Friday, December 23, 2016

பழைய நோட்டுகளை மாற்ற 6 நாட்களே அவகாசம்


சென்னை:
பழைய நோட்டுகளை மாற்ற 6 நாட்களே அவகாசம்
நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி செல்லாது என்று அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வரும் 30-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே தற்போது டெபாசிட் செய்து புதிய நோட்டு பெற முடியும். அதனால் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யவும் போட்ட பணத்தை எடுக்கவும் கூட்டம் அலை மோதுகிறது.

ஆனால் வங்கிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஒவ்வொரு வங்கிகளுக்கும் குறைந்த அளவில் பணம் விநியோகிக்கப்படுவதால் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். தினமும் வங்கிகளில் காத்து நின்றாலும் பணம் கிடைப்பது இல்லை. ரூ.2000, ரூ.4000 என குறைவாக மக்களுக்கு பிரித்து வினியோகிக்கப்படுகிறது.

மேலும் வங்கிகளுக்கு தினமும் பணம் சப்ளை செய்யப்படுவதில்லை. குறைந்த அளவு பணத்தை வைத்து வாடிக்கையாளர்களுக்கு பிரித்து கொடுப்பதால் வங்கிகளில் கூட்டம் குறையவில்லை.

பணத்தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் ரூ.500-க்கு மேல் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. ரூ.5000-க்கு மேல் ஒரு முறை மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும். மேலும் அந்த பணம் எந்த வகையில் வந்தது, இதுவரை டெபாசிட் செய்யாமல் இருந்தற்கான காரணம் என்ன என்பதை வங்கி அதிகாரிகள் இருவரிடம் உறுதி மொழியாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தது.

ரிசர்வ் வங்கிகளின் இந்த அதிரடி திடீர் உத்தரவு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்களிடம் விளக்கம் கேட்டு பெறப்படும் தகவல் எழுத்து பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

இந்த நடை முறையால் வங்கி வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டதையடுத்து நேற்று உடனடியாக விலக்கி கொள்ளப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் வரும் 30-ந்தேதிவரை பழைய ரூபாய் நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். அதற்கு எந்த விளக்கமும் கொடுக்க தேவையில்லை என்பதால் வங்கிகளில் மீண்டும் கூட்டம் அலை மோதியது.

பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளது. வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு விடுமுறையாகும். இதை தவிர்த்தால் 6 வேலை நாட்கள் இருக்கின்றன. பணத்தை மாற்றுவதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் நெருங்கி விட்டதால் பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

பழைய நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் மீண்டும் நீண்ட வரிசை காணப்படுகிறது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை கொண்டாடக் கூடியவர்கள் பணத் தேவைக்கு வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஏ.டி.எம்.கள் முழுமையாக செயல்படாமல் முடங்கி கிடப்பதால் வங்கிகளை மட்டுமே மக்கள் நம்பி உள்ளனர்.

இதனால் வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில்காத்து நின்று பணம் பெற்று செல்கிறார்கள்.

இந்த நிலையில், அடுத்த வாரம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது. டிசம்பர் மாத சம்பளம் வரும் 30-ந்தேதி காலையில் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன் பின்னர் அரசு ஊழியர்கள் ஒய்வூதியதாரர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும். 31-ந்தேதி வங்கிகள் செயல்படும் என்பதால் அன்று முதல் பணப் பிரச்சினை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பண பரிவர்த்தனையை குறைத்து மின்னணு பரிவர்த்தனைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மாறினால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். மளிகை பொருட்கள் மற்றும் குடும்ப தேவைகளை இனி வரும் காலங்களில் ரூபாய் நோட்டுகள் பரிமாற்றத்தால் சமாளிக்க இயலாது என்பதால் தான் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற பண அட்டைகள் பயன்பாட்டிற்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

No comments:

Post a Comment

Patta transfer: officials asked to digitally process applications

Patta transfer: officials asked to digitally process applications Dennis S. Jesudasan CHENNAI. 27.01.2026 The Director of Survey and Settlem...