புப் பண முதலைகளோ அல்லது பெரும் பணக்காரர்களோ அல்ல!

Dailyhunt

வங்கி டெபாசிட் ரூ. 2.5 லட்சத்தை தாண்டினால் நடவடிக்கை: பான் கார்டு அவசியமாகிறது

பிடிஐ

வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் டிசம்பர் 30-ம் தேதி வரை போடப்படும் தொகை ரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூ. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகை செலுத்துவோர் பான் கார்டு விபரத்தை அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால் பலரும் ரூ. 49 ஆயிரத்தை பல முறை தங்கள் வங்கிக் கணக்கில் போட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக வெளியிடப் பட்ட அறிக்கையில் நவம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரையான காலத்தில் ஒரு கணக்கில் போடப்படும் தொகை ரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமாயிருந் தால் அது வரி விதிப்புக்குள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்றார்போல மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் ஆண்டு வருவாய் கணக்கு தாக்கல் விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அதாவது ஒரு ஆண்டில் ஒரு தனிநபர் தங்கள் கணக்கில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான தொகையை டெபாசிட் செய்தால் அது குறித்த தகவலை தங்களுக்கு தெரிவிக்குமாறு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களுக்கு வரி விதிப்பு ஆணையம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த வரம்பை ரூ. 2.5 லட்சமாகக் குறைத்துள்ளது.

நடப்புக் கணக்குகளில் நவம்பர் 9 முதல் டிசம்பர் 30-ம் தேதி வரையில் போடப்பட்ட தொகையின் அளவு ரூ. 12. 50 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு வரி விதிப்பு ஆணையம் கூறியுள்ளது.

இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் தபால் அலுவலகங்களுக்கும் பொருந்தும் என்றாலும், ஒருவரே பல வங்கிகளில் கணக்கு வைத்து அதை செயல்படுத்தினால் அது எவ்விதம் ஒருங்கிணைக்கப்படும் என்ற தகவல் தெரியவில்லை.

பயணம் மகிழ்ச்சியாய் அமைய...


ரயில் நிலையத்திற்குள் நுழைந் ததுமே உங்கள் பயணம் இனி தாய் அமையட்டும் என்று ஒலிபெருக்கியில் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும். நாமும் அதை கேட்டுவிட்டு ரயில் ஏறினால் அரு கில் இருப்பவர் கூட சில சமயங் களில் நம்மிடம் சரியாக பேச மாட்டார். மேலும் பொழுதுபோக்கு அம்சங்களும் பயணத்தின் போது இருக்காது. நீண்ட தூர பயணங் களின் போது நாம் மொபைல் போன் வழியாக பாடல் கேட்பதுண்டு. அதுவும் இல்லையென்றால் மிகவும் கஷ்டம்தான்.

ஆனால் இனி அப்படி ரயில் பயணிகள் கஷ்டப்படத்தேவை யில்லை. உங்களை மகிழ்விக்க பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே கொண்டு வர உள்ளது. ஏற்கெனவே இலவச வை-பை திட்டத்தை ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது. தற்போது ரயில் பயணத்தை பொழுதுபோக்கு அம்சமாக மாற்றும் முயற்சியில் இந்திய ரயில்வே இறங்கியுள்ளது.

அதாவது ரயில் பயணத்தின் போது நாடகங்கள், திரைப்படங்கள், விளையாட்டுகள், பக்தி சார்ந்த விஷயங்கள், பாடல்கள் என அனைத்தையும் ரயில் பயணத்தின் போது பார்ப்பதற்கு ரயில்வே துறை முயற்சித்து வருகிறது. இதை யொட்டி ஆப்லைன் ஸ்ட்ரீமிங் சந்தையில் முன்னணியில் உள்ள மூவிங் டாக்கிஸ், ஸ்பீடு பெட்ச், மைப்ரீடிவி ஆகிய நிறுவனங்க ளோடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கு முன்னோட்டமாக ராஜ தானி எக்ஸ்பிரஸ் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் தங்களது சேவையை மூவிங் டாக் கிஸ் நிறுவனம் சோதனை முறையில் பரிட்சித்து பார்த்துள்ளது. ஸ்பீடு பெட்ச் நிறுவனமும் சோதனை முறையில் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிட்சித்து பார்த்துள்ளது.

இந்த பொழுதுபோக்குச் சேவை மூலம் ரயில்வே துறைக்கு மிகப் பெரிய அளவுக்கு லாபம் கிடைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அடுத்த மூன்று வருடத்திற்குள் ரயில்வே துறையின் பொழுதுபோக்குச் சந்தை 2,277 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் கூறியுள்ளது. இது ஐந்து வருடங்களில் 3,495 கோடி ரூபாயாக உயரும் என்றும் ஒரு மணி நேரத்தில் 70 லட்சம் பேர் பார்க்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் விளம்பரங்கள் மூலம் அதிகமான வருமானம் ரயில்வே துறைக்கு கிடைக்கும் எனவும் கூறியுள்ளது. தற்போது பல நிறுவனங்கள் ரயில்வேயுடன் இணைந்து இந்த பொழுதுபோக்கு சேவையை வழங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

முக்கியமான ரயில் நிலையங்களில் வை-பை வசதி கொண்டு வந்தது. பல ரயில்களில் பயோ-டாய்லெட் என்ற திட்டத்தையும் கொண்டு வந்தது உட்பட சமீப காலத்தில் ரயில்வே சேவையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை மாதம் 1000 ரயில்களில் ரயில் ரேடியோ சேவையை ரயில்வே துறை ஆரம்பித்தது. இது பயணிகளிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரேடியோ மூலம் விளம்பரங்கள் அதிகமாக வருவதால் வருவாயும் ரயில்வே துறைக்கு கிடைத்து வருகிறது.

அதனால் அடுத்தடுத்த வருடங்களில் அனைத்து ரயில்களிலும் ரேடியோ சேவையை அளிக்க திட்டமிட்டு வருகிறது. தற்போது இந்த பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுவரும் பொழுது ரயில்வேயின் வருமானம் அதிகரிப்பதோடு பயணிகளின் பயணமும் மகிழ்ச்சியாக அமையும்.

சுவிஸ் வங்கி பதுக்கல் முதல் ஏடிஎம் காத்திருப்பு வரை: மாநிலங்களவையில் மோடி அரசை கிழித்த எதிர்க்கட்சிகள் இணையதள செய்திப் பிரிவு


மாநிலங்களவை விவாதம்: மேலே - ஆனந்த் ஷர்மா, பிரமோத் திவாரி | கீழே - மாயாவதி, யெச்சூரி
ரூபாய் நோட்டு உத்தி மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

நாடு முழுவதும் ரூ.1000, 500 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதற்கு காங்கிரஸ், அதிமுக, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (புதன்கிழமை) கடுமையாக விமர்சித்தன.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசும்போது, "ஒரே இரவில் 86% பணத்தை புழக்கத்திலிருந்து அரசு தடை செய்துள்ளது. அப்படியெனில் அரசு அந்த பணம் அத்தனையும் கள்ளப்பணம் என நினைத்ததா? அப்படி என்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு வெளியிட்ட அறிக்கையில் புழக்கத்தில் உள்ள பணத்தில் 0.02% மட்டுமே கள்ளப்பணம் என ஏன் சொன்னது.

மத்திய அரசில் அங்கம் வகிப்பவர்கள் எல்லோருமே மருத்துவம் படிக்காமலே மருத்துவர்கள் போல் அறுவை சிகிச்சைக்கு ஆயத்தமாகிவிட்டனர். காரணம் அவர்கள் அவ்வப்போது நடத்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்.

சாதாரண மக்களை பாதிக்கும் நடவடிக்கையை எடுத்துவிட்டு சுவிஸ் வங்கியில் பணத்தை குவித்துவைத்திருப்பவர்களை வெளியிட அரசு ஏன் தயங்குகிறது? வங்கிகளில் பெருமளவில் பணத்தை கடனாக வாங்கிவிட்டு அவற்றை திருப்பிச் செலுத்தாவதற்கள் பெயரை இந்த அரசு வெளியிடுமா?

நோட்டு நடவடிக்கையை அறிவிப்பதற்கு முன்னரே அரசு முன்னேற்படுகளை செய்திருந்தால் இப்போது பணப் பற்றாக்குறை வந்திருக்காது. சொந்த நாட்டில் மக்கள் பணத்துக்காக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்க பிரதமரோ ஜப்பான் நாட்டில் புல்லட் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்து மக்களை அவர் அவமானப்படுத்திவிட்டார். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாளைக்கு ஐந்து முறை உடையை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

நோட்டு நடவடிக்கை மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். ஆனால், பாரத ஸ்டேட் வங்கிக்கு கடந்த மார்ச் மாதமே நோட்டு நடவடிக்கை குறித்து தெரியும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசு தனக்கு சாதகமானவர்களுக்கு மட்டுமே நோட்டு நடவடிக்கை குறித்த தகவலை கசியவிட்டிருக்கிறது" என்றார்.

மோடியை ஹிட்லர், முசோலினியுடன் ஒப்பிட்ட பிரமோத் திவாரி

மாநிலங்களவை விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரமோத் திவாரி, பிரதமர் மோடியை ஹிட்லர், முசோலினி, மற்றும் கடாஃபி ஆகிய சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டார்.

அவர் பேசும்போது, "சீதாராம் யெச்சூரி கோரியது போல் ரூ.500, 1000 நடவடிக்கை மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசை ஏதோ சிட்பண்ட் நிறுவனம் போல் மாற்றிவிட்டீர்கள்.

சில தொடர் நோட்டுகளை மட்டுமே புழக்கத்திலிருந்து விடுவிக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் 86% நோட்டுகளை முடித்துள்ளீர்கள். உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? அயல்நாடுகளுக்கு அனுப்பும் தொகையின் உச்ச வரம்பை அதிகரித்ததன் மூலம் 10 மாதங்களாக இதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்.

உங்களுக்கு ‘பிடித்தமான’ மாநிலங்களில் நிறைய பணம் டெபாசிட் ஆகியுள்ளன. பிரதமர் 50 நாட்கள் கேட்கிறார், ஆனால் 50 நாட்களுக்குப் பிறகு ராபி, கரீப் விளைச்சலை வாங்க ஒருவர் கூட எஞ்சியிருக்க மாட்டார்கள். நம் விவசாயிகளை பிச்சைக்காரர்களாக்கி விட்டீர்கள். உங்களுக்கு மன்னிப்பே கிடையாது.

நம் பிரதமரை இந்த விஷயத்தில் ஹிட்லர், முசோலினி, கடாஃபியுடன் ஒப்பிடலாம்," என்றார்

இவ்வாறு இவர் பேசியவுடன் எதிர்ப்பு கிளம்பியது. ஹிட்லருடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்று ரவிசங்கர் பிரசாத் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் பிரமோத் திவாரி தனது ஒப்பீட்டை தொடர்ந்தார். கடைசியில் "ஒரே வழிதான் உள்ளது, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்கவும், நீங்கள் கறுப்புப் பணத்தை ஒழிக்க இதனைச் செய்யவில்லை. உங்கள் நண்பர்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை" என்று முடித்தார் தன் பேச்சை.

அதிமுக எதிர்ப்பு:

ரூபாய் நோட்டு நடவடிக்கையால் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் சேமிப்பும் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசினார். அதிமுக எப்போதுமே கறுப்புப்பணத்தை எதிர்க்கிறது. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் எங்கள் கட்சி எப்போதுமே வரவேற்றிருக்கிறது. கறுப்புப் பணத்தை முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கிறார்.

ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இவ்வாறாக புழக்கத்தில் இருந்த பணத்தை செல்லாது என அறிவித்ததால் கிராமப்புறங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை மத்திய அரசு படிப்படியாக செயல்படுத்தியிருக்க வேண்டும் என அவர் கூறினார். | விரிவாக வாசிக்க > மத்திய அரசின் ரூபாய் நோட்டு உத்திக்கு தமிழக அரசு எதிர்ப்பு

மக்களை ஏன் வதைக்கிறீர்கள்?- சீதாராம் யெச்சூரி

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பொதுமக்களை ஏன் வதைக்கிறீர்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறும்போது, "தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பணம் இலாமல் மக்கள் தவிக்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் பாஜக தனது கட்சி நிதியை பிரதமர் அறிவிப்பதற்கு முன்னதாகவே வங்கியில் செலுத்தியது எப்படி? இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாற்று ஏற்பாடுகள் முழுமை பெற 50 நாட்கள் ஆகும் என பிரதமரே சொல்லியிருக்கும் நிலையில் அதுவரை மக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு பழைய நோட்டுகளையே பயன்படுத்தலாம் என அறிவியுங்கள்" என்றார்.

மாயாவதி சரமாரி தாக்கு:

மாநிலங்களவை விவாதத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசும்போது, மத்திய அரசின் ரூ.500, 1000 நோட்டுகள் மீதான நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார்.

பணக்காரர்களை பாதுகாக்க மத்திய அரசு உதவி செய்ததாக குற்றம்சாட்டி அவர் மேலும் பேசும்போது, "நிதி நெருக்கடி நிலை பிரகடனம் போல் செய்துவிட்டனர். இந்தியாவே முடக்கப்பட்டது போல் உள்ளது. ஜப்பானிலிருந்து வந்த பிரதமர் காஸியாபூர் கூட்டத்தில் பேசும்போது தான் ஊழலுக்கு எதிரானவர் என்றார். ஆனால் அவர் பேசிய கூட்டத்திற்கு செய்யப்பட்ட ஏற்பாடே ஊழல் வழிமுறைகளைக் கையாண்டு செய்யப்பட்டதுதான்.

தனது கட்சியினர், சாதகமானோர் மற்றும் பணக்காரர்கள் பெரிய நோட்டுகளுக்கான 'தகுந்த' ஏற்பாடுகளை செய்யும் வரை காத்திருந்து 10 மாதங்கள் எடுத்துக்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பகுஜன் முன்னதாக கட்சியாகும் முன் இயக்கமாகவே வளர்ந்தது, சாதாரண மக்களிடமிருந்து நிதி திரட்டியே கட்சியை வளர்த்தோம், கோடீஸ்வர நபர்களிடமிருந்து நிதி திரட்டவில்லை.

இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அலட்சியம் காட்டிய அரசு, பணக்காரர்கள் தங்கள் பணத்தை பாதுகாக்க உதவி புரிந்துள்ளது. தற்போது உங்கள் பலவீனங்களை மறைக்க மற்ற கட்சியினரை குற்றம் சொல்லத் தொடங்கியுள்ளீர்கள்.

ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து இத்தகைய நடவடிக்கையை எடுக்கக் காரணம் உத்தரப் பிரதேசம் மற்றும் பிற மாநில தேர்தல்களே. இந்த மாநில மக்கள் நிச்சயம் உங்களுக்கு தண்டனை அளிப்பார்கள். மக்கள் கையில் மை-யை பூசியதற்கான தகுந்த பலனை எதிர்பார்க்கலாம்' என்றார் மாயாவதி.

கால்கள் செயலிழந்தாலும் மனம் தளராத மருத்துவர்: சக்கர நாற்காலியில் சுழலும் தன்னம்பிக்கை

மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலியில் வந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஆறுமுகம்.
என்.சுவாமிநாதன்

வைரஸ் காய்ச்சலால் தனது 2 கால்களையும் இழந்த மருத்துவர், நோயாளிகளின் நம்பிக்கையாலும் குடும்பத்தினரின் அரவணைப்பாலும் மீண்டு வந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சிகிச்சை அளித்து வருகிறார்.


கன்னியாகுமரி மாவட்டம், தளக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆறுமுகம்(63), மாவட்டத்தின் முதல் மூளை நரம்பியல் மருத்துவர் இவர். தளக்குளம் பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். நடக்க முடியாத இவர், சக்கர நாற்காலியில் அமர்ந்தே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்.

அவசர சிகிச்சைப் பிரிவுக்கும், வார்டுகளுக்கும் சக்கர நாற்காலியிலேயே சென்று சிகிச்சை அளிக்கிறார். ஏழைகளுக்கு அவர்களது வருமானத்தின் அடிப்படையில் மிக சொற்ப கட்டணமே வசூலிக்கிறார்.

இதுகுறித்து மருத்துவர் ஆறுமுகம் கூறியதாவது:

எனது தந்தை பழனியாண்டி பெரிய விவசாயி. தான, தர்மம் அதிகமாக செய்வார். இரணியல் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில்தான் கல்வி பயின்றேன். அப்போதே மருத்துவம் படிக்கும் ஆசை உதயமானது.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தேன். தொடர்ந்து 1979-ல் எம்டி பொது மருத்துவம் முடித்தேன். என் தந்தையின் விருப்பப்படி, கிராமப்புறத்தில் சேவை செய்ய விரும்பி, நெய்யூரில் ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தேன். 1985-ம் ஆண்டு வேலூர் சிஎம்சியில் இதயவியலும், 1987-ல் மதுரை மருத்துவக் கல்லூரியில் மூளை நரம்பியலும் படித்தேன். குமரி மாவட்டத்தின் முதல் மூளை நரம்பியல் மருத்துவர் நான்தான். ஆனாலும், தொடர்ந்து நெய்யூரிலேயே பணி செய்தேன்.

கடந்த 1992-ம் ஆண்டு எனக்கு வைரஸ் காய்ச்சல் வந்தது. சிகிச்சைக்குப் பிறகு, எனது முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கால்கள் உட்பட இடுப்புக்குக் கீழ் பகுதி செயல் இழந்துவிட்டது. வீட்டில் படுத்தே இருக்க வேண்டிய சூழல். அப்போதும் சிகிச்சைக்காக நோயாளிகள் தேடி வர ஆரம்பித்தனர். சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் நான் இருப்பதை, என் குடும்பத்தினர் சொன்னபோதும், ஆலோசனை மட்டுமாவது கேட்டுச் செல்கிறோம் என நோயாளிகள் தேடி வந்தனர். மக்கள் வைத்திருந்த அந்த நம்பிக்கையே என்னை ஆபரேட்டிவ் பேட்டரி வீல்சேருக்கு உயர்த்தியது.

தளக்குளம் கிராமத்தில் 1993-ல் சொந்த மருத்துவமனை கட்டி, சிகிச்சை அளித்து வருகிறேன். நர்ஸிங் கல்லூரி, நர்ஸிங் பள்ளி ஆகியவை அமைத்து ஏழை மாணவர்களுக்கு நன்கொடையே இல்லாமல் என்னால் முடிந்த கல்விச் சேவையையும் வழங்கி வருகிறேன் என்றார்.

மாநில அரசின் சிறந்த சேவைக்கான விருது, ஹெலன் கெல்லர் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ள மருத்துவர் ஆறுமுகத்தை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் தேசிய அறக்கட்டளை உறுப்பினராக மத்திய அரசு சமீபத்தில் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஏ.டி.எம் களில் என்ன நடக்கின்றன? ஸ்பாட் விசிட்

சென்னை

தற்போதைய நிலையில் சென்னை போன்ற நகரங்களில் நாலு பேர் எங்காவது வரிசையாக நின்று கொண்டு இருந்தாலே ஏ டி எம் வாசலில்தான் நிற்கிறார்கள் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து எங்கு பார்த்தாலும் பணம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது.

அரசின் புதிய அறிவிப்புகள், தீயாக பரவும் வதந்திகள், அன்றாட வேலைகளோடு வங்கிக்கு சென்று தங்கள் கையிருப்பில் உள்ள பழைய தாள்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், வங்கி கணக்கில் பணம் நிறைய இருக்க சாப்பாட்டுக்கும் போக்குவரத்து செலவுக்கும் கூட வழி இல்லாமல் தவிக்கும் அவலம் என பலதரப்பு மக்களையும் மனதளவில் கடுமையாக பாதித்திருக்கிறது புதிய ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் வாசலில் 7 செக்கியூரிட்டிகள் நின்று கொண்டு இருக்கிறார்கள். வங்கிக்குள் நுழைய முற்படும் ஒவ்வொருவரையும் நிறுத்தி அந்த வங்கியில் கணக்கு இருக்கிறதா என விசாரித்து விட்டு அதில் பணம் டெபாசிட் செய்ய வருபவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

சில இடங்களில் வங்கி ஊழியர்கள் ஏ டி எம்களில் பணத்தை நிரப்பிவிட்டு வெளியேறிய பிறகு, அந்த ஏடிஎம் காவலர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், எண் கொடுத்துவிட்டு செல்பவர்களுக்கும் முதலில் அழைத்து "பணம் போடப்பட்டிருக்கிறது, சீக்கிரமா வந்து எடுத்துக்கங்க" என தகவல் சொல்வதோடு அதற்கான டிப்ஸையும் வாங்கிக் கொள்கிறார்களாம். ஏ டி எம்மில் பணம் இருந்தாலுமே இல்லை என சொல்லும் அவலமும் நிகழ்கிறது.

இன்னொரு பக்கம், ஏ.டி.எம் வரிசையில் நின்றவர்களைத் தாண்டி பணம் நிரப்புபவருடன் வந்த கன்மேனிடம் பேச்சு கொடுத்தோம். ராஜஸ்தானைச் சேர்ந்த அவர் இங்கு செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். ‘தினம்தினம் கட்டுக்கட்டா பணத்துக்கு காவல் நிக்கறேன். கையில் பத்து ரூபாய் கூட இல்லைங்க’ என்று சோகமாகப் புலம்பிவிட்டுச் சென்றார்.

அரசுப் பேருந்துகளிலோ நீங்கள் 20 ரூபாய், 50 ரூபாய் கொடுத்தாலும், 10 ரூபாய் நோட்டை சேஞ்சாக கொடுப்பதில்லை. 5 ரூபாய் காயின்களைப் பொறுக்கிக் கொடுக்கின்றார்கள் கண்டக்டர்கள். கைகளில் பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தாலும் கூட அதைக் கொடுப்பதில்லை என்கிறார் பயணி ஒருவர்.

இன்னொரு பக்கம், வங்கிகளில் பணம் மாற்ற நிற்கும் நீண்ட வரிசையிலேயே வந்து ‘உங்களுக்கு கிரெடிட் கார்டு வேணுமா?’ என்று கூச்சமே படாமல் கேள்வி எழுப்புகின்றனர் சில தனியார் வங்கி எக்ஸிக்யூடிவ்கள். சில வங்கிகளிலோ பணம் மாற்றுபவர்களிடம் அங்கும் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்கச் சொல்லி மூளைச்சலவையும் நடைபெறுகிறது.



எத்திராஜ் கல்லூரி அருகே இருக்கும் இந்தியன் வங்கி கிளை ஒன்றின் வாசலில் வரிசையில் நின்றவாறு..,

"இந்தப் புது ரூபாய் நோட்டுகள் பத்தின அறிவிப்பு வெளியானதலிருந்து பேங்குக்கும், ஏ டி எம்களுக்கும் போய் வருவதே பெரிய வேலையா இருக்கு. அதிலும் முதல்ல பணம் இருக்கும் ஏ டி எம் மெஷின் எங்க இருக்குனு கண்டுபிடிக்கணும். அங்க ஒன்னு வேலை செய்யுது சீக்கிரம் போங்கன்னு யாராச்சும் சொல்லிட்டு போவாங்க. வேகமா போய் பார்த்தா பணம் தீர்ந்திருக்கும். அப்படியே பணம் இருந்தாலும் ஏற்கெனவே வரிசையில நிர்க்குறவங்களோட கடைசியா நின்னு பணம் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு
போறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது சார்" என வேதனையுடன் சொல்கிறார் முதியவர் ஒருவர்.

இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் ஏ டி எம் மெஷினில் இரண்டு லட்சம் ரூபாய் நிரப்பப்படுகிறது என்றால், வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரும் 4, 5 கார்டுகளை எடுத்துச் சென்று பணம் எடுத்துவிடுகிறார்கள். ரொம்ப சிக்கலான நிலையில் அவசரத்துக்கு பணம் எடுக்க வந்தவர்கள் வெகுநேரம் வரிசையில் நின்றுவிட்டு பணத்தை எடுக்க முடியாமல் விரக்தியோடு திரும்பிச் செல்லும் நிலையும் இருக்கிறது.

வங்கி ஊழியர் ஒருவர் தனது வாடிக்கையாளரிடம் "நீங்க ஏற்கெனவே 4000 ரூபாயை எடுத்து விட்டீர்கள், இனி எடுக்க இயலாது" எனச் சொல்லியிருக்கிறார். உடனே அந்த இளைஞர் தன் கையிலிருந்த படிவங்களை கிழித்து எறிந்து, கோவத்தில் கத்திவிட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்திருக்கிறார். அதே வங்கியில் ஒரு பெண் புதியதாக வெளியிடபட்டுள்ள 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து "100 ரூபாய் நோட்டுகள் தான் வேண்டும் " என அழுத சம்பவமும் அரங்கேறியிருக்கிறது. இப்படி ஒரு குழப்பமான
மனநிலையை பலரிடமும் பார்க்க முடிகிறது. வெளியில் இயல்பாக பேசி சிரித்துக்கொண்டாலும் எல்லோருக்குள்ளுமே சிறிய பதற்றம் நிறைந்திருக்கிறது.

கறுப்புப் பண ஒழிப்பு , பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்பதையெல்லாம் தாண்டி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காத உறுதியான சேவைகளும் ஒரு நாட்டிற்கு தேவை தானே...!?

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...