Sunday, December 25, 2016

காசோலைக்கு காசில்லை எனில் யாருக்கு சிறை?- ப.சிதம்பரம் பேச்சின் 10 தெறிப்புகள்

சிறப்புச் செய்தியாளர்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ‘பணமதிப்பு இழப்பு பொருளாதாரத்தை முடக்கிய பொறுப்பற்ற செயல்’ என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் வெள்ளிக்கிழம நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசிய கருத்துகளின் 10 முக்கிய அம்சங்கள்.

* 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்று, புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்துவதற்காகக் கூறப்பட்ட நோக்கங்கள் தோற்றுவிட்டது. இவற்றை அறிமுகப்படுத்தி தவறு செய்துவிட்டதை மோடி ஒப்புக்கொள்ள வேண்டும்.

* இந்திரா காந்தி நல்ல நோக்கங்களோடுதான் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். ஆனால் அதனால் சாமானியர்கள் பட்ட துன்பங்களைக் கண்டு, இனிமேல் இப்படியொரு காரியத்தைச் செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டார். ஆனால் மோடியோ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றே சாதிக்கிறார்.

* கறுப்புப் பணத்தையும் கள்ளப்பணத்தையும் தடுப்போம்; ஊழலை ஒழிப்போம் என்ற அவர்களின் உரைகள் பொய்யாகிவிட்டன. புது 2000 ரூபாயில் ஊழல் தொடர்ந்து நடக்கிறது. பணம் கறுப்புப் பணமாக மாறிவருகிறது.

* பணப்புழக்கம் இருந்தால்தான் பொருளாதாரம் இயங்கும். பணப்புழக்கம்தான் பொருளாதாரத்தின் நிலையை தீர்மானிக்கும்.

* தற்போது புதிதாக வெளியிட்டுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை 5 லட்சம் கோடி அளவுக்கு அச்சிட்டுள்ளனர். 15.44 லட்சம் கோடி 500,1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இதில், 10 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளுக்குள் வந்துவிடும். மீதம் 5.44 லட்சம் கோடி வராது. அதை கறுப்பு பணமாக அறிவித்துவிடலாம் என்று கணக்கு போட்டு வைத்திருந்தனர். ஆனால், தற்போதுள்ள நிலைமையை பார்த்தால் 15.44 லட்சம் கோடியும் வங்கிக்குள் வந்துவிடும்போல் இருக்கிறது.

* கடந்த 45 நாட்களில் 62 முறை வங்கியில் பணம் எடுப்பது, செலுத்துவது குறித்த விதிகளை மாற்றியுள்ளனர். மக்கள் தொகையில் மொத்தம் 45 கோடி பேர் அன்றாடம் சம்பாதிப்பவர்களாக உள்ளனர். அவர்கள் வேலையிழந்து தவித்துவருகின்றனர்.

* கறுப்பு பணம், கள்ள நோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கத்தில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இதில் எந்த நோக்கமும் நிறைவேறாது.

* ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மட்டும் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது. கறுப்பு பணத்துக்கான தேவை இருக்கும்வரை அதன் விநியோகம் இருக்கும். அதற்கு முதலில் ஊற்றுக்கண்ணை தடுக்க வேண்டும்.

* உங்களுடைய அக்கவுண்டில் பணம் இல்லாமலே யாருக்காவது காசோலை அளித்தீர்கள் என்றால் உங்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை கிடைக்கும். ஆனால் இப்போதெல்லாம் நீங்கள் கொடுக்கும் காசோலைக்கு வங்கிகளிலேயே பணம் இருப்பதில்லை. இதற்காக யார் சிறைக்குச் செல்வார்கள்?

* எந்த அரசுக்கும், பிரதமருக்கும் இத்தகைய மோசனமான பேரிடரை மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட உரிமை இல்லை. பிரதமர் மோடி, ஏழைகளின் நிலையைப் புறக்கணித்து மோசமான வழிகாட்டுதலால் ரூபாய் நோட்டு நடவடிக்கையில் தவறிழைத்து விட்டார். இதை அவர் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 3.4.2025