Wednesday, December 28, 2016

அதிகாரத்திற்குள் ரெட்டி-ராவ் கால்பதித்த நேரம்! - கார்டன் தைரியத்தின் பின்னணி


முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் தலைவலியைக் கொடுத்திருக்கிறது முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் பேட்டி. 'பொதுக்குழுவுக்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறார் சசிகலா. வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி எங்கே என்ற அச்சமும் அமைச்சர்கள் மத்தியில் எழுந்துள்ளது' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

சென்னை, அண்ணா நகரில் உள்ள ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. ஐந்து நாட்களுக்குப் பிறகு நேற்று மீடியாக்கள் முன்னிலையில் கொந்தளிப்பைக் காட்டினார் ராமமோகன ராவ். அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வருமான வரித்துறை அதிகாரிகள், ' நிதித்துறை அமைச்சகத்தின் சட்ட வழிகாட்டுதலின்படிதான் சோதனை நடத்தப்பட்டது. சோதனையிடப் போகும் பட்டியலில் ஒருவர் பெயர் இருந்தாலே, அவர் தொடர்பான உறவினர்களிடமும் சோதனை நடத்தலாம். இதில் எந்தவித விதிமீறலும் நடக்கவில்லை' எனத் தெரிவித்தனர். மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேசும்போது, 'தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிப்பதற்காக ராம மோகன ராவ் திசை திருப்புகிறார்' எனக் காட்டமாக விமர்சித்தார்.



"வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கிய நாட்களில், மன்னார்குடி உறவுகள் மத்தியில் கலக்கம் இருந்தது உண்மைதான். ஆனால், சேகர் ரெட்டி வீட்டிலோ ராமமோகன ராவ் வீட்டிலோ நடத்தப்பட்ட சோதனையில் கார்டன் தொடர்புடைய எந்த ஓர் ஆவணமும் சிக்கவில்லை" என விவரித்த கார்டன் ஊழியர் ஒருவர், "முதலமைச்சர் பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து திரும்பியதும் வருமான வரித்துறையின் அதிரடிகள் தொடங்கின. ஓ.பி.எஸ்ஸுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வரையில் உள்ளது. சேகர் ரெட்டி வீட்டைக் குறிவைத்தபோது, மன்னார்குடியை நோக்கி அடுத்த ரெய்டு நடக்கலாம் என்றுதான் தகவல் பரவியது. ஆனால், அவர்கள் தொடர்பான எந்த ஓர் ஆவணமும் சிக்கவில்லை.

தொடக்கத்தில், இதை எப்படி எதிர்கொள்வது என்றுதான் பயந்தார்கள். போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முன்னாள் தலைமைச் செயலாளர் அனுமதிக்கப்பட்டபோது, ஆந்திராவைச் சேர்ந்த முக்கியமானவர்கள் சிலர், அவரை சந்தித்துப் பேசியுள்ளனர். சட்டரீதியாக எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் விரிவாகவே விவாதித்துள்ளனர். இதையடுத்துத்தான், பகிரங்கமாகவே மத்திய அரசுக்கு அவர் சவால்விட்டார். இந்த விவகாரத்தில், கார்டன் தரப்பில் உள்ளவர்கள் நம்பிக்கையோடு இருக்கக் காரணம், 'கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட நேரத்தில்தான், சேகர் ரெட்டி கார்டனுக்குள் நுழைந்தார். ராமமோகன ராவ் கோலோச்சத் தொடங்கியதும் அந்தக் காலகட்டத்தில்தான். இதன்பிறகு, முதல்வர் ஜெயலலிதாவுடன் சமரசம் ஏற்பட்டு, கார்டன் திரும்பியதும் கணக்கு வழக்குகளை மட்டுமே சசிகலா கவனித்து வந்தார். ரெட்டியுடனும் ராமமோகன ராவுடனும் எந்த வர்த்தகத் தொடர்புகளும் இல்லை. இதையெல்லாம் அவருக்கு விளக்கிய பிறகுதான், மிகுந்த மகிழ்ச்சியோடு பொதுக்குழுவை எதிர்கொள்ளத் தயாரானார் சசிகலா" என்றார் விரிவாக.



பொதுக்குழுவுக்கு சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகளை அச்சடித்துள்ளனர் நிர்வாகிகள். போயஸ் கார்டனில் இருந்து வானகரம் வரையில் ஜெயலலிதா படத்துடன் எளிமையாக அச்சடிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் மத்தியில் முதல்முறையாக மைக் பிடித்து பேச இருக்கிறார். பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, அ.தி.மு.க தலைமைக் கழகத்திற்குச் செல்ல இருக்கிறார். 'இந்தக் கட்சியை எப்படி வழிநடத்தப் போகிறேன்' என்பதுதான் அவரது பேச்சின் சாராம்சமாக இருக்கும். ஓ.பி.எஸ் முதற்கொண்டு அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவின் தலைமையை ஏற்க சம்மதித்துவிட்டார்கள். செங்கோட்டையன், ராஜகண்ணப்பன், கே.பி.முனுசாமி உள்பட அவருக்கு எதிராக இருந்த அனைவரையும், ஆதரவு வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டார்கள்" என விவரித்த தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், "கார்டன் பாதுகாப்பிற்காக இருந்த போலீஸ்காரர்கள் அனைவரும், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பிளாக் கேட் ஏஜென்சி என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 20 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கார்டனுக்கு வெளியில் பொதுமக்களை ஒழுங்குபடுத்துவதுதான் இவர்களின் பணி. இவர்கள் அனைவரும் தி.மு.க பிரமுகர் ஒருவருக்கு வேண்டப்பட்டவர்கள் என்றரீதியில் தகவல் வெளியானது. அது முற்றிலும் தவறானது. சசிகலாவுக்குக் கார்டன் பணியாளர்களே பாதுகாப்பு கொடுக்கின்றனர்" என்கிறார்.

அ.தி.மு.கவின் கட்சி அதிகாரத்திற்குள் சசிகலாவுக்கு நல்ல இமேஜை உருவாக்கும் வகையில் கட்சியின் சீனியர்கள் செயல்பட்டு வருகின்றனர். 'பொதுக்குழு நடக்கும் நேரத்தில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை; கைது போன்ற சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்ற அச்சமும் அவர்களுக்குள் இருக்கிறது. 'சசிகலா பொதுச் செயலாளர் ஆகிவிடக் கூடாது' என்பதற்காக நடத்தப்படும் சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்வது குறித்தும் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.

-ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment

NEWS TODAY 3.4.2025