Friday, December 23, 2016

' ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் மரியாதை!' -கார்டன் கோரிக்கையை நிராகரித்த பா.ஜ.க. 

vikatan.com

'முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்' என வருமான வரித்துறை வட்டாரத்தில் இருந்தே தகவல் வெளிவருகிறது. ' அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்படாமல் இருப்பதற்காக கார்டன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

தமிழக அரசின் துறைகளை நோக்கி வருமான வரித்துறையின் பார்வை தீவிரமடைந்து வருகிறது. சேலம், கடலூரில் உள்ள மாநில கூட்டுறவு வங்கிகளைக் குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. " ராமமோகன ராவ், அவருடைய மகன் விவேக்
ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் கோட்டையில் உள்ள அதிகாரிகள். சேகர் ரெட்டியின் நட்போடு ஆந்திரா, கர்நாடகாவில் தொடங்கப்பட்ட தொழில்கள், பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டன. விரைவில் சி.பி.ஐ கஸ்டடிக்கு ராமமோகன ராவ் செல்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன" என விவரித்த தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்,

" சேகர் ரெட்டி வளைக்கப்பட்ட தினத்தில் இருந்தே தூக்கமில்லாமல் தவித்து வந்தார் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ். இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, டெல்லி வரையில் சென்று சில லாபிக்களை செய்து பார்த்தார். அவரிடம் பேசுவதற்குக்கூட டெல்லியில் உள்ள அவருடைய ஐ.ஏ.எஸ் நண்பர்கள் பயந்தார்கள். ' எங்கள் கைகளில் எதுவும் இல்லை. பிரதமர் நேரடியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்' எனப் பதில் சொல்லி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து இருண்ட முகத்தோடுதான் சென்னை வந்தார். 21-ம் தேதி காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வருவதை அறிந்து, கார்டன் வட்டாரத்தின் 'சூத்ரதாரி' எனச் சொல்லப்படுபவரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ' நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்' எனச் சொல்லிவிட்டு, மத்திய இணை அமைச்சர் ஒருவரைத் தொடர்பு கொண்டார் சூத்ரதாரி. போன் எடுத்துப் பேசத் தொடங்கியதுமே, ' ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். நான் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் மரியாதை கொடுக்க முடியும். இந்த மாதிரியான விவகாரங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்' எனக் கோபத்துடன் கூறிவிட்டார்.



அடுத்ததாக, பா.ஜ.கவின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் இன்னொரு சூத்ரதாரியைத் தொடர்பு கொண்டு பேசினார். ' நான் என்ன பண்ண முடியும்னு நினைக்கறேள். எல்லாம் அவர் பார்த்துண்டு இருக்கார்' எனச் சொல்லி தொடர்பைத் துண்டித்தார். இறுதி முயற்சியாக, நிதித்துறை அமைச்சகத்தின் சீனியர் அதிகாரியைத் தொடர்பு கொண்டு பேசினார். ' ரெய்டில் கிடைத்த துல்லியமான தகவல்களைக் கொண்டுதான் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நீங்கள் தொடர்பில் வந்தது தெரிந்தாலே, மத்தியில் உள்ளவர்கள் கொந்தளித்துவிடுவார்கள்' எனச் சொல்லிவிட்டார். இதன்பிறகு யாரைத் தொடர்பு கொள்வது என நொந்தபடியே விவாதித்துக் கொண்டிருந்தார் சூத்ரதாரி. 'சென்னையில் இருந்தால் தேவையில்லாமல் தன்னையும் வம்புக்கு இழுப்பார்கள்' என்பதால், நீலாங்கரையில் உள்ள 'கரன்' வீட்டில் அமர்ந்து கொண்டே ஆலோசனைகளைத் தொடர்கிறார். ராமமோகன ராவ் கைது செய்யப்பட்டால், அடுத்த குறி கார்டனை நோக்கித்தான் இருக்கும் எனவும் அச்சத்தில் இருக்கிறார். காங்கிரஸ் முகாமில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டும் அறிவுரைகளைக் கேட்டு வருகிறார். மிக ரகசியமாகவே அனைத்து நடவடிக்கைகளும் இருப்பதால், பிரதமரை எந்த வகையில் சந்திப்பது என்ற ஆலோசனைதான் தீவிரமாக இருக்கிறது" என்றார் விரிவாக.

" சென்னை துறைமுகத்தின் மூலம் மொலாசஸ் ஏற்றுமதியை ராமமோகன ராவுக்கு வேண்டப்பட்டவர்கள் நடத்தி வருகிறார்கள். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நேரடியாகவே கவனித்து வந்தார் தலைமைச் செயலாளர். கரும்பு விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்யும் கரும்பில் இருந்து மொலாசஸ் பிரித்தெடுக்கப்படுகிறது. இதை வாங்கி லண்டனுக்கு விற்பதில் ராமமோகன ராவுக்குக் கிடைக்கும் லாபம், கணக்கில் அடங்காதது. ' புதிதாக வந்த ஒரு கம்பெனிக்கு துறைமுகத்தில் எப்படி இடம் கொடுக்கலாம்' என கப்பல் துறையில் உள்ள முக்கியமானவரிடம், துறைமுக அதிகாரிகள் சண்டைக்குப் போன சம்பவமும் நடந்தது. 'கரும்பு மொலாசஸ் பின்னணியை வருமான வரித்துறை ஆராய வேண்டும்' என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. கார்டனின் அனைத்து பரிவர்த்தனைகளையும் அறிந்தவர் ராமமோகன ராவ். அதை வைத்தே, தனக்கென்று பிரமாண்ட வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். அவர் மீது கைது நடவடிக்கை பாய்வது என்பது சசிகலா வகையறாக்களை நேரடியாக வளைக்கும் முயற்சியாகத்தான் பார்க்கிறார்கள். அதோடு நான்கு அமைச்சர்களின் பரிவர்த்தனைகளையும் தோண்டி எடுத்துவிட்டார்கள். அமைச்சர்கள் பிளஸ் அதிகாரிகள் என கார்டனை நோக்கியே மத்திய அரசின் கரங்கள் நீள்கின்றன" என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர்.

-ஆ.விஜயானந்த்

ரெட்டிக்கு புழல் சிறையில் 'First Class'


முறைகேடாக பணம் பரிவர்த்தனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர்கள் சேகர் ரெட்டி, அவரது நண்பர் சீனிவாசலு உள்ளிட்ட ஐந்து பேருக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேகர் ரெட்டி சிறையில் முதல் வகுப்பு கேட்டு சென்னை சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர் ரெட்டி உட்பட ஐந்து பேரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், புழல் சிறையில் அவர்களுக்கு முதல் வகுப்பு அறையை ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. 
சவூதியில் நர்ஸ் வேலை! இவர்களுக்கு முன்னுரிமை
vikatan.com
சவூதி அரேபிய நாட்டின் ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு இரண்டு வருட பணி அனுபவத்துடன்  பிஎஸ்சி/டிப்ளமோ பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சவூதி அரேபிய நாட்டின் ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு என்ஐசியூ ((NICU), மருத்துவம் & அறுவைசிகிச்சை ((Medical & Surgical)) மற்றும் தீவிரசிகிச்சைப் பிரிவு (ICU) போன்றவற்றில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவத்துடன் 38 வயதிற்குட்பட்ட பிஎஸ்சி/டிப்ளமோ பெண் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி, 2017 முதல் வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது. பெண் செவிலியர்கள் 250 படுக்கை வசதி கொண்ட கார்பரேட் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு துறையில் தொடர்ச்சியாக இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். சவூதி ப்ரோமெட்ரிக் (Saudi pro-metric) தேர்ச்சி மற்றும் IELTS 7 Band மற்றும் TOFEL தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவம் & அறுவைசிகிச்சை பிரிவு செவிலியர்களுக்கு ரூ.41,000 மற்றும் என்ஐசியூ/தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியத்துடன் ரூ.6,300 உணவுப்படியும், இலவச விமான டிக்கெட், இருப்பிடம் ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.
எனவே, உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ள பெண் செவிலியர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் (அறிவிக்கை எண் (Notification No.037) என தவறாமல் குறிப்பிட்டு கல்வி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட், சவூதி புரோமெட்ரிக், IELTS/TOFEL போன்ற சான்றிதழ்களின் நகல்கள்
மற்றும் ஒரு புகைப்படத்துடன் omcleq0037@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களை அறிய 044-22505886/22502267/22500417 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் எண். B-0821/CHENNAI/ CORPN/1000+/ 5/ 308/84 ஆகும்" என்று கூறப்பட்டுள்ளது.

சேகர் ரெட்டியுடன் திண்டுக்கல் ரத்தினத்துக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி?

:திண்டுக்கல்:

சேகர் ரெட்டியின் கூட்டாளியான திண்டுக்கல் தொழில்அதிபர் ரத்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள முத்துப்பட்டினம். ஆவணத்தான் கோட்டையைச் சேர்ந்த தனது தாய் மாமா தங்கராஜ் ஆதரவில் இருந்து இவர் பூவை மாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். பின்னர் சர்வேயராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த 1980-ம் ஆண்டு திண்டுக்கல்லுக்கு பணி மாறுதல் பெற்று வந்தார். அப்போது ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களுடன் நெருக்கம் ஏற்பட்டது.

எனவே இந்த தொழிலில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவரது தொழில் பரந்து விரிந்தது. எனவே கடந்த 2005-ம் ஆண்டு சர்வேயர் வேலைக்கு விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு தனது தொழிலை கவனிக்க தொடங்கினார். இதன் விளைவாக வீடுகள் விற்பனை, செங்கல் சூளை, மினரல் வாட்டர், கிரசர் ஆலை என இவரது தொழில் விரிந்தது.

அதன் பின்னர் மணல் குவாரி தொழிலில் இறங்கினார். கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போதுமணல் குவாரி தொழிலில் கொடி கட்டி பறந்த காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் படிக்காசு என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போதைய அமைச்சர்களுடன் ரத்தினம், படிக்காசு ஆகியோருக்கு நெருக்கம் ஏற்பட்டதால் தென் மாவட்ட மணல் குவாரிகள் இவருக்கு கிடைத்தது.

ஆட்சி மாற்றத்துக்கு பிறகு குவாரி தொழில் நட்பு வட்டாரம் மாறியது. கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் முத்துப்பட்டிணத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நட்பு மணல் குவாரி தொழிலில் கோலோட்சிய சேகர் ரெட்டி வரை விரிந்தது.

சேகர் ரெட்டி மூலம் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் திண்டுக்கல் ரத்தினத்துக்கு சப்-காண்டிராக்ட் கிடைத்தது. அதன் பின்னர் தமிழகம் முழுவதும் கிராவல் எனப்படும் செம்மண் எடுக்கும் உரிமமும் ரத்தினத்துக் கிடைத்தது. பின்னர் இவர் சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ். மைன்ஸ் நிறுவனத்திலும் இணைந்தார்.

சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது புதிய 2 ஆயிரம் நோட்டுகள் லட்சக்கணக்கில் சிக்கின. இந்த நோட்டுகளை திண்டுக்கல் ரத்தினம் மாற்றிக் கொடுக்க உதவியதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ரத்தினம் ஜி.டி.என். கலைக்கல்லூரியின் முதன்மை செயல் அலுவலராகவும் உள்ளார். இவை தவிர பல்வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் ரத்தினத்தின் அசுர வளர்ச்சியை கண்டு முக்கிய அரசியல் புள்ளிகளே வியந்து போய் உள்ளனர். பல்வேறு தொழில்களில் கொடி கட்டி பறந்த ரத்தினம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பழைய நோட்டுகளை மாற்ற 6 நாட்களே அவகாசம்


சென்னை:
பழைய நோட்டுகளை மாற்ற 6 நாட்களே அவகாசம்
நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி செல்லாது என்று அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வரும் 30-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே தற்போது டெபாசிட் செய்து புதிய நோட்டு பெற முடியும். அதனால் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யவும் போட்ட பணத்தை எடுக்கவும் கூட்டம் அலை மோதுகிறது.

ஆனால் வங்கிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஒவ்வொரு வங்கிகளுக்கும் குறைந்த அளவில் பணம் விநியோகிக்கப்படுவதால் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். தினமும் வங்கிகளில் காத்து நின்றாலும் பணம் கிடைப்பது இல்லை. ரூ.2000, ரூ.4000 என குறைவாக மக்களுக்கு பிரித்து வினியோகிக்கப்படுகிறது.

மேலும் வங்கிகளுக்கு தினமும் பணம் சப்ளை செய்யப்படுவதில்லை. குறைந்த அளவு பணத்தை வைத்து வாடிக்கையாளர்களுக்கு பிரித்து கொடுப்பதால் வங்கிகளில் கூட்டம் குறையவில்லை.

பணத்தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் ரூ.500-க்கு மேல் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. ரூ.5000-க்கு மேல் ஒரு முறை மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும். மேலும் அந்த பணம் எந்த வகையில் வந்தது, இதுவரை டெபாசிட் செய்யாமல் இருந்தற்கான காரணம் என்ன என்பதை வங்கி அதிகாரிகள் இருவரிடம் உறுதி மொழியாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தது.

ரிசர்வ் வங்கிகளின் இந்த அதிரடி திடீர் உத்தரவு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்களிடம் விளக்கம் கேட்டு பெறப்படும் தகவல் எழுத்து பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

இந்த நடை முறையால் வங்கி வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டதையடுத்து நேற்று உடனடியாக விலக்கி கொள்ளப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் வரும் 30-ந்தேதிவரை பழைய ரூபாய் நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். அதற்கு எந்த விளக்கமும் கொடுக்க தேவையில்லை என்பதால் வங்கிகளில் மீண்டும் கூட்டம் அலை மோதியது.

பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளது. வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு விடுமுறையாகும். இதை தவிர்த்தால் 6 வேலை நாட்கள் இருக்கின்றன. பணத்தை மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் நெருங்கி விட்டதால் பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

பழைய நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் மீண்டும் நீண்ட வரிசை காணப்படுகிறது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை கொண்டாடக் கூடியவர்கள் பணத் தேவைக்கு வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஏ.டி.எம்.கள் முழுமையாக செயல்படாமல் முடங்கி கிடப்பதால் வங்கிகளை மட்டுமே மக்கள் நம்பி உள்ளனர்.

இதனால் வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில்காத்து நின்று பணம் பெற்று செல்கிறார்கள்.

இந்த நிலையில், அடுத்த வாரம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. டிசம்பர் மாத சம்பளம் வரும் 30-ந்தேதி காலையில் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன் பின்னர் அரசு ஊழியர்கள் ஒய்வூதியதாரர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும். 31-ந்தேதி வங்கிகள் செயல்படும் என்பதால் அன்று முதல் பணப் பிரச்சினை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பண பரிவர்த்தனையை குறைத்து மின்னணு பரிவர்த்தனைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மாறினால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். மளிகை பொருட்கள் மற்றும் குடும்ப தேவைகளை இனி வரும் காலங்களில் ரூபாய் நோட்டுகள் பரிமாற்றத்தால் சமாளிக்க இயலாது என்பதால் தான் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற பண அட்டைகள் பயன்பாட்டிற்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

'தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: ஆளுநர், முதல்வருக்கு தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை'

முன்னாள் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் தகவல்

தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்கள் சம்பந்தப்பட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவ தற்கு எந்தவித சிறப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆளுநர் உள்ளிட்டவர்களுக்கு முன்கூட் டியே தகவலும் தெரிவிக்க வேண் டியதில்லை என்கிறார் முன்னாள் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் (தமிழ்நாடு) எஸ்.செந்தாமரைக்கண்ணன்.
நேற்று முன்தினம், தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டிலும் அவருக்கு தொடர் புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி நகை, பணம் மற்றும் ஆவ ணங்களை ஏராளமான அளவில் கைப்பற்றினர். இந்த சோதனைகள் குறித்து பல்வேறு விதமாக செய்திகள் வெளியான நிலையில், தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனையிடும் முன்னதாக முதல மைச்சர், ஆளுநர் உள்ளிட்டவர் களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டிருக்க வேண்டும் என்ற சர்ச்சை யையும் சிலர் எழுப்புகின்றனர். ஆனால், அப்படி யாரிடமும் தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் செந்தாமரைக் கண்ணன்.

அனுமதி தேவையில்லை

“போதிய முகாந்திரம் இருந்தால் வருமான வரித்துறையினர் எந்த இடத்திலும் சோதனை மேற் கொள்ள முடியும். இதில் தனிப் பட்ட முறையில் யாருக்கும் எவ் வித சிறப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை. ஒரு இடத்தில் சோதனைக்கு செல்லும் முன்பாக அதற்கான முகாந்திரங்களை உள்ளடக்கிய திருப்தி குறிப்பு (Satisfaction Note) ஒன்றை வருமான வரித்துறையின் துணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் தயார் செய்வார்.

அந்தக் குறிப்பு வருமானவரித் துறை இயக்குநர் (விசாரணை) பார்வைக்கு வைக்கப்படும். குறிப் பில் உள்ள தகவல்களில் தனக்கு திருப்தி இருந்தால் அதை வரு மான வரித்துறையின் தலைமை இயக்குநருக்கு (விசாரணை) அனுப்புவார் இயக்குநர். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட நபர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்த தலைமை இயக் குநர் வாரண்ட் பிறப்பிப்பார். இதை யடுத்து முறைப்படி சோதனைகள் தொடங்கும்.

மாநில தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்ப வர்களிடம் சோதனைக்கு செல்வ தாக இருந்தால் அதுகுறித்து மத்திய நேர்முக வரிகள் ஆணையத்தின் தலைவர், மத்திய வருவாய்த் துறை செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு தகவல் மட்டும் தெரிவித்தால் போது மானது. இவர்கள் மூலமாக இந்தத் தகவல் மத்திய நிதியமைச்சருக்கு தெரிவிக்கப்படும்’’ என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.
சோதனை எப்படி நடத்தப்படும், சோதனையில் கைப்பற்றப்படும் சொத்துகள் எப்படி கையாளப்படும் என்று அவரைக் கேட்டபோது, “மத்திய அரசு அதிகாரிகள் இருவர் முன்னிலையில்தான் சோதனைகள் நடைபெறும். சோதனையில் கைப் பற்றப்படும் பொருட்கள், சோதனை தொடங்கிய நேரம், சோதனை முடிந்த நேரம், சோதனை நடந்த இடத்தில் இருந்தவர்கள் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ‘பஞ்ச்நாமா` (Panchnama) என்ற மகஜரில் எழுதப்படும். சோதனை யின் முடிவில் அந்த மகஜரில் வழக்கு சம்பந்தப்பட்ட நபரிடமும் சாட்சிகளிடமும் கையெழுத்துப் பெறப்படும்
.
சோதனையில் கைப்பற்றப்படும் நகைகள், சம்பந்தப்பட்ட வருமான வரித்துறை அலுவலகத்தின் ‘ஸ்டாராங் ரூமில்’ பாதுகாப்பாக வைக்கப்படும். சொத்துப் பத்திரங் கள் உள்ளிட்ட ஆவணங்கள், வழக்கை விசாரிக்கும் வருமான வரித்துறை அதிகாரியின் பொறுப் பில் இருக்கும்’’ என்றார்.
வழக்கு விசாரணை எப்படி இருக்கும்? இறுதித் தீர்ப்பு எப் போது வரும்? கைப்பற்றப்பட்ட பொருட்களை திரும்பப் பெறமுடி யுமா என்ற கேள்விகளுக்கும் பதிலளித்த செந்தாமரைக்கண் ணன், “கைப்பற்றப்பட்ட ஆவணங் களை சம்பந்தப்பட்ட நபரின் வரு மானத்துடன் ஒப்பீடு செய்து அறிக்கை தயார் செய்வதற்கு 21 மாதங்கள் எடுத்துக் கொள்ளப்படும். விசாரணை முடிவில், வருமான வரி கட்ட வேண்டி இருந்தால் அதற் கான தொகை போக மீதியை உரியவரிடம் ஒப்படைப்பார்கள். ஆனால், 90 சதவீத வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்ட நபர்தான் கூடுதலாக வரி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும்.

முதல்கட்ட தீர்ப்பை எதிர்த்து முதலில் வருமான வரித்துறை (மேல்முறையீடு) ஆணையரிடம் மேல் முறையீடு செய்யலாம். அதுவும் திருப்தி இல்லாவிட்டால் வருமானவரித் துறையின் மேல் முறையீட்டு நடுவர் மன்றத்தை அணுகலாம். இதற்கு அடுத்தபடி யாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரைக்கும் போக முடி யும். எனவே, ராமமோகன ராவ் மாதிரியான அதிகாரிகள் சம்பந்தப் பட்ட வழக்குகளில் இறுதித் தீர்ப்பை எட்டுவதற்கு 10 ஆண்டுகள்கூட ஆகலாம்’’ என்றார்.


சசிகலாவைச் சந்திக்காத ஓ.பி.எஸ்.! -பின்னணி என்ன? 

மிழக அமைச்சர்களின் முகங்களில் இயல்புநிலை திரும்பவில்லை. தலைமைச் செயலாளரை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் வீட்டில் சோதனை என வருமான வரித்துறையினர் உறக்கமே இல்லாமல் சோதனை நடத்துகின்றனர். 'ரெய்டின் பின்னணியில் ஓ.பி.எஸ் இருக்கலாம் என கார்டன் தரப்பில் உறுதியாக நம்புகிறார்கள்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

வேலூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை வளையத்திற்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை. கடந்த மூன்று நாட்களாக நடக்கும் சோதனையில், அமைச்சர்களுக்கு இணையாக ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக் ஆகியோரிடம் ஆவணங்களும் தங்கமும் பிடிபட்டிருக்கிறது. 'முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டுக்கு பிறகே, வருமான வரித்துறை சோதனை வேகமெடுத்தது' என கார்டன் வட்டாரத்தில் உறுதியாக நம்புகிறார்கள். பிரதமரைச் சந்திக்க ஓ.பி.எஸ்ஸுடன் தம்பிதுரையும் உடன் சென்றார். ஆனால், தம்பிதுரை வருவதை பிரதமர் அலுவலகம் விரும்பவில்லை. ஓ.பி.எஸ் மட்டுமே பிரதமரை சந்தித்தார். தமிழகத்தின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தாலும், ஆட்சி அதிகாரத்தில் நடக்கும் இடையூறுகளைப் பற்றித் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, கார்டன் தரப்பில் இருந்து வரும் நெருக்குதல்களையும் விவரித்திருக்கிறார். அதன் விளைவாகவே, ராம மோகன ராவ் உள்பட கார்டன் வட்டாரத்திற்கு நெருக்கமானவர்களை வளைத்தது வருமான வரித்துறை" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 
"சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பாக, ஓ.பி.எஸ் உள்பட அ.தி.மு.கவின் ஐவரணியில் இருந்த சிலரது வீடுகளில் கார்டன் டீம் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய உறவினர்கள் ஆகியோரது வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, தி.மு.க தலைவர் கருணாநிதி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டும், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எந்தப் பதிலும் சொல்லவில்லை. இந்த ரெய்டின் பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் உள்பட சிலர் இருந்தார்கள். அவர்கள் மூலமாக ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இப்போது மத்திய அரசுக்கு இணக்கமாக இருக்கிறார் ஓ.பி.எஸ். தேர்தல் நேரத்தில் தன்னை பழிவாங்கியவர்களை, இப்போது பழிவாங்கத் தொடங்கிவிட்டார்.

டெல்லிக்குச் சென்றிருந்தபோது, நடக்கப் போகும் விஷயங்களை ராம மோகன ராவ் அறிந்து வைத்திருந்தார். எப்படியாவது ரெய்டு நடவடிக்கையில் இருந்து தப்பிவிட வேண்டும் என சில காரியங்களில் இறங்கினார். எதுவும் பலிக்கவில்லை. தலைமைச் செயலகத்திற்குள் நுழைவதற்கும் ஓ.பி.எஸ் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. சசிகலாவுக்கு நெருக்கமான ராம மோகன ராவ் குறிவைக்கப்படுவதை எதிர்பார்த்தே அவர் காத்திருந்தார். தற்போது பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான இளங்கோவனின் அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. '51 கோடி ரூபாய் அளவுக்கு கறுப்புப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும்' தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்களுக்குள் ஒருங்கிணைப்பாளராக இருந்து, கார்டன் வட்டாரத்திற்கு பாலமாக இருந்து வருபவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரை வளைப்பதன் மூலம் நேரடியாக மன்னார்குடி உறவுகளின் பரிவர்த்தனைகளை வளைக்க முடியும். அதன் அடிப்படையிலேயே சோதனை தீவிரமாக நடந்து வருகிறது" என்றார் விரிவாக. 

"டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு, தற்போது வரையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை நேரில் சந்திக்கவில்லை. பொதுக்குழு கூட்டத்திற்கு முதலமைச்சர் என்ற முறையில் அவரும் பங்கேற்பார். 'அங்கு தனக்கு எதிராக சிலர் பேசலாம்' என்பதையும் உணர்ந்து வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ். இருப்பினும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அரசுப் பணிகளை கவனித்து வருகிறார். மத்திய அரசின் நெருக்குதல்கள் அனைத்தும் கார்டனை மையமிட்டே நடக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், கார்டனின் அதிகார மையங்கள் டெல்லி வட்டாரத்தில் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராம மோகன ராவ் கைது செய்யப்பட்டால், கார்டனின் கணக்கு வழக்குகளை முடக்கிவிடுவார்கள் என்பதால் மன்னார்குடி தரப்பில் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். ஜனாதிபதி மாளிகை வட்டாரம், பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சர்கள் என பல தரப்பிலும் தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். 'தங்கள் பக்கம் கணக்கு வழக்குகள் சரியாக இருக்கிறது' என தகவலைப் பரப்பி வருகின்றனர். ராம மோகன ராவ் கைது செய்யப்பட்டால், வருமான வரித்துறை அதிகாரிகள் கார்டனுக்குள் நுழைவது உறுதி. அதை எதிர்கொள்வது குறித்துதான் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது" என்கின்றனர் தலைமைக் கழக வட்டாரத்தில். 

வருமான வரித்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அச்சத்தோடு கவனித்து வருகிறார்கள் தமிழக அமைச்சர்கள். 
-ஆ.விஜயானந்த்

NEWS TODAY 08.06.2026