Friday, December 23, 2016

பதில் சொல்லுங்கள் பன்னீர்செல்வம்!

சமஸ்
Return to frontpage

இந்தியர்களை இந்தியர்களே ஆண்டுகொள்ளும் ஜனநாயக முறைக்கான ஆரம்பக் கட்டுமானங்களில் ஒன்று இன்றைய தமிழகச் சட்டப்பேரவையும் தலைமைச் செயலகமும். தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வளாகத்திலுள்ள தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அறையில், அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் சந்தேகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்ட நாள் தமிழ்நாட்டின் அரசியல் - அரசு நிர்வாக வரலாற்றின் கறுப்பு நாட்களில் ஒன்று. இப்படியொரு நாளும் வரும் என்று நம் முன்னோர் எண்ணியிருப்பார்களா?

தமிழ்ச் சமூகம் நவீன ஆட்சி நிர்வாகத்தின் விளைவாக இன்று அடைந்திருக்கும் நலன்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், அண்ணா போன்ற தொலைநோக்கும் நேர்மையும் மிக்க ஆட்சியாளர்களால் மட்டும் நாம் அடைந்தது அல்ல; நாட்டின் மீதும் மக்களின் மீதும் கனவுகளும் கரிசனமும் கொண்ட அரசு அலுவலர்களும் சேர்ந்தே அதைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றனர்; நம்முடைய ஆட்சிமுறையைக் கண்ணியப்படுத்தியிருக்கின்றனர். ராம மோகன ராவ் வீட்டிலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும், துணை ராணுவப் பாதுகாப்போடு வருமான வரித் துறையினர் சோதனையிட்டபோது, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய அறையில் மௌனமாகப் அமர்ந்திருந்தார்; அன்று மாலை இதுகுறித்து எதுவும் பேசாமல் மௌனமாக வெளியேறினார் எனும் செய்தி தமிழக அரசியலும் அரசு நிர்வாகத் துறையும் இன்று வந்தடைந்திருக்கும் மோசமான இழிநிலையின் வெளிப்பாடு.

சோதனைச் செய்தி வந்த அடுத்த நிமிஷம் கொந்தளித்தார் வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. “ஒரு மாநிலத்தை ஆளும் தலைமை அலுவலகத்தில், மாநில அரசுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாமல், மத்தியப் படைகள் சூழ, இப்படி ஒரு சோதனையை மோடி அரசு நடத்துகிறது என்றால், அது கூட்டாட்சி முறை மீதான தாக்குதல்” என்றார் மம்தா. உண்மை. கூட்டாட்சி முறை மீதான தாக்குதலாகவே இதை நானும் பார்க்கிறேன். “ஆனால், இப்படி ஒரு மாநில அரசுக்கு எப்படி முன்கூட்டித் தகவல் அளிக்க முடியும்? அதுதானே இப்படிப்பட்ட ஒருவர் கையில் மாநில நிர்வாகத்தின் சாவியைக் கொடுத்திருக்கிறது? நினைவில் வையுங்கள், ராம மோகன ராவ் தலைமைச் செயலாளர் மட்டும் அல்ல; மாநிலத்தின் ஊழல் கண்காணிப்பு ஆணையராகவும் இந்த அரசு அவரை வைத்திருந்தது” என்கிறார்கள் வருமான வரித் துறை அதிகாரிகள். மறைமுகமாக அவர்கள் கேட்ட கேள்வி இதுதான்: “இவர்கள் எல்லோரும் ஒரே கூட்டம்தானே?”

தமிழர்களுக்கு எவ்வளவு பெரிய வெட்கக்கேடு இது! ஒருகாலத்தில் நாட்டிலேயே முன்னோடியாக, மாநிலங்களின் சுயாட்சிக்கான வலுவான குரலாகத் திகழ்ந்த மாநிலம். இன்று தன்னுடன் சேர்த்து, ஏனைய மாநிலங்களையும் சுயாட்சி தொடர்பில் பேச இயலாத நிலைக்குத் தள்ளியிருக்கிறது. அதிமுக அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைத் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்திடமே அளித்திருக்கிறார்கள்.

ராம மோகன ராவ் மீதான குற்றச்சாட்டுகள் எளிமையாகக் கடக்கக் கூடியவை அல்ல. ரூ.134 கோடி கைப்பற்றப்பட்ட ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி, ஆட்சியாளர்களின் ஊழல் கறுப்புப் பணத்தை மடை மாற்றும் வேலையிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறது வருமான வரித் துறை. சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாகவே ராம மோகன ராவ் சிக்கியிருக்கிறார் என்றால், என்ன அர்த்தம்? சமூக விரோதிகளுடனான உறவில் தலைமைச் செயலாளர் இருந்திருக்கிறார் என்றல்லவா ஆகிறது? இதுபற்றி ஒரு வார்த்தை பேசாமல், சோதனை நடந்த மறுநாள் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராம மோகன் ராவை நீக்கி, காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டு புதிய தலைமைச் செயலாளரைத் தமிழக அரசு தேர்ந்தெடுக்கிறது என்றால் என்ன அர்த்தம்? ராம மோகன ராவ் மீதான குற்றச்சாட்டுகள் முகாந்திரமற்றவை அல்ல என்றல்லவா ஆகிறது?

வெளிப்படையாகவே எதிர்க்கட்சிகள் “ராம மோகன ராவ் ஒரு அதிகாரத் தரகர்; ஆட்சியில் மட்டும் அல்லாது ஆளுங்கட்சிக்குள்ளும் ஒரு அதிகாரத் தரகராக அவர் கரம் நீண்டிருக்கிறது” என்று முன்பே குற்றஞ்சாட்டியிருக்கின்றன. எல்லாவற்றையும் மீறியே ராம மோகன ராவைத் தலைமைச் செயலாளராக வைத்திருந்தது அதிமுக அரசு. தமிழகத்தின் தலைமைச் செயலாளரானவர் கிட்டத்தட்ட 18 லட்சம் பேரைக் கொண்ட அரசு ஊழியர் படையின் தலைவர். இப்படி ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்தி, அவர் மீதான குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளி அவருடைய பதவியைப் பாதுகாத்ததன் வாயிலாக, அரசு ஊழியர்களுக்கு இந்த அரசு கொடுத்துவந்த சமிக்ஞை என்ன?

சென்னையிலிருந்து 1700 கி.மீ. தொலைவில் இருக்கிறது கொல்கத்தா. மம்தா உடனே கொந்தளிக்கிறார். சோதனையிடப்பட்ட ராம மோகன ராவ் அறையிலிருந்து சில அடிகள் தள்ளியிருக்கும் தன்னுடைய அறையில் உட்கார்ந்திருந்த பன்னீர்செல்வத்துக்கு இந்நடவடிக்கை தொடர்பில் பேச ஒரு வார்த்தை இல்லை என்றால், அதை எப்படிப் பொருள் கொள்வது? ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்புக்குள்ளாக்கப்படும்போதே அதை எதிர்த்து, ஊரையே ஸ்தம்பிக்க வைக்கும் இயல்புடைய அதிமுகவினர், அவர்களுடைய அரசின் கோட்டையே முற்றுகையிடப்படும்போது வெளிப்படுத்தும் அசாத்தியமான மௌனத்தை என்னவென்று பொருள் கொள்வது?

நம்மை நாமே ஆண்டுகொள்கிறோமா; ஏமாற்றிக்கொள்கிறோமா? அறம் கேள்வி கேட்கிறது, தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது, பேசுங்கள் பன்னீர்செல்வம்!

சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...