Saturday, December 31, 2016

அ.தி.மு.க., நிகழ்ச்சியில் லட்டு வாங்க கூட ஆள் இல்லீங்க!

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை, கட்சியினர் வாங்காமல் புறக்கணித்தனர்; லட்டுவை வாங்க கூட ஆட்கள் இல்லாத, பரிதாப நிலை காணப்பட்டது. 

சென்னை, செங்குன்றம் நகரம் மற்றும் புழல் ஒன்றியம், அ.தி.மு.க., சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலராக, சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதால், இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், நகர செயலர், ஒன்றிய செயலர் உட்பட, சிலர் மட்டுமே பங்கேற்றனர்; பெண் தொண்டர்கள் ஒருவர் கூட வரவில்லை. விழாவில் பங்கேற்க சென்ற, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலர் அலெக்சாண்டர், கூட்டம் இல்லாமல் இருப்பதை கண்டு, அதிர்ச்சி அடைந்தார். எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, நிர்வாகிகளுக்கு மட்டும் இனிப்பு வழங்கி விட்டு புறப்பட்டார். மீதமுள்ள லட்டுகளை வாங்க யாரும் இல்லாததால், அவற்றை, நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கி, போட்டோவுக்கு, 'போஸ்' கொடுத்தார். அப்போது ஒருவர், 'வருங்கால முதல்வர் சின்னம்மா வாழ்க' என கோஷமிட்டார். இதையடுத்து, கட்சியினருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

சோழவரம் ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், செங்குன்றம், திருவள்ளூர் கூட்டுச்சாலையில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டும் நிர்வாகிகள் இருந்தனர். அங்கும், லட்டு வாங்க ஆட்கள் இல்லாததால், அவற்றை, திருவள்ளூர் மாவட்டம், காரனோடையில் நடந்த நிகழ்ச்சிக்கு, 'பாதுகாப்பாக' எடுத்துச் சென்றனர். மாதவரம் மண்டலத்தில், இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி எதையும் நடத்தாத, அ.தி.மு.க., நிர்வாகிகள், சில பத்திரிகையாளர்களிடம், '100க்கும் மேற்பட்டோருக்கு, லட்டு வழங்கினோம்' என, செய்தி போடுமாறு கூறியிருக்கின்றனர். கட்சி பதவிகளில் உள்ள சிலரைத் தவிர, மற்ற நிர்வாகிகள், தொண்டர்கள், சசிகலா பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டதை விரும்பவில்லை என்பதையே, மேற்கண்ட நிகழ்வுகள் வெளிப்படுத்தின.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...